Search This Blog

Saturday, October 20, 2012

கேஜரிவால்

சோனியாவின் மருமகன் ராபர்ட் வதேரா தொடர்பான நிலப் பரிவர்த்தனைகளையும், அதனால் அவருக்குக் கட்டுமான நிறுவனம் டி.எல்.எஃப். மூலமாகக் கிடைத்த ஆதாயங்களையும், ஆவணங்களின் ஆதாரங்களோடு அர்விந்த் கேஜரிவால் அம்பலப்படுத்தினார் அல்லவா?! அதற்கு அடுத்த சில நாட்களில் சல்மான் குர்ஷித்தைக் குறி வைத்தார் கேஜரிவால். பின்னர் பா.ஜ.க. தலைவர் நிதின் கட்கரி மற்றும் வேறு பலர் மீது பல குற்றச் சாட்டுகளை வைக்கப்போகிறார் என்ற செய்தி பரவிக்கொண்டிருந்த நேரம். காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தில்லி மூத்த பத்திரிகையாளர் ஒருவரிடம், ‘கேஜரிவால் குற்றச்சாட்டுகளைக் கூறும்போது, தற்காத்துக் கொள்ள மீடியாவை எதிர்கொள்வது பெரும் சவாலாக இருக்கிறது. காரணம் கேஜரி வாலை நாங்கள் அலட்சியப்படுத்த முடியாது. நடுத்தர மற்றும் உயர்நிலை மக்கள் அவர் சொல்வதை நம்புகிறார்கள். 

ஆளும் காங்கிரஸையும் அதன் தலைவர்களையும் மட்டும்தான் கேஜரிவால் சங்கடத்தில் சிக்க வைப்பார் என்று குஷியாக இருந்த பா.ஜ.க., கட்கரியின் முகத்திரையைக் கிழித்தது கண்டு அதிர்ந்து போய்விட்டது. 

குற்றச்சாட்டுகளைச் சம்பந்தப்பட்டவர்கள் வழக்கம் போல மறுத்தாலும், அதை ஒரு பொருட்டாகக் கருதாமல் கேஜரிவால் சொல்வதை மக்கள் நம்புகிறார்கள். அந்தளவுக்கு அரசியல்வாதிகள் மீது நம்பிக்கை சரிந்து கிடக்கிறது.

அரசியல் கட்சித் தலைவர்கள் ஒருவர் மீது ஒருவர் பல குற்றச்சாட்டுகளை அடுக்கினாலும், மக்கள் அவற்றை சீரியஸாக எடுத்துக் கொள்வதில்லை. காரணம் பெரும்பாலான அரசியல்வாதிகள் மீது ஏதேனும் குற்றச்சாட்டுகள் இருப்பதும், அவர்கள் நேர்மை கேள்விக் குறியாக இருப்பதும்தான். ஆனால் இங்கேதான் வித்தியாசப்படுகிறார் கேஜரிவால். சுத்தமான கரங்களுக்குச் சொந்தக்காரராக அவர் இருப்பதால், அவரின் ஊழல் புகார்களை அலட்சியப்படுத்த முடியவில்லை.  

வதேரா மீது சென்ற வருடமே, பல பத்திரிகைகளும் ஏன் பா.ஜ.க.கூட புகார்களைக் கூறின. இருந்தும் அவை எடுபடவில்லை. ஆனால், கேஜரிவால் அம்பலப்படுத்தியபோது பற்றிக் கொண்டது; பதறியது காங்கிரஸ். 

ஊழலை வெளிப்படுத்தும் கேஜரிவாலின் நோக்கம் மக்களால் சந்தேகக் கண்கொண்டு பார்க்கப்படுவதில்லை. அவர் துணிச்சலைக் கண்டு வியக்கும் மக்கள், அவர் ஊழல் எதிர்ப்புப் போரில் ஆத்மார்த்தமாக ஈடுபட்டிருப்பதாக நினைக்கிறார்கள். ஊடகங்கள் அவருக்குப் பக்க பலமாக இருக்க, கேஜரிவால் ஊழல் எதிர்ப்பில் இன்று லட்சிய நாயகனாக உருவெடுத்து நிற்கிறார். கட்சியைத் தொடங்கி இன்னமும் பெயர்கூட வைக்காத நிலையில் அவருக்கு ஆதரவு அலை பெருகுகிறது. காங்கிரஸும் பா.ஜ.க.வும் கலக்கத்தில் நிற்கின்றன.

