Search This Blog

Thursday, October 11, 2012

அருள்வாக்கு - தலையே நீ வணங்காய்!

தற்பெருமையை என்னவென்று சொல்கிறோம்?’ ‘தலைக்கனம்,’ ‘மண்டைக்கனம்’ என்கிறோம். குறுக்குவாட்டில் வளருகிற ப்ராணியாயிருந்து அப்படி மண்டைக்கனம் ஏறினால் பரவாயில்லை; ‘பாலன்ஸ்’ கெட்டுப் போகாமல் சமாளித்துக் கொண்டு விடலாம். ஆனால், உயரவாட்டில் இப்போது நாம் இருக்கிற தினுஸில் மண்டைக்கனம் ஏறினால்... ‘டாப் - ஹெவி’ ஆனால் என்னவாகும்? ‘ஈக்விலிப்ரியம்’ என்கிற மைசீர் நிலையே கெட்டுப் போய், குலைந்து போய், தடாலென்று விழ வேண்டியதுதான்! பகவான் நாம் உயரவாட்டில் வளரும்படி வைத்து சிரஸை உச்சியில் வைத்திருக்கிறான் என்றால் ஒருபோதும் தலைக்கனம் ஏறாமல், பணிவாயிருந்து நம்மை விழுவதிலிருந்து - வீழ்ச்சியிலிருந்து - காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். ‘பதிதன்’, ‘பதிதை’ என்று ரொம்பவும் நிஷித்தமாகச் சொல்கிறோமே, அதற்கு நேர் அர்த்தமே ‘விழுந்து விட்டவர்’ என்பதுதான். உயரம் ஜாஸ்தி ஆக ஆக, விழுந்தால் படுகிற அடியும் ஜாஸ்தி. ஹானி உண்டாக்குவதாக இருக்கும். உசந்த ஸ்தானம் என்பதன் கதியும் அப்படித்தான். அங்கே இருக்கிறவன் தப்புப் பண்ணி இடறி விழுகிற போதுதான் அப்புறம் எழுந்திருக்கவே முடியாமல் - அதாவது, அந்த உசத்தியை மறுபடி அடையவே முடியாதபடி - ஊர் உலகமெல்லாம் சிரித்து அவனை மட்டந்தட்டி வைத்துவிடுகிறது.

உலகம் சிரிப்பது, சிலாகிப்பது இருக்கட்டும். ஆத்மார்த்தமாக ஒருத்தனுக்கு எது நல்லது? எப்படி இருந்தால் அவனுக்கு உள்ளூர ஒரு நிறைவு, நிம்மதி ஏற்படுகிறது? பாரம் தூக்கினால் நிம்மதியா, அதை இறக்கிப் போட்டால் நிம்மதியா? பாரம் என்றால் இந்த ஸம்ஸார ஸாகரத்தில் ஏற்படுகிற கஷ்டங்களின் பாரம் மட்டுமில்லை. பெரிய பாரம் அஹம்பாவம்தான்; தற்பெருமைதான். அதை இறக்கினாலே நிரந்த நிம்மதி. அப்படி இறக்குவதற்கு ஸஹாயம் செய்யும் க்ரியைதான், ஒரு மநுஷ்ய சரீரத்தில் பூமிக்கு ரொம்ப எட்டத்திலிருக்கிற சிரஸை ஒரே இறக்காக, மற்ற அவயவங்களுக்கு ஸமஸ்தானத்தில் இறக்கி பூமியோடு பூமியாகப் போட்டு நமஸ்கரிப்பது! ‘சிரஸே ப்ரதானம்’ என்ற பெருமையை த்யாகம் பண்ணி, அதையும் எண் சாணில் ஒன்றாகவே எளிமைப்படுத்தும் க்ரியை! பிறத்தியார் இறக்கினால் அவமானம்; நாமே இப்படித் தலையை இறக்கினாலோ பஹுமானம் (வெகுமானம்), விநய ‘ஸம்பத்து’ என்றே சொல்லும் வெகுமதி! தலைக்கனம், மூளைப் பெருமை போகவே தலையால் நமஸ்கரிப்பது! ‘தலையே, நீ வணங்காய்!’ என்றுதான் அப்பர் ஸ்வாமிகள் பாடியதும்.

- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

No comments:

Post a Comment