Search This Blog

Saturday, October 13, 2012

எனது இந்தியா ( அகதிக் கப்பல்! ) - எஸ். ராமகிருஷ்ணன்....

இந்திய சுதந்திரத்துக்காக, வெளிநாட்டில் வசிக்கும் சீக்கியர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து போராட வேண்டும் என்ற அறைகூவல் 1912-ல் தொடங்கியது. அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் 1913-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி கத்தர் எனும் புரட்சிகர இதழ் தொடங்கப்பட்டது. கத்தர் என்ற கட்சியும் ஆரம்பிக்கப்பட்டது. பாபா சோகன்சிங் பக்னா, லாலா ஹர்தயாள் ஆகியோர் இந்த இயக்கத்தை வழிநடத்தினர். இந்த எழுச்சியால் கனடா, அமெரிக்கா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் வசித்த சீக்கியர்கள், இந்திய சுதந்திரப் போராட்டக் களத்தில் குதித்தனர். ஆயுதம் ஏந்திய போராட்டங்களுக்கு உதவி செய்ய நிதி திரட்டுவதற்காக கனடா மற்றும் அமெரிக்கா செல்ல இந்தியாவில் உள்ள சீக்கியர்கள் முயன்றனர். ஆனால், அன்று தீவிர இனத்துவேசத்துடன் இருந்த கனடா மற்றும் அமெரிக்க அரசுகள் தங்களது தேசத்துக்குள் புதிதாகக் குடியேறும் ஆசியக் கண்ட மக்களை குறிப்பாக, இந்தியர் மற்றும் சீனர்களை தடுத்து நிறுத்துவதற்காக கடுமையான நிபந்தனைகளை விதித்து இருந்தன.

அதாவது, பிழைப்பு தேடி கனடாவுக்கு வரும் இந்தியர், தன்வசம் 200 டாலர் பணம் ரொக்கமாக வைத்திருக்க வேண்டும். அன்று, ஒரு ஆளுக்கு ஒரு நாள் சம்பளமே 10 சென்ட் மட்டுமே. ஆகவே, வசதியானவர்களைத் தவிர மற்றவர்களால் 200 டாலரை ரொக்கமாக வைத்திருக்க முடியாது. இதைக் காரணமாகக் காட்டி பலருக்கு கனடா செல்ல அனுமதி கிடைக்கவில்லை. ஒருவேளை, எப்படியாவது அவர் 200 டாலரை திரட்டி விட்டால் இந்தியாவில் இருந்து இடையில் எங்கும் நிற்காமல் நேரடியாக வரும் கப்பலில் வரும் பயணிகள் மட்டுமே கனடாவுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்ற அடுத்த நிபந்தனை தடுத்தது.

அன்றைய காலகட்டத்தில், ஒன்றிரண்டு கப்பல்கள் மட்டுமே இந்தியாவில் இருந்து நேரடியாக கனடா சென்றன. அவற்றில், கட்டணம் பல மடங்கு அதிகம். ஆகவே, இந்தியர்களால் அதில் பயணிக்க முடியாது. அத்துடன், கனடா அரசு இந்தியர்களுக்கு பயண டிக்கெட் விற்பனை செய்தால், கப்பல் கம்பெனிகளுக்கு வழங்கப்பட்டு வரும் சலுகைகளை இழக்க நேரிடும் என்ற அச்சுறுத்தலும் இருந்தது. அதனால், இந்தியர்கள் கனடாவுக்குச் செல்வது எட்டாக் கனியாக இருந்தது. இன்னொரு பக்கம், சீக்கியர்கள் தங்களுக்கு எதிராகப் பணம் மற்றும் ஆயுதம் திரட்டுவதை ஒடுக்குவதற்கு, பிரிட்டிஷ் அரசும் சகல விதங்களிலும் முனைப்புடன் செயல்படத் தொடங்கியது. சீக்கியத் தலைவர்கள் கண்காணிக்கப்பட்டனர். பலர் கைது செய்யப்பட்டு விசாரணை என்ற பெயரில் அலைக்கழிக்கப்பட்டு கடும் சித்ரவதை செய்யப்பட்டனர்.

