Search This Blog

Friday, October 26, 2012

அக்டோபர் 26 -ஜம்மு&காஷ்மீர் தினம்

1947 அக்டோபர் 26 அன்று  பாரதத்துடன் மற்ற சமஸ்தானங்கள் எப்படி இணைந்ததோ அது போன்றே ஜம்மு&காஷ்மீர் சமஸ்தானமும் பாரதத்துடன் முழுமையாக இணைந்தது.



மன்னர் ஹரி சிங் பாரதத்துடன் இணைத்த ஜம்மு காஷ்மீர் பல்வேறு காரணங்களால் நமது நாட்டின் சுதந்திர தினமான 1947 ஆகஸ்ட் 15க்கு முன்பாக ஜம்மு&காஷ்மீர் சமஸ்தானம் பாரதத்துடன் இணையவில்லை, அச்சமயத்தில் அது நமது நாட்டுடன் இணையாமல் தனியான சுதந்திர நாடாகத் திகழ்ந்து வந்தது. அந்நாட்டினை டோக்ரா பரம்பரையைச் சார்ந்த ஹிந்து மன்னர் ஹரி சிங் ஆட்சி செய்து வந்தார். ஆனால் அந்நாட்டில் முஸ்லிம்கள் பெரும்பான்மை யினராக வாழ்ந்து வந்தனர். டோக்ரா ஹிந்து மன்னர் பரம்பரையினர் மீது ஜம்மு காஷ்மீர் மக்கள் அனைவரும் பெருமதிப்பு வைத்திருந்தனர். நமது நாட்டில் வேறெங்கும் காண முடியாத காட்சி அது.

இந்தியாவின் கவர்னர் ஜெனரல் ஆக இருந்த லார்ட் மௌன்ட்பேட்டன் அவர்களுக்கு 1947 ஆம் வருடம் அக்டோபர் 26 ஆம் தேதியன்று பாரதத்துடன் எவ்வித நிபந்தையும் இன்றி தனது ஜம்மு காஷ்மீர் சமஸ்தானத்தை மற்ற சமஸ்தானங்கள் எப்படி ஒன்றினைந்ததோ அதேபோன்று  தானும் இணைப்பதாக எழுதி கையொப்பமிட்டு அனுப்பிவைத்தார். அக்டோபர் 27, 1947 அன்று அதை ஏற்றுக் கொண்டு அங்கீகரித்து கைச்சாத்து இட்டதுடன் ஜம்மு காஷ்மீர் சமஸ்தானத்தை இந்தியாவின் ஒரு மாநிலமாக அறிவித்தார் கவர்னர் ஜெனரல் ஆக இருந்த லார்ட் மௌன்ட்பேட்டன்.

முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக இருந்தும் கூட எவரும் ஜம்மு காஷ்மீர் பாகிஸ்தானுடன் சேரவேண்டும் என்று குரல் எழுப்பிடவில்லை. மன்னர் ஹரி சிங் ஜம்மு காஷ்மீரை பாரதத்துடன் இணைத்த பிறகும் கூட அம்முடிவை எந்த ஒரு முஸ்லிமும் எதிர்க்க வில்லை. தனி உரிமைகள் சிறப்பு சலுகைகள் வேண்டும் என்று கூட  அவர்கள் கேட்டிடவில்லை.  அப்படி இருக்க ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு மட்டும் இந்திய அரசியல் சாசனத்தில் பிரிவு 370 எதற்காக உருவாக்கப்பட்டது. தற்காலிகமானது வெறும் 10 வருடங்களுக்கு மட்டுமே இது அமுலில் இருக்கும் பின்னர் அகற்றிக் கொள்ளப்படும் என்று அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். 62 வருடங்கள் சென்ற பிறகும் அந்த அரசியல் சாசன சட்டம் 370 வது பிரிவு நீக்கப்படாமல் இருப்பது ஏன்?

