Search This Blog

Monday, June 18, 2012

விண்வெளிக் குடியேற்றம்


http://mars-one.com. இந்த இணையதளத்துக்குப் போன பிறகு ஒரு நிமிடம் கண்ணைக் கசக்கிக் கொண்டு படிக்க ஆரம்பித்தேன். ஆமாம்! 2023-ல் மனிதன் செவ்வாய் கிரகத்தில் குடியேறலாம். அந்த இலக்கை அடைவதற்கான ஒரே குறிக்கோள்தான் இந்த ‘மார்ஸ்-ஒன்’ நிறுவனம் தொடங்கப்பட்டதற்கான காரணம். இந்தத் தளத்தைப் பார்வையிட்ட பிறகு, முதலில் ஏதோ ஹாலிவுட் படத்துக்கான ஒத்திகையோ என்ற எண்ணம் வந்தது. ஆனால் இல்லை. நெதர்லாந்து நாட்டில் தலைமையகத்தைக் கொண்டுள்ள இந்நிறுவனம், ஒரு தனியார் நிறுவனம் ஆகும். இதன் நோக்கம் செவ்வாய்க்கு விண்வெளி வீரர்களுடன், திறமைமிக்க சில ஆட்களையும் அனுப்பி வசிப்பதற்கான வீடுகளைக் கட்டி, அதன்பின் ஒவ்வொருவராக செவ்வாய்க்கு அனுப்ப வேண்டும் என்பதாகும். 2022இல் முதல் குழுவின் ஏழு மாதப் பயணத்துக்குப் பின்பு செவ்வாய் கிரகம் சென்று குடியேறும். ஒருமுறை பெரிதாக மூச்சுவிட்டுக் கொண்டு படியுங்கள். அந்தக் குழு திரும்பி வரவே வராது. அங்கேயே செட்டில் ஆகிவிடும். ஏனென்றால் ஒருவழிப் பாதை மாதிரி அவர்களால் அந்த விண்வெளி வாகனத்தில் செவ்வாய்க்கு மட்டும்தான் செல்ல முடியும். திரும்பி பூமிக்கு வர இயலாது. அதன்பின் இரண்டு வருடங்களுக்கொருமுறை நான்கு, நான்கு ஆட்களை அனுப்பி ஒரு காலனி முழுவதும் குடியேற்றம் செய்ய வேண்டும் என்பதே இந்த முயற்சியின் நோக்கம்.

இந்நிறுவனத்தின் உப-நிறுவனர் பேஸ் லாண்ட்ஸ்ராப் கூறுகையில், செவ்வாய் கிரகம் செல்வதற்கான ஆயத்தங்களையும், அங்கு நடக்கும் விஷயங்களையும் உலகத்திலுள்ள - அதாவது பூமியிலுள்ள - மக்கள் அனைவரும் பார்க்கலாம். அதைக் கொண்டுதான் இந்தப் பயணத்துக்கு நிதி திரட்டவும் முடிவெடுத்திருக்கிறார்கள். இது பற்றிய ஒலி-ஒளி காட்சியை யூட்யூபில் பார்த்து மகிழவும்."Mars One Video" என்று டைப் செய்தால் கிடைக்கும். இந்தக் காட்சியை இதுவரை இரண்டேகால் லட்சம் இணையர்கள் பார்த்துள்ளனர். நோபல் பரிசு பெற்ற இயற்பியல் விஞ்ஞானி ஜெரார்ட் ஹூஃப்ட் இந்த முயற்சியின் பிராண்ட் அம்பாஸடர். தமது பேராதரவை நல்கியுள்ளார். "இவர் இதுபற்றிப் பேசுகையில், இது ஒரு குதூகலமான சோதனை. விண்வெளியில் குடியேறுவது பற்றிய மனித சமுதாயத்தின் தீராத தாகத்தைத் தீர்த்து வைக்கும் முயற்சி," என்கிறார்.

செவ்வாயில் புவி ஈர்ப்பு சக்தி பூமியின் சக்தியில் 40%தான் இருக்கும். எனவே அங்கு செல்லும் பயணிகளுக்கு சிறப்பு உடை வழங்கப்படும். இதை ‘செவ்வாய் உடை’ என்கிறார்கள். நிலவுக்குச் செல்லும் உடைமாதிரி தான் இது இருக்குமாம். 

அடுத்த வருடம் விஞ்ஞானிகள் தேர்வை ஆரம்பிக்க இருக்கிறது இந்நிறுவனம். தேர்வை முடித்தவுடன் அவர்களுக்குக் கடுமையான பயிற்சி (பத்து வருடம்) கொடுக்கப்படும். இப்பயிற்சியின் முதல் படி, செவ்வாய் செல்லும் அந்தப் பயணிகள் இவ்வுலகத்தை மறந்து விடவேண்டுமாம்!

2 comments: