Search This Blog

Wednesday, February 05, 2014

ஹெச்டிஎஃப்சி - ஹவுஸிங் டெவலப்மென்ட் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன்!

ஹெச்டிஎஃப்சி எனச் சுருக்கமான பெயரில் அனைவருக்கும் அறிமுகமுள்ள இந்த நிறுவனம் 30  வருடங்களுக்கும் மேலாக மத்தியதர மக்களுக்குச் சொந்த வீட்டுக்கனவை நனவாக்கி வருகிறது. அரசுடைமை ஆக்கப்பட்ட வங்கியான பாரத ஸ்டேட் பேங்க்தான் வீட்டுக் கடனில் முதல் இடத்தில் இருக்கிறது. இதற்கடுத்து,  கடன் தொகை அளவில் பெரிய கம்பெனியாக இருப்பது  இதுதான்!  

பிசினஸ் எப்படி? 

கையில் மொத்தமாகப் பணம் வைத்துக்கொண்டு வீடு கட்டுபவர்களை இந்தக் காலத்தில் விரல்விட்டு எண்ணிவிடலாம். அதிலும் வீட்டுக் கடனில் அசலுக்கும் வட்டிக்கும் வருமான வரிச் சலுகை இருப்பதால் அனைவருமே வீட்டுக் கடன் வாங்க முயற்சிப்பார்கள் என்பதுதான் இந்தத் துறைக்கு ஒரு பெரிய வரப்பிரசாதம்.

ஆனால், 5 வருடகாலத்துக்கு டெபாசிட்களை வாடிக்கையாளர் களிடமிருந்து வாங்கி, 15 வருடகாலத்துக்கான வீட்டுக் கடனைத் தந்து நீண்டகாலமாக வெற்றிகரமாகத் தொழில் செய்வது ஒரு சாதாரண விஷயமில்லை. அதிலும் 30 ஆண்டுகளுக்கு மேலாக இந்தத் துறையில் கோலோச்சி இருப்பது விசேஷமான ஒன்று எனலாம்.

ஏனென்றால், வீட்டுக் கடன் வியாபாரத்தின் அளவு என்பது பொருளாதார வளர்ச்சி மற்றும் வீழ்ச்சிக்கு ஏற்றாற்போல் வேகமாக மாறக்கூடிய ஒன்றாகும். நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையைக் கணக்கிடும்போது தொடர்ந்து நிலவிவரும் மத்தியதர வர்க்கத்தினருக்கான வீடுகளுக்கான தட்டுப்பாடு, குறைந்த அளவில் புழக்கத்தில் இருக்கும் வீட்டுக் கடன் என்பது அடுத்தப் பொருளாதார வளர்ச்சி சைக்கிள் வர ஆரம்பிக்கும்போது பெரிய அளவுக்கான வியாபாரத்துக்கு அடிகோலும் என்பதில் சந்தேகமில்லை.


இந்திய மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 60% பேர் 30 வயதுக்குக் கீழ் இருப்பவர்கள். இந்த இளைய சமுதாயத்தினரும் உழைத்துச் சம்பாதிக்கும்போது தங்களுக்கான வீடுகளின் தேவையைப் பூர்த்திச் செய்ய வீட்டுக் கடன் வாங்கவே செய்வார்கள் என்பது உறுதியான வியாபாரத்துக்கான வாய்ப்பையே காட்டுகிறது.

 கம்பெனி எப்படி?
அகில இந்திய அளவில் 300 அலுவலகங்கள், 90 துணைநிலை அலுவலகங்கள் என்ற வலுவான நெட்வொர்க்கை உருவாக்கி 2,400 பெரிய மற்றும் சிறிய நகரங்களில் வீட்டுக் கடன் வழங்கித் தன்னுடைய தொழிலை சிறப்பாகச் செய்துவருகிறது. தவிர, டைரக்ட் சேல்ஸ் ஏஜென்ட்கள் பலரையும் பணியில் இறக்கித் தனது  வியாபாரத்தைப் பெருக்கி வருகிறது.

ஹவுஸிங் ஃபைனான்ஸ் தொழிலில் மட்டுமல்லாமல், ஃபைனான்ஸ் துறையில் ஒரு பெரும் குழுமமாக உருவெடுக்கத் தேவையான முதலீடுகளான ஆயுள் காப்பீடு (ஹெச்டிஎஃப்சி லைஃப்), வங்கி (ஹெச்டிஎஃப்சி), மியூச்சுவல் ஃபண்டு (ஹெச்டிஎஃப்சி அசெட் மேனேஜ்மென்ட்), ஜெனரல் இன்ஷூரன்ஸ் (ஹெச்டிஎஃப்சி ஜெனரல்) என நிதிச் சார்ந்த அனைத்து முக்கியத் துறைகளிலும் கால்பதித்துள்ளது.  

ஃபைனான்ஸ் துறையில் செலவினம் என்பது லாபத்தைப் பாதிக்கக்கூடிய மிக முக்கியமான ஒரு விஷயம். இந்த நிறுவனம் ஹவுஸிங் ஃபைனான்ஸை மிகுந்த கவனத்துடன் செய்துவருவதால் பல ஆண்டுகளாக வருமானத்துக்கும் செலவுக்கும் இடையே இருக்கும் விகிதாசாரத்தைக் ஏறக்குறைய மிகக் குறைந்த அளவான ஏழு சதவிகிதத்திலேயே வைத்துக்கொண்டுள்ளது.