முறையாகக் குடியேற்ற அனுமதி கிடைக்காத சூழலில், தாங்களாகவே ஒரு கப்பலை ஏற்பாடு செய்து எப்படியாவது கனடாவுக்குள் நுழைந்துவிட்டால் அகதி அந்தஸ்து தந்து தங்களை அனுமதிக்கத்தானே வேண்டும் என்று முடிவு செய்த சீக்கியர்கள், 'காமகதாமாரூ’ என்ற கப்பலை ஏற்பாடு செய்தனர். ஹாங்காங்கில் இருந்து 1914-ம் ஆண்டு 'காமகதாமாரூ’ கப்பல், 376 சீக்கியர்களை ஏற்றிக்கொண்டு கனடா நோக்கி புறப்பட்டது. இந்தப் பயணத்துக்கு ஏற்பாடு செய்தவர் பாபா குர்தித் சிங். சிங்கப்பூரில் வாழ்ந்துவந்த தொழில் அதிபர். ஏப்ரல் 14-ம் தேதி அந்தக் கப்பல் புறப்பட்டது. அப்போது, 165 பயணிகள் அதில் இருந்தனர். நான்காவது நாள், ஷாங்காய் நகரை அடைந்தது. அங்கே, மேலும் பல சீக்கியர்கள் கப்பலில் ஏறிக்கொண்டனர். அடுத்து, ஜப்பானின் யோகஹாமா துறைமுகத்திலும் காத்திருந்த பல சீக்கியர்கள் ஏறிக்கொண்டனர். மே 23-ம் தேதி கனடா நாட்டின் வான்கூவர் துறைமுகத்தை அடைந்தது. அங்கே, துறைமுகத்தில் கப்பலை நிறுத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதுடன் இந்தியர்கள் எவரும் தரை இறங்கக் கூடாது என்றும் தடுக்கப்பட்டனர்.


கனடா மற்றும் அமெரிக்காவில் வாழ்ந்து வந்த சீக்கியர்கள், தங்களது சகோதரர்கள் பாதிக்கப்படுவதைக் கண்டு எதிர்ப்புக் குரல் எழுப்பினர். இதை தனி வழக்காகப் பதிவு செய்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர். ஆனால், அரசின் குடியுரிமைச் சட்டத்தை தங்களால் கட்டாயப்படுத்த முடியாது என்று நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதற்கிடையில், கப்பலின் ஜப்பானிய கேப்டன் பயணிகள் தனக்கு ஒத்துழைக்க மறுக்கின்றனர் என்று கோபித்துக்கொண்டு கப்பலில் இருந்து வெளியேறி விட்டார். கனடாவில் இருந்த சீக்கியர்கள், திரண்டுவந்து தங்களது சகோதரர்களை கனடாவுக்குள் அனுமதிக்கக் கோரிப் போராடினர். கப்பல் கம்பெனிக்கு செலுத்த வேண்டிய தொகைக்கு 22,000 டாலரை நிதி திரட்டிச் செலுத்தினர். நியாயம் கேட்டு சிறப்புப் பிரதிநிதிகள் கமிட்டி ஒன்றும் உருவாக்கப்பட்டது. முன்சி சிங் என்பவர் பெயரால், நீதி கேட்டு வழக்கு ஒன்றும் தொடரப்பட்டது. ஆனால், கனடா அரசு தன் முடிவை மாற்றிக்கொள்ளவில்லை.

கடல் பரப்பில் இருந்த 'காமகதாமாரூ’ கப்பலை, கடற்சிங்கம் என்ற இன்னொரு கப்பலை வைத்துத் தள்ளி தங்கள் எல்லையைவிட்டுத் திரும்பி அனுப்ப முயன்றது. இதனால், ஆத்திரம் அடைந்த பயணிகள் கலவரம் செய்தனர். அந்தக் கலவரத்தில் வன்முறை வெடித்தது. இதையே காரணமாகக் காட்டிய கனடா அரசு, இந்தியர்கள் அனைவரும் உடனே வெளியேறும்படி உத்தரவு இட்டது. அதை ஏற்றுக்கொள்ள முடியாது எனப் பயணிகள் போராடினர். முடிவில், 24 பயணிகள் மட்டுமே கனடாவுக்குள் அனுமதிக்கப்பட்டனர். மற்ற பயணிகள் அதே கப்பலில் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டனர். பயணத்துக்கான எரிபொருள் மற்றும் உணவை கனடா அரசே கொடுத்தது.

