Search This Blog

Thursday, October 11, 2012

டோனி நல்லவரா... கெட்டவரா?



"இந்தியாவின் தோல்விக்கு ஒட்டுமொத்தக் காரணம் டோனிதான். அவருடைய 'மிடாஸ் டச்’ வியூகங்கள் இப்போது பழசாகிவிட்டன!'' என்று சகட்டுமேனிக்கு வாட்டி எடுக்கிறார்கள் ரசிகர்கள். வெற்றிகரமாக மன்னிக்கவும் தோல்விகரமாக மூன்றாவது முறையாக 20/20 உலகக் கோப்பைப் போட்டித் தொடரில் அரை இறுதியை எட்ட முடியாமல் வெளியேறி இருக்கிறது 'உலக சாம்பியன்’ இந்தியா. இந்தியாவுக்கு இரண்டு உலகக் கோப்பைகளை வென்று கொடுத்த கேப்டன், வேறு எந்த இந்திய கேப்டனைவிடவும் செம டோஸ் வாங்கும் நேரம் இது. பிரச்னை டோனியிடம் மட்டும் தான் இருக்கிறதா என்ன?

ஷேவாக் நீக்கம்!

அதிரடியாகக் கோப்பை வெல்வார்கள்; அல்லது மரண அடி வாங்கி முதல் சுற்றோடு வெளியேறுவார்கள். இந்த இரண்டில் ஏதோ ஒன்றுதான் இந்திய அணியின் ஸ்டைல். ஆனால், இந்த உலகக் கோப்பைத் தொடரில் ஆச்சர்யமாக, ஒரே ஒரு தோல்வியால் அரை இறுதிச் சுற்றுக்குள் நுழைய முடியாமல் வெளியேறி இருக்கிறது இந்திய அணி. 'அரை இறுதி இடத்தை உறுதிசெய்யும் மிக முக்கியமான ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில், வீரேந்திர ஷேவாக்குக்கு அணியில் இடம் அளிக்கப்படாததுதான் இந்திய அணியின் அரை இறுதி வாய்ப்பு பறிபோனதற்குக் காரணம்’ என்கிறார் கள் வாழ்க்கையில் ஒரு 20/20 போட்டியில்கூட விளையாடிஇருக்காத சில முன்னாள் பிளேயர்கள்.
 
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் தட்டுத் தடுமாறி எடுத்த ஸ்கோர் 140. அதை 15 ஓவர்களிலேயே ஆஸ்திரேலியா எட்டும் அளவுக்கு இந்தியப் பந்து வீச்சாளர்களும் சொதப்பினார் கள். அந்தப் போட்டியின் தோல்விக்கு பேட்டிங், பௌலிங் என இரண்டிலுமே சொதப்பியதுதான் காரணமே தவிர, ஷேவாக் அணியில் இல்லாதது இல்லை. உலகக் கோப்பையில் இந்தியா விளையாடிய ஐந்து போட்டிகளில் மூன்றில் மட்டுமே விளையாடிய ஷேவாக், அந்தப் போட்டிகளில் மொத்தமாகக் குவித்த ரன்கள் வெறும் 54. பின்னர் எப்படி ஷேவாக்கின் நீக்கம் இந்திய அணியைப் பாதித்ததாகச் சொல்ல முடியும்?
 
சீனியர் வீரர்களின் அடாவடி!

