Search This Blog

Tuesday, January 07, 2014

தை பிறந்தால்...வழி பிறக்கும்!

அனைவருக்கும் தைத் திருநாள் வாழ்த்துகள். முதலில்... தைத்திருநாளில், பொங்கல் பண்டிகையின்போது, மதியம் 12 முதல் 1 மணி வரை அல்லது மாலை 5 முதல் 6 மணி வரை பொங்கல் வைக்க உகந்த நேரம் என்பதை குறித்துக் கொள்ளுங்கள்.

மாதப் பிறப்பு என்பதே முக்கியமான நாள். அதிலும் தை, சித்திரை, கார்த்திகை என பல மாதங்களின் முதல் நாள் மிகுந்த விசேஷமானதாகப் போற்றப்படுகின்றன. அதில் குறிப்பிடத்தக்க மாதம்... தை! பிறக்கும்போதே கோலாகலமான பண்டிகையுடன் பூமி சார்ந்த விழாவாக, உயிரினங்களைப் போற்றுகிற உன்னதத் திருவிழாவாகத் துவங்குகிறது.

பொங்கலோ பொங்கல்!

உத்தராயன புண்ய காலத்தின் துவக்கமும் இன்றைக்குத்தான்! பொங்கல் திருநாள், மறுநாள் மாட்டுப் பொங்கல், மூன்றாம் நாள் காணும் பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினம் என மூன்று நாள் விமரிசையாகக் கொண்டாடி வணங்கவேண்டிய அற்புதமான நாட்கள். இந்தக் கொண்டாட்டத்தில் இன்னொரு விஷயமும் அடங்கியிருக்கிறது. 'நன்றி மறப்பது நன்றன்று’ என்கிற வள்ளுவரின் சொல்லுக்கு ஏற்ப, இந்தப் பண்டிகைகள், சூரிய பகவானை வணங்குவதற்கான விழாவாகவும் மாடு- கன்றுகளுக்கு நன்றி பாராட்டும் வைபவமாகவும் கொண்டாடப்படுகிறது.


அருட்பெருஞ்ஜோதி..!

இதையடுத்து, வருகிற 17.1.14, அன்று வடலூரில் கோலாகலமாக நடைபெறும் வள்ளலார் ஜோதி தரிசனத்தை நாம் அறிவோம். ஜோதியே கடவுளின் சொரூபம், ஜோதி தரிசனத்தின் மூலமாகவே இறைவனை அடையலாம்,  என்பதையெல்லாம் உணர்த்திய வள்ளலார் சுவாமிகள் ஜோதியுடன் கலந்து ஜோதியாகவே காட்சி தந்த நன்னாள். இந்தநாளில், வள்ளலாரை நினைப்பதும், அவர் அவதரித்து ஜோதியில் ஐக்கியமான வடலூர் சென்று தரிசிப்பதும் மகா புண்ணியம்!

ஜனவரி 30-ஆம் தேதி, தை அமாவாசை, பிப்ரவரி 6-ஆம் தேதி ரத சப்தமி, 7-ஆம் தேதி தை கிருத்திகை (ஆலயத்தில்), 8-ஆம் தேதி கிருத்திகை விரதம் எனத் தை மாதத்தில், எத்தனை எத்தனை விழாக்கள்? எவ்வளவு கொண்டாட்டங்கள்?
முதலில் தை மாதப் பிறப்புக்கு, அதாவது பொங்கலுக்கு முதல் நாளை போகிப் பண்டிகை என்று (13.1.14) கொண்டாடுகிறோம். 'பழையன கழிதலும் புதியன புகுதலும்’ என்கிற சொல்லுக்கு ஏற்ப, நம்மிடம் உள்ள தீய எண்ணங்களைப் போக்கச் செய்து, நல்ல எண்ணங்களைக் கொண்டவராக வலம் வர வேண்டும். இதைக் குறிப்பதற்காக, நம் வீட்டில் உள்ள பழையப் பொருட்களை வெளியே எடுத்து வந்து, கொளுத்திவிட்டு, ஸ்நானம் செய்கிற வழக்கம் உண்டு!


பழையன கழிதல்!

