Search This Blog

Tuesday, February 04, 2014

வரிச் சேமிக்கும் வழிகள்!

வருமான வரியை எப்படியாவது மிச்சப்படுத்திவிட வேண்டும் என்பதில் அனைவரும் உறுதியாக இருக்கிறார்கள். ஆனால், தேவையான முறையில் வரியை மிச்சப்படுத்தி இருக்கிறோமா என்றால், இல்லை என்பதே பலரது பதிலாக இருக்கும்.

அண்மையில் 35 வயதான நண்பர் ஒருவர் சாலை விபத்தில் திடீரென இறந்துவிட்டார். அவர் வருமான வரியை மிச்சப்படுத்த பல இன்ஷூரன்ஸ் பாலிசிகளை எடுத்துவைத்திருந்தார்; ஆண்டுக்கு சுமார் 12,000 ரூபாய்க்குமேல் பிரீமியம் கட்டி வந்திருக்கிறார். ஆனால், அவரது குடும்பத்துக்கு இழப்பீடாகக் கிடைத்த தொகை வெறும் 4 லட்சம் ரூபாய்க்குள்தான். இவர் எடுத்திருந்தது, முதலீடு மற்றும் காப்பீடு கலந்த எண்டோவ்மென்ட் பாலிசிகள். இதற்குப் பதிலாக, அதே ஆண்டு பிரீமியமான 12,000 ரூபாயைச் செலுத்தி, டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசியை எடுத்திருந்தால், அவரது குடும்பத்துக்கு 1 கோடி ரூபாய் இழப்பீடு கிடைத்திருக்கும்.

அந்தவகையில் வரிச் சேமிப்புக்காகச் செலவு மற்றும் முதலீடு செய்யும்போது கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும். இல்லையென்றால் வரியைச் சேமிக்கிறேன் பேர்வழி என்று பணத்தைத் தேவையில்லாமல் இழக்கவேண்டியிருக்கும். நாம் செய்யும் செலவிலும், சேமிப்பிலும் வரியைச் சேமிக்கும் வழிகள் பற்றி தெரிந்துகொண்டால், நம்முடைய பணத்தை வீணாக்காமல், எதிர்காலத்தில் நல்ல லாபத்தையும் பார்க்க வாய்ப்பிருக்கிறது.

 

செலவுகள் மூலம் வரிச் சேமிப்பு!

முதலில் எந்தெந்தச் செலவுகளுக்கு வருமான வரிச் சலுகைக் கிடைக்கிறது என்று பார்ப்போம்.

80சி பிரிவின்கீழ் ஆயுள் காப்பீடு பிரீமியம், பிள்ளைகளின் கல்விக் கட்டணம், வீட்டுக் கடன் அசல் போன்றவற்றுக்கு வரிச் சலுகை கிடைக்கிறது.

லைஃப் இன்ஷூரன்ஸ் பிரீமியம்!

லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசியைச் செலவு என்று நினைப்பதைவிட, நம்மை நம்பியிருக்கும் குடும்பத்துக்கான கவசம் என்றுதான் கருதவேண்டும். லைஃப் இன்ஷூரன்ஸ் என்கிறபோது, இதில் டேர்ம் இன்ஷூரன்ஸ், பணப் பலன் மற்றும் பங்குச் சந்தை சார்ந்த பாலிசிகள் இருக்கின்றன.

டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசியில் பிரீமியம் மிகக் குறைவாக இருக்கும். இடையில் அசம்பாவிதம் ஏதாவது நடந்தால் மட்டுமே கிளைம் கிடைக்கும். முதிர்வுத் தொகை எதுவும் கிடையாது.

எண்டோவ்மென்ட் மற்றும் யூலிப் பாலிசிகளில் கட்டும் பிரீமியம் மற்றும் முதிர்வு ஆதாயத்துக்கு வரி இல்லை. எண்டோவ்மென்ட் பாலிசியில் பிரீமியத்தின் ஒருபகுதி, இன்ஷூரன்ஸ் கவரேஜுக்கும் எடுத்துக்கொள்ளப்படுவதால் மொத்தத்தில் சுமார் 6% வருமானம் கிடைக்கக்கூடும்.

அண்மையில் ஐஆர்டிஏ அனைத்து ஆயுள் காப்பீட்டு பாலிசிகளிலும் மாற்றங்களைச் செய்திருக்கிறது. குறிப்பாக, இன்ஷூரன்ஸ் கவரேஜை அதிகரித்து, முதலீட்டுக்கான பகுதியைக் குறைத்திருக்கிறது. இருந்தாலும் டேர்ம் பிளான்தான், குறைவான பிரீமியத்தில் அதிக கவரேஜ் அளிப்பதாக இருக்கிறது. பொதுவாக, ஒருவரின் ஆண்டுச் சம்பளத்தைப்போல் 10 முதல் 12 மடங்கு தொகைக்கு லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துக்கொள்வது நல்லது.

பிள்ளைகளின் கல்விக் கட்டணம்..!

பிள்ளைகளின் கல்விச் செலவுகளுக்கு வரிச் சலுகை இருக்கிறது. கல்விக் கட்டணத்துக்கு மட்டும்தான் வரிச் சலுகை. தம்பதிகள் இருவரும் வேலை பார்க்கும்போது, இரண்டு பிள்ளைகள் என்றால் ஒருவருக்குத் தாயும், இன்னொருவருக்குத் தந்தையும் வரிச் சலுகை பெறுவதன்மூலம் அதிக வரியை மிச்சப்படுத்த முடியும்.

                                             ஹெல்த் இன்ஷூரன்ஸ் பிரீமியம் (80டி).

அடுத்த முக்கியமான செலவு, ஹெல்த் இன்ஷூரன்ஸ். இதற்கான பிரீமியத்துக்கு வரிச் சலுகை இருக்கிறது. ஒரு நிதி ஆண்டில் வரிதாரர் மற்றும் அவரின் குடும்பத்துக்குக் கட்டும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பிரீமியத்தில் 15,000 ரூபாய்க்கு வரிச் சலுகை உண்டு. மூத்த குடிமக்களாக இருந்தால் 20,000 ரூபாய் வரையிலான பிரீமியத்துக்கு வரிச் சலுகை இருக்கிறது. வரிதாரர் தனது பெற்றோருக்கு எடுக்கும் மெடிக்ளைம் பாலிசி பிரீமியத்துக்கு அதிகப்படியாக ரூ.20,000 வரை வரிச் சலுகை பெற முடியும்.

மருத்துவச் செலவு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. மேலும், கிராமங்களைவிட நகரங்களில் செலவு அதிகமாக இருக்கிறது. இவற்றை மனதில்வைத்து கணவன், மனைவி, இரண்டு குழந்தைகள் குடும்பத்துக்கு 3 முதல் 5 லட்சம் ரூபாய்க்கு கவரேஜ் அளிக்கும் பாலிசியை எடுத்துக்கொள்வது அவசியம். இதற்கு ஆண்டு பிரீமியம் தோராயமாக 5,000 ரூபாய்க்குமேல் இருக்கும்.

ஏதாவது நோய் பாதிப்பு இருக்கிறதா என்பதைக் கண்டறிய உதவும் மாஸ்டர் ஹெல்த் செக்-அப் செய்யும் செலவுகளுக்கு ஆண்டுக்கு அதிகபட்சம் ரூ.5000 வரிச் சலுகை கிடைக்கும். இது தற்போது அளிக்கப்பட்டுவரும் 15,000 ரூபாய் பிரீமியத் தொகைக்கான வரிச் சலுகைக்குள் அடங்கும்.

வீட்டுக் கடன் அசல்!

சொந்த வீடு ஒருவருக்கு அவசியம் என்பதால், அதை வாங்கும் கடனில் திரும்பச் செலுத்தும் தொகைக்கு வரிச் சலுகை உண்டு. வீட்டுக் கடனை திரும்பக் கட்டுவது ஒரு செலவாக இருந்தாலும், அது நீண்டகாலத்தில் செல்வம் சேர்க்க ஒருவருக்கு உதவுவதாக உள்ளது.

வீட்டுக் கடனுக்கான வட்டி  24பி!

வீட்டுக் கடனை திரும்பச் செலுத்துவதில், வட்டியையும் ஒரு செலவாக எடுத்துக்கொண்டால், அந்த வீட்டில் குடியிருக்கும்பட்சத்தில் ஒரு நிதி ஆண்டில் ரூ.1.5 லட்சம்வரை வரிச் சலுகை உண்டு. அதுவே, அந்த வீட்டை வாடகைக்கு விட்டு, வாடகையை வருமானமாகக் காட்டியிருந்தால் செலுத்தும் முழு வட்டிக்கும் வரிச் சலுகை உண்டு. இதில், வருமான வரியை அதிகமாக மிச்சப்படுத்த, கணவன், மனைவி இருவரும் வேலை பார்க்கும்பட்சத்தில் கூட்டாகக் கடன் வாங்கலாம். அப்போது இருவரும் தனித்தனியே அசல் தொகைக்கு 80சி பிரிவிலும் மற்றும் வட்டிக்கு ரூ.1.5 லட்சம் ரூபாய் வரிச் சலுகை பெற முடியும்.

வீட்டு வாடகை படி 10 (13ஏ)!

குடியிருக்கும் வீட்டுக்குத் தரப்படும் வாடகைக்கு வரிவிலக்குச் சலுகை உண்டு. (வீட்டு வாடகைப் படி கணக்கீட்டு முறையை விரிவாகத் தெரிந்துகொள்ள: http://nanayam.vikatan.com/index.php?aid=4911) இதற்கு மொத்தச் சம்பளத்தில் 10%-க்குமேல் வாடகையாகத் தந்திருக்கவேண்டும். மேலும், குடியிருக்கும் நகரம், பணியாளர் பெறும் வீட்டு வாடகைப் படி ஆகியவற்றைப் பொறுத்துக் கழிவு இருக்கிறது.  வாடகை ஆண்டுக்கு ரூ.1 லட்சம் மேல் சென்றால், உரிமையாளரின் பான் நம்பரை, ரசீதில் குறிப்பிடுவது அவசியம்.

சிறப்புச் சலுகை!

வங்கி அல்லது வீட்டு வசதி நிதி நிறுவனத்தில் கடன் பெற்று முதல் முறையாக வீடு வாங்கு வோருக்குக் கூடுதலாக ரூ.1 லட்சம் வரிச் சலுகை அளிக்கப்படுகிறது. இந்த வீட்டை 2013 ஏப்ரல் 1-ம் தேதியில் இருந்து 2014 மார்ச் 31-ம் தேதிக்குள் வாங்கியிருக்க வேண்டும். மேலும், வீட்டுக் கடன் ரூ.25 லட்சத்துக்குள்ளும், வீட்டின் விலை ரூ.40 லட்சத்துக்குள்ளும் இருக்கவேண்டும். அவர் செலுத்தும் வட்டிக்கு ரூ.1 லட்சம்வரை கூடுதலாக வரிக் கழிவைப் பெறலாம். மேலே கூறப்பட்ட காலகட்டத்தில் வரிச் சலுகையை முழுமையாகப் பெற முடியாமல்போனால், மீதி வரிச் சலுகையை 2015-2016ம் ஆண்டில் பெற்றுக்கொள்ள முடியும். ஏற்கெனவே அளிக்கப்பட்டுவரும் ரூ.1.5 லட்சம் வட்டிக் கழிவுடன் கூடுதலாக இந்த ரூ.1 லட்சம் கழிவு அளிக்கப்படுகிறது.

கல்விக் கடன் 80இ!

வரிக் கட்டுபவர் தன் உயர்கல்விக்காக வாங்கும் கடனுக்கான வட்டிக்கு வரிச் சலுகை இருக்கிறது. கடனைக் கட்டத் தொடங்கி, 8 ஆண்டுகளுக்கு மட்டுமே இந்த வரிச் சலுகைக் கிடைக்கும். அசலுக்கு வரிச் சலுகை இல்லை.

உடல் ஊனமுற்ற வரிதாரர் 80யூ!

வரிக் கட்டுபவர் ஊனமுற்றவராக இருந்தால், ரூ.50,000 (தீவிரமான உடல் ஊனம் ரூ. 1,00,000 ரூபாய்) வரிச் சலுகை இருக்கிறது.

மருத்துவச் சிகிச்சைக்கான செலவு 80 டி.டி!

வரிக் கட்டுபவரைச் சார்ந்திருக்கும் செயல்பட முடியாத அளவுக்கு ஊனமுற்றவர்களுக்கான மருத்துவச் செலவில் ரூ.50,000 (தீவிர பாதிப்புக்கு ரூ.1,00,000) வரை வருமான வரிவிலக்கு இருக்கிறது.

தீவிர நோய்களுக்கான சிகிச்சை   80 டி.டி.பி!

புற்றுநோய், எய்ட்ஸ், நரம்பு மண்டல பிரச்னை உள்ளிட்ட தீவிர நோய்களுக்குச் செய்யப்படும் மருத்துவச் செலவில் அதிகபட்சம் ரூ.40,000 (மூத்த குடிமக்களுக்கு ரூ.60,000) வரிவிலக்கு உள்ளது.

நன்கொடை 80ஜி!

நீங்கள் அளிக்கும் நன்கொடைகளுக்கு நிபந்தனைகளுக்கு உட்பட்டு 50% முதல் 100% வரை வரிச் சலுகை இருக்கிறது.

இதுவரை சொன்னவற்றுள் அவசியமானவற்றைப் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பதில்தான் நீங்கள் வருமான வரியை மிச்சப்படுத்துவது இருக்கிறது.