வீரேந்திர ஷேவாக், கௌதம் கம்பீர் இருவரும் 20/20 போட்டிகள் விளையாடும் இந்திய அணியில் சீனியர்கள். இவர்கள் ஃபார்மில் இருக்கிறார்களோ, ஃபிட்டாக இருக்கிறார்களோ... நிச்சயம் அணியில் இருக்க வேண்டும் என்பது இந்திய அணித் தேர்வாளர்களின் எண்ணமாக இருக்கிறது. ஷேவாக் அடித்து ஆட ஆரம்பித்துவிட்டால் எதிர் அணி ஆட்டம் கண்டுவிடும், அவர் மேட்ச் வின்னர் என்பதெல்லாம் ஓ.கே-தான். ஆனால், அதற்காக சீனியர் பந்தாவுடன் வலைப் பயிற்சியில் ஈடுபடாதது, ஜூனியர் வீரர் களை கேப்டனுக்கு எதிராகக் கொம்பு சீவுவதெல்லாம் ஏற்றுக்கொள்ளவே முடியாதது. கௌதம் கம்பீர் ஃபார்மில் இல்லை என்பதோடு, இந்திய அணியின் 'ஸ்லோ ஃபீல்டர்’களில் ஒருவர். 20/20 போட்டிகளில் பந்து பவுண்டரிக்குப் போகாமல் தடுத்தால்தான் எதிர் அணியின் ரன் குவிப்பைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும். ஆனால்... ஷேவாக், கம்பீர் இருவருமே இந்த விஷயத்தில் வீக்! 

பௌலர்கள் எங்கே?

லக்ஷ்மிபதி பாலாஜி, இர்ஃபான் பதான், பியூஷ் சாவ்லா போன்ற பந்துவீச்சாளர்களை வைத்துக்கொண்டு இந்திய அணி உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பதுபேராசை யிலும் பெரிய ஆசை. அஸ்வினைத் தவிர, அணியில் எந்த பௌலரும் ஃபார்மில் இல்லை. யுவராஜ் சிங், விராட் கோஹ்லி போன்ற பகுதி நேரப் பௌலர்களைத் தான் விக்கெட் பறிக்க அதிகம் நம்பி யிருக்கிறார் டோனி. பாலாஜி, இர்ஃபான் பதான் ஆகியோர் தொடர்ந்து சொதப்பிவரும் நிலையில், வருண் ஆரோன், உமேஷ் யாதவ் போன்ற ஜூனியர் வீரர்களை இரண்டு மூன்று ஆட்டங்களோடு ஓரம்கட்டிவிட்டது ஏன் என்பது தேர்வாளர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்!

கேப்டன் பதவியில் டோனி தொடரலாமா?

2007-ம் ஆண்டு முதல் கேப்டனாக இருக்கும் டோனிதான், சந்தேகம் இல்லாமல் இந்தியாவின் மிகச் சிறந்த கேப்டன். கடும் போட்டிகளுக்கு இடையில் இரண்டு உலகக் கோப்பைகளை வென்றதோடு, சீனியர் வீரர்களின் அத்துமீறல்களைச் சமாளித்து, ஐ.பி.எல்., சாம்பியன்ஸ் லீக் என வருடம் முழுக்க விளையாடிக்கொண்டு இருக்கும் அத்தனை வீரர்களையும் நாட்டுக்காக ஒரே மனநிலையில் விளையாடவைப்பது எளிதான விஷயம் அல்ல. ஒரு தொடரின் தோல்விக்காக டோனியைக் காவு கொடுப்பது எந்த வகையிலும் நியாயம் இல்லை. அதே சமயம், டோனிக்கு நிகரான தலைமைப் பண்புடன் அணியில் வேறு யாரும் இல்லை.

'ஹார்சஸ் ஃபார் கோர்சஸ்’ தியரியைத்தான் பின்பற்றுவதாகக் கூறுகிறார் டோனி. ''போட்டி நடைபெறும் நாள் அன்று பிட்ச்சின் தன்மை, தட்பவெப்ப சூழல் இவற்றைப் பொறுத்துதான் அணியினரைத் தேர்ந்தெடுக்க முடியும். எல்லோரும் எல்லாப் போட்டிகளிலும் இருக்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை!'' என்கிறார் அவர். பிட்ச்சின் தன்மை, தட்பவெப்ப சூழல் தாண்டியும் சில சுழல்களில் சிக்கித் தவிக்கும் அணி யைக் காப்பாற்றிக் கரை சேர்ப்பது இப்போதைக்கு இந்த டோனியால் மட்டுமே இயலும்!

 



No comments:

Post a Comment