Search This Blog

Saturday, January 18, 2014

அரசியல் வேண்டவே வேண்டாம்! - ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

 
பாலிடிக்ஸ், ஸினிமா, பத்திரிகை, ஸ்போர்ட்ஸ் என்று நான் சொன்னதில் பாலிடிக்ஸ் என்பது மாணவர்களுக்கு வேண்டவே வேண்டாம். தேச நடப்பு அதில்தானே இருக்கிறது என்று கேட்கலாம். தேச நடப்பு அதில்தான் இருந்தாலும் அந்த நடப்பை நல்ல கூர்மையான அறிவுடன் நடத்தித் தரவும் கல்வியில் தேர்ச்சிப் பெறுவதுதானே உதவும்? இப்போது கல்விக்கு இடையூறு செய்துகொண்டு பொலிடிகல் பிரச்னைகளில் இறங்குவது அதை மேலும் உணர்ச்சி வேகத்தால் கெடுத்து, தங்களையும் கெடுத்துக் கொள்வதில்தான் முடியும். ‘மேலும்’ கெடுத்து என்று சொன்னேன். ஏனென்றால் தற்போது அரசியலில் யோக்யர்களும், யோக்யமான கொள்கைகளும் அபூர்வமாகிக் கொண்டே வந்து அது ஸ்வய நலத்துக்கும், ஆத்திர-க்ஷாத்திரங் களுக்குமே வளப்பமான விளைநிலமாகியிருக்கிறது. இந்த நிலையில் பக்குவ தசைக்கு வராத இளவயஸு மாணவர்கள் அதில் போய் விழுந்தால்?
 
இப்போது போலில்லாமல் பாலிடிக்ஸ் - அரசியல் - ஒழுங்காக, தார்மிகமாக இருந்தாலும், எதற்கும் உரிய பருவம் என்று ஒன்று உண்டாகையால், படித்துத் தேர்ச்சி பெற்று உத்யோகத்துக்குப் போய் வாழ்க்கைப் பொறுப்பு எடுத்துக் கொள்ளவே கடமைப்பட்டுள்ள மாணவ ஸமூஹம் அரசியலில் இறங்கவே கூடாது.‘நாம் தேசத்தை நல்ல வழியில் நடத்துவதற்கு நல்ல புத்தி பலமும், தர்ம பலமும், தெய்வ பலமும் பெற வேண்டும். முதலில் இவற்றை நாம் பெற்று, நிலைப்படுத்திக் கொண்டால்தான் பிற்பாடு தேச ப்ரச்னைகளின் பளுவைக் கஷ்டப்படாமல், தாங்கி அதை அபிவிருத்தி செய்ய முடியும். ஆகவே பலம் பெறாத தற்போதைய ஸ்திதியில் நாம் ராஜீய வியவஹாரங்களில் இறங்குவது நமக்கும் நல்லதில்லை, ராஜ்யத்துக்கும் நல்லதில்லை’ என்று யௌவனப் பிராயத்தினர் உணர வேண்டும்.
 
இவற்றில் புத்திபலத்தை முக்யமாகக் காலேஜில் பெறுகிற படிப்பாகவே பெற வேண்டும்; அதோடு அதைக் கொண்டுதான் நாளைக்கு இவன் ஒரு உத்தியோகத்திலே அமர்ந்து வீட்டை நடத்த முடியும் என்றும் ஏற்பட்டிருக்கிறது. படிப்புக்குக் குந்தகம் பண்ணிக் கொண்டால் வீட்டை நடத்த முடியாமல் போகும். தன் வீட்டையே நடத்தாதவன் நாட்டை எப்படி நடத்த முடியும்?

ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்
 

No comments:

Post a Comment