Search This Blog

Monday, January 27, 2014

ஓ பக்கங்கள் - அரசியல் முதல் பாலியல் குற்றம் வரை மக்கள் கருத்து ! ஞாநி

 
மக்களிடம் பல்வேறு சமூக, அரசியல் விஷயங்கள் பற்றிக் கருத்துக் கேட்பதை பத்திரிகைகள், ஊடகங்கள் தொடர்ந்து செய்து வருகின்றன. நான் பங்கேற்கும் சென்னைப் புத்தகக் காட்சியில் ஒவ்வோர் ஆண்டும் என் ‘ஞானபாநு’ அரங்கில் இப்படி தினசரி தேர்தலை நடத்தி வருகிறேன். மக்கள் வாக்களிப்பதற்கு வோட்டுப் பானைகள் வைத்திருப்போம். குடவோலைகளில் தெரிய வரும் முடிவுகள் மறுநாள் அரங்கில் வெளியிடப்படும்.
 
இந்த வருடமும் அப்படி கேட்ட சில கேள்விகளும், மக்கள் அளித்த முடிவுகளும் இதோ :

தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. இரு கட்சிகளுக்கும் மாற்றாக யாரை ஆதரிப்பீர்கள்?

1. ம.தி.மு.க - 35%
2. பா.ம.க. - 7%
3. இடதுசாரிகள் - 19%
4. வேறு யாரேனும் - 29%.

இந்த வேறு யாரேனும் என்பதில் சிலர் காங்கிரஸ், பி.ஜே.பி., ஆம் ஆத்மி, தே.மு.தி.க. என்றெல்லாம் கூட எழுதினார்கள். தே.மு.தி.க.வுடன் கூட்டணி வைக்க பல கட்சிகள் விரும்பும்போது அவர்களுக்குத் தனிப்பானை வைத்திருக்கக்கூடாதா என்று ஒருவர் கேட்டார்.

மக்களவைத் தேர்தல்: மத்தியில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வரவேண்டுமென்று விரும்புகிறீர்கள்?

1. காங்கிரஸ் - 12%
2. பி.ஜே.பி - 56%
3. ஆம் ஆத்மி - 26%
4. மூவரும் கூடாது - 6%.

இந்த முடிவுகளில் காங்கிரஸ் பெருவாரியாக நிராகரிக்கப்படுவது ஒரு வியப்பான செய்தி அல்ல. பொதுவாக, படித்தவர்கள் மத்தியில் பி.ஜே.பி.க்கு நரேந்திர மோடியை முன்னிறுத்தியதால் மிகப்பெரும் ஆதரவு வந்துவிட்டது என்று சொல்லப்படும் நிலையில், பி.ஜே.பி.க்குக் கிடைத்திருப்பது 56 சதவிகிதம்தான். பி.ஜே.பி. கூடாது என்று கருதும் படித்தவர்கள் 44 சதவிகிதம் என்பது கணிசமான எண்ணிக்கை. அப்படியானால் படிக்காதவர்கள் மத்தியில் பி.ஜே.பி.யின் நிலை என்னவாக இருக்கும் என்று யூகிக்கலாம்.

இரண்டாவது செய்தி, தமிழ்நாட்டில் எந்தச் சலனத்தையும் ஏற்படுத்தும் எந்த வேலையையும் இதுவரை செய்யாத ஆம் ஆத்மி கட்சிக்கு 26 சதவிகிதம் ஆதரவு இருப்பதாகும். ‘ஆம் ஆத்மி’ தொடர்பாக இன்னொரு கேள்வியும் கேட்டிருந்தோம்.

ஆம் ஆத்மி கட்சி தமிழகத்தில் தழைக்கமுடியுமா?

1. கேஜரிவால் போல இளைஞர்களை ஈர்க்கும் பலமான தலைமை இருந்தால் தழைக்கும். - 55%

2. ஹிந்தி பெயரை மாற்றாமல் சரியான தலைமை இருந்தாலும் தழைக்காது. - 5%

3. என்ன செய்தாலும் இங்கே இருக்கும் அரசியல் கலாசாரத்தில் அது வளரமுடியாது. - 40%.