1947ஆம் வருடம் மன்னர் ஹரி சிங் இணைத்த முழு ஜம்மு காஷ்மீர் இன்று நம்முடன் உள்ளதா? ஜம்மு காஷ்மீர் துண்டாடப்பட்டதற்கான காரணம் என்ன? பாரத ராணுவம் வெற்றிகரமாக பாகிஸ்தான் கூலிப்படையினரை விரட்டி அடித்துக் கொண்டிருந்த போது திடீர் என போரை நிறுத்திட வேண்டியதன் காரணம் என்ன? இந்திய பாகிஸ்தான் பிரச்சனையை தேவையில்லாமல் ஐக்கிய நாடுகள் சபைக்கு எடுத்துச் சென்றது ஏன்? ஐக்கிய நாடுகள் சபையின் வரலாற்றில் என்றைக்காவது அது நடுநிலையாக நடந்து கொண்டதுண்டா?  பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்துள்ள ஜம்மு காஷ்மீர் பகுதியில் இருந்து முற்றிலுமாக தனது ராணுவத்தை திரும்பப் பெறவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை கூறியும் இன்று வரை அதற்கு பாகிஸ்தான் செவி சாய்க்கவில்லை. மன்னர் ஹரி சிங் இணைத்த முழு ஜம்மு காஷ்மீரும் இன்று நம்மிடம் இல்லை.

1947இல் ஜம்மு காஷ்மீர் சமஸ்தானம் நம்முடம் இணையும்போது ஜம்மு, காஷ்மீர், லடாக், கில்கித் மற்றும் பால்டிஸ்தான் என ஐந்து வகைப் பகுதிகளாக இருந்தது. சுதந்திர பாரதத்துடன் இணைந்த சமஸ்தானங்களிலேயே நிலப்பரப்பில் மிகப் பெரியது ஜம்மு காஷ்மீர். இணையும்போது மொத்தம் 2,20,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டதாக இருந்தது. ஆனால் இப்போது அதை ஒருபக்கம் பாகிஸ்தானும் மற்றொருபக்கம் சீனாவும் ஆக்கிரமித்துள்ளது. மன்னர் ஹரி சிங் இணைத்த ஜம்மு காஷ்மீரில் தற்போது 45% மட்டுமே இன்று நம் வசம் உள்ளது.



ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தற்போதைய நிலைமை.

ஜம்மு பகுதி 36,315 ச.கி.மீ. பரப்பளவு கொண்டது. அதில் தற்போது நம் வசம் வெறும் 26,000 ச.கி.மீ.மட்டுமே உள்ளது. இதன் தெற்கே பீர்பாஞ்சால் என்கிற எவராலும் எட்ட முடியாத மிக உயர்ந்த மலைத்தொடர் உள்ளது. அங்குதான் தாவி, சீனாப், ரவி, போன்ற  வற்றாத ஜீவா நதிகள் உற்பத்தியாகி ஜம்மு காஷ்மீரை வளப்படுத்துகின்றன. தற்போது நம் வசம் இருக்கின்ற ஜம்மு பகுதியில் 67% சதவிகிதம் பேர் இந்துக்கள். இவர்கள் பேசுகின்ற மொழி டோக்ரா மற்றும் பஹாடி ஆகும்.

காஷ்மீர் பள்ளத்தாக்கு மொத்தம் 22,000 ச.கி.மீ. பரப்பளவு கொண்டது. அதில் தற்போது நம் வசம் இருப்பது வெறும் 16,000 ச.கி.மீ.மட்டுமே. தற்சமயம் இங்கு முஸ்லிம்கள் மட்டுமே வசித்து வருகின்றனர். இங்கு காலங்காலமாக வசித்து வந்த ஹிந்துக்கள் 4 லக்ஷம் பேர்கள் வெளியேற்றப்பட்டு ஜம்மு உட்பட நாட்டின் பல இடங்களில் வசித்து வருகின்றனர். இங்கு ஜீலம் மற்றும் கிஷன் கங்கா நதிகள் பாய்ந்தோடுவதால் அழகிய இரண்டு பள்ளத்தாக்குப் பகுதிகள் உள்ளன. ஒன்று ஜீலம் பள்ளத்தாக்கு மற்றொன்று லோலாப் பள்ளத்தாக்கு ஆகும். இங்கு மக்கள் பேசுகின்ற மொழி கஷ்மீரி. ஆனால் மூன்றில் ஒரு பகுதி காஷ்மீர் பள்ளத்தாக்கில் பஞ்சாபி-பஹாடி மொழி பேசுகின்றனர்.

