Search This Blog

Monday, February 03, 2014

ஆழ்கடல் அதிசயங்கள்!

 
1960. ஜனவரி 23. அன்றைய தினம்தான் ஆழ்கடல் ஆராய்ச்சியாளர் ஜாக்கஸ் பிக்கார்ட், அமெரிக்கக் கடற்படை அதிகாரி டான் வால்ஷ் ஆகிய இருவரும் உலக சாதனை ஒன்றை நிகழ்த்தினர். இந்த இருவரும் உலகின் கடல்களிலேயே மிக ஆழமான இடத்துக்குச் சென்று திரும்பினர். பசிபிக் கடலில் மரியானா டிரெஞ்ச் என்னும் பெரிய அகழி உள்ளது. அந்த அகழியில் சேலஞ்சர் மடு எனப்படும் இடத்தின் ஆழம் 10,994 மீட்டர். அதாவது சுமார் 11 கிலோ மீட்டர்.பிக்கார்ட், வால்ஷ் இருவரும் டிரியெஸ்டி எனப்படும் ஆழ் மூழ்கு கலம் ஒன்றின் அடியில் பொருத்தப்பட்ட ஓர் இரும்புக் கோளத்துக்குள் உட்கார்ந்தபடி சேலஞ்சர் மடுவுக்குள் இறங்கினர். உள்ளிருந்தபடி சிறிய ஜன்னல் வழியே உற்றுப் பார்த்தனர். கடலில் அவ்வளவு ஆழத்தில் சுற்றிலும் கும்மிருட்டு. கோளத்துடன் இணைந்த மின்விளக்கு வெளிச்சத்தில் சிறு மீன்கள் அங்குமிங்கும் செல்வது தெரிந்தது.அவர்களால் அந்தக் கோளத்திலிருந்து வெளியே வந்திருக்க முடியாது. அதற்கான வழியும் கிடையாது. அப்படி வெளியே வர முடிந்திருந்தால் நொடியில் டூத் பேஸ்ட் டியூப் போல பசக் என்று நசுங்கி மடிந்திருப்பர்.அவர்கள் இருவரும் ஒண்டிக் கொண்டிருந்த கோளத்தைச் சுற்றிலுமுள்ள கடல் நீரானது எல்லாப் புறங்களிலிருந்தும் சதுர செண்டிமீட்டருக்கு 1.25 மெட்ரிக் டன் வீதம் அழுத்திக் கொண்டிருந்தது.கடலுக்குள் மேலும் மேலும் ஆழத்துக்குச் செல்லும் போது அழுத்தம் பயங்கரமாக அதிகரிக்கும். ஆகவே தான் ஆழ்கடல் யாரும் எளிதில் செல்ல முடியாத இடமாக இருந்து வருகிறது.ஆழ்கடல் அழுத்தம் பற்றி மேலும் கூறுவதற்கு முன்னர் காற்றழுத்தம் பற்றிக் கவனிப்போம். நம் தலைக்கு மேலே மிக உயரம் வரை காற்று மண்டலம் உள்ளது. காற்றுக்கும் எடை உண்டு. 
 
நாம் வீட்டுக்குள் இருந்தாலும் சரி, திறந்தவெளியில் இருந்தாலும் சரி, நம் தலைக்கு மேல் உள்ள காற்று அனைத்தும் சேர்ந்து நம்மை அழுத்திக் கொண்டிருக்கிறது. இது (கடல் மட்டத்தில் உள்ள இடங்களில்) ஒரு சதுர செண்டிமீட்டருக்குச் சுமார் ஒரு கிலோ வீதம் உள்ளது. முன்புறம், பின்புறம் என நம் உடலை எல்லாப் பக்கங்களிலும் காற்று மண்டலம் அழுத்திக் கொண்டிருக்கிறது. பழகிப் போனதால் இது நமக்குத் தெரிவதில்லை.
 