இந்த முடிவுகள் சுவாரஸ்யமானவை. காரணம் ஹிந்திப் பெயரே இருந்தாலும் கூட சரியான தலைமை இருந்தால் தழைக்கும் என்பவர்கள் 55%.

ஆனால் தமிழக அரசியல் கலாசாரத்துக்கும் ஆம் ஆத்மி கலாசாரத்துக்கும் பொருந்தி வராது என்று நினைப்பவர்கள் 40 சதவிகிதம்.

படித்தவர்கள் மத்தியில் தமிழக அரசியல் சூழல் பற்றி ஒரு விரக்தி மனப்பான்மை கடுமையாக இருப்பதையே இது காட்டுகிறது.

தமிழக மீனவர்கள் நூற்றுக்கணக்கில் இலங்கைப் படைகளால் கொல்லப்பட்டும் சிறைபிடிக்கப்பட்டும் வந்திருக்கும் மோசமான வரலாற்றுச் சூழலில், அரசியலுக்கு அப்பால், இந்தப் பிரச்னையின் வேருக்குப் போய் தீர்வு காண்பது அவசியம் என்பதால் ஒரு கேள்வி கேட்டோம்.

தமிழக மீனவர் இலங்கைக் கடலில் அத்து மீறுவதால் இலங்கைப் படைகளால் வதைக்கப்படும் பிரச்னைக்குத் தொலை நோக்குத் தீர்வு என்ன?
1. நம் கடலில் மீன் வளத்தைக் குறைக்கும் ராட்சத மீன்பிடி கப்பல்கள் தடை செய்யப்படவேண்டும் - 61%

2. இலங்கைக் கடலை இந்திய அரசு குத்தகைக்கு எடுத்து நம் மீனவர்கள் பயன்படுத்தத் தரவேண்டும் - 30%

3. நம் மீனவர்களுக்கு நவீன கல்வி அளித்து மாற்று வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும் - 9%.

இதில் இரண்டாவது, மூன்றாவது தீர்வுகளைப் பல அறிஞர்கள் சொல்லி வந்திருக்கிறார்கள். ராட்சத மீன்பிடி கப்பல்களைத் தடைசெய்வதையே பெருவாரியான மக்கள் ஆதரித்திருக்கிறார்கள்.

புத்தகக் காட்சி நடைபெற்ற சமயத்தில் அரசியலில் பெரும் கவனத்தை எழுப்பிய தமிழ்நாட்டு நிகழ்வு தி.மு.க.வின் மு.க.அழகிரி அளித்த தொலைக்காட்சிப் பேட்டியாகும். இந்த நிலையில் வைத்த கேள்வி இது...

தி.மு.க.வில் மு.க. அழகிரி எழுப்பும் எதிர்ப்பு:

1. வலுவடைந்து கட்சியையே உடைக்கும் - 21%

2. என்ன செய்தாலும் ஸ்டாலின் தலைமையில் கட்சி வருவதைத் தடுக்க முடியாது - 79%.

இந்தப் பதில் அழகிரியைத் தவிர வேறு யாருக்கும் ஆச்சரியமாக இருக்காது.

சென்ற வருடம் இந்திய மக்களின் கவனத்தை ஈர்த்த முக்கியமான நிகழ்வுகளில் பாலியல் குற்றங்கள் குறிப்பிடத்தக்கவை.

நீதிபதிகள், முன்னாள் நீதிபதிகள் மீதான குற்றங்களை விசாரிக்கத் தனி அமைப்புத் தேவை என்கிறது உச்ச நீதிமன்றம்:

1. சரியான கருத்து. உடனே தனி அமைப்பை அரசு உருவாக்கவேண்டும் - 40%

2. தவறான கருத்து. எல்லா குடிமக்களையும் போலவே அவர்களும் விசாரிக்கப்படவேண்டும் - 60%

பாலியல் குற்றங்கள், நம் சமூகத்தில் வயது, சாதி, மத, வர்க்க, இன வேறுபாடின்றி நடப்பது பற்றி நாம் மிகமிகக் கவலைப்பட வேண்டும். காரைக்கால் கொடூரம் எல்லா அரசியல் கட்சிகளையும் அம்பலப்படுத்தியிருக்கிறது. எல்லா பாலியல் குற்றங்களுக்கும் அடிப்படை, ஆண்- பெண் உறவு பரஸ்பர மதிப்புடனும் சமத்துவத்துடனும் இருக்க வேண்டுமென்ற அறிவு வளராததுதான். ஆனால் ஊடக விவாதங்களில் என்னென்னவோ காரணங்கள் சொல்லப்படும், விவாதிக்கப்படும். இது பற்றிக் கேள்வி எழுப்பினோம்.

பாலியல் குற்றங்கள் பெருகுவதற்கு முக்கிய காரணம்...

1. பெண்களின் உடை, நடத்தை - 19%

2. மீடியா, சினிமாவின் காமக் கலாசாரம் - 26%

3. ஆண்களைச் சரியாக வளர்க்கத் தெரியாத குடும்ப அமைப்பு - 55%.

இந்தப் பதில்களில் எனக்குக் கிடைத்த முக்கியமான செய்தி, நம் படித்த வர்க்கம் கொஞ்சமேனும் குடும்ப அமைப்புப் பற்றி ஒரு சுயவிமர்சனப் பார்வையை இப்போது பெறத் தொடங்கியிருக்கிறது என்பதுதான்.

ஊடகங்களில் சர்ச்சையில் அடிபட்ட இன்னொரு விஷயம் ஆம் ஆத்மி கட்சித் தலைவரான வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண் காஷ்மீரில் ரெஃபரெண்டம் தேவை என்று சொன்னது பற்றியாகும்.

காஷ்மீர் இந்தியாவுடன் இருக்கலாமா, கூடாதா என்று காஷ்மீர் மக்களிடம் வாக்கெடுப்பு எடுக்கச் சொல்வது...

1. சரி. 1947ல் செய்யாததை இப்போதாவது செய்ய வேண்டும் - 45%

2. தவறு. வடகிழக்கு போன்ற மீதி மாநிலங்களிலும் இதே போல செய்யவேண்டிய ஆபத்து ஏற்படும் - 43%

3. காஷ்மீருக்கு மட்டும் வாக்கெடுப்பு சரி. மீதி மாநிலங்களுக்கு அனுமதிக்கக்கூடாது - 12%.

இந்தப் பதில்கள் காஷ்மீர் பற்றி உணர்ச்சிவசப்படாமல் கருத்து சொல்வோர் எண்ணிக்கை அதிகரித்திருப்பதையே எனக்குக் காட்டுகிறது.

உணர்ச்சியைத் தூண்டும் இன்னொரு விஷயம் ஜல்லிக்கட்டு. மக்கள் கருத்து என்ன?

1. மனிதரும் விலங்குகளும் வீரம் என்ற பெயரால் சாவதாலும் சாதி மோதல்களுக்கு வழிவகுப்பதாலும் தடைசெய்யப்படவேண்டும். - 53%

2. பண்பாட்டு, மரபு என்பதால் கடும் விதிமுறைகளுடன் ஒழுங்குபடுத்தப்பட்டு அனுமதிக்க வேண்டும்.- 47%

3. எது சரி என்று குழப்பமாக இருக்கிறது.- 0%.

மூன்றாவது பதில்தான் முக்கியமானது. யாருக்கும் இதில் எந்தக் குழப்பமும் இல்லை. தங்கள் நிலையில் தெளிவாகவே இருக்கிறார்கள். ஏறத்தாழ சரி பாதியாக எதிரெதிர் கருத்துக்கும் ஆதரவு இருக்கிறது.

என்னைப் பொறுத்தவரையில் இன்றைய தமிழகத்தின் முதல் முக்கியமான பிரச்னை மதுதான். சுமார் ஒரு கோடி பேர் தினசரி மது குடிக்கும் தமிழகத்தில் மக்கள் கருத்து என்ன? இதோ எங்கள் கேள்வியும் பதிலும்.

தமிழகத்தில் மதுக் கடைகள்:

1. மார்ச் 31னுடன் மூடி பூரண மதுவிலக்கை ஏற்படுத்த வேண்டும் - 38%.

