Search This Blog

Thursday, October 25, 2012

ஆம்னி பேருந்து அடாவடிகள்

தீபாவளியை விடுங்கள்... 2013 பொங்கலுக்கே வெளியூர் செல்வதற்கு ரயில்களில் டிக்கெட் இல்லை. எல்லாம் புக் ஆகிவிட்டது. உங்களின் ஒரே சாய்ஸ் பேருந்துப் பயணம்தானா? அதிலும் தனியார் ஆம்னி பேருந்துகளில் செல்பவர் என்றால், இந்தக் கட்டுரை உங்க ளுக்கே உங்களுக்குத்தான்!
 
பெரும்பாலான ஆம்னி பஸ் நிறுவனங்கள் தீபாவளி டிக்கெட் முன்பதிவு முடிந்துவிட்டது என்கின்றன. சில நிறுவனங்களில் தீபாவளிக்கு ஒரு வாரம் முன்புதான் முன்பதிவு ஆரம்பிக்கும் என்கிறார்கள். ஆன்-லைனிலும் அதே(£)கதிதான். ஆனால், விசேஷ நாட்கள் முன்பதிவு எல்லாம் கண்துடைப்புதான். தங்களது வழக்கமான வாடிக்கையாளர்கள் சிலருக்கு மட்டும் முன்பதிவை அனுமதிப்பார்கள். முன்பதிவில் டிக்கெட்டை எல்லாம் நியாயமான விலைக்கு விற்றுவிட்டால், தீபாவளிக்கு எப்படிக் கொள்ளை அடிப்பது? கடந்த தீபாவளியின்போது சென்னை டு மதுரைக்கு ஏ.சி. இல்லாத வால்வோ ஆம்னி பஸ்ஸில் வசூலிக்கப்பட்ட கட்டணம் எவ்வளவு தெரியுமா? 1,600. இது வழக்கத்தைவிட நான்கு மடங்கு அதிகக் கட்டணம். இந்த தீபாவளிக்கு இது 2000-மாகக்கூட உயரக்கூடும். தட்டிக்கேட்க முடியாது. கேட்டால், தாக்கப்பட்டலாம். நடுவழியில் இறக்கிவிடப்படலாம். அவர்கள் வைத்ததுதான் சட்டம். இதுவும் எத்தனைக் காலம் கடந்துபோகும்?
 
ஆம்னி பஸ்... அர்த்தம் என்ன?


மோட்டார் வாகனச் சட்டப்படி ஆம்னி பஸ் பயணிகளுக்கானது அல்ல. தனி நபரோ, குடும்பத்துடனோ டிக்கெட் எடுத்துப் பயணிக்க முடியாது. இதை சாட்டர்டு டிரிப் என்பார்கள். ஒரு பஸ்ஸின் 25 முதல் 35 வரையிலான மொத்த இருக்கைகளையும் பதிவுசெய்து சுற்றுலாவுக்காகவோ இதர காரியங்களுக்காகவோ தனியார் பேருந்தில் பயணிப்பதையே தமிழ்நாடு மோட்டார் வாகனச் சட்டம் அனுமதிக்கிறது. ஆனால், சொகுசுப் பேருந்துகள் என்கிற பெயரில் சட்டத்தின் ஓட்டைகளில் புகுந்து புறப்படுகின்றன ஆம்னி பஸ்கள். அதனால்தான் ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் தருவது இல்லை. போர்டிங் பாஸ் போன்ற சீட்டுகளையே தருகிறார்கள்.

சில காலம் முன்பு ஆம்னி பஸ்களில் ஒரு வெள்ளைத்தாளில் பயணிகளின் பெயர்களை எழுதி, பெயர்களுக்கு எதிரே கையெழுத்து வாங்குவார்கள் - குழுவாகச் செல்கிறோம் என்று அரசுக்குப் பொய் கணக்குக் காட்ட. ஆனால், இன்றைக்கு அதுவும்கூட நடைமுறையில் இல்லை. அரசு கண்டுகொள்ளாது என்று அவ்வளவு துணிச்சல்... அவ்வளவு நம்பிக்கை. அவ்வப்போது சில வழக்குகள்... அதிகார வர்க்கத்துக்கு ஆண்டுக்கு சிலபல கோடிகள்... பிரச்னை தீர்ந்தது. ஆனால், அங்குதான் பயணிகளுக்கான பிரச்னையே ஆரம்பிக்கிறது.

சரி... அது ஒருபக்கம்! பேருந்துப் பயணத்தின் போது பயணிகளுக்கு என்னென்ன வசதிகள் செய்து தர வேண்டும்?
கூடுதல் கட்டணத்துக்காகக் கூடுதல் வசதிகள், அடிப்படை உரிமைகள், பாதுகாப்பு, மரியாதை... இவை எல்லாம் ஆம்னியில் கிடைக்கிறதா? பஸ்ஸில் ஒரு பயணி மட்டும் இருந்தாலும்கூட கிளம்ப வேண்டிய நேரத்தில் பஸ்ஸை இயக்க வேண்டும். அல்லது அதே நேரத்துக்கு மாற்று ஏற்பாடு செய்து தர வேண்டும். பயணிக்குக் குடிக்க சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் தர வேண்டும். இயற்கை உபாதைகளுக்காக கேட்டால், இடையே நிறுத்த வேண்டும். சாய்வு இருக்கை சரி இல்லா விட்டால், உடனடியாகச் சரிசெய்து தர வேண்டும். ஏ.சி. பேருந்துகளில் குளிரைச் சமாளிக்க, போர்வை தர வேண்டும். கட்டாயம் முதலுதவிப் பெட்டி வேண்டும். தினமும் இருக்கை விரிப்புகளை மாற்றி, கொசு, கரப்பான் பூச்சி மருந்து அடிக்க வேண்டும். ஆனால், இவை எல்லாம் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் இருக்கும் தரமான ஒரு சில ஆம்னி பஸ் நிறுவனங்கள் மட்டுமே பின்பற்றுகின்றன.

நடைமுறை யதார்த்தம் என்ன?

நிறைய ஆம்னி பேருந்துகள் அறிவிக்கப்பட்ட நேரத்தில் கிளம்புவது அபூர்வம். தமிழகத்தில் 686 ஆம்னி பஸ்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் அனுமதி இல்லாத ஆம்னி பஸ்கள் 1500-க்கு மேல் உள்ளன. வழக்கமான 56 இருக்கைகள் கொண்ட ஸ்பேர் பஸ்களையே பக்கத்து மாநிலங்களில் பதிவுசெய்து, இங்கு போலி ஆம்னிகளாக இயக்குகிறார்கள். உண்மையான ஆம்னி வாகனங் கள் காலாண்டுக்கு ஓர் இருக்கைக்கு 3,000  மாநில அரசுக்கு வரி செலுத்த வேண்டும். ஆனால், இந்தப் போலி ஆம்னிகள் 'சுற்றுலா பஸ்’ என்று கணக்கு காட்டி இருக்கைக்கு 450 மட்டுமே வரி செலுத்துகின்றன.

தவிர, தமிழகத்தில் உட்கார்ந்து செல்லும் இருக்கை வசதிகொண்ட ஆம்னி பஸ்களுக்கு மட்டுமே அனுமதி. ஆனால், பக்கத்து மாநிலங்களில் பதிவுசெய்து சுமார் 200 ஆம்னி பஸ்கள் படுக்கை வசதிகளுடன் ஓடுகின்றன. சில பெரிய ஆம்னி பஸ் நிறுவனங்களிலும், போலி ஆம்னி பஸ்களிலும் விசேஷ காலங்களில் முன்பதிவு ரத்து செய்யப்பட்டு, நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட நான்கு மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒவ்வொரு நிறுவனத்துக்கும் புரோக்கர்கள் நியமிக்கப்பட்டு, சினிமா தியேட்டர் களில் பிளாக்கில் டிக்கெட் விற்பனை செய்வதைப்போல ஆம்னி நிறுவனங் களே மொத்தமாக டிக்கெட்டை புரோக்கர்களுக்கு விற்பனை செய்து விடுகின்றன. புரோக்கர்கள் வைப்பது தான் விலை!

எங்கே சிக்கல்?

தமிழகத்தில் எட்டு கோட்டங்கள், 23 மண்டலங்கள், 206 டிப்போக்களில் இருந்து ஒரு நாளைக்கு சுமார் 20 ஆயிரம் பஸ்களில் இரண்டு கோடிப் பேர் பயணிக்கின்றனர். ஒரு நாள் வருமானம் 22 கோடி. ஆனால், அரசுப் போக்குவரத்துக் கழகம் ஆண்டுக்கு 1,000 கோடி நஷ்டத்தில் இயங்குகிறது. அதன் மொத்தக் கடன் 6,150 கோடி. மொத்தம் உள்ள 206 டிப்போக்களையும் அடமானம் வைத்துக் கடன் வாங்கித்தான் சம்பளம் கொடுக்கிறார்கள். இந்த நிமிடம் ஜப்தியில் இருக்கும் பஸ்களை மீட்கவே சுமார் 100 கோடி வேண்டும். அரசு விரைவுப் பேருந்து கள் தரமான சேவையை அளித்தால், ஆம்னியை நோக்கி அலைபாய்வார்களா மக்கள்? ஓர் அரசு நினைத்தால் தனியார் பேருந்து நிறுவனங்களை விடத் தரமான சேவையை மக்களுக்கு வழங்க முடியும். ஆனால், அது நடக்காததற்கு இரு காரணங்கள் உண்டு. ஒன்று, ஊழல். அடுத்து, தனியார் போக்குவரத்து நிறுவனங்கள் நடத்தும் லாபி.

