Search This Blog

Saturday, October 20, 2012

குட் பை டெக்கான் - சாம்பியன் சரிந்த கதை

 
2008ல் ஐ.பி.எல். தொடங்கியபோது, டெக்கான் சார்ஜர்ஸ் அணிதான் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது. டெக்கான் கிரானிகிள் நிறுவனம் 535 கோடி ரூபாyக்கு ஹைதராபாத் அணியை வாங்கியது. மும்பை, பெங்களூரு அணிகளுக்குப் பிறகு அதிக தொகை ஹைதராபாத் அணிக்குத்தான் செலவிடப்பட்டது. வீரர்களின் ஏலத்தில் டெக்கான் அணிக்காகத் தேர்வு செyயப்பட்ட கில்கிறிஸ்ட், கிப்ஸ், அப்ரிடி, ரோஹித் சர்மா, சமரா சில்வா, ஆர்.பி.சிங், சைமண்ட்ஸ், வாஸ், லஷ்மண் போன்ற ஒரு நீண்ட நட்சத்திரக் கூட்டத்தைப் பார்த்து அத்தனை பேரும் வாயடைத்துப் போனார்கள். இந்த அணியை வெல்வது கடினம், இதுதான் முதல் ஐ.பி.எல். சாம்பியன் என்று அத்தனை பேராலும் ஆரூடம் சொல்லப்பட்டது. ஆனால் ஜெயித்தது, பெரிய பிரபலங்கள் இடம்பெறாத ராஜஸ்தான் ராயல்ஸ் அணிதான். சாம்பியன் அணி என்று வர்ணிக்கப்பட்ட டெக்கான் சார்ஜர்ஸ், மிக மோசமாக ஆடி மொத்தமுள்ள 14 மேட்சுகளில் இரண்டில் மட்டும் ஜெயித்துக் கடைசி இடத்தைப் பிடித்து அனைவருக்கும் அதிர்ச்சியளித்தது. இதனால் அணியை முழுவதுமாக சலவை செய்தார்கள். லஷ்மணிடமிருந்து கேப்டன் பொறுப்பு பறிக்கப்பட்டு கில்கிறிஸ்டிடம் வழங்கப்பட்டது. தென் ஆப்பிரிக்காவில் நடந்த இரண்டாவது ஐ.பி.எல்.- லில் சாம்பியன் பட்டத்தை வென்று தம்மை நிரூபித்தது டெக்கான் சார்ஜர்ஸ். 2010ல் ப்ளே ஆஃப் வரை முன்னேறி கௌரவத்தைத் தேடிக் கொண்டது. சறுக்கல் அடுத்த வருடத்திலிருந்து ஆரம்பித்தது.
 
2011ல் 7வது இடத்தையும் 2012ல் கடைசிக்கு முந்தைய இடத்தையும் (8வது இடம்) பிடித்து மோசமான அணியாக மாறியது டெக்கான் சார்ஜர்ஸ். ஆனாலும் ரசிகர்கள் விடாமல் டெக்கான் அணிக்கு உற்சாகமளித்து வந்தார்கள். 2012ல் அணியின் தோற்றமே மாறிப்போனது. சங்ககரா, ஸ்டெயின், டுமினி என மூன்று நட்சத்திர வீரர்கள் மட்டுமே அணியில் இருந்தார்கள். கடைசிவரை டெக்கான் அணியால் தம் பழைய பெருமையை அடையமுடியாமல் போனது. இந்த வருட ஐ.பி.எல்.- லில் சென்னை சூப்பர் கிங்ஸ், ஃப்ளே ஆஃப் - க்குள் நுழைய டெக்கான் மிகவும் உதவி செய்தது.  கடைசி இரண்டு மேட்சில் டெக்கான் ஜெயித்ததால்தான் சென்னையால் அடுத்த கட்டத்துக்கு நகரமுடிந்தது. இப்போது டெக்கான் சார்ஜர்ஸ் என்றொரு அணி இல்லை. கடன் தொல்லையால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த டெக்கான் நிறுவனத்தால் ஐ.பி.எல்.- லின் விதிமுறைகளைக் கடைப்பிடிக்க முடியவில்லை. வீரர்களுக்கு சம்பளம் வழங்க முடியவில்லை. இதனால் டெக்கான் சார்ஜர்ஸ் அணியை ஐ.பி.எல்.- லிலிருந்து நீக்கியிருக்கிறது பி.சி.சி.ஐ. இப்போது அஹமதாபாத், கட்டாக், தர்மசாலா, இந்தூர், கான்புர், கொச்சி, நாக்புர், நொடா, ராஜ்காட், ராஞ்சி, விசாகப்பட்டினம் ஆகிய அணிகளில் ஒன்றைத் தேர்வு செய்ய டெண்டர் விட்டிருக்கிறது பி.சி.சி.ஐ. டெக்கான் ஆடிய மேட்சுகள் எல்லாம் நினைவுகளில் இருக்கிறதோ இல்லையோ, ஒவ்வொரு மேட்சிலும் டெக்கான் வீரர்களை உற்சாகப்படுத்திய டெக்கான் உரிமையாளரான காயத்ரி ரெட்டியை ரசிகர்களால் மறக்க முடியாது.
 
* அபினவ் பிந்த்ராவை யாராலும் மறக்க முடியாது, லண்டன் ஒலிம்பிக்ஸில் வெறும் கையுடன் திரும்பி வந்தபோதும். அவர் இப்போது பிஸினஸில் இறங்கிவிட்டார். விளையாட்டு வீரர்களுக்கும் உணவகங்களுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. பல கிரிக்கெட் வீரர்கள் ரெஸ்டாரண்ட் நடத்தியிருக்கிறார்கள். அபினவ் பிந்த்ரா, பிட்சா விடோ என்கிற ஓர் நிறுவனத்துடன் இணைந்து பிட்சா ரெஸ்டாரண்ட் ஒன்றைத் தொடங்கியிருக்கிறார். தில்லி, மும்பை மட்டுமில்லாமல் ஆசியா முழுக்க தம் நிறுவனத்தை விரிவாக்கவிருக்கிறார் அபினவ்.
 
தோனிக்கு நெருக்கடிகள் அதிகமாகிக்கொண்டு வருகின்றன. டி20 அணிக்கு கோலியை கேப்டனாக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன. இது கோலியின் பேட்டிங்கைப் பாதிக்கும் என்று ஒருசாரார் கவலைப்பட்டாலும் கோலி தயாராக இருக்கிறார். 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்ற கேப்டன் அல்லவா கோலி! அதனால், ‘கேப்டன் பதவி எப்போது வழங்கப்பட்டாலும் அதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறேன்’ என்று வெளிப்படையாகப் பேசிவிட்டார் கோலி.

No comments:

Post a Comment