Search This Blog

Friday, January 24, 2014

கங்கையில் மூழ்கினால் பாவம் தொலையுமா?


காசி யாத்திரைக்குப் புறப்பட்ட ஒருவன் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரைச் சந்தித்து ஆசி பெற வந்தான். கங்கை அங்கிருந்து இங்கு வந்திருக்கிறாளே, நீ ஏன் இங்கேயே ஸ்நானம் செய்யக் கூடாது?" என்று கேட்டார் பரமஹம்சர்.

அதற்கு அவன், சுவாமி! கங்கையில் விசேஷ சக்திகள் உள்ளனவாம். எப்படிப்பட்ட பாவியானாலும் ஒருமுறை கங்கையில் முழுகினாலே பாவங்கள் அனைத்தும் தொலைந்து அவனுக்கு ஸ்வர்க்கவாசம் கிட்டுமாம்" என்றான்.ஸ்ரீராமகிருஷ்ணர், நீ இதற்கு முன்பு காசிக்குப் போயிருக்கிறாயா? கங்கைக் கரையிலுள்ள பெரிய பெரிய மரங்களைப் பார்த்திருப்பாயே?" என்று கேட்டார். சிறு வயதில் என் தந்தையுடன் போயிருக்கிறேன். அப்பொழுது மரங்களைப் பார்த்த ஞாபகம் இலேசாக இருக்கிறது" என்றான் யாத்திரிகன்.ஸ்ரீராமகிருஷ்ணர் இப்போது வாய்விட்டே சிரிக்க ஆரம்பித்தார் அந்த மரங்களில்தான் ரகசியம் அடங்கி இருக்கிறது! கங்கையில் ஸ்நானம் செய்பவர்கள் முதலில் தம் சட்டைகளைக் கழற்றி வைக்கின்றனர். அப்பொழுது அவர்களுக்குள் இருக்கும் பாவங்களுக்கு கங்கையின் ஸ்பரிசத்தினால் நாம் நாசமடைவோம் என்கிற பயம் உண்டாகிறது. அவை பறந்து சென்று மரங்களின் மேல் அமர்ந்து கொள்கின்றன. அங்கு தம் எஜமானவர்கள் திரும்பி வருவதை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றன. அவர்கள் ஸ்நானம் செய்து மேலே வந்த உடனே மரத்தில் காத்திருந்த பாவங்கள் அவர்களைப் பிடித்துக் கொள்கின்றன. இந்த விஷயத்தை யாரும் சொன்னதில்லை; சொல்லவும் போவதில்லை. ஏனெனில் அப்போது காசி பண்டிதர்களின் வருமானம் குறைந்துவிடுமே. அதனால் நீ ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்!" என்றார்.யாத்திரிகனுக்குப் பயம் ஒரு பக்கம், தான் வெகுவாகக் கௌரவிக்கும் துறவி பொய் சொல்லமாட்டார் என்ற நம்பிக்கை ஒரு பக்கம். காசிக்குப் போயும் பாவம் தொலையாவிட்டால் இவ்வளவு கஷ்டமான யாத்திரையை ஏன் மேற்கொள்ள வேண்டும் என்கிற பகுத்தறிவு ஒரு பக்கம்.அவனுக்கு இன்னொரு யோசனை வந்தது. சுவாமி! தாங்கள் சொல்வது சரியென்றே வைத்துக் கொள்ளலாம். காசியில் இறந்தால் அல்லது அங்கு அந்திம சம்ஸ்காரம் நடந்தால் அந்த ஆத்மா ஸ்வர்க்கத்திற்குப் போவதாகச் சொல்லப்படுகிறதே. அவர்கள் செய்த பாவங்கள் எங்கு போகின்றன?" என்று பணிவாகக் கேட்டான்.இந்தப் பாவங்களும் அதேபோல் தான். இறந்தவனுடைய உடலை, கங்கைக் கரைக்குக் கொண்டு வந்ததுமே அவனது பாவங்கள் மரத்தில் ஏறிவிடுகின்றன. ஆனால், அவற்றிற்குத் திரும்பி வருவதற்கு உடல் அங்கு இருப்பதில்லை. வேறு வழியின்றி அவை வேறு உடல் தேடி அம்மரங்களிலேயே காத்துக் கொண்டிருக்கின்றன.தினமும் உன்னைப் போன்ற பல ஆயிரம் மக்கள் கங்கையில் ஸ்நானம் செய்ய வருவார்களல்லவா? அவர்களில் யாரையாவது தேர்ந்தெடுத்து. அவனுக்குள் புகுந்து விடுகின்றன. அவனுக்குத் தன்னுடைய பாவங்களுடன் அதிகப் படியாகப் பாவங்கள் சேருகின்றன. இதொன்றையும் அறியாமல் அவன் காசி யாத்திரை செய்த திருப்தி, மகிழ்ச்சியுடன் தன்னையறியாமல் இந்தப் பாவங்களையும் சுமந்து கொண்டு திரும்புகிறான்" என்று விளக்கினார்.

அப்படியானால் என் பாவங்களைப் போக்குவது எப்படி?" என்று கேட்டான். பரமஹம்சர் சாந்தமாக, எல்லாவற்றையும் பவதாரிணிக்கு அர்ப்பித்துவிடு. ‘இனி பாவம் செய்யாமல் காப்பாற்று. முந்தைய பாவங்களின் பலனைத் திடமனதுடன் துக்கப்படாமல் அனுபவிக்கும் மனநிலையை எனக்குக் கொடு’ என்று கேள். அவளே காசி, அவளே கங்கை" என்று உணர்ச்சிப் பெருக்குடன் உபதேசித்தார்.யாத்திரிகன் தெளிந்த மனத்துடன் திரும்பினான்.


No comments:

Post a Comment