Search This Blog

Wednesday, May 07, 2014

தோனியின் பாகிஸ்தான் ரசிகர்!

 
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் ஆசிய - ஓசியானா குரூப் -1 பிரிவின் இரண்டாவது சுற்றில் இந்திய அணி, தென்கொரியாவை வென்று, உலக குரூப் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. முன்னாள் வீரர் ஆனந்த் அமிர்தராஜ் தலைமையில் களமிறங்கிய இந்திய அணியில் சோம்தேவ் வர்மன், சனம் சிங், சாகேத் மைனேனி, ரோஹன் போபண்ணா ஆகியோர் பங்கேற்றார்கள். இந்திய அணி மிக எளிதாக 3-1 என்ற புள்ளிக் கணக்கில் தென்கொரியாவைத் தோற்கடித்தது. இப்போது, உலகப் பிரிவு ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய 8 அணிகளில் இந்திய அணியும் ஒன்று. உலகப் பிரிவு பிரதான முதல் சுற்றில் தோல்வியைத் தழுவிய 8 அணிகளுடன் இந்த 8 அணிகள் மோதும். செப்டெம்பர் 12ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடக்கும் ப்ளே ஆஃப் சுற்றில் இந்திய அணியுடன் செர்பிய அணி மோதுகிறது. இதில் இந்திய அணி வெற்றி பெற்றால், 2015-ம் ஆண்டுக்கான உலகப் பிரிவு பிரதான முதல் சுற்றுக்குத் தகுதி பெறும்.
 
ரஷ்யாவில் நடைபெற்ற கேண்டிடேட்ஸ் செஸ் தொடரை வென்று இன்னொரு முறை உலக சாம்பியனுக்கான போட்டியில் கார்ல்சனுடன் மோத இருக்கிறார் விஸ்வநாதன் ஆனந்த். முதல் ஆட்டத்தில் ஆரோனியனை வென்ற பிறகு ஆனந்தை யாராலும் தடுத்து நிறுத்த முடியவில்லை. ஆடிய 14 ஆட்டங்களில் ஒன்றில் கூடத் தோற்காமல் வெற்றி பெற்றிருக்கிறார் ஆனந்த்.  

பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர் 62 வயது முகமது பஷீரைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. பாகிஸ்தான் தேசியக் கொடியை உடையாக அணிந்து பாகிஸ்தான் பங்கேற்கும் போட்டிகளில் காட்சியளிப்பார். இவர் அமெரிக்காவில் வசிக்கிறார். பங்களாதேஷில் நடந்த டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தைப் பார்க்க இவருக்கு டிக்கெட் கிடைக்கவில்லை. பிறகு என்ன நடந்தது? வலைப் பயிற்சியில் இந்திய அணியினர் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது நான் அங்கு சென்றேன். தோனிக்கு என் முகம் பரிச்சயம் என்பதால் பேசினார். இறுதிப் போட்டியைப் பார்க்க என்னிடம் டிக்கெட் இல்லை என்றேன். எதிர்பாராதவிதமாக உடனே டிக்கெட்டுக்கு ஏற்பாடு செய்தார். நான் நீண்ட நேரம் நிற்பதை அறிந்து எனக்குப் பழங்கள் கொடுக்கும்படி உத்தரவிட்டார். அன்றைய தினம் தோனி என்னை மிகவும் ஆச்சரியப்படுத்திவிட்டார். நான் பாகிஸ்தான் அணியின் ரசிகன்தான், இப்போது தோனியின் ரசிகனாகவும் என்னை உணர்கிறேன்" என்கிறார் பஷீர். 
 
சென்னையில் நடந்த தேசிய ஜூனியர் ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் ஒடிஸாவை வீழ்த்தி மீண்டும் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது பஞ்சாப். அணியின் பயிற்சியாளர் அவ்தார் சிங், பஞ்சாப்பில் எந்தளவுக்கு ஹாக்கியின் வளர்ச்சி உள்ளது என்பதை விவரிக்கிறார். எங்கள் மாநிலத்தில் மொத்தம் 6 நகரங்களில் 8 ஹாக்கி மைதானங்கள் உள்ளன. இந்திய ஜூனியர் மற்றும் இந்திய சீனியர் என இரண்டு அணிகளிலும் பஞ்சாபைச் சேர்ந்த 14 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். எப்போதும் இந்திய அணிக்கு 7 வீரர்களை நாங்கள் அனுப்பிக் கொண்டிருப்போம்" என்கிறார்.
 
மே 31 முதல் ஹாக்கி உலகக்கோப்பை நெதர்லாந்தில் நடக்க உள்ளது. இதற்கான பயிற்சிக்களமாக நெதர்லாந்தில் சுற்றுப் பயணம் செய்து தன்னைத் தயார்படுத்தியுள்ளது இந்திய ஹாக்கி அணி. கடந்த முறை உலகக் கோப்பை இந்தியாவில் நடந்தது. இந்த முறை நெதர்லாந்திலும் ஸ்காட்லாந்திலும் நடக்க உள்ளன. அதனால் நெதர்லாந்து பயணம் மிக முக்கியமாது" என்கிறார் இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் சர்தார் சிங்.  

ச.ந.கண்ணன்

No comments:

Post a Comment