Search This Blog

Friday, January 10, 2014

மார்டின் லூதர் கிங் - சுவாமி விவேகானந்தர் -மொஸார்ட்


அமெரிக்காவில் அடிமை முறை மற்றும் நிறவெறிக்கு எதிராக முதன் முதலில் குரல் கொடுத்தவர் ஆபிரகாம் லிங்கன். அவரைப் போலவே நிற வெறிக்கு எதிராக மீண்டும் குரல் கொடுத்தவர் மார்டின் லூதர் கிங். தாங்கள் கடைப்பிடித்த கொள்கைகளுக்காகச் சுட்டுக் கொல்லப்பட்டனர் இருவரும். 

1929 ஜனவரி 15. அமெரிக்காவில் பிறந்த மார்டின் லூதர் கிங் சமூக உரிமைப் போராளி, ஆப்பிரிக்க- அமெரிக்க மனித உரிமைத் தலைவர் என்று பன்முகம் கொண்டவர். அவர் வாழ்ந்த காலத்தில் அமெரிக்காவின் தென் மாகாணங்களில் அமெரிக்க வாழ் ஆப்பிரிக்க இன மக்கள் தெருக்களில் நடக்கக்கூடத் தடை விதிக்கப்பட்டிருந்தது. பேருந்துகளிலும் ரயில்களிலும் ஒதுக்கப்பட்ட தனி இடத்தில்தான் பயணிக்க வேண்டும். கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் சம உரிமை இல்லை. தீண்டாமை கடைப்பிடிக்கப்பட்டு அடிமைகளாகவே நடத்தப்பட்டனர். 

1955ல் அலபாமா மாகாணம் மாண்ட்கோமரி என்ற ஊரில் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த ரோசா பார்க்ஸை, அமெரிக்கர்களுக்கு இடம் அளிக்கும்படி கேட்டனர். தான் பயணச் சீட்டு வாங்கியிருப்பதாகச் சொல்லி, ரோசா பார்க்ஸ் இருக்கையை விட்டு எழ மறுத்தார். உடனே அவரைக் கைது செய்து, சிறையில் அடைத்தனர். இந்தக் கொடுமைக்கு எதிராக கறுப்பின மக்களை ஒன்று திரட்டிய மார்டின் லூதர் கிங், ‘பேருந்துப் புறக்கணிப்புப் போராட்டத்தை’ வெற்றிகரமாக நடத்தினார். அரசு வேறு வழியின்றிப் பேருந்தில் அமெரிக்க வாழ் ஆப்பிரிக்கர்களுக்குத் தனி இருக்கை என்ற சட்டத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்டது. 

மகாத்மா காந்தியின் வன்முறையற்ற போராட்டம் மார்டின் லூதர் கிங்கைப் பெரிதும் ஈர்க்கவே, அவரும் அதே அறவழியைப் பின்பற்றினார். அமெரிக்கர் மீது பகைமை பாராட்டாமல் அதே நேரம் ஆப்பிரிக்கர்களின் உரிமைகளையும் விட்டுக் கொடுக்காமல் பொதுக்கூட்டம், உண்ணாவிரதம் என அமைதியாகப் போராடினார். ‘கறுப்பின மக்களின் காந்தி’ என்று உலகம் முழுவதும் மார்டின் லூதர் கிங் புகழ் பெற்றார். 

‘எனக்கொரு கனவு உண்டு’ என்ற தலைப்பில் மார்டின் லூதர் கிங் 1963 ஆகஸ்ட் 27ம் தேதி வாஷிங் டனில் நிகழ்த்திய உரை வரலாற்றில் மிகவும் முக்கியமானது. அதே ஆண்டு ‘வேலையும் சுதந்தரமும் வேண்டி வாஷிங்டனுக்குப் பேரணி’ என்ற மிகப்பெரிய பேரணிக்குத் தலைமை தாங்கினார். சமாதானத்துக்கான இவரது மகத்தான பணியைப் பாராட்டி, 1964ல் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக உழைத்துக் கொண்டிருந்தவரை, 1968 ஏப்ரல் 4 அன்று ஜேம்ஸ் ஏர்ல் ரே என்ற நிறவெறியன் சுட்டுக் கொன்றான்.

சுவாமி விவேகானந்தர்


ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் தலைமைச் சீடரான சுவாமி விவேகானந்தர் வேதாந்த தத்துவத்தின் செல்வாக்கு மிக்க ஆன்மிகத் தலைவர்களுள் ஒருவர். ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தை நிறுவியவரும் இவரே. 1863 ஜனவரி 12 அன்று விஸ்வநாத் தத்தா - புவனேஸ்வரி தேவி ஆகியோருக்கு மகனாக, கொல்கத்தாவில் பிறந்தார். இவரது இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா. துறவியானதைத் தொடர்ந்து தனது பெயரை சுவாமி விவேகானந்தர் என்று மாற்றிக் கொண்டார்.  

