Search This Blog

Monday, May 05, 2014

ஆந்திரா பாலிடிக்ஸ்


இந்தத் தேர்தலில் முடிவுகள் எப்படி இருக்கும்? என்று சற்றும் யூகிக்கமுடியாத மாநிலம் ஒன்று உண்டென்றால், அது ஆந்திரப் பிரதேசம்தான். காரணம், இப்போது முழுக்க முழுக்க அரசியல் காரணங்களுக்காக, நாடாளுமன்றத் தேர்தலை மனத்தில் கொண்டு, ஆந்திரப்பிரதேசம் தெலங்கானா, சீமாந்திரா என்று இரண்டு கூறுகளாக்கப்பட்டு தேர்தலை எதிர் கொள்கிறது. 

மொத்தம் உள்ள 42 நாடாளுமன்றத் தொகுதிகளில் சீமாந்திரா பகுதியில் 25ம், தெலங்கானாவில் 17ம் உள்ளன. சட்டசபை உறுப்பினர்களைப் பொறுத்தவரை ஆந்திராவில் மொத்தம் 292 பேர். இதில் தெலங்கானா வில் 117 இடங்கள்; சீமாந்திராவில் 175. 

தெலுங்கு தேசமும், பா.ஜ.க.வும் மட்டுமே கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. மற்றபடி காங்கிரஸ், இடதுசாரிகள், தெலங்கானா ராஷ்டிர சமிதி இவற்றோடு பவன் கல்யாண், முன்னாள் ஆந்திர முதலமைச்சர் கிரண்குமார் ரெட்டி இருவரும் புதிதாகத் தொடங்கியுள்ள கட்சிகளும் களத்தில் உள்ளன. பிரஜா ராஜ்ஜியம் என்று தனிக்கட்சி தொடங்கி, தேர்தலில் சில இடங்களைப் பெற்று, அதன் பின் கட்சியைக் காங்கிரசோடு இணைத்து, மத்திய மந்திரிசபையில் இடம் பிடித்த தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் தம்பிதான் பவன்கல்யாண் என்பது குறிப்பிடத்தக்கது. பா.ஜ.க. வுக்கு ஆதரவு அளிக்கிறது பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி. 

தெலங்கானா பகுதி வாக்காளர்கள் ஏப்ரல் 30ஆம் தேதி வாக்களித்துவிட்டார்கள். சீமாந்திரா பகுதியில் தேர்தல் மே 7ஆம் தேதி நடக்க உள்ளது. பிரிக்கப்படாத ஆந்திர சட்டசபைக்கு நடக்கும் கடைசித் தேர்தல் இது. வரும் ஜூன் இரண்டாம் தேதி நாட்டின் 29வது மாநில மாக தெலங்கானா முறைப்படி அமையும். 

தெலங்கானா பிரச்னையை முன்னிறுத்தி டி. ஆர். எஸ். கட்சியைத் தொடங்கினார் சந்திரசேகர ராவ். பல சந்தர்ப்பங்களில் அவரை ஏமாற்றியும், அவமானப் படுத்தியும் சீண்டியது காங்கிரஸ். ஆனாலும், தெலங்கானா மாநிலம் உருவானால், கட்சியை, காங்கிரசுடன் இணைத்துவிடவேண்டும் என்று மறைமுகமாக கண்டிஷன்கூடப் போட்டது. அப்படிச் செய்தால், சீமாந்திராவை இழந்தாலும், தெலங்கானாவில் அமோக வெற்றி பெறலாம் என்று காங்கிரஸ் கணக்குப் போட்டது. ஆனால், அந்தக் கனவு புஸ்வாணமாகிப் போனது. காங்கிரஸ் கட்சியோடு இணைய சந்திரசேகரராவ் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். காரணம், காங்கிரஸ் மத்தியில் ஆட்சியை இழந்தால், ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்புள்ள பா.ஜ.க.வுடன் ஆட்சியில் பங்கேற்க வாய்ப்பில்லாமல் போய் விடுமல்லவா? அது மட்டுமில்லாமல், ராவுக்கு தெலங்கானா மாநில முதலமைச்சர் பதவியைத் தர காங்கிரஸ் தயாராக இல்லை என்பதும் இன்னொரு காரணம். தெலுங்கானாவைப் பொறுத்தவரை, தெலுங்கானா ராஷ்டிர சமிதிக்குத்தான் அதிகமான இடங்களைப் பெறும் வாய்ப்புள்ளதாகக் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. மீதி இடங்களில் காங்கிரசுக்கும், தெலுங்குதேசம் - பா.ஜ.க. கூட்டணிக்கும் சம அளவில் சீட்கள் கிடைக்கலாம் என்கிறார்கள்.  

சீமாந்திரா பகுதியைப் பொறுத்தவரை, முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, ஜெ சமைகியாந்திரா கட்சி என்ற பெயரில் புதுக்கட்சி தொடங்கிய கிரண்குமார் ரெட்டி, அவரது பிலேர் தொகுதியில் இந்தத் தடவை, தான் நிற்காமல் தன் தம்பி கிஷோர் ரெட்டியை களமிறக்கி உள்ளார். மாநிலம் முழுக்கச் சென்று பிரசாரம் செய்ய வேண்டும் என்பதால், அவர் இம்முறை போட்டியிடவில்லையாம். கிரண்குமார் ரெட்டியின் கட்சியில் தெலுங்கானா எதிர்ப்பு காரணமாக காங்கிரசிலிருந்து வெளியேற்றப்பட்ட ஒருசில எம்.பி.க்களும், அவரது மந்திரி சபையில் இருந்த ஒருசில மந்திரிகளும் தவிர, நாடறிந்த பிரபலங்கள் அதிகமில்லை. தேர்தல் கமிஷனிடம் சோல்லி, ஆம் ஆத்மியின் துடைப் பம் ஸ்டைலில் செருப்பு சின்னத்தைப் பெற்றிருக்கிறார் கிரண்குமார் ரெட்டி. 

