Search This Blog

Saturday, February 08, 2014

கோலி - யுவ்ராஜ் சிங் - ஜாகீர் கான் - ஹர்பஜன் சிங் - ரைனா - பாலிவுட் காதல்


பட்டோடி - ஷர்மிளா தாகூர், ரவி சாஸ்திரி - அம்ரிதா சிங், அசாரூதின் - சங்கீதா பிஜ்லானி, கங்குலி - நக்மா என இந்திய கிரிக்கெட் - பாலிவுட் இடையேயான காதல் கூட்டணிக்கு நீண்ட நெடிய வரலாறு இருக்கிறது. இன்றைய இந்திய கிரிக்கெட் வீரர்களின் காதல் வாழ்க்கை எந்த நிலைமையில் இருக்கிறது என்று பார்க்கலாம்.

கோலி: இன்றைய இந்திய கிரிக்கெட்டின் காதல் மன்னன். ‘பக்கத்து வீட்டுக்காரர்கள் பலர், தங்களுக்குக் கல்யாண வயதில் மகள் இருப்பதாக என் அம்மாவுக்குத் தகவல் கொடுக்கிறார்கள். எனக்கு ரத்தத்தில் கையெழுத்திட்டுக் கடிதங்கள் அனுப்பும் ரசிகைகள் உள்ளார்கள்’என்று பெருமைப்படும் அளவுக்கு கோலி உச்சக்கட்ட புகழில் இருப்பவர்தான். அதனால் தான் அவர் காதலிக்கும் நடிகையும் பாலிவுட்டின் பிரபல நடிகையாக இருக்கிறார் அனுஷ்கா சர்மா. இப்போது கோலியையும் அனுஷ்கா சர்மாவையும் வைத்து ஒரு சினிமாவே எடுக்கலாம் என்றளவுக்கு விதவிதமான செய்திகளைத் தந்து கொண்டிருக்கிறது வடக்கு மீடியா. 


ஷாம்பு விளம்பரத்தில் நடித்தபோது நண்பர்களானவர்கள் கோலியும், அனுஷ்கா சர்மாவும். தென் ஆப்பிரிக்கா சுற்றுப் பயணம் முடித்து இந்தியா திரும்பிய கோலி, அனுஷ்கா சர்மாவின் பி.எம்.டபிள்யூ. காரில் ஏறி நேராக அவர் வீட்டுக்குத்தான் சென்றிருக்கிறார். அங்குதான் புத்தாண்டு தினத்தைக் கொண்டாடினார். அந்தளவுக்குக் காதல் பொங்கி வழிகிறது என்று ஒரு பத்திரிகை விடாமல் செய்தி வெளியாகிவிட்டது. விளம்பரத்தில் நடிக்கும் போதிலிருந்து பழக்கம். கோலி என் வீட்டுக்கு வந்தது உண்மை தான். மற்றவர்களும் வந்தார்கள். ஆனால் செய்தியில் இடம் பெற்றது கோலி மட்டும்தான்" என்கிறார் அனுஷ்கா சர்மா.

யுவ்ராஜ் சிங்: இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்ததை விடவும் காதல் செய்திகளில் அதிகம் இடம் பிடித்தவர் யுவ்ராஜ் சிங். டஜன் நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்ட ஒரே கிரிக்கெட் வீரர். முதலில் நடிகை கிம் சர்மாவைக் காதலித்தார். நான்கு வருடங்களுக்குப் பிறகு எதிர்பாராதவிதமாகப் பிரிந்து விட்டார்கள். யுவ்ராஜ் சிங்கின் அம்மா ஷப்னம் சிங் திருமணத்துக்கு ஒப்புக்கொள்ளவில்லை என்று செய்திகள் வெளியானபோது, ‘இது என் மகன் எடுத்த முடிவு’ என்று மறுப்புத் தெரிவித்தார் ஷப்னம் சிங்.  

கிம் சர்மாவுக்குப் பிறகு தீபிகா படுகோன், பிரீத்தி ஜிந்தா, அமீஷா படேல் என்று ஆறு மாதங்களுக்கொரு முறை வெவ்வேறு நடிகைகள், மாடல்களுடன் கிசுகிசுக்கப்பட்டார் யுவ்ராஜ் சிங். ஒரு கட்டத்தில் யுவ்ராஜ் சிங் - தோனி - தீபிகா படுகோன் இடையே ஒரு முக்கோணக் காதலும் பரபரப்பாக ஓடியது. சமீபகாலமாக மாடலும் நடிகையுமான கிஜில் தக்ராவுடன் நட்புடன் இருப்பதாகச் செய்திகள் வெளியானாலும் இதற்கு வேறொரு விதத்தில் மறுப்புத் தெரிவிக்கிறார் யுவ்ராஜின் அப்பா யோக்ராஜ். யுவ் ராஜ், புற்றுநோயிலிருந்து விடுபட்ட பிறகு முனிவராகி விட்டான். அவனுக்குப் பணமும் பார்ட்டிகளும் தேவைப்படுவதில்லை" என்கிறார்.