குழந்தைப் பருவம் முதற்கொண்டே படிப்பு மற்றும் விளையாட்டுகளில் சிறந்து விளங்கினார். இசை, தியானம் ஆகியவற்றில் தீவிரப் பயிற்சிகளை மேற்கொண்டார். சமூகத்தில் நிலவிய சாதி, மத வேறுபாடுகளை எதிர்த்ததுடன், மூடப்பழக்க வழக்கங்களையும் கடுமையாகச் சாடினார். 1879ல் கொல்கத்தாவிலுள்ள பிரெசிடென்சி கல்லூரியில் பட்டப்படிப்புக்காகச் சேர்ந்தார். பின்னர் தத்துவம் பயின்றார். ‘பிரம்ம சமாஜத்தில்’ இணைந்தார். ஆனாலும் தனது தேடல்களுக்கான பதில்கள் கிடைக்கவில்லை. ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரைச் சந்தித்து, ‘கடவுளைப் பார்த்திருக்கிறீர்களா?’ என்று கேட்டார். ‘ஆம், உன்னைப் பார்ப்பது போலவே தெளிவாகப் பார்த்தேன்’ என்ற பதிலிலிருந்த நேர்மையும் உண்மையும் அவரையே தனது குருவாக ஏற்றுக்கொள்ள வைத்தன. 1886ல் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் காலமான பிறகு, அவரது வாரிசாகப் பரிந்துரைக்கப்பட்டார். நாடு முழுவதும் நீண்ட பயணம் மேற்கொண்டார். இந்தியாவின் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த மக்களின் பண்பாடுகள் மற்றும் பழக்க வழக்கங்களைத் தெரிந்து கொண்டார். மன்னர்களின் அரண்மனைகளிலும் ஏழைகளின் குடிசைகளிலும் தங்கி அவர்களுடன் நெருங்கிப் பழகினார். 1892 டிசம்பர் 24ல் கன்னியாகுமரியை அடைந்தார். ஒரு பாறையின் மீதமர்ந்து தொடர்ந்து 3 நாள்கள் தியானம் செய்தார். அவர் அமர்ந்து தியானம் செய்த பாறையே இன்றைக்கு ‘விவேகானந்தர் பாறை’ என்ற பெயருடன் புகழ் பெற்றிருக்கிறது.  

1893ல் அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு, ‘அமெரிக்கச் சகோதர, சகோதரிகளே’ என்று அழைத்த சிறப்பு மிக்க வார்த்தைகள் அவரைப் புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றன. இந்திய வரலாறு, சமூகம், பண்பாடு, நாகரிகம், இலக்கியம், ஆன்மிகம், தத்துவம் ஆகியவை குறித்து பல்வேறு நாடுகளில் ஆற்றிய சொற்பொழிவுகள் அற்புதமானவை!  1897ல் இந்தியா திரும்பிய சுவாமி விவேகானந்தர் இந்தியர்களை ஆன்மிக ரீதியாக ஒருங்கிணைக்க எண்ணினார். சமூக சேவை மூலமே இது சாத்தியப்படும் என்பதை உணர்ந்து ‘ஸ்ரீ ராமகிருஷ்ணமிஷன்’ மற்றும் ‘ஸ்ரீ ராமகிருஷ்ணா மடம்’ ஆகியவற்றை நிறுவினார். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இருண்டு கிடந்த இந்தியாவின் கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்த சுவாமி விவேகானந்தர், 1902 ஜூலை 4 அன்று மறைந்தார்.

மொஸார்ட்


உலகப் புகழ் பெற்ற மாபெரும் இசை மேதையான மொஸார்ட், 1756 ஜனவரி 27 அன்று அன்னமரியா- லியோபோல்ட் மொஸார்ட் தம்பதிக்கு மகனாக ஆஸ்திரியாவில் பிறந்தார். 3 வயதில் இசைக் கருவியை மீட்டுதல், 4 வயதில் இசை நூல்களைக் கற்றல், 5 வயதில் பாடல்களை இயற்றுதல் என்று குழந்தை மேதையாகத் திகழ்ந்தார் மொஸார்ட்!தனது பத்து வயதுக்குள் அனைத்து இசைக் கருவிகளையும் மீட்டும் திறன் பெற்றிருந்தார். ஐரோப்பாவில் இவரது இசை நிகழ்ச்சி நடைபெறாத நாடே இல்லை என்னும் அளவில் புகழ் பெற்றார். போப்பாண்டவர் முன்னிலையில் நடத்திய இசை நிகழ்ச்சி இவருக்கு மிகுந்த புகழைப் பெற்றுத் தந்தது. உலகையே இசையால் மயங்க வைத்த மொஸார்ட்டின் சொந்த வாழ்க்கை சிறப்பாக அமையவில்லை. ஆய்வுப் பணி, இசை நிகழ்ச்சி, புதிய இசை வடிவங்களைக் கண்டுபிடித்தல் என ஓய்வில்லாமல் உழைத்தார். இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்டு, படுத்த படுக்கையானார். 1791 டிசம்பர் 5. உலகையே மகிழ்வித்துக் கொண்டிருந்த நாதம் அடங்கியது. மொஸார்டின் இசையைக் கேட்டால் அகநிலை மாறுதல், கற்பனைத் திறன் மேம்படுதல், மூளையின் பல பகுதிகள் தூண்டப்படுதல் எனப்பல கோணங்களில் ‘மொசார்ட் விளைவு’ ஆய்வுகள் நடைபெற்று வருவதே இவர் பெருமைக்குச் சான்று. 35 வயதுக்குள் 41 சிம்ஃபனிகள், 27 பியானோ நிகழ்ச்சிகள், 23 ஸ்ட்ரிங் க்வார்டெட், 7 ஓபெரா என யாராலும் கற்பனை கூட செய்ய முடியாத இசைச் சாதனைகளை நிகழ்த்தி முடித்துள்ளார் மொஸார்ட்! 

No comments:

Post a Comment