லடாக்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலேயே மிகப் பெரிய பகுதியாகும். மொத்தம் 1,64,748 ச.கி.மீ.பரப்பளவு கொண்டது. அதில் மிகக் குறைந்த பரப்பளவே அதாவது வெறும் 59,000 ச.கி.மீ. பரப்பளவு மட்டுமே இன்று நம்வசம் உள்ளது.

இயற்கை தனது அத்தனை வளங்களையும் இங்கு கொட்டிவிட்டதோ என்று சொல்லக்கூடிய அளவிற்கு மிக அழகிய அற்புதமான பகுதி. எண்ணற்ற புத்த மடாலயங்கள், விஹார்கள் உள்ளன. அமைதி தவழும் பகுதியாகும். கார்கில் போன்ற மிக உயரமான மலைத் தொடர்கள் உள்ள பகுதி லடாக். ஆறுகள் எப்போதும் பனி உறைந்தே காணப்படும். வருடத்தில் மிக மிகக் குறைவாக மழை பொழிகின்ற இடம் இதுதான். காரகோரம் நெடுஞ்சாலை இங்குதான் செல்கிறது. லே, மற்றும் கார்கில் என இரண்டு மாவட்டங்கள் உள்ளன. ஒரு நாடாளுமன்றம் 4 சட்டமன்றத் தொகுதிகளும் இங்கு இடம் பெற்றுள்ளன.

கார்கில் பகுதியில் வாழ்ந்து வருகின்ற “ஷியா” பிரிவு முஸ்லிம்கள் தீவிரமான தேச பக்தர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. லடாக்கின் பெரும் பகுதியை சீனா கைப்பற்றி வைத்துக் கொண்டுள்ளது. லடாக்கினை தெற்கு திபெத் என்று சீனா அழைக்கிறது. லே, சன்ஸ்கார், சங்தங், நுப்ரா, பள்ளத்தாக்குகளில் முழுக்க முழுக்க பௌத்தர்கள் வாழ்கின்றனர். சுரு பள்ளத்தாக்கில்  முஸ்லிம்கள் மட்டுமே அதிக எண்ணிக்கையில் வசித்து வருகின்றனர். இங்கு மக்கள் லடாக்கி, பால்ட்டி அல்லது பாலி மொழிகளில் பேசுகின்றனர்.

கில்கித் மற்றும் பால்டிஸ்தான் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கில்கித் மற்றும் பால்டிஸ்தான் பகுதி முழுவதும் இன்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ளது. 1947 ஆம் வருடம் பாகிஸ்தான் ஆக்கிரமித்ததை நாம் இன்று வரை மீட்காமல் இருந்து வருகிறோம். அப்பகுதியை விடுதலை செய்யப்பட்ட அதாவது “ஆசாத் காஷ்மீர்” என்று பாகிஸ்தான் அழைக்கிறது. நாம் அதை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்று அழைக்கிறோம். ஆக்கிரமித்த அப்பகுதிகளை பாகிஸ்தான் தனது முழுமை யான அரசு நிர்வாகத்தின் கீழ் எடுத்துக் கொண்டு, அதை நேரிடையாக நிர்வாகம் செய்து வருகிறது.

