Search This Blog

Wednesday, October 24, 2012

எனது இந்தியா (புத்தகம் படித்தால் கொடூர தண்டனை!) - எஸ். ராமகிருஷ்ணன்....

மரம் வெட்டுவதற்காக காட்டுக்குச் சென்ற கைதிகளை, ஆதிவாசிகள் தாக்கினர். அதைத் தடுப்பதற்காக, துப்பாக்கியோடு காட்டுக்குள் புகுந்த சிறைக் காவலர்கள் ஆதிவாசிகளைத் தேடித் தேடிக் கொன்று குவித்தனர். அந்தமான் தீவில் இருந்து எவர் தப்ப முயன்றாலும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. பெண்களுக்கான சிறைச்சாலையில் இருந்த கைதிகளை, ஜெயிலர்கள் ஆசைநாயகிகளாக்கிக்கொள்வதும், பெண் கைதிகளுக்காக மற்ற ஆண் கைதிகள் சண்டையிட்டு செத்துப்போவதும் தொடர்ச்சியானது. 18 முதல் 20 வயது வரையிலான இளைஞர்கள், பாய்ஸ் கேங் எனப்படும் தனிக் கூடத்தில் அடைத்துவைக்கப்பட்டனர். பெண்கள் சிறைச்சாலையினுள் முறையான அனுமதிச் சீட்டு பெற்ற கைதிகள் பகலில் வெளியே சென்று வர அனுமதிக்கப்பட்டனர்.

ஆரம்ப காலத்தில், கொள்ளையரையும் கொலைகாரர்களையும் நாடு கடத்திய பிரிட்டிஷ் அரசு, சுதந்திர உணர்ச்சி தலை தூக்கத் தொடங்கியதும் அரசியல் தலைவர்களையும் நாடு கடத்தத் தொடங்கியது. குறிப்பாக, முதல் இந்திய சுதந்திர எழுச்சியை ஒடுக்கிய பிரிட்டிஷ் அரசு, அதில் தொடர்பு உடையவர்களைக் கைதுசெய்து அந்தமான் சிறைக்கு அனுப்பிவைத்தது.
இந்தியாவில் உருவான சுதந்திர வேட்கையை ஒடுக்குவதற்காக ஆயிரக்கணக்கான சுதந்திரப் போராட்ட வீரர்கள் கைது செய்யப்பட்டு அந்தமானுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். 1901-ம் ஆண்டு, அந்தமானில் இருந்த கைதிகளின் எண்ணிக்கை 49 ஆயிரத்து 592. இதில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 635 பேர். 17 வயதில் இருந்து 40 வயது வரை உள்ளவர்கள் 7,264 பேர்.


1913-ம் ஆண்டு, அந்தமானுக்கு வந்த ரெஜினால்ட் க்ராட்டக், அந்தமான் சிறைச்சாலை குறித்து ஒரு விரிவான அறிக்கையை அனுப்பினார். அதில், இந்தச் சிறைச்சாலையை மூடிவிட வேண்​டும். அங்குள்ள கைதிகளை இந்தியாவுக்கு அனுப்பிவிடுவதுதான் சரி​யானது. இல்லாவிட்டால் சாவு எண்ணிக்கை அதிகமாவதைத் தடுக்க முடியாது. ஒருவேளை, இதை மூட முடியாத சூழல் இருந்தால், சிறை நிர்வாகம் மற்றும் கைதிகளை நடத்​தும் முறையில் சீர்திருத்தங்களை உடனே ஏற்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தார்.

ஆனால், 'இந்தியாவில் இருந்த சிறைத் துறை, அந்தமானுக்கு புதிய சிறை அதிகாரிகளை அனுப்புவதாலும் சீர்திருத்தப் பணிகளை மேற்கொள்வதாலும் எந்த நன்மையும் விளையப்போவது இல்லை. அது வீண் முயற்சி. அந்தமானில் உள்ள கைதிகளை இந்தியாவுக்குக் கொண்டுவருவது செலவு ஏற்படுத்தக்கூடியது’ என்று பதில் சொல்லிவிட்டது.

