சூப்பர் ஸ்டார்
இந்த வருடம் முழுக்க ரஜினி தொடர்ந்து நியூசில் இருந்துகொண்டிருந்தார்.
முதலில் ஷங்கர் இயக்கிய ‘எந்திரன்’ பட ரிலீஸ். அதிக பட்ச தியேட்டர்களில்
படம் ரிலீசாகி,
தமிழ்நாட்டையே கலக்கியது. வசூலிலும் சாதனை. ரஜினி நடிக்க, கே.எஸ்.
ரவிகுமார் டைரக்ஷனில் ராணா என்று அறிவிப்பு வந்த வேளையில் ரஜினிக்கு உடல்
நலமில்லை.
ராமசந்திராவில் ஐ.சி.யு. சிங்கப்பூரில் சிகிச்சை, சென்னையில் ஓய்வு என்று
தொடர்ந்து மீடியாவின் கவனத்திலேயே இருந்தார். இடையில் நடிக்க முடியுமா
என்ற கேள்வி
எழுந்தது. லேட்டஸ்ட்டாக ‘ராணா’ இல்லை; ‘கோச்சடையான்’ என்கிறார்கள்.
அவார்டு வெறி
மாப்பிள்ளை தனுஷ் ரொம்ப லக்கி. ‘ஆடுகளம்’ படத்தின் நடிப்புக்கு தேசிய
விருது அவருக்குள் இருக்கும் நடிகருக்கான அங்கீகாரம். செல்வராகவன்
டைரக்ஷனில்
‘மயக்கம் என்ன’ படத்தில் தனுஷின் நடிப்பு மெச்சூரிடி. வசனம் மாதிரி ஒரு
பாட்டைப் பாடி வெறித்தனமாக எல்லோரையும் பாட வைத்து, ஹிட் ஆக்கும்
ம(த)ந்திரத்தைச்
செய்து காட்டினார். காதலில் தோல்வியுற்ற காதலன், காதலி ‘எங்கிருந்தாலும்
வாழ்க!’ என்று வாழ்த்துப் பாடிய தேவதாஸ் காலம் போய், இன்று ‘கொலை வெறி’
காலம்.
இந்தப் பாட்டே சாட்சி.
காமெடி பீஸ்
தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கிய வைகைப்புயல், அழகிரி புண்ணியத்தில்
தி.மு.க.வின் பிரசார பீரங்கியாக தமிழகம் முழுக்க வலம் வந்தார். திராவிடப்
பாரம்பரியத்தைத்
தூக்கிப் பிடிக்கும் தூண்களே குஷ்புவும், வடிவேலுவும்தானோ என்று நினைக்க
வைத்தது தி.மு.க. வின் பிரசார வியூகம். தேர்தல் முடிவு வெளியானதும்
காற்றுப்
போன பலூனாகி, ‘ நான் அம்மாவைப் பத்தித் தப்பா ஒண்ணுமே பேசலை’ என்று
தன்னிலை விளக்கம் அளித்து, காமெடி பீஸ் ஆனார்.
குடும்ப ஆக்கிரமிப்பு
வருடத்தின் முதல் பாதியில் கலைஞர் குடும்பத்தின் ஆக்கிரமிப்பு சினிமா
உலகத்தையே மிரட்டிக் கொண்டிருந்தது. கலாநிதி, உதய நிதி, தயாநிதி, அருள்
நிதி... என
நிதிகளின் பிடியில் என்று புகார் எழுந்தது. தேர்தலுக்குப் பின் ஆட்சி
மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, நிதி வகையறாக்கள் கொஞ்சம் அடக்கி
வாசித்தார்கள். ‘மங்காத்தா’
கூட சன் பிக்சர்ஸ், ராடன் என்று கை மாறிய பிறகே திரைக்கு வந்தது.
அரசியலாயுதம்
‘காவலன்’ படத்தை வெளியிடுவதற்கு ஏற்பட்ட முட்டுக்கட்டைகளை அடுத்து
எஸ்.ஏ.சந்திரசேகர், ஜெயலலிதாவை சந்தித்து, முறையிட்டார். தொடர்ந்து
ஜெ.வுக்கு
விஜய் ரசிகர்கள் ஆதரவைத் தெரிவிக்க, அப்புறம் விஜய் குடும்பத்தின் பக்கம்
அதிர்ஷ்டக் காற்று. சட்டமன்றத் தேர்தலைத் தொடர்ந்து அப்பா தயாரிப்பாளர்
சங்கத் தலைவரானார்.