கில்கித் மற்றும் பால்டிஸ்தான் பகுதி மொத்தம் 63,000 ச.கி.மீ.பரப்பளவு கொண்ட தாகும். அதில் கில்கித் மட்டும் 42,000ச.கி.மீ. பரப்பளவு கொண்டது. பால்டிஸ்தான் 20,000 ச.கி.மீ. பரப்பளவு கொண்டது. கில்கித் ராணுவம் மற்றும் தேசப் பாதுகாப்புக் கண்ணோட்டத்தில் மிகமிக முக்கியமான பகுதியாகும். அங்கு சர்வதேச எல்லைக்கோடு உள்ளது. 6 நாடுகளின் எல்லைகள் சந்திக்கின்ற மிக முக்கியமான இடமாகும். ஆப்கானிஸ்தான், தஜிகிஸ்தான், சீனா, திபெத் மற்றும்  பாகிஸ்தான் போன்ற நாடுகளின் எல்லைகள் அங்கு சங்கமமாகின்றது. இப்பகுதி யார் வசம் இருக்கிறதோ அவர்கள் ஆசியப் பிராந்தியத்தில் இராணுவரீதியில் மற்றும் பல வகைகளில் ஆதிக்கம் செய்யமுடியும்.

இப்பகுதியின் முக்கியத்துவத்தை அறிந்த அமெரிக்கா மற்றும்  சோவியத் ரஷ்யா கூட இப்பகுதியில் தங்களது ஆதிக்கத்தை நிலை நிறுத்திட முயன்றன. கில்கித்தை தனக்கு சாதகமாகப் பயன் படுத்திக் கொள்வதற்காக சோவியத் ரஷ்யா அவ்வப்போது பாகிஸ்தானுக்கு உதவி செய்து வந்துள்ளது. தற்போது அங்கு11,000 சீனத் துருப்புகள் இருந்து வருகின்றனர். சீனா ஒரு லக்ஷம் கோடிக்குமேல் அங்கு முதலீடு செய்துள்ளது. மேலும் சீனக் கம்பெனிகளில் வேலை செய்வதற்காக பல ஆயிரம் சீனர்கள் அங்கு வந்துள்ளனர்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீரில், பஞ்சாபி மட்டும் பஹாடி மொழி பேசுகின்றவர்கள் அனைவரும் முஸ்லிம்கள் ஆவர். ஆனால் சுமார் 10 ௦ லக்ஷத்திற்கும் மேற்பட்ட பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து இடம் பெயர்ந்து வந்த ஹிந்துக்கள் 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஜம்முவிலும் நாட்டின் பிற பகுதிகளிலும் அகதிகளாக வசித்து வருகின்றனர்.

1962 ஆம் வருடம் அக்டோபர் மாதம் 20 ஆம் தேதியன்று சீனா நமது நாட்டின் மீது தாக்குதல் தொடுத்தது. அப்போரில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் லடாக் பகுதியில்  36,500 ச.கி.மீ. பரப்பளவு இடத்தை சீனா ஆக்கிரமிப்பு செய்து வைத்துக் கொண்டுள்ளது. அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் வேறு தான் ஆக்கிரமிப்பு செய்து வைத்துள்ளவற்றிலிருந்து சுமார் 5,500 ச.கி.மீ.பரப்பளவு இடத்தை சீனாவிற்கு தாரை வார்த்துள்ளது. அதில் இப்போது பாகிஸ்தானையும் சீனாவையும் இணைக்கும் சாலை போடப்பட்டுள்ளது. அங்குதான் காரகோரம் நெடுஞ்சாலை செல்கிறது.

நமது நாட்டின் இழந்த பகுதிகள் அனைத்தையும் மீட்டிட வேண்டும் என 1994 ஆம் வருடம் நமது நாட்டின் நாடாளுமன்றத்தில் அனைத்துக் கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் அதற்குத் தேவையான நடவடிக்கைகள் எதையும் நமது மத்திய அரசு மேற்கொள்ளவில்லை. அம்மாதிரி ஒரு தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதே நாட்டு மக்கள் பலருக்குத் தெரியாது.

மன்னர் ஹரி சிங் 1947 ஆம் வருடம் பாரதத்துடன் இணைத்த முழு ஜம்மு காஷ்மீரை என்று காண்போம். நமது  நாட்டின் இழந்த பகுதிகள் அனைத்தையும் மீட்டிடுவோம். இருக்கின்ற ஜம்மு காஷ்மீரைக் காத்திடுவோம்.

1 comment:

  1. அறியாத தகவல்கள்... விரிவான விளக்கங்கள்... நன்றி...

    ReplyDelete