Search This Blog

Tuesday, February 25, 2014

பொது அறிவு - ‘400’க்குள் 400..!

முதலாம் ராஜராஜ சோழன் காலத்தில், அவருடைய நாட்டில் வாழ்ந்த 400 சிறந்த நடனக் கலைஞர்களின் பெயர்கள் தஞ்சை பெரிய கோயிலில் உள்ள கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளன.

அறக்கட்டளை ஒன்றுக்கு நிதி சேகரிக்கும் நன்முயற்சியாக, 400 விஷ சிலந்திகளுடன்  மூன்று வாரங்கள் வசித்து உலக சாதனை படைத்தார் ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரைச் சேர்ந்த 67 வயதான நிக் லீ சொய்ப் என்ற பெண்மணி.  


1900-ம் ஆண்டில் இருந்து ஆண்களுக்காக மட்டுமே நடத்தப்பட்டு வந்த 400 மீட்டர் தடை  தாண்டும் ஓட்டப் போட்டி, 1984-ம் ஆண்டில் இருந்து, பெண்களுக்காகவும் நடத்தப் படுகிறது.

ஜாக்கிசான் நடித்து சமீபத்தில் வெளிவந்திருக்கும் 'போலீஸ் ஸ்டோரி’ படத்தின் 6-வது பாகம் சீனாவில் மட்டும் ரூ.400 கோடி வசூலை அள்ளியது.

சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டதுதான் அமெரிக்கா. ஆனால், அந்த பிரமாண்ட நிலப்பரப்பில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வாழ்ந்து வந்த /வாழ்ந்து வரும் பல்வேறு இன குழுக்களே.... அதன் பூர்வகுடிகள்.

'புன்னகை அரசி' என அழைக்கப்படும், பழம்பெரும் நடிகை கே.ஆர்.விஜயா... தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு உட்பட சுமார் 400 திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான, புறநானூறு எனும் தொகைநூல் 400 பாடல்களைக் கொண்ட புறத்திணை சார்ந்த சங்கத் தமிழ் பாடல்கள் கொண்ட நூலாகும்.

விமானத்தின் வேகம், பொறிகளின் செயல்பாடு, விமானத்தின் பிற கருவிகளின் செயல்பாடு, விமானத்துக்குள் உள்ள காற்றழுத்தம் என கிட்டத்தட்ட 400 வகையான காரணிகளை பதிவு செய்யும் விமான கறுப்புப் பெட்டி, விமான விபத்து தொடர்பான காரணங்களை அறிவதற்கும், ஆராய்வதற்கு பெரிதும் உதவக் கூடிய கருவி.  

கடல் மட்டத்திலிருந்து 650 மீட்டர் உயரத்தில் இருக்கும் வால்பாறை, மானாம்பள்ளி வனச்சரகத்தின் ஷேக்கல்முடி எஸ்டேட்டில் 400 ஆண்டு பழமையான தேக்கு மரம் பிரமாண்டமாக வளர்ந்து நிற்கிறது!

இந்தியப் பெருங்கடலில் ஆப்பிரிக்காவுக்கு அருகிலுள்ள மொரீஷியஸ் தீவில் வாழ்ந்த, ஒரு மீட்டர் உயரமுடைய, 'டோடோ’ எனும் பறவை இனம், கடந்த 400 ஆண்டுகளுக்கு முன்பு முற்றிலுமாக அழிந்துபோனது!

சென்னையின் புகழ்பெற்ற அண்ணா சாலை (மவுன்ட் ரோடு), உருவாக்கப்பட்டு 400 ஆண்டுகள் ஆகின்றன.

பூமியின் அளவும், எடையும் கொண்ட (கற்பாறைகள் மற்றும் இரும்பால் ஆன) கோள் ஒன்று, சுமார் 400 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருப்பதாக கண்டறியப்பட்டு, கெப்லர் 78 பி (KEPLER 78B) எனப் பெயரிடப் பட்டுள்ளது.

பாகிஸ்தான் வீரர் அஃப்ரிடி, சர்வதேச அளவில் 400 சிக்ஸர்களை அடித்த முதலாவது கிரிக்கெட் வீரர்.