இந்த நிலையில், அந்தமான் சிறைச்சாலையின் மோசமான அனுபவங்கள் குறித்து தகவல்கள் வெளியாகத் தொடங்கின. பத்திரிகைகள் அதை விமர்சனம் செய்ய ஆரம்பித்​தன. உள் துறை உறுப்பினரான வில்லியம் வின்சென்ட், அந்தமானைப்பார்வை​யிட்ட பிறகு, சிறைச்சாலையை மூடிவிடப்​போவதாக அறிவித்தார். ஆனால், அது நிறைவேற்றப்​படவில்லை. மாறாக, கைதிகளுக்கு கை, கால்களில் விலங்கு போடுவது, இருட்டறையில் நிர்வாணமாக அடைத்துவைப்பது போன்ற தண்டனைகள் விலக்கிக்கொள்ளப்பட்டன. கைதிகள் படிப்பதற்கு நூலகம் அமைக்கப்பட்டது. அந்தமானில் இருந்து பெண் கைதிகள் பலர் விடுவிக்கப்பட்டு தாயகம் அனுப்பிவைக்கப்பட்டனர். 1925-ம் ஆண்டு, அந்தமானின் நிலையை அறிவதற்காக வந்த அலெக்சாண்டர் முடிமான், அந்தமான் சிறைச்சாலை அவசியமான ஒன்று. அதை மூடுவது என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்று கூறிவிட்டார். 1942-ம் ஆண்டு அந்தமானை, ஜப்பான் கைப்பற்றும் வரை அங்கிருந்த சிறைச்சாலை தொடர்ந்து செயல்பட்டே வந்தது.

இதில், 1896-ம் ஆண்டு புதிதாக செல்லுலார் ஜெயில் ஒன்றைக் கட்டுவது என முடிவு செய்து வேலை தொடங்கியது. கட்டுமானப் பணிகளை கைதிகளே செய்தனர். மெக்கலன் என்ற பொறியாளர், கட்டுமான நிர்வாகியாகப் பணியாற்றினார். பர்மாவில் இருந்து தேக்கும் செங்கல்லும் கொண்டுவரப்பட்டன. ஏழு இதழ் கொண்ட மலர் போன்ற அமைப்பில் உருவாக்கப்பட்ட இந்தச் சிறைக்கூடம் தனித் தனி வளாகங்களைக்கொண்டது. இதில், 698 அறைகள் அமைக்கப்பட்டன.

1906-ல் கட்டி முடிக்கப்பட்ட இந்தச் சிறைச்​சாலையில்தான் சுதந்திரப் போராட்​டத்தின் முக்கியத் தலைவர்கள் பலர் அடைக்கப்பட்டு இருந்தனர். மூன்று தளங்களாக அமைந்த இந்தச் சிறைச்சாலையை கட்டுவதற்கு ஐந்து லட்சத்து 17 ஆயிரத்து 352 ரூபாய் செலவு ஆனது. உறுதியான இரும்புக் கதவுகளையும் உயரமான சுவர்களையும் பெரிய எச்சரிக்கை மணி ஒன்றையும் உயர்ந்த காவல் கோபுரங்களையும்கொண்ட இந்தச் சிறைச்சாலை ஒரு தனி உலகம் போலவே இருந்தது. சிறைக்குள் கைதிகளை சுவரோடு சேர்த்து இணைப்பதற்காக நிறைய கொக்கிகள் மாட்டப்பட்டு இருந்தன. தூக்குப் போடுவதற்கு தனி வளாகம் இருந்தது. ஒட்டுமொத்த சிறைச்சாலைக்கும் சேர்த்து ஒரே சமையல் அறை மட்டும்தான் இருந்தது. இரவில், கைதிகள் தங்கள் அறைகளில் உணவை தட்டில் பெற்றுக்கொண்டு சாப்பிடுவார்கள்.