போகி என்றால் இந்திரன் என்று அர்த்தம். எனவே, இந்திர பூஜையை பொங்கலில் இருந்து செய்வதால், முன்னதாக அதற்கு தயார் படுத்திக்கொள்வதற்காகவும் பழையன கழிதல் எனும் விழாவை வைத்திருக்கலாம். இன்னொரு கவனிக்கத்தக்க விஷயம்... இயற்கையை மாசுபடுத்தக்கூடியவை எது என்று பார்த்து அவற்றை விலக்கிவிடுவதே உத்தமம். இயற்கையுடன் இயைந்தவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவற்றைப் பயன்படுத்துவதே நம் நாட்டுக்கு செய்யும் மிகப் பெரிய சேவை. 'சுத்தத்வாத் சிவம் உச்யதே’ என்கிறது வேதம். அதாவது சுத்தமே சிவம். எனவே, தூய்மையான மனதும், இடமுமே சிவபெருமானுக்கு உகந்தது என்பதை உணர்ந்து இந்தப் பண்டிகையைக் கொண்டாடுவோம்.

பொங்கலோ பொங்கல்!

பொங்குதல் என்றாலே உள்ளிருந்து வெளிவருதல் என்று அர்த்தம். அதாவது, 'மகிழ்ச்சி பொங்குதல்’, 'பால் பொங்குதல்’ என்றும் கூறுவது நம் இயல்பு. 'தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்ற வாக்கியமானது சிறந்த அர்த்தங்களைக் கொண்டிருக்கிறது.

மனிதன், பல நேரங்களில் பலவித குழப்பங்களால் சூழப்பட்டு, அவற்றிலிருந்து எப்படி வருவது எனத் தெரியாமல் தத்தளித்து, கலங்கிக் கிடக்கிறான்.  இது போன்று நாம் கஷ்டப்படுவதிலிருந்து காப்பதற்கு பலவிதமான பண்டிகைகளை, நம் இந்து சமயம் அமைத்துத் தந்திருக்கிறது. அவற்றில் மிக எளிமையானதும், மிகுந்த பயனளிப்பதும், அனைவராலும் போற்றக்கூடியதுமான பண்டிகை 'தைப்பொங்கல்’ என்று மகிழ்ச்சி பொங்கச் சொல்லலாம்!

சிறு வயதில் நானும் என் சகோதரிகளும் எங்கள் தாயார் பொங்கல் வைத்து, ஆதவனை வழிபட்டு பொங்கல் பொங்குகிற சமயத்தில் 'பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!’ என்று கூவி, டமாரம் அடித்து மகிழ்ந்ததை மறக்கவே முடியாது.  வயது ஆக ஆக பழையபடி நம்மால் ஆடிப்பாடி கொண்டாட முடியவில்லை என்றாலும், இந்தப் பண்டிகைகளின் பின் இவ்வளவு பயன்கள் உள்ளதா என்பதைக் கண்டு வியந்து மகிழ்கிறேன். எவ்வளவு நல்ல காரியங்கள் நாம் செய்திருந்தால், நாம் மனிதப்பிறவி எடுத்து இது போன்ற உயர்ந்த தர்மங்களை போதிக்கும் சமயத்தில் பிறந்து, நாத்திகனாக இல்லாமல் நமது முன்னோர்கள் கொடுத்துள்ள இந்த அரிய பொக்கிஷங்களை அனுபவித்து வருகிறோம் என நெகிழ்கிறேன்.


வருடத்துக்கு 12 மாதங்கள். அதில் 10-வது மாதம் தை. இந்த மாதத்தின் பிறப்பை பொங்கல் பண்டிகை என்று நாமும், ஆந்திரம், மேற்கு வங்காளம், கேரளா, பீகார், கோவா, கர்நாடகம், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சூரிய பகவான் தனுர் ராசியிலிருந்து மகர ராசிக்கு செல்வதால் மகர சங்கராந்தி என்றும், குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் சூரியன் வடக்கு நோக்கிச் செல்வதால் உத்தராயன புண்யகாலம் என்றும் ஹரியானா, ஹிமாசல் பிரதேசம், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் லோஹ்ரி என்றும் பலப்பல பெயர்களால் கொண்டாடப்படுகிறது.

நன்றி சொல்லுவோம்!

சூரியன் - இந்த உலகின் ஆதாரம். ஆதவன் அளிக்கக்கூடிய ஆற்றலே நம்முடையதாக வெளிப்படுகிறது. அவருடைய வெப்பத்தால் உலகில் பல நன்மைகள் ஏற்படுகின்றன. நமக்குத் தேவையான வெப்பத்தையும் வெளிச்சத்தையும் அளித்து அனைத்து ஜீவராசிகளையும் வாழ்விக்கக் கூடிய சக்தி படைத்தவரே ஆதவன். அவரின் அசைவே காலம். அவர் எந்த ராசியில் அமர்கிறாரோ அதுவே மாதமாகவும், எந்த நேரத்தில் உதிக்கிறாரோ அதுவே நாளாகவும், தன்னுடைய ஒளியினால் மற்ற கிரஹங்களுக்கும் நக்ஷத்திர கூட்டங்களுக்கும் ஒளி பெறச் செய்து, உலகை திறம்பட வழி நடத்துபவரே சூரிய பகவான்!