இந்தத் தேர்தலில் ஆந்திராவில்தான் மிக அதிகமாகப் பணம் புகுந்து விளையாடுகிறது என்று தேர்தல் கமிஷன் சொல்கிறது. தேர்தல் அறிவிப்பு வெளியான சில குறிப் பிட்ட நாட்களுக்குள், நாடெங்கும், தேர்தல் அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனைகளில் சிக்கிய 265 கோடி ரொக்கப் பணத்தில் ஆந்திராவில் சிக்கியது மட்டும் 103 கோடி. இதைத் தவிர, 70 கிலோ தங்கம், 300 கிலோ வெள்ளி மட்டுமின்றி மூன்றே முக்கால் லட்சம் லிட்டர் கள்ளச் சாராயமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமில்லை, மாநிலத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் 36% அதாவது சுமார் 70ஆயிரம் வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று தேர்தல் கமிஷன் கண்டறிந்துள்ளது.

சீமாந்திரா பகுதியில் வழக்கம் போல அரசியல் புள்ளிகளோடு சேர்ந்து பல தொழிலதிபர்களும் கள மிறங்கி இருக்கிறார்கள். இந்த முறை சீமாந்திரா பகுதியில் ஜகன்மோகன் ரெட்டியின் கை ஓங்கி இருக்கும் என்பது ஒரு கணிப்பு. இவரது ஒ.எஸ்.ஆர். காங் கிரஸ் கட்சியின் சார்பில் மட்டும் நான்கு தொழிலதிபர்கள் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். எங்கள் எதிரி காங்கிரஸ்தான். சீமாந்திரா மக்களின் நலங் களைப் பாதுகாக்கத் தேர்தலுக்குப் பிறகு தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவு தருவதில் எங்களுக்குப் பிரச்னையில்லை" என்கிறார் ஜகன் மோகன் ரெட்டி.  

ஜகன் மோகன் ரெட்டி, தனது கட்சியின் தேர்தல் அறிக்கையில் சீமாந்திராவுக்கு ஹைதராபாதைவிட சிறப்பான புதிய தலைநகர் உருவாக்கப்படும். அது இந்தியாவுக்கே ஒரு மாதிரி நகரமாக விளங்கும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

சீமாந்திராவில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சிரஞ்சீவிதான் முதல் அமைச்சர் என்று சொல்கிறது காங்கிரஸ் வட்டாரம். ஆனால், அவரது தம்பி பவன் கல்யாண், காங்கிரசை விரட்டுவோம்; நாட்டைக் காப்பாற்றுவோம்" என்று உரக்கக் குரல்கொடுத்து, பிரசாரம் செய்துகொண்டிருக்கிறார். சீமாந்திரா பகுதியில், இளம் வாக்காளர்களை ஈர்க்க, பவன் கல்யாணின் பிரசாரம் கைகொடுக்கிறது. காங்கிரஸ் தரப்பில் விஜயசாந்தி, ஜெயசுதா, ஜெயபிரதா மூவரும் பிரசாரம் செய்கிறார்கள்.

டந்த லோக்சபா தேர்தலில் 42ல் 33 இடங்களில் அமோக வெற்றி பெற்ற காங்கிரஸ் இந்தத் தேர்தலில் இரட்டை இலக்கத்தைத் தொடாது; கடந்த பத்தாண்டுகளாக தெலங்கானா விஷயத்தில் காங்கிரஸ் செய்த நாணயமற்ற பாலிடிக்ஸ், இந்தத் தேர்தலில் காங்கிரசை பலிவாங்குவது நிச்சயம்" என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். மேலும், பல காங்கிரஸ் கட்சி முக்கியஸ்தர்கள், தெலுங்கு தேசம் கட்சிக்குப் போவிட்டது காங்கிரசுக்கு ஏற்பட்டிருக்கும் சறுக்கல். மத்திய அமைச்சராக இருந்த என்.டி.ஆரின் மகள் புரந்தேஸ்வரி, காங்கிரசிலிருந்து விலகி, தெலுங்குதேசம் கட்சியில் சேரத் திட்டமிட்டிருந்தாராம். ஆனால். சந்திரபாபு நாயுடு, புரந்தேஸ்வரியையும், ஆந்திர எம்.எல்.ஏ.வுமான அவரது கணவரையும் பா.ஜ.க.வில் சேரும்படி ஆலோசனை சொன்னதன் பேரில்தான் புரந்தேஸ்வரியும், அவரது கணவரும் காவிக் கட்சியில் ஐக்கியமானார்கள் என்றும் சொல்கிறார்கள்.  

போகிற போக்கைப் பார்த்தால், காங்கிரஸ் கட்சியின் நிலைமை மே. வங்காளம், தமிழ்நாடு போல ஆந்திராவிலும் ஆகிவிடுமோ..?

No comments:

Post a Comment