மல, மூத்திரம் கழிப்பதற்கு தார் பூசிய ஒரு மண் பாத்திரம் வழங்கப்படும். அதை தினமும் சுத்தம் செய்துகொள்ள வேண்டியது கைதிகளின் வேலை. ஜெயிலில் எண்ணெய் ஆட்டும் இயந்திரம் ஒன்றும் இருந்தது. முக்கியக் கைதிகளின் கை, கால்களில் விலங்கு போட்டு தனிமைச் சிறையில் அடைத்துவைத்தனர். அதன் காரணமாகவே, செல்லுலர் ஜெயில் என்ற பெயர் உருவானது. இந்தச் சிறைச்சாலையில்தான் வீரசாவர்கர், யோகேந்திர சிங் சுக்லா, ஜகதீஷ் சந்திரபால், நந்தகோபால், மௌல்வி அப்துல் ரகீம், பக்தேஸ்வர் தத் பரீந்திர குமார் கோஷ், உபேந்திரநாத் பானர்ஜி, பீரேந்திர சந்திர சென் போன்ற முக்கியப் போராளிகள் அடைக்கப்பட்டு இருந்தனர்.

இந்தச் சிறையில் இருந்து 1868-ம் ஆண்டு மார்ச் மாதம் 238 கைதிகள் தப்பிச் செல்லத் திட்டமிட்டனர். இது நீண்ட நாள் கனவு. அதற்காக அவர்கள் சிறைச்சாலையை எப்படித் தாக்குவது. எப்படித் தப்பிச் செல்வது என்று விரிவாகத் திட்டம் தீட்டினர். தப்பிச் செல்ல உதவுவதற்கான படகுகள் கடலில் காத்திருந்தன. அதன்படி, 238 பேரும் சிறையில் இருந்த காவலர்களைத் தாக்கித் தப்பிச் சென்றனர். உடனே, அபாய மணி ஒலிக்கத் தொடங்கியது. சிறைக் காவலர்கள் அவர்களை விரட்டினர். கடலில் சிலர் பிடிபட்டனர். ஒரு மாத காலம் இந்தத் தேடுதல் வேட்டை நடந்தது. முடிவில், அத்தனை பேரும் கைது செய்யப்பட்டு சிறைக்குக் கொண்டுவரப்பட்டனர். இவர்களில், 87 பேருக்கு உடனே தூக்கு விதிக்கப்பட்டது. இந்தச் சம்பவம், சிறைச்சாலையின் இயல்பைப் பெரிதும் மாற்றி அமைத்தது. அதன் பிறகு, சிறை அதிகாரிகள் கைதிகளை மிக மோசமாக நடத்தத் தொடங்கினர்.

1930-ம் ஆண்டு, தங்களது அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுகின்றன. முறையான உணவு, குடிநீர் வழங்கப்படுவது இல்லை என்று எதிர்ப்பு தெரிவித்து, மகாவீர் சிங் என்ற லாகூர் சதி வழக்கைச் சேர்ந்த கைதி உண்ணாவிரதம் தொடங்கினார். அவர், பகத்சிங்கின் நண்பர். கட்டாயப்படுத்தி உணவை அவர் வாயில் திணித்தனர் சிறை அதிகாரிகள். ஆனாலும், அவர் சாப்பிட மறுத்து பட்டினிகிடந்து சிறையிலேயே இறந்தார். அந்தச் சம்பவம், இந்திய அரசியலை உலுக்கியது. கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. தாகூரும் காந்தியும் இதைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டனர்.

கைதிகளுக்கு தினமும் ஆறு அவுன்ஸ் அரிசி, ஐந்து அவுன்ஸ் பருப்பு, ஒரு கிராம் உப்பு, ஒரு கிராம் எண்ணெய், எட்டு அவுன்ஸ் காய்கறிகள் வழங்கப்பட வேண்டும் என்பது விதிமுறை. ஆனால், ஒரு சிரட்டைக் கஞ்சி மட்டுமே கைதிகளுக்கு வழங்கப்பட்டது. அதில், உப்புகூட போட்டிருக்க மாட்டார்கள். அத்துடன், வேகவைக்கப்பட்ட காய்கறிகள் மற்றும் பருப்புத் தண்ணீர் வழங்குவார்கள். சில நாட்கள், கஞ்சியில் வேண்டுமென்றே மண்ணெண்ணெய் கலந்துவிட்டிருப்பார்கள். அதனால், கைதிகள் பட்டினி கிடக்க நேரிடும். வாரம் ஒரு முறை கைதிகளுக்குத் தயிர் வழங்கப்படும். ஆனால், அதில் பாதியை சிறை அதிகாரிகள் தங்களது வீட்டுக்குக் கொண்டுபோய்விடுவார்கள்.