2. படிப்படியாகக் குறைத்துவந்து ஓராண்டுக்குள் முழுக்க மூடவேண்டும்.- 52%

3. நல்ல வருமானம் கிடைப்பதால் தொடர்ந்து நடத்தலாம். - 10%.

எப்படிப் பார்த்தாலும் 90 சதவிகிதம் பேர் மதுக் கடைகள் மூடப்பட வேண்டுமென்றே நினைக்கிறார்கள். இது எனக்கு மிக ஆரோக்கியமான நிலையாகத் தோன்றுகிறது.

இந்த வருடக் கருத்துக் கணிப்பில் கிடைத்த முடிவுகள் எனக்கு நம் சமூகம் பற்றிய நம்பிக்கையை அதிகரிக்கின்றன. இந்தப் புத்தகக் காட்சியில் மூன்று விஷயங்கள் எனக்கு முக்கியமாக நடந்தன. ஒரு கோவில் சுவரில் ‘இங்கே லுங்கி, நைட்டி அணிந்து வரக்கூடாது’ என்று போட்டிருந்ததை நான் ஃபேஸ்புக்கில் விமர்சித்திருந்தேன். லுங்கி என்பது மதம் சார்ந்த உடை அல்ல. ஏழைகளின் உடை.  என் கருத்தை ஆட்சேபித்த சிலர் ‘நான் புத்தகக் காட்சிக்கு லுங்கி அணிந்து வருவேனா?’ என்று சவால் எழுப்பினார்கள். இந்தச் சவால் விடுத்தவரையே லுங்கி வாங்கிப் பரிசளிக்கும்படி கேட்டேன். கொண்டுவந்து கொடுத்தார். அதில் புத்தகக் காட்சிக்குச் சென்று என் நூல் வெளியிட்டு நிகழ்வில் பங்கேற்றது ஒரு மகிழ்ச்சி.இரண்டாவது மகிழ்ச்சி, வேறு சில எழுத்தாளர்கள் முயற்சிக்கத் தொடங்கியிருப்பது போல நானும் என் நூலை வெளிவரும் முன்னரே ஏலத்தில் எடுக்கும்படி வேண்டுகோள் விட்டதற்குக் கிடைத்த வரவேற்பாகும். என் ‘ஆப்பிள் தேசம்’ நூலை அதிகத் தொகைக்கு ஏலம் எடுக்க ஃபேஸ்புக் மூலம் மட்டும் 17 பேர் வந்தனர். மொத்தமாக சுமார் 30 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். இதில் மூன்றில் ஒரு பங்கு எழுத்தாளராகிய எனக்கு. இன்னொரு பங்கு பதிப்பாளருக்கு. மூன்றாவது பங்கு, சென்னை மாநகராட்சிப் பள்ளிகளின் ஏழை மாணவர்கள் படிக்க, பாடமல்லாத நூல்களை வாங்கித் தருவதற்கு.மூன்றாவது மகிழ்ச்சி, நான் ஆரம்பம் முதல் 37 வருடங்களாகத் தவறாமல் பங்கேற்கும் சென்னைப் புத்தகக் காட்சியின் தொடக்க விழா மேடையில் அறிவிப்பின் மூலம் நான் வரைந்த பாரதி ஓவியத்தை நாட்டுடைமையாக்கியதாகும். அந்த வகையில் 31 வருடங்கள் முன்னர் நான் வரைந்த பாரதி ஓவியத்தை, இப்போது எனக்கு 60 வயது நிறைந்ததையொட்டி சமூகத்துக்குப் பயனுள்ள விதத்தில் கொண்டாடுவதற்காக, நாட்டுடைமையாக்கி அறிவித்தேன். தனிப்பட்ட உடல்நிலை, சமூகத்தின் அரசியல், பொருளாதார, பண்பாட்டுச் சூழ்நிலை எல்லாம் கவலைக்குரியதாக இருக்கும் சமயங்களில் இப்படிச் சில சின்னச் சின்ன மகிழ்ச்சிகளுடன் நம்மை நாமே உற்சாகப்படுத்திக் கொண்டு வாழ வேண்டியிருக்கிறது.

 
 


 

No comments:

Post a Comment