முதலீட்டின் மூலம் வரிச் சேமிப்பு!

அடுத்து, முதலீட்டின் மூலம் கிடைக்கும் வரிச் சேமிப்பு பற்றி பார்ப்போம்.

முதலீடு மூலம் வருமான வரியை மிச்சப்படுத்தும் பல வழிகள் 80சி பிரிவின்கீழ் வருகின்றன. இபிஎஃப், பிபிஎஃப், ஃபிக்ஸட் டெபாசிட், தேசிய சேமிப்புப் பத்திரம், தபால் அலுவலகச் சேமிப்புத் திட்டங்கள், இஎல்எஸ்எஸ் மியூச்சுவல் ஃபண்டு போன்றவை இவற்றில் முக்கிய முதலீடுகளாக உள்ளன.





எம்ப்ளாயி பிராவிடன்ட் ஃபண்டு (இபிஎஃப்)!

தனியார் நிறுவனங் களில் பணியாளரின் அடிப்படைச் சம்பளம் மற்றும் பஞ்சப்படியில் 12% சம்பளத்தில் பிஎஃப்-ஆகப் பிடிக்கப்படுகிறது. இந்தத் தொகை மற்றும் அதன்மூலமான வட்டி வருமானத்துக்கு வரி இல்லை. தற்போதைய நிலையில் 8.75% வட்டி ஆண்டுக்குக் கிடைக்கிறது. ஏறக்குறைய வங்கி எஃப்டி அளவுக்கு வட்டிக் கிடைப்பதால், விருப்பத் திட்டத்தின் (விபிஎஃப்) கீழ் கூடுதலாக 12% முதலீட்டையும் இந்தக் கணக்கிலே மேற்கொள்வது நல்லது.


இது முற்றிலும் பாதுகாப்பான முதலீடு. ரிஸ்க் எடுக்க விரும்பாதவர் களுக்கு ஏற்றது. இதில் எந்த அளவுக்கு அதிகம் சேர்க்க முடியுமோ, அந்த அளவுக்குச் சேர்க்கலாம்.

பப்ளிக் பிராவிடன்ட் ஃபண்டு (பிபிஎஃப்)!

சம்பளத்தில் பிஎஃப் பிடிக்கப்படாத பணியாளர்கள், சுய தொழில் செய்பவர்கள் என யார் வேண்டு மானாலும் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்து வரிச் சலுகைப் பெறலாம். ஆண்டுக்குக் குறைந்தது ரூ.500கூட முதலீடு செய்யலாம்.  ஓராண்டில் அதிகபட்சம் ரூ.1,00,000 வரையிலான முதலீட்டுக்கு வரிச் சலுகை கிடைக்கும். இதுவும் இபிஎஃப்போல், முழுக்கப் பாதுகாப்பான முதலீடு. முதலீட்டுக் காலம் 15 ஆண்டுகள்;  வட்டிக்கு வரி இல்லை.  ஆண்டுக்கு வட்டி 8.7% கிடைக்கும்.

வங்கி 5 ஆண்டு ஃபிக்ஸட் டெபாசிட்!


அடுத்து, வங்கி ஐந்தாண்டு ஃபிக்ஸட் டெபாசிட் இருக்கிறது. இதில் முதலீட்டுத் தொகைக்கு வரிச் சலுகை இருக்கிறது. குறைந்தபட்ச முதலீடு ரூ1,000. வட்டி 8.5 முதல் 9%. மூத்த குடிமக்களுக்கு 0.25 முதல் 0.5% கூடுதல் வட்டி உண்டு. இதில் வருமானத்துக்கு வரிக் கட்டவேண்டும் என்பது பாதக அம்சம். மூத்த குடிமக்கள் மற்றும் குறைந்த வருவாய்ப் பிரிவினர், ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள் இந்த முதலீட்டுக்கு ஆதரவு அளிக்கலாம்.

தேசிய சேமிப்புப் பத்திரம்!

மத்திய அரசின் தேசிய சேமிப்புப் பத்திரத்தில் (என்எஸ்சி) செய்யப்படும் முதலீட்டுக்கு வரிச் சலுகை இருக்கிறது. வட்டி ஆண்டுக்கு 8.5% வழங்கப்படுகிறது. இது ஆறு ஆண்டுத் திட்டம். இது பாதுகாப்பான முதலீடு என்றாலும் வட்டிக்கு வரி உள்ளது. ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்களுக்கும், குறைந்த வருவாய்ப் பிரிவினருக்கும் ஏற்றது இந்தத் திட்டம்.