(காற்றழுத்தம் இடத்துக்கு இடம் சற்றே மாறுபடுகிறது. ஓரிடத்தில் காற்றழுத்தம் குறைவாக இருந்தால் அது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகும். அப்போது பிற இடங்களிலிருந்து அந்த இடத்தை நோக்கிக் காற்று வீசும். மழை மேகங்கள் இருந்தால் அவையும் அந்த இடத்தை நோக்கி நகரும்.)  காற்றுக்கு எடை உண்டு என்பது போல தண்ணீருக்கும் எடை உண்டு. தலையில் தண்ணீர் குடத்தைச் சுமந்து வருகிறவர்களிடம் கேட்டுப் பாருங்கள், சொல்வார்கள். ஆகவே கடலுக்குள் இறங்கினால் நீரின் எடையும் சேர்த்து நம்மை அழுத்தும்.நீருக்குள் சுமார் 10 மீட்டர் ஆழத்துக்கு இறங்கினால் கடல் மட்டத்தில் உள்ளதை விட அழுத்தம் இரண்டு மடங்காகி விடும். 20 மீட்டர் ஆழத்தில் மூன்று மடங்காகி விடும். 30 மீட்டர் ஆழத்தில் அழுத்தம் நான்கு மடங்காகி விடும். கடலுக்குள் மேலும் மேலும் ஆழத்துக்குச் செல்லும்போது அழுத்தம் இதே விகிதத்தில் அதிகரித்துச் செல்லும். மிகமிக ஆழத்தில் உள்ள அழுத்தத்தை ஒரு சதுர செண்டிமீட்டருக்கு இவ்வளவு டன் என்று கூற வேண்டியிருக்கும்.ஆகவே மனிதன் கடலுக்குள் இஷ்டம் போல ஒரு கிலோ மீட்டர், இரண்டு கிலோ மீட்டர் ஆழத்துக்கு ஒரு போதும் இறங்க முடியாது. அப்படி இறங்க முயன்றால் கடும் அழுத்தம் காரணமாக அவர் சட்னி ஆகி விடுவார்.டிவியில் டிஸ்கவரி சேனல், நேஷனல் ஜியோகிரபிக் சேனல் போன்றவற்றில் பலர் சுவாசக் கருவியை அணிந்து கடலுக்குள் இஷ்டம் போல வளைய வளைய நீந்தி வருகின்ற காட்சிகளை நீங்கள் பார்த்திருக்கலாம். இவையெல்லாம் 10 மீட்டர் ஆழம் வரைதான்.ஸ்குபா எனப்படும் சுவாசக் கருவி உள்ளது. இதை அணிபவர் காற்றுக் கலவை அடங்கிய சிலிண்டரை முதுகில் கட்டிக் கொண்டிருப்பார். கால்களில் துடுப்புகள் இருக்கும். உடலை ஒட்டிய விசேஷ ஆடையை அணிந்திருப்பார். நீருக்குள் இறங்குவதற்கென எடையை உடலோடு சேர்த்துக் கட்டிக் கொண்டிருப்பார்.இப்படியான சுவாசக் கருவியை அணிந்து கொண்டு கடலுக்குள் இறங்குவதற்கும் நிபுணரின் மேற்பார்வையிலான பயிற்சி தேவை. குறிப்பிட்ட உடல் தகுதியும் வேண்டும். குறிப்பிட்ட ஆழத்துக்கு இறங்கினால் அங்கு எவ்வளவு நேரம் இருக்க வேண்டும் என்பதற்கெல்லாம் விதிமுறை உள்ளது. சுவாசக் கருவி அணிந்து கடலில் இறங்குவதில் நிபுணரான ஒருவர் சென்ற அதிகபட்ச ஆழம் வெறும் 318 மீட்டர். 
 
