Search This Blog

Saturday, June 16, 2012

கோகோ கோலா - ! நூற்றாண்டைக் கடந்த ரகசியம்


கோகோ கோலாவுக்கு 125 வயதாகிறது. அட்லாண்டா நகரில் ஜான் பிம்பிரெட்டன், என்ற மருந்துக் கடைக்காரர் தற்செயலாகத் தயாரித்த ஒரு கோலா சிரப்பை பக்கத்திலுள்ள ஒரு சோடா கடைக்காரருக்குக் கொடுக்க, அவர் அதை சோடாவில் கலந்து கிளாஸ் 5 சென்ட்டுக்கு விற்றபோது ஊர்க்காரர்கள் பலரும் விரும்பியதால் பாப்புலரான பானம் கோகோ கோலா.
ஏற்கெனவே ஊரில் ஒரு கோலா இருந்ததால் இந்தப் பெயர். சில மாதங்களிலேயே விற்பனை பல மடங்காகப் பெருகியது. பக்கத்து ஊர்க்காரர்களும் வந்து கேட்கும் அளவுக்குப் பிரபலமானது. வேகமாக மற்ற நகரங்கள், மாநிலங்கள் என சில ஆண்டுகளிலேயே அமெரிக்கா முழுவதும் அறிந்த ஒரு பானமானது. இன்று உலகம் முழுவதும் ஒரு நாளில் 170 கோடி பாட்டில்கள் விற்கப்படும் ராட்சதப் பன்னாட்டு நிறுவனமாக வளர்ந்திருக்கிறது.உலகத்தில் பல நாடுகளில் தயாரித்து விற்கப்பட்டாலும், சிரப் தயாரிக்கும் ஃபார் முலா மட்டும் மிக ரகசியம். ஒவ்வொரு நாட்டிலும் கோகோ கோலா தயாரிக்கும் நிறுவனங்களுக்கு டன் கணக்கில் மூலப் பொருளான சிரப் விற்கப்பட்டாலும் அதன் தயாரிப்பின் ஃபார்முலா தெரிவிக்கப்பட மாட்டாது. இந்தத் தயாரிப்பு முறை மிக ரகசியமாக ஒரு வங்கியில் லாக்கரில் பாதுகாக்கப்படுவதாகச் சொல்லப்பட்டது. அதெல்லாம் கதை. கோக் நிறுவனத்தின் பலவித மார்க்கெட்டிங் தந்திரங்களில் இதுவும் ஒன்று என்ற செய்தியும் உலவிக் கொண்டிருந்தது. அதற்கெல்லாம் தனது 125-ஆம் ஆண்டு விழாவில் முற்றுப்புள்ளி வைத்து விட்டது கோகோ கோலா நிறுவனம்.
அட்லாண்டா நகரில் கோக் நிறுவனத்தின் அருகில் ஒரு பெரிய இரண்டு மாடிக் கட்டடத்தில், ‘வேர்ல்ட் அஃ ப் கோகோகோலா’ என்ற மியூசியத்தை நிறுவியிருக்கிறார்கள். கடந்த ஒரு நூற்றாண்டில் கோகோகோலா வளர்ந்த கதை, பிறந்த முதல் பாட்டிலிலிருந்து இதுவரை வந்த விளம்பரங்கள், இந்த ஆண்டின் 4டி காலண்டர் வரை எல்லாவற்றையும் காட்சியாக்கியிருக்கிறார்கள். அதில் இந்த ஆண்டு சேர்க்கப் பட்டிருக்கும் புதிய விஷயம், ஃபார்முலா பத்திரப்படுத்தப்பட்டிருக்கும் ஒரு சேஃப்டி லாக்கர். இத்தனை ஆண்டுகள் வங்கி லாக்கரிலிருந்த ஃபார்முலா தம் சொந்த வீட்டுக்கு லாக்கருக்கு மாற்றப்பட்டிருப்பதைத் தெரிவிக்கும் அறிவிப்புடன் 5 அடி உயரத்தில் ஒரு பளபளப்பான ஸ்டீல் ஸேஃப் நிற்கிறது.முதலில் கம்பெனியின் தலைவர் ஒரு பெட்டியை அந்த ஸேஃப்பில் வைப்பது, இரண்டு பேர் அதன் கதவை மூடி கீபேடில் எண்களை அழுத்துவது, பின் அவர்கள் கைவிரல்களை ஸ்கேனரில் பதிவுசெய்வது ஆகியவை வீடியோவில் பார்வையாளர்களுக்குக் காட்டப்படுகின்றன. பின்னர் அரை இருட்டில் ஒரு குகைக்குள் அழைத்துச் சென்று 10 அடி தொலைவில் தெரியும் ஸேஃப்பைக் காட்டுகிறார்கள். உண்மையாகவே அதற்குள்தான் அந்த பார்முலா இருக்கிறதா அல்லது வேறு எங்கோ இருப்பதின் மாதிரியா என்ற சந்தேகம் பார்ப்பவர்களுக்கு எழுகிறது.
கோக் நிறுவனத்தின் பல மார்க்கெட்டிங் யுக்திகள் பற்றி உலகெங்குமிருக்கும் மேனேஜ்மெண்ட் பயிற்சிகளில் தொடர்ந்து விவாதிக்கப்படுகின்றன. இதுவும் அதில் ஒன்றாக இருக்கலாம் என்பது சிலரின் எண்ணம். தங்கள் நிறுவனத்தின் கதையையே மியூஸியமாக்கி அதற்கு டிக்கெட் (16 டாலர்) விற்று அனுமதிக்கும் இந்தப் புத்திசாலி நிறுவனத்தில் அது உண்மையாக இருந்தாலும் ஆச்சர்யமில்லை.


No comments:

Post a Comment