தபால் அலுவலகச் சேமிப்புத் திட்டங்கள்!

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம், (9.2%, 5 ஆண்டுத் திட்டம்), தபால் அலுவலக டைம் டெபாசிட் (8.5%, 5 ஆண்டு) போன்றவற்றுக்கும் வரிச் சலுகை உண்டு.

இஎல்எஸ்எஸ்!

மூன்றாண்டுகால லாக் இன் பீரியடு கொண்ட பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டு முதலீட்டுக்கு வரிவிலக்கு இருக்கிறது. மாதந்தோறும் குறைந்தது 500 ரூபாய்கூட இதில் முதலீடு செய்யலாம். இதில் வருமானமானது பங்குச் சந்தையின் செயல்பாட்டைப் பொறுத்துள்ளது. டிவிடெண்ட் மற்றும் வருமானத்துக்கு வரி இல்லை. ரிஸ்க் எடுக்கத் தயாராக இருப்பவர்களுக்கு ஏற்றது இந்தத் திட்டம்.

ஓய்வூதியத் திட்டங்கள்!

ஆயுள் காப்பீடு நிறுவனங்கள் (80 சிசிசி) மற்றும் மியூச்சுவல் ஃபண்டு நிறுவனங்கள் (80 சிசிடி) கொண்டுள்ள பென்ஷன் திட்டங்களின் முதலீட்டுக்கும் வரிச் சலுகை இருக்கிறது. மத்திய அரசின் புதிய நேஷனல் பென்ஷன் ஸ்கீமில் (80 சிசிஇ) செய்யப்படும் முதலீட்டுக்கு இந்த வரிச் சலுகை இருக்கிறது. பென்ஷன் தொகைக்கு வரி உண்டு என்பது பாதகமான அம்சம். இந்த பென்ஷன் திட்டங்கள் அனைத்திலுமான மொத்த முதலீடு, 80 சி பிரிவின்கீழ் கொண்டுவரப்பட்டு, நிபந்தனைக்கு உட்பட்டு அதிகபட்சம் ரூ.1 லட்சம் வரையில் வரிச் சலுகை அளிக்கப்படும்.

பிஎஃப் திட்டத்தில் சேரும் வசதி இல்லாத சுயதொழில் செய்பவர்கள் மற்றும் கூடுதல் பென்ஷன் தேவை என்று திட்ட மிடுபவர்கள் இதில் முதலீடு செய்யலாம்.

ராஜீவ் காந்தி ஈக்விட்டி சேமிப்புத் திட்டம் 80சிசிஜி!

பங்குச் சந்தையில் புதிய முதலீட்டை ஊக்குவிக்க இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி பங்குச் சார்ந்த சேமிப்புத் திட்டத்தில் (பங்குகள் மற்றும் மியூச்சுவல் ஃபண்டு) முதன்முறையாக முதலீடு செய்பவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.50,000 வரையில் (50% சலுகை) வரிச் சலுகை அளிக்கப்படுகிறது. அதாவது, முதலீடு செய்யும் தொகையில் 50 சதவிகிதத்தை ஆண்டு வருமானத்திலிருந்து கழித்துக் கொள்ளலாம். வரிச் சலுகை பெற ஆண்டு வருமானம் 12 லட்சம் ரூபாய்க்கு குறைவாக இருக்கவேண்டும். பங்குகளில் முதல்முறையாக முதலீடு செய்பவராக இருக்கவேண்டும். இந்தத் திட்டத்துக்கான லாக் இன் பீரியடு மூன்று ஆண்டுகள். ரிஸ்க் எடுக்கத் தயாராக இருப்பவர்களுக்கு மட்டும் ஏற்றது. 

எதற்கு முன்னுரிமை?

வருமான வரிச் சேமிப்புக்கான முதலீடு என்கிறபோது முதலில் சம்பளத்தில் பிடிக்கப்படும் பிஎஃப்-க்கு முன்னுரிமை அளிக்கவேண்டும். அதன்பிறகு லைஃப் இன்ஷூரன்ஸ் மற்றும் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். அடுத்து, பிள்ளைகளின் கல்விச் செலவை கணக்கில்கொள்ள வேண்டும். வீட்டுக் கடன் வாங்கியிருந்தால், அதற்கான அசல் மற்றும் வட்டிக்கு வரிச் சலுகையைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். இதையும் தாண்டி வரிக் கட்டவேண்டியிருந்தால் மட்டுமே இதர முதலீட்டு வாய்ப்புகளைக் கவனிக்க வேண்டும்.

சரவணன் 

No comments:

Post a Comment