Search This Blog

Monday, May 26, 2014

யார் இந்த அமித்ஷா?


இன்று மோடியின் வலதுகரமாக விளங்குபவராக குறிப்பிடப்படும் அமித்ஷாவுக்கு வயது 50. வசதியான குஜராத்தி பிசினஸ் குடும்பத்தில் பிறந்த அமித்ஷா பயோ கெமிஸ்டிரியில் பட்டம் பெற்றவர். பல வருடங்கலாக ஆர்.எஸ்.எஸ். உடன் தொடர்புடைய அமித்ஷா, சில காலம் ஸ்டாக் புரோக்கராக இருந்துவிட்டு, பா.ஜ.க.வுக்கு வந்தவர். முதலில் அத்வானிக்கு நெருக்கமாக இருந்து, குஜராத்தின் காந்திநகர் தொகுதியில் அவருக்குத் தேர்தல் பணியாற்றியவர். 2002ல் ஒன்றரை லட்சம் வாக்கு வித்தியாசத்திலும், 2007ல் இரண்டே கால் லட்சம் வாக்கு வித்தியாசத்திலும் குஜராத் சட்ட சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். 2003ல், மோடியின் அமைச்சரவையில் மிக இளைய அமைச்சராக சேர்த்துக் கொள்ளப்பட்டார். ஒரு பக்கம், அமித்ஷாவின் அரசியல் வியூகங்களால் கட்சிக்குக் கிடைத்துள்ள தேர்தல் வெற்றி பாராட்டப்பட்டாலும், ஷா மீது குஜராத்தில் நடந்த போலி என்கவுன்டர்கள், இளம்பெண் மீதான ரகசிய கண்காணிப்பு போன்ற கரும் புள்ளிகளும் உண்டு.

எப்படிக் கிடைத்தது 73/80?

இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிர தேசத்தில் இருக்கும் எண்பது நாடாளுமன்றத் தொகுதிகளில் குறைந்தபட்சம் 40ல் ஜெயிக்க வேண்டும். அப்போதுதான், பா.ஜ.க. கூட்டணிக் கட்சிகளோடு சேர்ந்து ஆட்சி அமைக்க முடியும் என்று பா.ஜ.க. தனக்குத்தானே இலக்கு நிர்ணயித்துக் கொண்டது. அத்தனை சீட்டுக்கள் கிடைக்கும் என்றும், கிடைக்காது என்றும் மீடியாவும், மற்ற கட்சிகளும் சொல்லிவந்தன. 

ஆனால், தேர்தல் முடிவுகள் மற்றவர்களுக்குப் பயங்கரமான அதிர்ச்சியையும், பா.ஜ.க.வுக்கு இன்ப அதிர்ச்சியையும் கொடுத்துள்ளன. இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால், பா.ஜ.க.வுக்குச் சொந்தமாக 71 இடங்களிலும், அதன் கூட்டணிக் கட்சியான அப்னா தளத்துக்கு இரண்டு இடங்களும் கிடைத்துள்ளன. மீதமுள்ள ஏழு இடங்களும் இரண்டு அரசியல் குடும்பத்தினருக்குச் சென்றுள்ளன. ஆம், இரண்டு இடங்களில் காங்கிரசின் முதல் குடும்பத்தைச் சேர்ந்த சோனியா, ராகுல் இருவரும் வெற்றி பெற்றுள்ளனர். மீதமுள்ள ஐந்து இடங்களில் சமாஜ்வாதி கட்சித் தலைவரான முலாயம் சிங் குடும்பத்துக்கே சென்றுள்ளது.  