அரிசி சாப்பிடாதவர்களுக்கு கோதுமை ரொட்டி வழங்கப்படும். ரொட்டியில் கரப்பான் பூச்சி செத்துக்கிடப்பது வழக்கமான ஒன்று. சாப்பிடும் வேளையில், யாராவது ஒரு கைதி வரிசையில் இருந்து நகர்ந்துவிட்டால், அவன் உடனே தண்டிக்கப்படுவான். அவனது உணவு பறிமுதல் செய்யப்படும். பாதி சாப்பிடுவதற்குள் நேரம் முடிந்துவிட்டது என்று எழுந்து போகச்சொல்லி உத்தரவிடுவார் சிறை அதிகாரி.

தப்பியோடிப் பிடிபட்ட கைதிகளுக்கு வேகவைத்த எலிக் கறியும் மணல் கலந்த காட்டுக் கீரையின் சாறும், குப்பையில் வளரும் செடிகளின் இலையை அவித்து அதில் மூத்திரம் பெய்து தருவதும் வாடிக்கை. கைதிகள் குளிப்பதற்கு மூன்று குவளை கடல் தண்ணீர் வழங்கப்படும், அந்தத் தண்ணீரிலேயே உடையையும் துவைத்து குளித்தும்கொள்ள வேண்டும். குளிக்கும் இடத்தில் கூட ஒரு காவலர் நின்று, எப்படிக் குளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டபடியே இருப்பார்.

காகிதம், பேப்பர், பேனா, பென்சில் போன்றவற்றை வைத்துக்கொள்ள அனுமதி கிடையாது. புத்தககத்தைத் திருடிப் படித்த குற்றத்துக்காக ஒரு கைதி நான்கு நாட்கள் தலைகீழாகத் தொங்கவிடப்பட்ட சம்பவம் நடந்திருக்கிறது. சிறைக்குள், கைதிகளில் சிலர் அதிகாரிகளின் ஒற்றர்களாக செயல்படுவது உண்டு. அரசியல் கைதிகளுக்கு D என்ற முத்திரை அளிக்கப்படுவது வழக்கம். நோயுற்ற கைதிகளுக்கு உடனே சிகிச்சை அளிக்க மாட்டார்கள். அவர்கள், மருத்துவரிடம் செல்வதற்கு தனி அனுமதி பெற வேண்டும். இரவில் நோயுற்றால் விடியும் வரை அவர் வலியோடு போராடவே வேண்டும். இப்படி சொல்லித் தீராத கொடுமைகளின் விளைநிலமாக இருந்திருக்கிறது அந்தமான் சிறைச்சாலை.

இன்றும், அந்தச் சிறைச்சாலையில் உள்ள மரத்தின் இலைகள், இறந்துபோன சுதந்திரப் போராட்ட வீரர்கள் மனம் உருகப் பாடிய பாடல்களை மறக்க முடியாமல் நினைவுகொள்வதைப்போல அசைந்தபடியே இருக்கின்றன. கடந்த காலத்தின் சாட்சியாக கடல் அமைதியாக அந்தமானைப் பார்த்துக்கொண்டேதான் இருக்கிறது.

இன்றைய இளம் தலைமுறை வலி மிகுந்த கடந்த காலத்தின் நினைவுகளின் ஈரம் படாமல் அந்தமானை பொழுதுபோக்குக்கான சுற்றுலாத் தலமாகக் கொண்டாடிவருகிறது. அவர்களின் இந்த சுதந்திரம் எத்தனையோ பேரின் ரத்தம் சிந்திப் பெற்றது என்பதை எப்போது உணர்வார்கள் என்ற ஆதங்கம் மேலிடவே செய்கிறது

No comments:

Post a Comment