நன்றி குறித்து நாளெல்லாம் பேசுகிறோம். 'நன்றி கெட்ட உலகம்’ என்று புலம்புகிறோம். உண்மையில், நம் வாழ்க்கைக்கு வேண்டிய அடிப்படை ஆற்றலை அளித்துவரும் கதிரவனுக்கு நன்றி சொல்கிறோமா என யோசியுங்கள். நம் முன்னோர்கள், தேவர்களின் காலைப்பொழுதின் முதல் மாதமான இந்த தை மாதத்தில், அதாவது சூரியன் உதிக்கக்கூடிய வேளையில், சூரியனுக்கு நன்றி சொல்வது சிறப்பானது என்று சொல்லிச் சென்றுள்ளார்கள். சூரிய நமஸ்காரம் சூரியனை குறித்த தோத்திரங்கள் சொல்வதால் தேக ஆரோக்கியம் கூடும்; மனத்துள் தெளிவு பிறக்கும்!

அதேபோல், உழவர்களுக்கும் உழவுத் தொழிலுக்குப் பயன்படும் மாடுகளுக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம். நன்றி செலுத்துவோம். அதனால்தான் இந்த விழாவை உழவர் திருநாள் என்று கொண்டாடுகிறோம்.

எப்படிச் செய்யவேண்டும் பொங்கல்?
பொங்கல் பானையில் அரிசி, பால், வெல்லம், திராட்சை, முந்திரி போன்றவற்றை இணைத்து, அந்தப் பானையில் பசுமஞ்சள் கிழங்கை கங்கணமாக சுற்றி, சமைத்த பொங்கலைப் பொங்கியவுடன் ஆதவனுக்கு அர்ப்பணம் செய்து, தானும் தன்  குடும்பத்தாரும் ஒற்றுமையுடன் பகிர்ந்து சாப்பிட்டு  பெரியோரின்  ஆசிகளைப் பெற வேண்டும். ஏழை எளியவர்களுக்குத் தன்னால் இயன்ற உதவிகளைச் செய்து, இந்த நாளை மகிழ்ச்சியாகவும் அதே நேரத்தில் பொருள் அமைந்ததாகவும் ஆக்க நமது முன்னோர்கள் நம்மை பழக்கப்படுத்தியிருக்கிறார்கள்.

இந்த நாளில் முன்னோர்களைக் குறித்து தர்ப்பணம் செய்வதும் சிறந்த பலனை அளிக்கும். இந்நாளில் புண்ணிய நதிகளிலோ, கடலிலோ நாம், ஸ்நானம் செய்து தான தர்மங்களைச் செய்வதால், சிறந்த பலன்களை பெறலாம் என்கின்றன நீதி நூல்கள்.

மாட்டுப்பொங்கல்

'மாதர: ஸர்வ பூதானாம்
காவ: ஸர்வ சுக்ப்ரதா:’ என்று உலகுக்கே தாயாகவும், அனைத்து ஜீவ ராசிகளுக்கும் இன்பத்தை அளிக்கக்கூடியதுமான கோமாதா என்று போற்றக்கூடிய பசுவையும், காளைகளையும் சிறப்பாக வழிபட சிறந்த நாள்! அருகில் உள்ள பசு மடங்களுக்குச் சென்று பசுவை வழிபடுவதால், அளவற்ற இன்பம், சகல காரியங்களிலும் நன்மை, அழியாச் செல்வம் எனப் பெற்று நிம்மதியுடன் வாழலாம் என்பதில் சந்தேகமே இல்லை!

இன்று காலை நீராடுவதற்கு முன், பெண்கள் அவர்கள் வீட்டின் மேல் மாடிக்கு (இருந்தால்) சென்று, அவர்களின் சகோதரர்கள் நலமாக இருக்க வேண்டும் என்று பச்சை சாதம் (வெற்றிலை பிழித்து கலந்தது), வெள்ளை சாதம், சிவப்பு சாதம் (குங்குமம் கலந்தது) மஞ்சள் சாதம்
(மஞ்சள் கலந்தது, சர்க்கரைப் பொங்கல் ஆகிய ஐந்து விதமான அன்ன வகைகளை பிடிப்பிடியாக இலையில் வைத்துக் கடவுளை வேண்டுவது வழக்கம். இதுபோன்று சகோதரர்களும் தங்கள் சகோதரிகளுக்குத் தங்களால் இயன்ற பரிசுப் பொருட்களை அளித்து மகிழ்வது இருவருக்கும் இடையே உள்ள பாசப்பிணைப்பை மேலும் அதிகரிக்கச் செய்யும்!