அம்மாவுக்கும் தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறையில் போஸ்டிங். அடுத்து
வெளியான ஆஸ்கர் ஃபிலிம்ஸ் ‘வேலாயுதம்’ நன்றாகவே அறுவடை செய்துவிட்டது.
விருது வேட்டை
ஆறாம் முறையாக வைரமுத்து சிறந்த பாடலாசிரியருக்கான விருதினைப் பெற்றார்.
‘ஆடுகளம்’ சிறந்த இயக்குனர், சிறந்த திரைக்கதை (வெற்றி மாறன்), சிறந்த
நடிகர் (தனுஷ்), சிறந்த எடிட்டிங் (கிஷோர்), நடன இயக்குனர் (தினேஷ்
குமார்) என்று விருதுகளைக் குவிக்க, சிறந்த தமிழ்ப்படமாக சீனு.ராமசாமி
இயக்கிய
‘தென் மேற்குப் பருவக் காற்று’ தேர்வானது. ஆர்ட் டைரக்ஷன், ஸ்பெஷல்
எஃபெக்ட், தயாரிப்பு வடிவமைப்பு ஆகியவற்றுக்கான விருதுகள் ‘எந்திரன்’
படத்துக்கு.
மணி ரத்ன கரிகாலன்
எம்.ஜி.ஆர்., சிவாஜி, கமல் போன்றவர்கள் விரும்பியும் முடியாமல் போன
‘பொன்னியின் செல்வன்’ சரித்திர சவாலை மணி ரத்னம் சினிமாவாக எடுக்கப்போவதாக
அறிவித்தார். அது சாத்தியமா? என்று சந்தேகப்பட்டோர் அதிகம். எழுத்தாளர்
ஜெயமோகன், இயக்குனர் வஸந்த் என்று பக்க பலத்துக்குக் கை கோத்துக் கொண்டு
களமிறங்கினார்
மணி. சூர்யா, விக்ரம் என்று ஆரம்பித்து விஜய் வரை தேடல் நடந்தது. ஆனால்,
பொருளாதாரம் மிரட்டவே, மறுபடியும் பொன்னியின் செல்வன் திட்டம் முடங்கிப்
போனது.
ஒரு கோடி ரூபாய் செட்
இந்தி ‘தபாங்’ படத்தை தரணி டைரக்ஷனில் சிம்பு, ரிச்சா ஜோடி நடிக்க ‘ஒஸ்தி’
யாக எடுக்க முடிவு செய்த போது இந்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் பாடலான
‘முன்னி’
பாடலை, தமிழில் யார் பாடுவார்? யார் குத்தாட்டம் போடுவார்? என்று
சஸ்பென்ஸ் இருந்தது. தமிழில் வாலி பாடல் எழுத, எல்.ஆர்.ஈஸ்வரி,
டி.ராஜேந்தர் பாடியிருக்கும்
‘கலாசலா’ பாட்டுக்கு சிம்புவுடன் ஆட்டம் போட்டார் மல்லிகா ஷெராவத். அந்தப்
பட்டுக்கு ஒரு கோடி ரூபாய் செலவில் செட்.
பாடிப் பறந்த குயில்
பாலக்காட்டில் இசைக்குடும்பத்தில் பிறந்து, எம்.எஸ்.வி. மூலமாக ‘நீதிக்கு
தண்டனை’ படத்தில் யேசுதாசுடன் டூயட் பாடி தமிழ் சினிமா பின்னணிப் பாடகர்
உலகத்துக்கு
14 வயதில் அறிமுகமானவர் ஸ்வர்ண லதா. ‘கருத்தம்மா’ படத்தில் போறாளே
பொன்னுத்தாயி பாடலுக்காகத் தேசிய விருது பெற்றவர். 37 வயதில் நுரையீரல்
பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தது துரதிருஷ்டவசமானது.
கோடியைத் தாண்டிய ‘கோ’
திரையிட்ட 5 நாட்களில் ஐந்து கோடி ரூபாய் வசூலித்து, சாதனை படத்தது ‘கோ’
படம். 100 நாட்கள் ஓடிய படம். 15 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட படத்தின்
வசூல் 50 கோடியாம். ரங்கம் என்று தெலுங்கில் ரிலீஸ் ஆகி அங்கேயும் நூறு
நாள். இப்போது ஒண்ணரை கோடிக்கு இந்தி உரிமை விற்பனை, கஜினிக்கு அடுத்து,
பாலிவுட்டால் அதிக விலைகொடுத்து வாங்கப்பட்டிருக்கும் தமிழ்ப் படம்
இதுதானாம்.
தொகுப்பு: சந்திரமௌலி
No comments:
Post a Comment