முலாயம் சிங் மெயின்புரி, அசம்கர் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார். முலாயமின் மருமகளும், உ.பி. முதலமைச்சர் அகிலேஷ் யாதவின் மனைவியுமான டிம்பிள், கன்னவுஜ் தொகுதியில் வெற்றி பெற்றிருக்கிறார். தவிர, பதவ்ன், ஃபிரோசாபாத் ஆகிய இரண்டு தொகுதிகளில் முலாயம் தமது நெருங்கிய உறவினர்களான தர்மேந்திர யாதவ், அக்ஷ யாதவ் ஆகிய இருவரையும் நிறுத்தி, வெற்றி பெறச் செய்திருக்கிறார். இதை லக்னௌ பத்திரிகையாளர் வட்டாரத்தில் மொத்த உ.பி.யையுமே சங் பரிவார், காந்தி பரிவார், முலாயம் பரிவார் மூன்றும் வளைத்துப் போட்டுவிட்டதாக கமென்ட் அடிக்கிறார்கள். 

 ஆனால் உ.பி.யில் இத்தனை பெரிய அளவில் பம்பர் அறுவடை பா.ஜ.க.வுக்கு எப்படிச் சாத்தியமானது? இதுதான் இந்திய அரசியலிலே எழுந்து நிற்கும் ஆச்சர்யக் கேள்வி. இதற்கு முழுக்க முழுக்கக் காரணமானவர், மோடியின் வலதுகரமாக விளங்கும் அமித்ஷாவையே சாரும். அவரை, உத்தரப்பிரதேசத்தின் நாடாளுமன்றத் தேர்தல் பொறுப்பாளராக்கி, களமிறக்கினார் மோடியும், ராஜ்நாத் சிங்கும். அவர் செயல்படுத்திய பல்வேறு வியூகங்களில் மிக முக்கியமானது அப்னா தளத்துடன் கூட்டணி அமைத்து, அதற்கு இரண்டு சீட்கள் கொடுத்தது என்கிறார்கள் உ.பி. அரசியலைக் கூர்ந்து கவனித்துவரும் பார்வையாளர்கள். காரணம், அப்னா தளம் ஒரு பெரிய அரசியல் கட்சி இல்லை என்றாலும், அதன் முக்கியத்துவத்தை பா.ஜ.க. மிகச் சரியாகக் கணித்து, அதைத் தன்னோடு சேர்த்துக் கொண்டது. கன்சிராம், பகுஜன் சமாஜ் கட்சியை உருவாக்கியபோது, அவரோடு கூட இருந்தவர் சோனாலால் பட்டேல். ஆனால், கட்சியில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட மாயாவதி யோடு அவருக்கு ஒத்துப் போகவில்லை. எனவே, 1995ல், தனியாகப் போய், ‘அப்னா தள்’ என்ற கட்சியைத் தொடங்கினார். 1999ல் சோனா லால் ஒரு சாலை விபத்தில் மரணமடைந்து விட, அதன்பின் அவரது மகள் அனுப்பிரியா பட்டேல் கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். மற்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரே இந்தக் கட்சி உறுப்பினர்கள். உ.பி. சட்டசபையில் இந்தக் கட்சிக்கு ஒரு எம்.எல்.ஏ. உண்டு. அப்னா தளத்துடன் கூட்டணி வைத்துக் கொண்டதன் பயனாக, மாநிலம் முழுவதிலுமாக உள்ள ஓ.பி.சி. வாக்கு வங்கியின் ஆதரவை பா.ஜ.க. பெற முடிந்தது. இது வரலாறு காணாத வெற்றிக்கு வழி செய்தது. இதைத் தவிர, வாரணாசி தொகுதியில், மோடியின் வெற்றிக்கு அப்னா தளம் கட்சியின் வாக்கு வங்கியும் ஒரு காரணம்.அமித் ஷா, உ.பி.யில் பா.ஜ.க.வின் ஆதரவுத் தளத்தை விஸ்தரிக்க பல நடவடிக்கைகளில் இறங்கினார். அவற்றுள் மிகவும் முக்கியமானது, இளம் வாக்காளர்களைக் கவர்ந்து, அவர்களைத் தேர்தல் பணிக்குப் பயன்படுத்திக் கொண்டது ஆகும். இதற்காக, மாநிலம் முழுவதிலும் உள்ள சுமார் 1300 கல்லூரி வளாகங்களுக்குச் சென்று, மாணவர்களை வாலன்டியர்களாத் திரட்டி, அவர்களைத் தேர்தல் பணியில் ஈடுபடுத்தினார். முந்தைய சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் சந்தித்த தோல்வியின் காரணமாக சுணங்கிப் போயிருந்த அடிமட்டத் தொண்டர்களை உற்சாகப்படுத்தி, பழைய பூத் கமிட்டி உறுப்பினர்களை மாற்றி, அதற்குப் புதிய துடிப்புமிக்க இளைஞர்களை உறுப்பினர்களாக நியமித்தது மிக நல்ல பயன் தந்தது. 