காணும் பொங்கல்!

ஒரே வீட்டில் இருந்தாலும் ஒருவரை ஒருவர் பார்க்காமல் அலைபேசியில் பேசி, தகவலைப் பரிமாறிக்கொள்ளும் மோசமான சூழல் இது!  எனினும், இது போன்றவற்றிலிருந்து நாம் விடுபட்டு அன்பையும் சந்தோஷத்தையும் பரிமாறிக் கொள்ளுதல் மிகவும் முக்கியம். அதற்கான நாள்தான் இன்று! இந்த நாளில் குடும்பத்தார் அவர்களின் நெருங்கிய உறவினருடனோ, நண்பர்களுடனோ சுற்றுலா மையங்களுக்குச் சென்று, பரஸ்பரம் ஒருவருக்கு ஒருவர் அன்பை பகிர்ந்து கொள்ளவேண்டும்!

தைப்பூசம்

தேவர்களின் குருவான பிரஹஸ்பதியின் பூச நட்சத்திரத்தில் குருவை வழிபடுவது, நம் வாழ்வைத் தெளிவாக்கும். சிவாகமங்களில்,  ஒவ்வொரு மாதத்துக்கும் உரிய நட்சத்திரத்தை 'மாஸபம்’ என்பார்கள். தை மாதத்தின் பூச நட்சத்திரம் அல்லது பௌர்ணமி திதியைக் கொண்டு, ஆலயங்களில் சிறப்பு பூஜைகள் செய்வது நாட்டு மக்களுக்கும் நாட்டை ஆள்பவர்களுக்கும் உயர்வைக் கொடுக்கும் என ஆகமங்கள் தெரிவிக்கின்றன. இன்று சிவபெருமான், முருகக் கடவுள் மற்றும் பிரதான தெய்வமாக வழிபடக்கூடிய அனைத்து தெய்வத் திருமேனிகளுக்கும் தேன் கொண்டு அபிஷேகம் செய்தல் சிறப்பு. 'புஷ்ய மாஸே து புஷ்யர்க்ஷே குர்யாத் க்ஷேளத்ராபிஷேசனம்’ (காமிகாகமம்) என்று தேன் அபிஷேகம் செய்யச் சொல்லி அறிவுறுத்துகிறது.


சூல விரதம்!

சைவர்கள் சிறப்பாகப் போற்றும் எட்டு மகா விரதங்களில் சூல விரதமும் ஒன்று. மார்கழி திருவாதிரையில் தனித்து ஆடுகிற சிவனார், தைப் பூசத்தில், உமையவளுடன் திருநடனம் புரிந்தார். எனவே உமையருபாகனைத் துதிப்பது ரொம்பவே விசேஷம். குடும்ப ஒற்றுமை மேலோங்கும்! இந்த விரத மகிமைகளை வீரபத்திரர், பாணுகம்பனுக்கு உபதேசிப்பதாக ஸ்கந்த புராணம் தெரிவிக்கிறது.

அகத்திய மகரிஷி தந்த சிவகிரி, சக்திகிரி ஆகிய மலைக¬ளை காவடி போன்று தூக்கி வந்த இடும்பன் என்ற அசுரனை ஆட்கொண்ட கலியுகக் கடவுள் கந்தப்பெருமான்! கவலைகள் மலையைப் போன்று இருப்பதால், அவற்றை எம்மிடம் அளித்து நீ கவலையற்று இரு என்று உணர்த்தி எந்த அடியை தொழுதால் இவ்வுலகம் காப்பாற்றப்படுகிறதோ அவருக்கு பக்தர்கள் காவடியை சமர்ப்பித்து பிறவிப் பிணியிலிருந்து விடுபடச் சிறந்த நாள்!

இரண்யவர்மன் எனும் அரசன் தில்லையில் ஆனந்த நடராஜருக்கு அர்ப்பணித்த திருப்பணிகளால் மகிழ்ந்த கூத்தபிரான், அந்த மன்னனுக்கு ஆனந்தக் காட்சி அளித்த நாளும் இதுவே!  

பொதினி என்று போற்றப்படும் பழநியில் வீற்றிருந்து அருள்பாலித்து வரும் ஸ்ரீதண்டாயுதபாணியை வழிபட்டு கஷ்டங்கள் நீங்கி, இன்பம் பெற காவடிகளைச் சமர்ப்பிப்பது வாழ்வில் வளம் சேர்க்கும்!  

