Search This Blog

Thursday, May 15, 2014

கிளென் மேக்ஸ்வெல்.

கிளென் மேக்ஸ்வெல்.

'பேரைக் கேட்டாலே சும்மா அதிருதில்ல...’ ரேஞ்சுக்கு ஐ.பி.எல். போட்டிகளில் முரட்டு ஆட்டம் ஆடி மிரட்டுகிறார் மேக்ஸ்வெல். அதிரடி ஆட்டக்காரர்களான கிறிஸ்கெயில், வீரேந்திர ஷேவாக்கே 'இவன் வேற மாதிரி’ என மிரண்டுபோய் பேட்டி கொடுக்கிறார்கள்.

கட்டாக்கில் நடைபெற்ற சென்னைக்கு எதிரான போட்டி வரை ஏழு ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடியிருக்கும் மேக்ஸ்வெல், 435 ரன்கள் குவித்திருக்கிறார். இதில் நான்கு முறை 80 ரன்களை சரவெடி அதிரடியாகக் கடந்திருக்கிறார்.

கடந்த ஆண்டு வரை மும்பை அணியில் இருந்த கிளென் மேக்ஸ்வெல்லை யாருமே கண்டுகொள்ளவில்லை. 'நீ யாரு... இதுக்கு முன்னாடி பாம்பேல என்ன பண்ணிட்டு இருந்த?’ என இப்போதுதான் 'ஆட்டோ டிரைவர் மாணிக்கத்திடம்’ விவரம் கேட்பது போல, ஐ.பி.எல். ரசிகர்கள் மேக்ஸ்வெல் பற்றி விசாரிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

2012-ம் ஆண்டு டெல்லி அணியில் இருந்த மேக்ஸ்வெல்லை, 2013-ம் ஆண்டு ஆறு கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது மும்பை இந்தியன்ஸ் அணி. 'மில்லியன் டாலர் பேபி’ என்ற முத்திரையுடன் மும்பை அணிக்கு வந்தவரை மூன்றே மூன்று போட்டியில் மட்டுமே விளையாட வைத்ததோடு, அடுத்த சீஸனிலேயே அவரை அணியில் இருந்தும் கழற்றிவிட்டு அவமானப்படுத்தியது மும்பை. ஆனால், மீண்டும் ஆறு கோடி ரூபாய்க்கு பஞ்சாப் அணிக்கு ஏலம் போனார் கிளென் மேக்ஸ்வெல். இங்கே வந்த பிறகுதான் ட்விஸ்ட்.


ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் பிறந்தவரான மேக்ஸ்வெல்லின் பெற்றோருக்கும் கிரிக்கெட்டுக்கும் பெரிய சம்பந்தம் இல்லை. அவருடைய வீட்டின் அருகிலேயே கிரிக்கெட் கிளப் இருந்தது. தன்னைவிட ஒன்பது வயது மூத்த அண்ணன் அங்கே கிரிக்கெட் பயிற்சியில் சேர, அவருடன் துணைக்குச் செல்ல ஆரம்பித்த மேக்ஸ்வெல், பிறகு அண்ணனைவிட தேர்ந்த ஆட்டக்காரராக மாறினார். ஆஸ்திரேலிய உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் டாஸ்மானியா அணிக்கு எதிராக ஆடியது கிளென் மேக்ஸ்வெல்லின் விக்டோரியா அணி.

தற்போதைய ஆஸ்திரேலியா மற்றும் பஞ்சாப் அணியின் கேப்டன் ஜார்ஜ் பெய்லி சதம் அடித்து, டாஸ்மானியா அணியின் ஸ்கோரை உயர்த்தினார். டாஸ்மானியா அணியில் வேட், ஃபின்ச், எட் கோவன் என ஆஸ்திரேலிய அணியின் அத்தனை சீனியர் வீரர்களும் இருந்தனர். விக்டோரியா அணி வெற்றிக்கு 52 பந்துகளில் 100 ரன் அடிக்க வேண்டும், நான்கு விக்கெட்டுகளே மீதம் இருக்கின்றன என்ற நிலையில் களம் இறங்கினார் 21 வயது மேக்ஸ்வெல். பென் ஹில்ஃபெனாஸ், ஃபாக்னரின் பந்துகளைச் சிதறடித்து ஆஸ்திரேலிய உள்ளூர் கிரிக்கெட்டிலேயே யாரும் நிகழ்த்தாத சாதனையாக 19 பந்துகளில் அரை சதம் அடித்து அணியை வெற்றி பெறவைத்தார் மேக்ஸ்வெல். அந்த அரை சதம்தான் ஆஸ்திரேலிய அணிக்குள் அவரை அழைத்துவந்தது.