நீண்டகாலமாக இந்தத் துறையில் இருப்பதாலும், சிறந்த விற்பனை பிரதிநிதிகளைப் பெற்றிருப்பதாலும் புதிய வாடிக்கையாளர்களைப் பெறுவது இந்த நிறுவனத்துக்கு மிகவும் சுலபமான விஷயமாக இருக்கிறது.  புதிய வியாபாரத்தில் ஏறக்குறைய 85 சதவிகிதத்தைச் சொந்தமாகவே பெற்றுக்கொள்கிறது.  ஹெச்டிஎஃப்சி பேங்க் மூலமாகவும் வீட்டுக் கடனுக்கான வாடிக்கையாளர்கள் இந்த நிறுவனத்துக்குக் கிடைக்கின்றனர்.  

ஃபைனான்ஸிங் துறைக்கு மிகவும் தேவையான கன்சர்வேட்டிவ் அப்ரோச் என்பது இந்த நிறுவனத்துக்கு  மிக அதிகம். நீண்டநாட்களாகத் தொடர்ந்து கடன் அளித்த சொத்தின் மதிப்புக்கும், கடன் தொகைக்கும் இடையே உள்ள விகிதாசாரம் ஏறக்குறைய 65 சதவிகிதமாக இருப்பதே இதற்குச் சான்று. மிகவும் குறைவான வாராக்கடன் ஒதுக்கீடு விகிதம், மிகவும் குறைவான வாராக்கடன் மூலம் வரும் நஷ்டம் என்பதை நீண்டநாட்களாகக் கொண்டிருப்பது இதன் தனிச் சிறப்பு.

போட்டி எப்படி? 

வாய்ப்புகள் பலவற்றை வழங்கும் இதுபோன்ற தொழில்களில் போட்டியும் அதிகமாக இருக்கவே செய்யும். அதிலும் வங்கிகள் இந்தத் தொழிலில் கால்பதிக்க மிகவும் ஆவலாகச் செயல்பட்டு வருகின்றன. இருப்பினும் தன்னுடைய தரமான சேவையால் மட்டுமே இந்தப் போட்டியை இந்த நிறுவனம் சமாளித்து வருகிறது. போட்டி அதிகமானதால் இந்த நிறுவனம் வழங்கும் பல்வேறு சேவைகளுக்கான கட்டணங்கள் ஒட்டுமொத்தமாகத் தள்ளுபடி செய்யப்படவோ அல்லது குறைக்கப்படவோ வேண்டியுள்ளது.
ரிஸ்க் ஏதும் உண்டா? 

இந்த நிறுவனத்தின் வியாபாரம் ரிசர்வ் வங்கி மற்றும் நேஷனல் ஹவுஸிங் பேங்க் என்ற இரண்டு நிறுவனங்களின் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது. வீடு மற்றும் மனைகளின் விலை அதிவேகமாக ஏற ஆரம்பித்த நாளிலிருந்தே சட்டதிட்டங்களும் கடுமையாகிக்கொண்டே வருகிறது. ஏனென்றால், கட்டுக்கோப்பில்லாத கடன் வழங்குதல் என்பது வீடு மற்றும் மனை விலைகளில் உச்சகட்ட ஸ்பெக்குலேஷனைக் கொண்டுவந்து இறுதியில் விலைச்சரிவுகள் பெரிய அளவில் வந்துவிட வாய்ப்புள்ளது.

சமீபத்தில் வந்த சட்டமான நிலம் கையகப்படுத்துதல் சட்டம் மற்றும் தற்சமயம் அரசாங்கம் கொண்டுவர முயன்றுகொண்டிருக்கும் ரியல் எஸ்டேட் துறையைக் கண்காணிப்பதற்கான தனி ரெகுலேட்டர் போன்ற பல்வேறு விஷயங்களும் ஹெச்டிஎஃப்சியின் தொழிலில் தற்காலிகமான பாதிப்புகளைக் கொண்டுவர வாய்ப்புள்ளது. ஒருகாலத்தில் மொத்த வருமானத்தில் 30% வரை இருந்த கட்டண வருவாய் தற்சமயம் ஹவுஸிங் துறையில் நிலவிவரும் போட்டியால் கிட்டத்தட்ட இரண்டு சதவிகித அளவுக்குக் குறைந்துவிட்டது.

ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கு மேலான தொழில் அனுபவம், நிர்வாகத்தின் கன்சர்வேட்டிவ் அப்ரோச் மற்றும் மக்கள் மனதில் இருக்கும் இந்த நிறுவனம் குறித்த பிராண்டு வேல்யூ - இவற்றை  மனதில்கொண்டு இந்த நிறுவனத்தின் பங்குகளை வீட்டுக் கடனை நீண்டநாட்களுக்கு வாங்குவதுபோல், ஓர் அசாதாரணச் சூழலில் இந்தப் பங்கின் விலை சந்தையில் நன்றாக இறங்கும்போது நீண்டகால முதலீட்டுக்காக வாங்கிப்போடலாம்.

 

No comments:

Post a Comment