ஒரு சாதாரண ஹார்டுவேர் கடையில் ஒரு போல்டின் விலை 50 காசு என்றால், அதை அரசுப் போக்குவரத்துக் கழகம் ஐந்து ரூபாய்க்கு கொள்முதல் செய்கிறது. கழகங்களின் நேரடிக் கொள்முதல் வெகு குறைவு. ஒப்பந்ததாரர் நிர்ணயிப்பதுதான் விலை. கடந்த 91-96-ம் ஆண்டுகளில் இப்படி நடந்த போக்குவரத்துக் கழக மெகா ஊழல்களால் சிறையில் அடைக்கப்பட்ட போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர் ஒருவர் சிறையில் தற்கொலை செய்துகொண்டார். ஆனால், இன்றும் ஊழல் தொடர்கிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் அரசு பஸ்களின் பெயர்ப் பலகைகளை டிஜிட்டல் ஆக்கினார்கள். அதற்கு செலவு அதிகபட்சமாக 2,000  மட்டுமே ஆகும். ஆனால், ஒரு பேருந்துக்கு 50 ஆயிரம் அள்ளிக்கொடுத்தார்கள்.

அடுத்து தனியார் லாபி. அரசு போக்குவரத்து துறை சுறுசுறுப்பாக இயங்காததன் பின்னணியும் இதுதான். அரசு பஸ்கள் ஓட்டையும் உடைசலுமாக இருந்தால்தான் இவர்கள் சம்பாதிக்க முடியும். அமைச்சரில் தொடங்கி அதிகாரிகள் வரை இவர்களின் கறை கரங்கள் நீள்கின்றன.

இந்த லாபிதான் முறையற்ற வணிகமான ஆம்னியையும் அனுமதிக்கிறது. அதற்குக் கட்டண நிர்ணயம், சேவை கண்காணிப்புகள், தரக் கட்டுப்பாடுகள் என எதையுமே செய்ய மறுக்கிறது. இந்த லாபிதான் கடந்த ஆண்டு வேலூர் அருகே காவிரிப்பாக்கத்தில் 22 பேர் உடல் கருகி இறந்தபோதும்... அரசு பெரிதாக நடவடிக்கை ஒன்றும் எடுக்காததற்குக் காரணமாக இருந்தது. இந்த லாபி தான் உயர் நீதிமன்றம், 'மத்திய அரசின் மோட்டார் வாகனச் சட்ட விதிமுறைகளைப் பின்பற்றி ஆம்னி பஸ்களுக்காக புதிய விதிமுறைகளை வகுக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டபோதும் அரசை மௌனம் காக்கவைக்கிறது.

ஒரு வழித்தடத்தில் மக்கள் அதிகம் பயணிக்கிறார்கள் என்றால், அதில் அரசு பஸ்கள்தான் அதிகம் விட வேண்டும் என்பது அடிப்படை விதிமுறை. இங்கு அரசு பஸ்களைவிட தனியார் பஸ்களே அதிகம். பிரச்னையைத் தீர்க்க வேண்டும் எனில், அரசு போக்குவரத்துக் கழகங்களைச் சீரமைக்க வேண்டும். குறிப்பாக, 'கரகாட்டக்காரன் கார்’ ரேஞ்சுக்கு இருக்கும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகங்களின் பஸ்களைப் புதுப் பிக்க வேண்டும். தமிழகத்திலும் தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்குச் செல்லும் மொத்தம் உள்ள 4,372 வழித்தடங்களிலும் ஆம்னி பஸ்கள் இயங்குகின்றன. இந்த ஒவ்வொரு வழித்தடத்திலும் கூடுதலாக மூன்று அரசு பஸ்களை விட்டாலே, சுமார் 15 ஆயிரம் புதிய பஸ்கள் தேவைப்படும். இதைச் செய்தாலே, 75 சதவிகிதம் பிரச்னைகளைத் தீர்க்கலாம்.

தீபாவளி நெருங்கிவிட்டது... சென்னைகோயம் பேடு ஆம்னி பேருந்துகள் முறைகேடு குறித்துப் புகார் செய்ய, 044-23452377, 23452320 ஆகிய எண் களில் காவல் துறையினரிடம் புகார் அளிக்கலாம்!


 

 

No comments:

Post a Comment