Search This Blog

Saturday, February 08, 2014

அருள்வாக்கு - அகத்தின் அழகு!

 
அன்பு ஜாஸ்தியாக ஆக, ரூப அழகைப் பார்ப்பதுகூடக் குறைத்து கொண்டே வர ஆரம்பிக்கிறது. அன்பே உருவானவர்களை, அவர்களுடைய ரூபம் எப்படியிருந்தாலும், திரும்பத் திரும்பப் பார்த்துக் கொண்டே இருக்கிறோம் என்றால், அப்போது அன்புதான் அழகு என்று ஆகிவிடுகிறது. கன்னங்கரேலென்று, பல்லும் பவிஜுமாக ஒரு தாயார்க்காரி இருந்தால்கூட, அவளுடைய குழந்தை அவளை விட்டு யாரிடமும் போகமாட்டேன் என்று பிடித்துக் கொள்கிறது. அசலார் யாராவது ரொம்ப அழகானவர்கள் தூக்க வந்தால் அவர்களிடம் பயந்து கொண்டு வந்து, குரூபமான அம்மாவைத்தான் கட்டிக் கொள்கிறது. காரணம் என்ன? அவளுக்குத் தன்னிடம் உள்ள பெரிய அன்பை அது தெரிந்து கொண்டிருக்கிறது!
 
அஷ்டாவக்ரர் எட்டுக் கோணலாக, மஹா குரூபமாக இருந்தார்; அவரை வித்வான்கள் தேடித் தேடிப் போய் தரிசனம் பண்ணினார்கள். இன்னும் எத்தனையோ மஹான்கள், ஞானிகள், ஸித்தபுருஷர்கள் ரூபத்தைப் பார்த்தால் விகாரமாக அசடு மாதிரி, பயப்படுகிற மாதிரியெல்லாம் இருக்கும். ஆனாலும் தர்சனம், தர்சனம் என்று அவர்களை ஜனங்கள் சூழ்ந்து கொள்கிறார்கள்; திரும்பத் திரும்பப் பார்க்கிறார்கள்; வைத்த கண் வாங்காமல் பார்க்கிறார்கள் ஏன்? அவர்களுடைய அன்புள்ளம், அருளுடைமைதான் காரணம்.  

நாம் திரும்பித் திரும்பி விரும்பிப் பார்க்கும்படியாக இருப்பது தான் அழகு" என்ற Definitionபடி இவர்கள்தான் அழகு என்று சொல்ல வேண்டும். ‘அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்று, இவர்களுடைய உள்ளத்திலிருக்கிற அன்பு சரீரத்தின் அவலக்ஷணங்களையும் மீறி ஏதோ ஒரு அழகை அள்ளிப் பூசிவிடுகிறது என்று அர்த்தம்.
 
மொத்தத்தில் என்ன ஏற்படுகிறதென்றால், ‘உயிருள்ள ரூபமாக இருக்கிற ஒன்றின் அழகு அது அன்பாக இருக்க இருக்க ஜாஸ்தியாகிறது; அன்பு ரொம்பவும் முதிர்ச்சி அடைந்திருக்கிற நிலையில் ரூப அழகே எடுபட்டுப்போய் அன்புதான் அழகாகத் தெரிகிறது’ என்று ஆகிறது.
 
நமக்கு ஒன்றைப் பார்ப்பதில் ஆனந்தம் ஏற்படுவதால்தான் திரும்பத் திரும்பப் பார்க்கிறோம். ஆனந்தத்தை அளிக்கவல்லதில் தலைசிறந்தது அன்புதான். அன்பு தருகிற ஆனந்தத்துக்கு ஸமமாக எதுவும் இல்லை. இதனால் ஆனந்தத்தைத் தரும் அன்பே அழகாகி விடுகிறது; திரும்பத் திரும்ப ஆசையோடு பார்க்கப் பண்ணுகிறது.
 
ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

No comments:

Post a Comment