ஜாகீர் கான்: மிகவும் பொறுப்பானவராகப் பார்க்கப்படும் ஜாகீர் கானும் இஷா ஷர்வானி என்கிற நடிகையைக் காதலித்தார். எட்டு வருடக் காதல். நிச்சயம் திருமணம் வரை செல்லும் என்கிற நம்பிக்கையைக் கொடுத்த காதல். 2011, 2012ல் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று நிறையச் செய்திகள் வெளியாகின. ஆனால், திடுதிப்பென்று ஒருநாள் ஜாகீருடனான காதல் முடிந்துவிட்டது என்று பேட்டி கொடுத்தார் இஷா. எதனால் பிரிந்தோம் என்பதை இஷா சொல்ல மறுத்துவிட்டார். ‘இருவரும் நண்பர்களாக இருப்போம்’ என்றார். ஜாகீர் இதுவரை காதலைப் பற்றி வாய் திறந்ததில்லை. நேற்று வந்த வீரர்கள் எல்லாம் திருமணம் ஆகி செட்டில் ஆன நிலையில், சீனியரான ஜாகீர் இன்னமும் திருமணம் செய்யாமல் இருப்பது ஆச்சர்யம்தான்.

ஹர்பஜன் சிங்: சீனியர் பேச்சுலர்களில் பஜ்ஜியும் ஒருவர். அவருடைய காதலி, பாலிவுட் நடிகை கீதா பஸ்ரா. திருமணம் வரை காதலைக் கொண்டு செல்ல விருக்கும் அரிதான கிரிக்கெட்டர். ஹர்பஜன் என் நெருங்கிய நண்பர். வாழ்க்கையின் முக்கியமான நபர்" என்று வெளிப்படையாகப் பேசியிருக்கிறார் கீதா பஸ்ரா. 

இருவரும் ஒன்றாகப் பல விழாக்களில் கலந்து கொண்டிருக்கிறார்கள். ஓய்வுக்குப் பிறகு சச்சின் வைத்த விருந்து நிகழ்ச்சியில் ஹர்பஜன், கீதாவுடன் கலந்துகொண்டார். வெகுவிரைவில் இருவரிடமிருந்தும் திருமண அறிவிப்பை எதிர்பார்க்கலாம். 

ரைனா: உங்களுக்குப் பிடித்த நடிகை யார்?" என்று தோனி, ரைனா ஆகியோரிடம் கேட்கப்பட்டது. தோனி, ‘தீபிகா படுகோனே’ என்றார். ரைனா ‘அனுஷ்கா சர்மா’ என்று சொல்லிவிட்டார். உடனே இரண்டு ஜோடிகளுக்கும் முடிச்சுப் போட்டது மும்பை மீடியா.  தோனி, சினிமாவுக்குச் சம்மதம் இல்லாத ஒருவரைத் திருமணம் செய்து கொண்டுவிட்டார். ரைனா? ‘அனுஷ்கா சர்மா என்றில்லை, வேறு எந்த நடிகையாக இருந்தாலும் என்னால் காதலிக்க முடியாது. நடிகை அல்லது மாடலை ஒருபோதும் காதலிக்க மாட்டேன். என் வீட்டில் இதற்கு ஒப்புக்கொள்ள மாட்டார்கள்’ என்று கிசுகிசுக்களுக்கு ஒரேயடியாக முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் ரைனா.

தினேஷ் கார்த்திக்: இது இரண்டு விளையாட்டு வீரர்களின் காதல் கதை. எனக்கு கிரிக்கெட் வீரர்களே பிடிக்காது. இப்போது இதை வைத்து என் தோழிகள் பயங்கரமாகக் கிண்டல் செய்கிறார்கள். கிரிக்கெட்டர் என்பதை விடவும் அவர் நல்ல மனிதர் என்பதால்தான் காதலித்தேன்" என்கிறார் பிரபல ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிகல்.  

தமிழகக் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்கும் ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிகலும் காதலிக்கிறார்கள் என்று முதலில் செய்தி வந்தபோது அது பலரையும் ஆச்சர்யப்படுத்தியது. செய்தி வந்த வேகத்தில் உடனே இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்து விட்டது. அவரவர் தொழிலில் தீவிரமாகக் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக, 2015ல்தான் திருமணம் என்று இருவரும் முடிவெடுத்திருக்கிறார்கள்.No comments:

Post a Comment