1605-ல் பெல்ஜியத்தில் தொடங்கிய 'நியூ டெய்டிங்கென்' (Nieuwe Tijdingen) என்ற செய்தித்தாள் 400 ஆண்டுகளை கடந்து நிற்கிறது.

மேற்கு இந்தியத் தீவைச் சேர்ந்த பிரையன் லாரா, சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 400 ரன்களை அடித்து உலக சாதனை செய்த, முதல் கிரிக்கெட் வீரர்.

கிறிஸ்தவர்களின் புனித இடமான நாசரேத் மலைக்குன்றில் வளர்ந்த, 4 மீட்டர் உயரமுடைய, 400 ஆண்டுகள் பழமையான ஒலிவ மரத்தை வத்திக்கான் தோட்டத்துக்காக இஸ்ரேல் அரசு வழங்கியிருக்கிறது!

கிரிக்கெட்டின் கடவுள்' என்று அழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், 400 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய முதல் இந்திய கிரிக்கெட் வீரர்.

கவிஞர் கண்ணதாசன் எழுதிய ஏசு கிறிஸ்துவின் வாழ்கை வரலாற்றை கவிதை வடிவில் கூறும், 'ஏசு காவியம்’ என்ற நூல், 400 பக்கங்களைக் கொண்டதாகும்.



 செல்போன் பாதிப்பு பற்றி ஆராய்ந்த இந்திய சுகாதாரத்துறை, பயோ டெக்னாலஜி துறை மற்றும் தொலை தொடர்புத்துறை நிபுணர்கள் கொண்ட குழு, 'செல்போனில் அதிக நேரம் பேசும் டீன் ஏஜ் பருவத்தினருக்கு மூளை கேன்சர் ஏற்படும் அபாயம் 400 சதவிகிதம் இருக்கும்' என்று கூறியிருக்கிறது!

சீனாவைச் சேர்ந்த 52 வயதான ஷங் புக்ஸிங் என்ற செருப்பு தயாரிப்பாளர் 400 கிலோ எடையுள்ள இரும்பினாலான செருப்பை அணிந்து நடந்து ஆச்சர்யப்படுத்துகிறார்.

சிலந்தி மனிதன்’ என்று அழைக்கப்படும் ஆலன் ராபர்ட் 400 அடி உயரம் உள்ள கட்டடத் தின் சுவர்களில் எந்தவித பாது காப்புமின்றி ஏறி புதிய சாதனை படைத்தார்.

400 மி.மீ உயரம் கொண்ட 'கிவி’, நியூசிலாந்தில் வாழும் அப்டெரிக்ஸ் என்னும் இனத்தைச் சேர்ந்த சிறிய, பறக்காத விநோதப் பறவை.

வானியல் மேதை கலீலியோ, 400 ஆண்டுகளுக்கு முன்பு, தொலைநோக்கியை முதன்முதலாக பயன்படுத்தி, கோள்களை ஆராய்ந்ததன் நினைவாக, 2009-ம் ஆண்டினை, அனைத்துலக வானியல் ஆண்டாக ஐ.நா. சபை அறிவித்தது.

இந்திய கிரிக்கெட் அணிக்கு முதல் உலகக் கோப்பையை வாங்கிக்கொடுத்த கேப்டன் என்ற பெருமைக்குரிய கபில்தேவ், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 400 விக்கெட்டுகளை கடந்த முதல் இந்தியர் என்ற பெருமைக்கும் உரியவர்.

400 கி.மீ நீளம் கொண்ட தென்னிந்தியாவின் முக்கிய ஆறுகளில் ஒன்றான தென்பெண்ணை ஆறு, கர்நாடக மாநிலம் சிக்கபல்லபூர் மாவட்டம், நந்தி மலையில் பிறந்து, தமிழ்நாட்டின் பல மாவட்டங்களை கடந்து வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

 தஞ்சை அரண்மனை வளாகத்தில் புனரமைப்பு பணி மேற்கொள்ள சுற்றுலாத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது 400 ஆண்டு பழமையான, மன்னர்கள் காலத்தில் பயன்படுத்தப்பட்ட குளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


கட்டுரை : எம்.மரிய பெல்சின், சா.வடிவரசு

1 comment:

  1. எம்.மரிய பெல்சின், சா.வடிவரசு அவர்களுக்கு நன்றி...

    ReplyDelete