செப்டம்பர் 26-ம் தேதி, கல்கத்தா வந்து சேர்ந்த அந்தக் கப்பலை துறைமுகத்துக்குள் அனுமதிக்க மறுத்து துப்பாக்கி ஏந்திய படகுகளில் வழிமறித்தது பிரிட்டிஷ் அரசு. 17 மைல்களுக்கு அப்பால் நிறுத்தப்பட்ட அந்தக் கப்பலில் இருந்தவர்களை, மொத்தமாக ஒரு ரயிலில் ஏற்றி பஞ்சாப் அனுப்பிவைக்க பிரிட்டிஷ் அதிகாரிகள் திட்டமிட்டு இருந்தனர். கட்டாயப் பயணத்துக்கு பயணிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். தாங்கள் கல்கத்தா கவர்னரை சந்தித்து நீதி கேட்க உள்ளதாகவும், அத்துடன் கல்கத்தாவில் உள்ள குருத்துவாராவுக்குச் சென்று தங்களது புனித நூலை ஒப்படைக்கும் கடமைகளை நிறைவேற்றிய பிறகே, பஞ்சாப் செல்வோம் என்றும் கூறினர். அதை, பிரிட்டிஷ் அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. அனைவரையும் துப்பாக்கி முனையில் சிறப்பு ரயிலில் ஏற்ற முயன்றனர். இதனால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. குர்தித் சிங்கை ஒரு போலீஸ்காரன் லத்தியால் தாக்கினான். உடனே, இரண்டு பக்கமும் அடிதடி தொடங்கியது.

கூட்டத்தைக் கட்டுபாட்டுக்குள் கொண்டுவர போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியது. பயணிகள் எவரிடமும் எந்த ஆயுதமும் கிடையாது. ஆனால், அவர்களை போலீஸ் கடுமையாகத் தாக்கியது. துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் இறந்தனர். 9 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. ஒருவர் நீரில் முழ்கி இறந்துபோனார். 202 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். 28 பேருக்கு என்ன நடந்தது என்றே கண்டுபிடிக்க முடியவில்லை. 62 பேர் மட்டுமே பஞ்சாப் சென்றனர். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம், சீக்கியர் மத்தியில் ஆவேசத்தை ஏற்படுத்தியது. அந்த எழுச்சி சுதந்திரப் போராட்ட நெருப்பாக மாறி பஞ்சாப் முழுவதும் தீவிரமாகப் பற்றி எரியத் தொடங்கியது.

குர்தித் சிங் தப்பி தலைமறைவு ஆனார். அவரை, பிரிட்டிஷ் அரசால் கண்டுபிடிக்கவே முடியவில்லை. பின்னாளில், காந்தியின் வேண்டுகோளை ஏற்று அவர் சரண் அடைந்து ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்தார். 376 பேர் அகதிகளாகச் சென்று அவதிப்பட்டு குண்டடிபட்டு இறந்துபோன வரலாற்றை, சீக்கியர்கள் இன்றும் மறக்கவில்லை. வரலாற்றில் இருந்து அவர்கள் பாடம் கற்றுக்கொண்டனர். எந்தக் கனடாவில் அவர்கள் தரை இறங்க அனுமதிக்கப்படவில்லையோ அங்கே இப்போது நான்கு லட்சம் சீக்கியர்கள் வசிக்கின்றனர். கனடாவின் அரசியல் இயக்கங்களில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். வான்கூவர் நகரில் 'காமகதாமாரூ நினைவுச் சின்னத்தை உருவாக்கி இருக்கின்றனர்.

சீக்கிய அகதிகளை துறைமுகத்துக்குள் தரை இறங்க அனுமதி மறுத்த அதே கனடாதான் இன்று மூன்று லட்சத்துக்கும் மேலான ஈழத் தமிழ் மக்களை அகதிகளாக ஏற்றுக்கொண்டு வாழ்வு அளித்து வருகிறது. காலம், கனடாவின் மனித உரிமை செயல்பாட்டை பெரியதாக மாற்றி அமைத்துவிட்டது. ஆனால், லட்சக்கணக்கான ஈழத் தமிழ் மக்கள் அகதிகளாக உலகெங்கும் சென்று, பட்ட அவமானங்களையும் நெருக்கடிகளையும் இந்தியத் தமிழர்கள் வெறும் பத்திரிகை செய்திகளாக மட்டுமே படித்துக் கடந்து போனதும், ஈழத் தமிழ் மக்களின் வாழ்க்கை சுய லாப அரசியலுக்குப் பகடைக் காயாக மாறிப்போனதும் வருத்தப்பட வேண்டிய நிலை.

இந்த சம்பவத்துக்குப் பிறகு 'காமகதாமாரூ’ கப்பல், 'ஹெயின் மாரூ’ எனப் பெயர் மாற்றம் பெற்றது. பெயரை மாற்றுவதால் நினைவுகளை மாற்றிவிட முடியாதே. இன்றும், துயரம் படிந்த நினைவுச் சின்னமாக 'காமகதாமாரூ’ சீக்கியர் மனதில் அசைந்தாடிக்கொண்டுதான் இருக்கிறது.

No comments:

Post a Comment