Search This Blog

Saturday, February 15, 2014

ஓ - பக்கங்கள் தில்லிக்கு அனுப்புவது யாரை? ஞாநி


கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பல்வேறு தமிழகத் தொலைக்காட்சிகளில் அரசியல்வாதிகள் கறாராக, தெளிவாகச் சொல்லும் உண்மை இதுதான்: கூட்டணி அமைப்பதன் ஒரே நோக்கம் அதிக இடங்களைப் பெறுவதுதான். கொள்கை, கோட்பாடு, செயல் திட்டம் இவையெல்லாம் எதுவும் காரணம் கிடையாது. இது ஏதோ புதிய அணுகுமுறை என்று கருத வேண்டாம். இருபதாண்டுகளுக்கு முன்னர் ஒரே ஒரு அரசியல்வாதிதான் பகிரங்கமாகக் கூட்டணி அமைக்க அதிக இடம் தவிர வேறு நோக்கமே கிடையாது என்று அறிவித்தார். அவர் வாழப்பாடி ராமமூர்த்தி. அவரையடுத்து இன்னொரு அரசியல்வாதி எந்தக் கொள்கை முரண்பாடும் இல்லாமல் யாரும் யாரோடும் சேரலாம் என்ற வழிமுறையை மக்களுக்குப் புரியவைக்க, அரசியலில் எந்தக் கட்சியும் தீண்டத்தகாத கட்சியல்ல (நோ ஒன் ஈஸ் அன்டச்சபிள்) என்று பிரகடனம் செய்தார். அவர் முரசொலி மாறன். இப்போது எல்லா கட்சிப் பிரமுகர்களும் இதே கருத்தை பகிரங்கமாகச் சொல்லத் தயங்குவதே இல்லை என்பதுதான் காலமாற்றம்.இந்திய, தமிழக அரசியலில் ஒவ்வொரு பிரதானக் கட்சியும் தனக்குப் பகைவராக இன்னும் ஒரு கட்சியைத்தான் கருதுகிறது. தி.மு.க. x அ.தி.மு.க., காங்கிரஸ் x பி.ஜே.பி., மம்தாவின் திரிணமூல் x இடதுசாரிகள், பி.ஜே.பி. x இடதுசாரிகள், முலாயம் சிங்கின் சமாஜ்வாதி x மாயாவதியின் பகுஜன், மற்றபடி யாருக்கும் வேறு யாரோடும் தேர்தல் கூட்டணி சேருவதில் தயக்கமே கிடையாது. பி.ஜே.பி.க்கும் காங்கிரசுக்கும் ஈழப் பிரச்னையில் ஒரே கருத்துதான். தனி ஈழம் கூடாது. ஆனால் தனி ஈழம்தான் தீர்வு என்று சொல்லும் ம.தி.மு.க.வுடன் கூட்டு சேர பி.ஜே.பி.க்குத் தயக்கம் கிடையாது. காங்கிரசின் பொருளாதாரக் கொள்கைக்கும் அ.தி.மு.க.வின் பொருளாதாரக் கொள்கைக்கும் (ஊழல் குற்றச்சாட்டு வரலாற்றிலும் கூட) வேறுபாடு கிடையாது. ஆனால் இடதுசாரிகள் காங்கிரசை எதிர்க்க அ.தி.மு. க.வுடன் சேரத் தயங்குவதே இல்லை. 