கரக்பூர் ஐ.ஐ.டி.யில் பொறியியல் படிப்பை முடித்த கேஜரிவால், டாடா ஸ்டீல் நிறுவனத்தில் பணியாற்றினார். ஆனால், அந்த வேலையில் அவர் நீண்டநாள் நீடிக்கவில்லை. ‘சமூகத்துக்கு என்னாலான பங்களிப்பைச் செய்ய வேண்டுமென்ற உந்துதல் நீண்ட காலமாகவே எனக்குள் இருந்து வந்தது.

ஐ.ஐ.டி.யில் படிக்கும்போது அந்த எண்ணம் வலுப்பட்டது. படிப்பறிவில்லாத நமது மக்களை அரசியல்வாதிகள் சுரண்டுவது மிகப் பாதித்தது. ஊழலும் லஞ்சமும் தாண்டவமாடி யதைக் காணச் சகிக்கவில்லை. எனவே, சமூக சேவையோடு மக்களை விழிப்புணர்வு கொள்ளச் செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில் டாடா ஸ்டீலை விட்டு வெளியே வந்தேன்’ என்கிறார் கேஜரிவால்.

பிறகு மதர் தெரஸாவின் தொண்டு நிறுவனம், ராமகிருஷ்ணா மிஷன், நேரு யுவகேந்திரா ஆகிய அமைப்புகளின் பணிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார் கேஜரிவால். இடையில் தாம் ஐ.ஏ.எஸ். படித்தால் என்ன என்ற எண்ணமும் தோன்றியது. அதிகாரத்தின் மூலமாக மக்களுக்கு நிறைய செய்ய முடியும் என்ற நோக்கத்தில் ஐ.ஏ.எஸ் எழுதினார். ஆனால், அவருக்கு வருவாய் பணியில் (I.R.S.)தான் இடம் கிடைத்தது. வருமானவரித் துறையில் சேர்ந்த அவர் இணை கமிஷனர் அளவுக்கு உயர்ந்த நிலையில், வாழ்க்கையை முழுதாக சமூகத்துக்கு அர்ப்பணிக்கும் முடிவில் 2006ல் விருப்ப ஓய்வில் வெளியே வந்து விட்டார்.