அது மட்டுமில்லாமல், மீடியா மூலமாக சென்றடைய முடியாத மாநிலத்தின் பகுதிகளில் சென்று பிரசாரம் செய்வதற்காக முழு நேரத் தொண்டர் படைகளை உருவாக்கி, 800 வாகனங்களைக் கொடுத்து, மாநிலம் முழுவதும் அனுப்பி வைத்தார். அதற்கு முன்பாக, இதற்கு முந்தைய சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் பா.ஜ.க. வேட்பாளர்களாகப் போட்டியிட்டுத் தோல்விகண்டவர்களை சிறு, சிறு குழுக்களாகச் சந்தித்து, அவர்களின் தோல்விக்கான காரணங்கள் என்னென்ன என்பதை அவர்கள் மூலமாகவே கட்டறிந்து கொண்டார்.

இன்னொரு பக்கம், கட்சியில் அமித் ஷாவுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் உள்ளூர் தலைவர்கள் சிலருக்குப் பிடிக்கவில்லை. ‘வெளியூர்க்காரரான உங்களுக்கு, உ.பி. பாலிடிக்ஸ் பற்றி என்ன தெரியும்?‘ என்று அவரிடமே கேட்டவர்கள் உண்டு. ஆனால், அமித்ஷா கோபப்படாமல், ‘நான் வெளி ஆசாமிதான்.கட்சிப் பணியாற்றுவதற்காக உ.பி.க்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறேன். உள்ளூர் அரசியல்வாதிகளான உங்கள் ஒத்துழைப்போடு, உங்கள் ஊர் அரசியலைப் புரிந்துகொண்டு, என் பணியை ஆற்ற உங்கள் ஒத்துழைப்பு வேண்டும்’ என்று பேசி அவர்கள் ஆதரவைப் பெற்று, தம் தேர்தல் திட்டங்களைச் செம்மையாகச் செயல்படுத்தினார்.  


கட்சிக்காரர்கள், பொறுப்பாளர்களுடனான கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்தபோது, வகுப்பறை மாடலில் இல்லாமல், அனைவரும் பங்கேற்க வழிசெய்யும் வகையில் வட்டமேஜை கூட்டங்களாக இருக்கச் செய்தார். தேர்தல் டிக்கெட் கொடுப்பதற்கு, மேலிட அனுமதியோடு சில விதிமுறைகளை அமித்ஷா பின்பற்றினார். தொடர்ச்சியாகத் தோல்வியடைந்த வேட்பாளர்களுக்குத் தொகுதியில் அவர்களுக்குச் செல்வாக்கு இல்லை என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டதால் அவர்களுக்கு சீட் கிடையாது. தொகுதிக்காரர்களுக்குத் தான் சீட். 

 மாநிலத்தின் ஜாதிக்கட்டமைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து, அதே சமயம் அனைத்து ஜாதியினரும் போட்டியிட வாய்ப்பளிக்கவும் வழி செய்யும் வகையில் வேட்பாளர் தேர்வு நடந்தது. நரேந்திர மோடியை, குஜராத்தில் மட்டுமில்லாமல், உ.பி.யிலும் ஒரு தொகுதியில் நிற்கவைப்பது; அதற்கென பாரம்பரிய கலாசாரத்துக்குப் பெயர் பெற்ற வாரணாசியைத் தேர்ந்தெடுத்தது, அதன் மூலம், உ.பி.யிலும், பீகாரிலும் பா.ஜ.க. ஆதரவு அலையை ஏற்படுத்துவது என எல்லா விஷயங்களிலும் அமித்ஷாவின் கை இருந்தது.


 

 

 

 


No comments:

Post a Comment