காலுக்கு அருகே போடப்படும் பந்துகளை வாரி பவுண்டரி லைனுக்கு மேலே அடிப்பதில் மேக்ஸ்வெல்லுக்கு இணையாக இப்போதைக்கு உலக கிரிக்கெட்டில் யாரும் இல்லை. ரிவர்ஸ் ஸ்வீப்களையும், ரிவர்ஸ் ஷாட்களையும் அத்தனை அநாயாசமாக அடிக்கிறார் மேக்ஸ்வெல்.

''ஆடம் கில்கிறிஸ்ட்டின் ஆட்டமுறை எனக்கு மிகவும் பிடிக்கும். பயிற்சியாளர்கள் கிரிக்கெட்டை எப்படி டெக்னிக்கலாக ஆட வேண்டும் என்று சொல்லித் தருவார்களோ, அந்த ஸ்டைலிலும் ஆடுவார். அதே சமயம் இப்படி ஒரு ஷாட் ஆட முடியுமா என ஆச்சரியப்படுத்தும் வகையில் புதிய ஷாட்களையும் அறிமுகப்படுத்துவார். அவருடைய ஸ்டைலில் ஆட ஆரம்பித்தேன். ஆனால், பயிற்சியாளர்கள் எல்லாம் இப்படி ஆடக் கூடாது என மிரட்ட, டெக்னிக்கல் கிரிக்கெட்டை மட்டுமே ஆடிக்கொண்டிருந்தேன். ஐ.பி.எல். எனக்கு ஒரு திறந்தவெளி மைதானம். இங்கே என்ன ஷாட் ஆட வேண்டும், எது ஆடக் கூடாது என தீர்மானிப்பவன் நான்தான். அதனால்தான் என்னால் சிக்ஸர்களாக அடிக்க முடிகிறது'' என்கிறார் மேக்ஸ்வெல்.

மேக்ஸ்வெல் எல்லா பௌலர்களையும் பதம் பார்த்தாலும், குறிப்பாக ரவிச்சந்திரன் அஷ்வின் பந்துகளை திரும்பித் திரும்பி அடிக்கிறார். ''ஒருமுறை ஷேன் வார்னின் பந்தை ரிவர்ஸ் ஷாட்டில் சிக்ஸ் அடித்தார் ஜான்டி ரோட்ஸ். உலகின் தலைசிறந்த ஸ்பின் பௌலர் ஷேன் வார்ன். அவரது பௌலிங்கில் ரிவர்ஸ் ஷாட் எல்லாம் அடிக்கிறாரே என வியந்தேன். ஒருவர் பௌலிங்கின் உச்சத்தில் இருக்கும்போது அவரது பௌலிங்கில் வித்தியாசமான ஷாட்டுகளை அடிக்க ஆரம்பித்தால், அந்த பௌலர் திணறிவிடுவார் என்பது எனக்குப் புரிந்தது.

2012-ம் ஆண்டு இந்தியாவில் விளையாட வந்தபோது அஷ்வின்தான் இந்தியாவின் டாப் ஸ்பின்னர். வலது கை பேட்ஸ்மேன்களுக்கு அவர் பொதுவாக ஆஃப் ஸ்பின் பந்துகளை வீசத் தயங்குவார். வலது கை பேட்ஸ்மேன்கள் அடிக்காமல் இருக்க கேரம் பந்துகளை வீசுவார். அந்தக் கேரம் பாலைத்தான் நான் அடிக்க வேண்டும் என்று முன்கூட்டியே முடிவு செய்துவிட்டேன். கேரம் பால் போட்டால் இடது பக்கம் திரும்பி அடிக்க வேண்டும் என்ற என்னுடைய எண்ணத்துக்கு நல்ல பலன் கிடைத்தது. அது முதல் அவர் எனக்கு கேரம் பால் போட்டாலே, நான் இடது பக்கம் திரும்பி ஓங்கி அடிக்க ஆரம்பித்தேன்!'' என்கிறார் மேக்ஸ்வெல்.

இந்த ஐ.பி.எல்-லில் ரவிச்சந்திரன் அஷ்வின் வீசிய நான்கு ஓவர்களில் ஆறு பவுண்டரி, நான்கு சிக்ஸர்களை விளாசியிருக்கிறார் மேக்ஸ்வெல்.

2015-ல் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் கிளென் மேக்ஸ்வெல்தான் ஆஸ்திரேலிய அணியின் நம்பிக்கை நாயகன். உலக சாம்பியனான இந்தியா, கோப்பையைத் தக்கவைக்கவேண்டுமானால், மேக்ஸ்வெல்லின் பேட்டிங்குக்கு தடைபோடும் வித்தை, வியூகங்களை இந்த ஐ.பி.எல். போட்டித் தொடரிலேயே கண்டுபிடிக்க வேண்டும்!

சார்லஸ்


No comments:

Post a Comment