தை அமாவாசை
இந்தச் சரீரம், கடவுளின் அருளினால், நம் தாய் தந்தையர் மூலம் நமக்கு கிடைத்திருக்கும் மிகப் பெரிய பரிசு!  தாய் தந்தையர் இந்தப் புவியில் இருக்கும்போது, அவர்களை போஷிக்க வேண்டும். அவர்கள் மேலுலகம் சென்றபின், அவர்களுக்கு உரிய கடமைகளைச் செய்வதே நம் தலையாயக் கடமை!

'அமாயா: பிதரப் ப்ரோக்த: திதீனாம் அதிபா: க்ரமாத்’ என்று சொல்லியபடி, அமாவாசை நாளில், நம் முன்னோர்களை வழிபடுவது மிக மிக அவசியம்! 'நன்றி மறவேல்’ எனும் வாக்கின்படி, நாம் இந்த உலகுக்கு வரக் காரணமாக இருந்தவர்களைத் திருப்தி செய்தால்தான், நம்மால் இந்த உலகுக்கு வந்தவர்களைச் செவ்வனே காக்க முடியும்! நம் முன்னோர்களே நம் சந்ததியைக் காத்தருள்வார்கள்.  

முன்னோர் வழிபாடு என்பதை, வருடத்தில் அனைத்து மாதங்களிலும் செய்ய முடியாதவர்கள் கூட, ஆடி அமாவாசை, மஹாளய அமாவாசை மற்றும் தை அமாவாசை ஆகிய முக்கிய நாட்களில் மறக்காமல் செய்தால், நம் கடமையைச் செய்தால், நாமும் நம் குடும்பமும் நிறைவுடன் வாழ்வோம் என்பது உறுதி!

ரத ஸப்தமி!

தை மாதம் வளர்பிறை ஸப்தமி திதியன்று கொண்டாடப்படும் பண்டிகை இது. மிக எளிமையான, அதேநேரம் நம் சந்ததியை வளமாக்கும் விசேஷமும்கூட!
குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் விடியற்காலையில் எழுந்து கிழக்கு நோக்கி நின்றபடி, ஏழு எருக்க இலைகள் அதனுடன் அட்சதை, பசுஞ்சாணி,
மஞ்சள் பொடி ஆகியவற்றைச் சேர்த்து, தலையில் வைத்துக் கொண்டு சூரிய பகவானை நோக்கி, நாம் செய்த பாவங்கள் அனைத்தும் போக்கச் செய்யும்படி பிரார்த்திக்க வேண்டும். இந்த நாளன்று பகலவனின் தேரானது தெற்கிலிருந்து வடக்கு நோக்கித் திரும்புவதால் மிகுந்த ஆற்றல் படைத்தது என்பது ஐதீகம்.

ஸப்த ஸப்தி ப்ரியே தேவி ஸப்த லோகைக பூஜிதே
ஸப்த ஜன்மார்ஜிதம் பாபம் ஹர ஸப்தமி ஸத்வரம்!
எனும் துதியை ஸப்தமி திதியின் அதிபதியான தேவியிடம் பிரார்த்தித்து வணங்கினால், ஏழு ஜன்மங்களில் செய்த பாவங்களும் நம்மை விட்டு விலகிவிடும் என்பது நம்பிக்கை!

பீஷ்மாஷ்டமி!

தன் தந்தையின் பொருட்டு, திருமணமே செய்யப் போவது இல்லை எனும் உயர்ந்த சத்தியத்தைச் செய்த பிதாமஹர் பீஷ்மர் ஸித்தி அடைந்த தினமே பீஷ்மாஷ்டமி எனும் நன்னாள்!

ஓம் பீஷ்மாய நம: என்று மூன்று முறை, தண்ணீரை கைகளினால் அர்க்கியமாக விடவேண்டும். இதனால் நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும் கிடைக்கும் என்பது நம் முன்னோர்கள் கண்ட உண்மை!

எப்படி தொலைபேசியில் ஒருவரின் எண்ணை டயல் செய்தால் அவர் எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் அவருடன் பேச முடிகிறதோ, அதுபோன்று நம் முன்னோர்கள், இந்த நாட்களில் இவரிவர் குறித்து இப்படியிப்படிச் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்கள். அதன்படி அந்தந்தக் கிரியைகள் தனிச் சிறப்பு கொண்டவை என்பதை  அறிந்து, உணர்ந்து, புரிந்து பக்தியுடனும் நம்பிக்கையுடனும் செய்தால்... தை பிறந்தால் வழி பிறக்கும் என்று நீங்களும் உறுதிபடச் சொல்வீர்கள்!

ஸ்ரீசண்முக சிவாச்சார்யர்

No comments:

Post a Comment