பின்னர் தில்லியில் ‘பரிவர்த்தன்’ என்ற அமைப்பை உருவாக்கி, பல சமூகப் பணிகளில் இறங்கினார். பிரபல எழுத்தாளர் அருந்ததி ராயின் அறிமுகம் கிடைத்தது. தகவல் உரிமைச் சட்டத்துக்காகப் பல போராட்டங்களை முன்னெடுத்தார்கள். நடைமுறைக்கு வந்த பின்னர், தகவல் உரிமைச் சட்டம் மூலமாக அரசிடம் பல தகவல்கள் பெற்று ஊழல்களும், முறைகேடுகளும், அதிகாரத் துஷ் பிரயோகங்களும் நடந்திருப்பதை அறிந்து கொண்டனர். ஆனால், தவறு செய்தவர்கள் மீதும், தவறுக்குக் காரணமானவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுத்து விரைவாகத் தண்டனை கொடுக்கும் வகையில் நமது அமைப்பு முறையும் சட்டங்களும் இல்லையே என்ற நிலை அவரை உறுத்திக் கொண்டே இருந்தது.  அண்ணா ஹசாரே கரம்கோத்துக் கொள்ள உருவானது ‘ஊழலுக்கு எதிரான இந்தியா’ அமைப்பு. ஊழல் செய்பவர்களை விரைவாகத் தண்டிக்க எல்லா அம்சங்களையும் உள்ளடக்கிய உறுதியான லோக்பால் சட்டம் உடனடி தேவை என்று போராட்டத்தில் குதித்தது அமைப்பு. கண்துடைப்புப் போல உறுதிப்படாத, அர்த்தமில்லாத ‘லோக்பால்’ சட்டத்தைக் கொண்டுவர அரசு முயல, ‘இந்தப் பல்லில்லாத சட்டம் தேவையில்லை. எங்களுக்கு தேவை உறுதியான ‘ஜன்லோக் பால்’ என்று தெருவில் இறங்கினார்கள். ஹசாரேயும் கேஜரிவாலும். மக்கள் இவர்கள் பின்னால் அணி திரள பணிந்த மத்திய அரசு, பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. லோக்பால் வரைவு மசோதா தயாரிக்க, கூட்டுக்குழு அமைக்கப்பட்டது. இப்படி கடுமையாகப் போராடியும் மத்திய அரசு இறுதியில் பலவீனமான லோக்பால் மசோதாவைத் தயாரித்து மக்களவையின் அனுமதியைப் பெற்றுவிட ஜன்லோக்பால் போராட்டம் தொடர்கிறது. இந்தச் சூழலில்தான் அரசியல் ரீதியாக அரசாங்கத்துக்குள் நுழைவதன் மூலமே தாம் நினைத்த மாற்றங்களைக் கொண்டுவர முடியும் என்ற நோக்கில் அரசியல் கட்சியைத் தொடங்க முடிவு செய்தார். ஆனால், அண்ணா ஹசாரே உடன்படவில்லை. ‘என் படத்தையோ பெயரையோ பயன்படுத்தக் கூடாது’ என்று சொல்லிவிட்டார். அவரது ஆசியும், வழி காட்டுதலும் எங்களுக்கு இருக்கிறது. ‘நோக்கம் ஒன்றுதான்; வழிமுறைகள்தான் மாறுபடுகின்றன’ என்று அண்ணா சொல்லியிருக்கிறாரே" என்று சொல்கிறார் கேஜரிவால். அரசியல் கட்சி என்றாலே அதை நடத்தவும், தேர்தலைச் சந்திக்கவும் ஏகப்பட்ட பணம் தேவையாயிற்றே! என்ன செய்யப் போகிறார் கேஜரிவால். ‘எளிய, சாமான்ய மக்களிடம் மட்டுமே நிதி பெறுவோம். வரவு செலவு கணக்கை கட்சியின் இணைய தளத்தில் வெளியிட்டு, வெளிப்படைத் தன்மையோடு இருப்போம்’ இதுவே கேஜரிவால் பதில்.இன்று சமூக வலைத்தளங்களில் நடத் தப்படும் கருத்துக் கணிப்பில் பிரதமர் பதவிக்கு ஏற்றவராக ராகுல் மற்றும் மோடிக்கு அடுத்தபடியாக முந்திக் கொண்டிருக்கிறார் கேஜரிவால். இவரது அரசியல் கட்சி, தங்கள் ஆதரவுத் தளங்களைக் கரைத்து விடுமோ என்ற பயத்தில் அவரது செயல்பாடுகளில் உள்நோக்கம் கற்பிக்கத் தொடங்கிவிட்டன பா.ஜ.க.வும் காங்கிரஸும். இருந்தும் கவலைப்படாமல் வர இருக்கும் தில்லி மாநிலத் தேர்தல் களத்தில் குதிக்கத் தயாராகிவிட்டார் கேஜரிவால். மின் கட்டண உயர்வு காரணமாக பணம் கட்ட முடியாத தொழிலாளி ஒருவருக்கு மின் இணைப்பைத் துண்டித்தது மின் வாரியம். உடனே அந்தத் தொழிலாளியின் வீட்டுக்குச் சென்று மின் தொடர்பை மீண்டும் ஏற்படுத்தினார். இவரது ஆக்ஷன் - அதிரடி சாமான்ய மக்களையும் ‘அட’ என்று வியக்க வைத்தாலும் சட்டத்தைக் கையிலெடுத்துக் கொண்ட அவரது செயல்பாடு விமர்சிக்கப் பட்டது.

எங்களிடம் ஆட்சியைக் கொடுத்தால் பத்தே நாட்களில் அமைப்பு முறையிலும், சட்டங்களிலும் மாற்றம் கொண்டு வந்து உண்மையான மக்களாட்சியை மலரச் செய்வோம். ஆளும் அரசியல் அதிகாரத்தில் புது ரத்தம் பாய்ச்ச வேண்டிய நேரம் வந்து விட்டது’ - என்று ஆவேசப்படுகிறார் கேஜரிவால். இனி அவரது அரசியலை முன்னெடுத்துச் செல்ல, பல அதிரடிகள் தேவைப்படும்!

No comments:

Post a Comment