இப்படிப்பட்ட சூழலில் தமிழருவிமணியன் விஜயகாந்த்தின் தே.மு.தி.க.வையும் ராமதாசின் பா.ம.க.வையும் ‘அரசியல் செய்கிறீர்களா, தரகு செய்கிறீர்களா’ என்று கேட்டிருப்பது மிகக் கொடுமையான நகைச்சுவை. எல்லா கட்சிகளும் செய்வதைத்தான் அவர்களும் செய்துகொண்டு இருக்கிறார்கள். எங்கே போனால் தங்களுக்கு அதிக லாபம் என்ற கணக்கை மீதி எல்லாரும் போடலாம். அவர்கள் போடக் கூடாதா என்ன? இருவரையும் பி.ஜே.பி. அணிக்கு வரும்படி சந்தித்து கெஞ்சிக் கொண்டிருந்தபோதெல்லாம் அவர்கள் தரகு செய்வதாக மணியனுக்குத் தெரியவில்லையா? இவ்வளவு கெஞ்சியும் இன்னும் வந்து சேரவில்லையே என்ற எரிச்சல் மட்டுமே அவர் பேச்சில் தெரிகிறது.  மோடியைப் பிரதமராக்குவதும் வைகோவை முதல்வராக்குவதும்தான் தம் குறிக்கோள் என்று பிரகடனம் செய்த மணியன் அடுத்தபடியாக தம் காந்திய மக்கள் இயக்கத்தை கட்சியாக மாற்றியிருக்கிறார். எதற்கு இன்னொரு கட்சி? மோடியிடமும் வைகோவிடமும் தமக்கு இல்லாவிட்டாலும் தம் இயக்கத்தில் இதுவரை விஸ்வாசமாக இருப்பவர்களுக்கு அதிகாரத்தில் பங்கு கேட்பதைத் தவிர வேறு என்ன நோக்கம் இருக்கமுடியும்? இப்படிப்பட்ட மோசமான சூழலில் தமிழ்நாட்டு கட்சிகள் எல்லோருடைய கணக்கும் கட்சிகளின் சுயலாபத்துக்காக மட்டுமே. இதில் எந்தப் பொது நலமும் மக்கள் நலமும் இல்லை. தில்லியில் ஊழல் காங்கிரசும் மதவாத பி.ஜே.பி.யும் ஆட்சி அமைக்காமல் தடுக்க நினைக்கும் இடதுசாரிகளுக்கு, தமிழகத்தில் சொத்துக் குவிப்பு ஊழல் வழக்கை சந்தித்துக் கொண்டிருக்கும் ஜெயலலிதா பிரதமர் வேட்பாளராக வருவதில் கூட எந்தச் சிக்கலும் இல்லை. தேர்தலுக்குப் பின்னர் தேவைக்கேற்ப அ.தி.மு.க. ஆதரவையோ தி.மு.க. ஆதரவையோ தில்லியில் பெற்று ஆட்சி அமைக்கத் தயாராக இருக்கக்கூடிய பி.ஜே.பி.க்கு, காங்கிரசின் ஊழல்தான் பிரதானமே தவிர கழகங்களின் ஊழல் அல்ல.

தி.மு.க.வுக்கும் அ.தி.மு.க.வுக்கும் தில்லியில் ஆட்சி அமைக்க வேண்டியது காங்கிரசா, பி.ஜே.பி.யா என்பதை விட, அந்த ஆட்சியில் எதிர்க் கழகத்துக்கு செல்வாக்கு இருந்துவிடக் கூடாதே என்பதே பிரதான கவலை. ஊழலை எதிர்ப்பதற்காகவே மாநாடு நடத்துவதாக அறிவிக்கும் விஜயகாந்த்துக்கு, அ.தி.மு.க.வின் ஊழல் பற்றி மட்டுமே அக்கறை. அதற்கு நிகரான ஊழல் புகார்களுடைய காங்கிரசுடனோ தி.மு.க.வுடனோ கூட்டு சேர எந்தத் தயக்கமும் இல்லை. எத்தனை இடம் என்பது மட்டுமே இழுபறி. திராவிடக் கட்சிகளுடன் மாறி மாறி கூட்டு சேர்ந்து தில்லியில் பதவிகளை அனுபவித்த பா.ம.க. இனி எந்தத் திராவிடக் கட்சியுடனும் கூட்டு இல்லை என்று அறிவித்தாலும் இன்னொரு திராவிடக் கட்சியான ம.தி.மு.க. இருக்கும் பி.ஜே.பி. அணிக்குச் செல்ல தயக்கம் இல்லை. எத்தனை இடம் என்பது மட்டுமே பிரச்னை.  

தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் இந்தத் தேர்தல் காங்கிரசுக்கோ பி.ஜே.பி.க்கோ உண்மையில் முக்கியம் அல்ல. தி.மு.க.வுக்கும் அ.தி.மு.க.வுக்கும் மட்டுமே வாழ்வா சாவா என்ற அளவு முக்கியம். பத்தாண்டுகளாக தில்லியில் அதிகாரத்தில் பங்கு வகித்த வசதியும் அந்த அடிப்படையில் தமிழ்நாட்டில் ஆட்சியை இழந்தாலும் கூட எதிரிக் கட்சியின் ஒடுக்குமுறையைச் சமாளிக்கும் வலிமையையும் அனுபவித்து வந்த தி.மு.க.வுக்கு இந்த முறைதான் தில்லி அதிகாரத்தில் பங்குபெறாமல் போகும் ஆபத்தும் எதிரிக்கட்சி பங்கேற்றுவிடும் ஆபத்தும் மிரட்டுகின்றன. கட்சிக்குள்ளேயும் இருக்கும் அதிகாரப் போட்டியில் ஸ்டாலினுக்கு இதுவரை வந்த சிக்கல் எல்லாம் கட்சியின் எம்.எல்.ஏ.க்களால் அல்ல. தில்லிக்கு அனுப்பப்பட்டு பதவி பெற்ற அழகிரி, கனிமொழி, தயாநிதி ஆகியோரே ஸ்டாலினின் தலைவலிகள். எப்படியும் 2016 வரை தமிழக ஆட்சி பற்றிக் கவலைப்படாமல், தானே தில்லிக்கு எம்.பி.யாகச் செல்ல முயற்சித்தால் என்ன, ஆட்சியில் பங்கு கிடைத்தால் அங்கே மத்திய அமைச்சராக இருந்து வடக்கே தம் செல்வாக்கை உயர்த்திக் கொண்டு கட்சியின் இதர கோஷ்டிகளை பலவீனமாக்கி விட்டு, பின்னர் 2016ல் தமிழக அரசியலுக்குத் திரும்பிவந்தால் போதுமே என்று கூட ஸ்டாலின் சிந்திக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இன்னொரு பக்கம் அ.தி.மு.க.வுக்கோ, மறுபடி காங்கிரஸ் ஆட்சி அமையும் வாய்ப்பு வராமல் தடுத்தால்தான் தில்லியில் தி.மு.க.வின் செல்வாக்கைத் தடுக்க முடியும். அ.தி.மு.க.வுக்குக் கணிசமான தனி பலம் இருந்தால்தான், தி.மு.க.வுக்குப் பதில் அதை மூன்றாவது அணியோ பி.ஜே.பி.யோ நாடும் நிலை வரும். சொத்துக் குவிப்பு வழக்கு போன்ற பெரும் கத்தியிலிருந்து நிரந்தரமாக விடுதலை பெறமுடியும். 

கட்சிகளெல்லாம் கொள்கையும் நெறியும் இல்லாமல் அதிகார ஆசையில் மட்டுமே செயல்படும் இப்படிப்பட்டச் சூழலில் தமிழ்நாட்டில் இந்த மக்களவைத் தேர்தலை மக்கள் எந்த அடிப்படையில் சந்திக்க வேண்டும்? தில்லியில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கவோ பி.ஜே.பி. ஆட்சி அமைக்கவோ தமிழகத்தின் வாக்குகள் நேரடியாக எந்த விதத்திலும் பயன்படப் போவதில்லை. காரணம், என்ன ஆனாலும் காங்கிரசோ, பி.ஜே.பி.யோ ஆளுக்கு பத்து எம்.பி.களைக் கூட தமக்கென்று நேரடியாகத் தமிழகத்திலிருந்து பெறும் வாய்ப்பு இல்லை. கணிசமான எம்.பி.களைத் தமிழக வாக்காளர்கள் தி.மு.க.வுக்கோ, அ.தி.மு.க.வுக்கோதான் தரமுடியும். நாளைக்கு தொங்கு நாடாளுமன்றம் அமைந்து காங்கிரஸ், பி.ஜே.பி. இருவருக்கும் சொந்த பலத்தில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு இல்லாமல் போனால், அப்போது தி.மு.க., அ.தி.மு.க. இருவருமே யாரை வேண்டுமானாலும் ஆதரிக்கும் வாய்ப்பு உண்டு. தேவைப்பட்டால், மூன்றாவது அணிக்குக் கூட இருவரும் செல்ல முயற்சிக்கலாம்.  எனவே தமிழக வாக்காளர் தம் வாக்கை யாருக்கு அளிப்பது? அடுத்து தில்லியில் ஆட்சியைப் பிடிக்கப் போவது காங்கிரசா, பி.ஜே.பி.யா என்பதை விட அந்த ஆட்சியில் செல்வாக்குடன் இருக்க வேண்டியது தி.மு.க.வா, அ.தி.மு.க.வா என்பதை மட்டுமே யோசித்துத் தீர்மானிக்க வேண்டும். இரு கட்சிகளுக்குமே அங்கே செல்வாக்கு இருக்கத் தேவையில்லை என்று நினைப்பவர்களுக்கோ, நோட்டாதான் ஒரே வழி! ‘ஆம் ஆத்மி’ கிடையாதா என்று கேட்காதீர்கள். அது இன்னும் இங்கே ஒரு கனவுதான். தில்லியில்தான் ரியாலிட்டி ஷோ. சட்டமன்றத்துக்கு இரு கொள்ளிகளில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி என்று தேர்வு செய்வது போலவே, தில்லிக்கும் தேர்வு செய்யும் சிக்கலை தமிழகம் சந்திக்கிறது. என்ன கொடுமை! விதியே, விதியே, தமிழ்ச் சாதியை என்செய்ய நினைத்திருக்கிறாய்!

No comments:

Post a Comment