ஆகவே பிக்கார்டும் வால்ஷும் ஒரு கோளத்துக்குள் அமர்ந்து சேலஞ்சர் மடுவுக்குள் இறங்கியதில் வியப்பில்லை. கடல் அடியில் நிலவும் கடும் அழுத்தத்தைத் தாங்கி நிற்க, அந்தக் கோளம் சுமார் 12 செண்டிமீட்டர் தடிமன் கொண்ட உருக்கினால் தயாரிக்கப்பட்டிருந்தது. அதன் எடை மட்டும் 13 டன்.இவ்வளவு எடை கொண்ட கோளம் உள்ளே இறங்கினால் அது பின்னர் மேலே வரவேண்டுமே? ஆகவே அந்தக் கோளம் சுமார் 15 மீட்டர் நீளமுள்ள தொட்டிக்கு அடியில் இணைக்கப்பட்டிருந்தது. தொட்டியில் பல ஆயிரம் லிட்டர் பெட்ரோல் நிரப்பப்பட்டிருந்தது. தவிர, அந்தத் தொட்டியின் இரு புறங்களிலும் இருந்த துணைத் தொட்டிகளில் தண்ணீர். இந்தத் தொட்டி நீருக்குள் இறங்கியாக வேண்டும். ஆகவே இன்னும் கூடுதலாக எடை சேர்த்தால்தான் தொட்டியும் அத்துடன் கோளமும் பாதாளத்துக்கு இறங்கும். ஆகவே கோளத்துடன் கெட்டியாக மூடப்பட்ட இரு ‘அண்டாக்கள்’ இணைக்கப்பட்டிருந்தன. இரு அண்டாக்களிலும் ஏராளமான இரும்புக் குண்டுகள் இருந்தன. இவற்றின் மொத்த எடை 9 டன்.பிக்கார்டும் வால்ஷும் சேலஞ்சர் மடுவில் தங்கள் பணியை முடித்துக்கொண்ட பின்னர் பொத்தானை அழுத்தினர். அண்டாக்களிலிருந்து இரும்புக் குண்டுகள் அனைத்தும் கொஞ்சங் கொஞ்சமாக ஒரு திறப்பு வழியே வெளிப்பட்டு கடலில் விழ ஆரம்பித்தன. எடை குறையக் குறைய டிரியெஸ்டி கலம் மேலே வர ஆரம்பித்தது. பெட்ரோல் அடங்கிய தொட்டி என்பதால் அது கடைசியில் மேலே வந்து மிதந்தது. பிக்கார்டும் வால்ஷும் கோளத்திலிருந்து மீட்கப்பட்டனர்.
 
இவர்கள் சாதனை நிகழ்த்திய 50 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபல ஹாலிவுட் டைரக்டரும் கடல் ஆராய்ச்சி ஆர்வலருமான ஜேம்ஸ் கேமரான் 2012, மார்ச் 26 அன்று நவீன நீர் மூழ்கு கலம் ஒன்றின் மூலம் அதே சேலஞ்சர் மடுவில் இறங்கினார். அவர் இறங்கிய இடத்தின் ஆழம் 10,898 மீட்டர்.
 
பூமிக்கு மேலே சுமார் 300 கிலோ மீட்டர் உயரத்தில் பறக்கின்ற விண்கலங்களிலிருந்து எண்ணற்றவர்கள் காப்பு உடையுடன் வெளியே வந்து, அந்தரத்தில் மிதந்து பணியாற்றி சாதனை படைத்துள்ளனர். ஆனால் கடலில் மிக ஆழமான இடத்துக்குச் சென்று சாதனை புரிந்தவர்கள் இதுவரை மூவர் மட்டுமே. ஆழ்கடல் என்றுமே மனிதன் எளிதில் அண்ட முடியாத இடமாகவே இருந்து வரும்.
 
என்.ராமதுரை

1 comment:

  1. உங்களின் தளம் + இந்தப் பகிர்வு வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/02/thalir-suresh-day-7.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete