Search This Blog

Friday, December 02, 2011

கனிமொழியே வருக...வருக..., ஓ பக்கங்கள் - ஞாநி


கனிமொழிக்கு மாபெரும் வரவேற்பு தர பலரும் தயாராகிவிட்டார்கள். ஜெயலலிதாவின் அரசியலுக்கு எதிராகப் போராட வலுவான பிம்பம் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் யாரும் இல்லாத நிலையில், கனி மொழியைக் கொண்டு அந்த வெற்றிடத்தை நிரப்பிவிட முடியுமா என்று மீடியா, பத்திரிகைகள், தி.மு.க.வினர் என்று பலரும் ஆர்வத்தோடு எதிர்பார்த்து இருக்கிறார்கள்.சிறையிலிருந்து பிணையில் விடுதலை ஆகிவரும் கனிமொழிக்கு, விமான நிலையத்தில் தொடங்கி வீதி வீதியாக, ஊர் ஊராகப் பெரும் வரவேற்பு தர தி.மு.க.வினர் ஆயத்தமாகி வருவதாக, செய்திகள் வெளியாகியுள்ளன. நீதிமன்ற விசாரணைக்குச் செல்லவேண்டிய கட்டாயம் இல்லாமல், எந்தெந்தத் தேதிகளில் அவர் சென்னையில் இருப்பார் என்று பட்டியலையும் தி.மு.க. தலைமை நிலையம் வெளியிட்டிருக்கிறது. கனிமொழி சிறைக்குச் சென்றது தந்தையைப் போல மொழிப் போராட்டத்தில் அல்ல. மக்களின் அன்றாடப் பிரச்னைகளுக்கு நீதி கேட்டு நடத்திய போராட்டத்திலும் அல்ல. குறைந்தபட்சம் அண்ணன் ஸ்டாலினைப் போல அடக்குமுறை மிசா சட்டத்தின் கீழ் அடைக்கப்படவும் இல்லை.ஊழலில் ஈடுபட்டு செல்வாக்கை முறைகேடாகப் பயன்படுத்தி, அரசுக்குப் பல கோடி நஷ்டம் ஏற்படுத்தி, தாம் சில கோடி லாபமடைவதற்காகச் சதி செய்து நம்பிக்கை துரோகத்தில் ஈடுபட்டதாக சி.பி.ஐ அவர் மீது குற்றம் சுமத்தியிருக்கும் ஸ்பெக்ட்ரம் வழக்கில்தான் அவர் கைதாகி, சிறையிலிருந்து பிணையில் வெளியே இப்போது வருகிறார். வழக்கு விசாரணை முடிந்து நிரபராதி என்றோ குறைந்தபட்சம் அவர்மீதான குற்றங்கள் நிரூபிக்கப்படவில்லை என்றோ விடுதலை செய்யப்பட்டு, சிறையிலிருந்து வெளிவரும்போது கட்சியினர் மாபெரும் வரவேற்பு அளித்தால் நியாயம்.

சுமார் ஆறு மாதமாக பிணை மறுக்கப்பட்டதால் கனிமொழிக்குப் பெரும் அநீதி இழைக்கப்பட்டுவிட்டதைப் போல தி.மு.க. வட்டாரங்கள் சித்திரிக்கின்றன. தி.மு.க. ஆட்சி நடத்திய காலங்கள் உட்பட எல்லா காலங்களிலும் இந்தியாவில் பிணை இல்லாமல் சிறையில் வாடும் விசாரணைக் கைதிகளின் எண்ணிக்கை அதிர்ச்சியானது. இப்போதும் திஹார் உட்பட எல்லா சிறைகளிலும் சுமார் 80 சதவிகிதம் பேர் விசாரணைக் கைதிகள்தான். அரசியல்வாதிகளுக்கும் தலைவர்களுக்கும் தங்கள் வீட்டில் யாராவது பாதிக்கப்பட்டால் ஒழிய, சிறை சீர்திருத்தங்களில் அக்கறை இல்லை.சுமார் ஒரு லட்சத்து 74 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுத்திய ஊழல் வழக்கில் கனிமொழி சுமார் ஆறு மாதங்கள் கழித்து, சிறையிலிருந்து பிணை விடுதலை கிடைக்கிறது. தன் சொந்த கம்பெனியிலேயே 14 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மோசடிகள் செய்ததை, தானே ஒப்புக் கொண்ட சத்யம் கம்ப்யூட்டர் ராமலிங்க ராஜுவுக்கு 32 மாதங்களாக, பிணையில் வெளிவர முடியவில்லை. ஆனால் அதை மீடியா அக்கிரமம் அநீதி என்று வர்ணிக்கவில்லை. இன்றும் சிறைகளில் இருக்கும் சுமார் இரண்டு லட்சம் விசாரணைக் கைதிகள் தாங்கள் தண்டிக்கப்பட்டால் எத்தனை வருடம் சிறையோ அதில் பாதியை ஏற்கெனவே கழித்துவிட்டவர்கள். கனிமொழியாலும் ராசாவாலும் தமிழகத்தின் கவனத்தை ஈர்த்திருக்கும் திஹார் சிறையில் ஒரு வருட காலம் இருந்தவன் ஷம்சுதீன் என்ற 19 வயது இளைஞன். உத்தரப் பிரதேசத்திலிருந்து தில்லிக்குப் பிழைக்க வந்து, தெருவோரம் காய்கள் விற்றவன். ஒருவரின் பர்சையும் அதிலிருந்த 200 ரூபாயையும் திருடியதாகக் குற்றம் சாட்டி, போலீஸ் கைது செய்தது. தான் திருடவில்லை என்றும் பர்சே தன்னுடையதுதான் என்றும் ஷம்சுதீன் சொன்னான். திருடாவிட்டாலும் திருடியதாக ஒப்புக் கொண்டிருந்தால் மூன்று மாதம்தான் சிறைத் தண்டனை. தான் குற்றவாளியில்லை என்று சொன்னதால், ஒரு வருடமாக சிறையில் இருக்கிறான். முதல் ஜாமீன் விசாரணையே ஆறு மாதம் கழித்து வந்தது. ‘கடுமையான குற்றம்’ என்பதால் அவனுக்கு பிணை மறுக்கப்பட்டது. மனித உரிமைச் சட்ட அமைப்பான ஒரு தொண்டு நிறுவனத்துக்கு, ஷம்சுதீன் பிரச்னை தெரியவந்தது. கிராமத்தில் இருந்த அப்பா சில நாட்கள் முன்பு இறந்துவிட்டதாக அவனுக்குத் தெரியவந்ததும், வழக்கறிஞர் யோசனைப்படி திருடியதாக ஒப்புக் கொண்டு, ஏற்கெனவே தண்டனையை அனுபவித்துவிட்ட படியால் விடுதலையாகி இருக்கிறான். “இனிமேல் இப்படித் திருடாதே,” என்று நீதிபதி சொன்னதும், ஷம்சுதீன் “நான் திருடவே இல்லையே,” என்று தம் வக்கீலிடம் முணுமுணுத்தான். திஹார் மட்டுமல்ல, எல்லா ஊர் சிறைகளிலும் இருக்கும் ஷம்சுதீன்களுக்கு முணுமுணுப்பதைத் தவிர வேறு வழியில்லை. கனிமொழிக்கு பிணையில் வருவதற்கே வரவேற்பு என்பது தி.மு.க.வில் அதிகாரப் போட்டி அடுத்த சுற்று ஆரம்பம் என்பதன் அடையாளம்தான்.


கலைஞர் கருணாநிதியின் குடும்பங்களுக்குள் நடக்கும் இந்த அதிகாரப் போட்டிதான் இலக்கியவாதி கனிமொழியை அரசியல்வாதி கனிமொழியாக்கி, குற்றவாளி அவதாரத்தில் சிறையில் தள்ளியது. இந்திய அரசியலில் கலைஞர் கருணாநிதியைத் தவிர வேறு எந்தத் தலைவரின் குடும்பப் பிரச்னைகளும் அரசியல் பிரச்னைகளாக மாறிய சரித்திரம் இல்லை. இதனால் இந்திய அரசியல் வரலாற்றிலேயே இது வரை இப்படி நடந்ததில்லை என்ற விசித்திரப் பெருமைகள் கனிமொழிக்குக் கிடைக்கக் காரணம் குடும்ப சிக்கல்கள். எந்தக் கட்சிப் பதவியிலும் ஆட்சிப் பதவியிலும் இல்லாத ஒருவர், அதுவும் அரசியலில் ஐம்பதாண்டுகள் அனுபவமிக்க ஒரு கட்சித் தலைவரின் மகள், பிரம்மாண்டமான ஊழல் குற்றச்சாட்டில் கைதாகி அவரது கட்சியின் கூட்டணி ஆட்சி நடத்தும்போதே சிறைக்கு அனுப்பப்படும் ‘பெருமை’ வேறு யாருக்கும் கிட்டியதில்லை.கனிமொழி பிறந்த சமயத்திலிருந்தே அவருடைய பிரச்னைகளும் தொடங்குகின்றன. சில வருடங்கள் முன்பு கலைஞர் கருணாநிதி தம் கோபாலபுரம் வீட்டை தம் காலத்துக்குப் பிறகு, தம் மனைவி தயாளு அம்மாள் காலத்துக்குப் பிறகு பொது மருத்துவமனையாக்குவதற்கு நன்கொடையாக அளிப்பதாக அறி வித்தார். அப்போது இந்த முடிவுக்கு, தம் மகன்கள் மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலின், தமிழரசு ஆகியோரும் சம்மதம் தெரிவித்திருப்பதாகச் சொன்னார். எதற்கு அவர்கள் சம்மதம்? வீட்டை அவர்களுக்கு ஏற்கெனவே அவர் கொடுத்துவிட்டார். அதனால்தான். எப்போது கொடுத்தார்? 1968ல்! அப்போது கலைஞருக்கு வயது 44தான். கோபாலபுரம் வீடுதான் அவரது முதல் அசையாச் சொத்து. அதை ஏன் ஒருவர் தன் 44ம் வயதிலேயே மகன்களுக்கு மேட் ஓவர் செய்ய வேண்டும்? காரணம் இன்னொரு துணைவரான ராஜாத்தி அம்மாளின் மூலம் கனிமொழி அந்த ஆண்டு பிறந்ததுதான் என்று அனுமானிக்கலாம்.கணவருடன் தமக்குள்ள இடத்தைப் பங்கு போட இன்னொரு பெண் வந்துவிடும் போது, எந்த மனைவியும் உடனடியாகத் தம் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து அச்சப்படுவதும் அதற்காக நடவடிக்கைகள் எடுப்பதும் இயல்பானது என்பதை நான் நேரடியாகவே அறிவேன். ஏனென்றால் நானும் கனிமொழியைப் போல என் அப்பாவின் துணைவிக்குப் பிறந்த ஒரே குழந்தை. கனிமொழி, கனிமொழியின் தாயார் ராஜாத்தி அம்மாள், தயாளு அம்மாள், அவரது குழந்தைகள் எல்லாருக்கும் ‘குடும்பத் தலைவரின்’ செயல்கள் ஏற்படுத்தக்கூடிய மன உளைச்சல்களை அவற்றை அனுபவித்திருக்கக்கூடிய இன்னொரு சூழலில் இருந்து வந்த என்னால் நன்றாகவே உணரவும் புரிந்துகொள்ளவும் முடிகிறது.என் நற்பேறு என் அப்பாவின் மனைவி, துணைவி, இருவருக்கும் பிறந்த குழந்தைகள் ஆறு பேர் எல்லாரும் ஒரே வீட்டில் ஒரே கூரையின் கீழ் ஒரே குடும்பமாக வாழ முடிந்தது என்பது தான். என்னுடைய இரு அம்மாக்களுக்கும் என் அப்பாவிடம் பிரச்னைகள் இருந்தனவே ஒழிய மூவரும் அதைத் தங்கள் குழந்தைகள் மீது ஒருபோதும் சுமத்தவே இல்லை. என்னைச் சீராட்டி வளர்த்து நெறிப்படுத்தியதில் இரண்டு அம்மாக்களுக்கும் பங்கு இருக்கிறது. அதே சமயம் இருவருக்கும் இருந்த பாதுகாப்பற்ற உணர்ச்சியை சகோதர, சகோதரிகள் நாங்கள் அனைவரும் அவரவர் தளத்தில் உணர்ந்திருக்கிறோம். தம் மனைவி, துணைவி இருவருக்கும் கணவராக என் அப்பா நீதி செய்யவில்லை என்ற கருத்து எனக்கு உண்டு என்ற போதும், அப்பாவாக அவர் எனக்கு முக்கியமான வழிகாட்டி. 

இந்தப் புள்ளிதான் எனக்கும் கனிமொழிக்குமான பொதுப்புள்ளி. இருவருக்கும் எங்கள் அப்பாக்களே சமூகப் பார்வைக்கான ரோல் மாடல்கள். ஆனால் எனக்கு வாய்த்த கூட்டுக் குடும்பச் சூழல் கனிமொழிக்கு வாய்க்கவில்லை. ஆனால் அவர் ஓர் இளம் பெண்ணாகத் தம் வெற்றிடங்களை, கலை இலக்கியத்தால், பகுத்தறிவுத் தேடலால் நிரப்பிக்கொள்ள முற்பட்டது ஆரோக்கியமான அணுகுமுறை.  தொடர்ந்து கலை இலக்கியத் துறைகளிலேயே ஒரு படைப்பாளியாக மட்டும் கனிமொழி தம் பயணத்தை நடத்தியிருந்தால், இப்போது அவருக்கு ஏற்பட்டிருக்கும் வீழ்ச்சி நிச்சயம் வந்திராது. முதலில் கலை இலக்கியத் துறையின் அரசியலில் அவர் இறங்கினார். அடுத்து நேரடி அரசியலில் ஈடுபட்டார். இதற்கான நிர்ப்பந்தங்கள் கருணாநிதியின் இரு குடும்ப அமைப்பினால் உருவானவை. கடைசியாக கலைஞர் டி.வி. என்ற வர்த்தக நிறுவனம் உருவாகும்போதுகூட, கனிமொழி, தயாளு அம்மாள் என்று தம் இரு குடும்பங்களிலிருந்தும் ஒவ்வொருவரை இயக்குனராக்கினார். தொடர்ந்து ஒவ்வொரு கட்டத்திலும் இரு குடும்ப நிர்ப்பந்தங்களை அவரும் சுமந்து வந்திருக்கிறார். ஒருவர் தாமே தமக்கு உருவாக்கிக் கொண்ட சிக்கலின் விளைவுகளை அவரது சுற்றமும் நட்பும் மட்டுமல்ல, அவரும் சந்தித்துத்தான் ஆக வேண்டும் என்பதை என் அப்பாவிடமும் பார்த்திருக்கிறேன்.கனிமொழிக்குள் இருக்கும் இலக்கியவாதியை, கவிஞரை, பகுத்தறிவாளரைச் சந்திக்க அவரது படைப்புகள் உதவும். அவருக்குள் இருக்கும் அரசியல்வாதியை சங்கமம் விழா ஏற்பாடுகளில் சந்திக்கலாம். நீரா ராடியாவுடன் டேப்பில் பதிவாகியிருக்கும் அவருடைய உரையாடல்களில் தரிசிக்கலாம்.நீரா ராடியா உரையாடல்கள் ஒரு பதற்றமும், சூழ்ச்சியும் சுயநலமும் அவசரமும் நிரம்பிய அரசியல்வாதியைக் காட்டுகின்றன. குடும்பச் சிக்கல்களைச் சமாளிக்கவேண்டிய கவலைகள் அதில் பிரதிபலிக்கின்றன. கவிதைகளில் தெரியும் நபர் அதற்கு நேர் மாறானவர். சமூகம் சார்ந்த சிந்தனையும், இன்றைய கசடுகள் நீங்கிய ஒரு நாளை பற்றிய கனவும் ஏக்கமும் நிறைந்த மனிதர் அதில் வெளிப்படுகிறார். இரண்டும் கனிமொழி என்பதுதான் நமக்குச் சிக்கல்.எல்லா மகாத்மாக்களுக்கும் ஒரு கடந்த காலம் உண்டு. எல்லா பாவிகளுக்கும் ஒரு எதிர்காலமும் உண்டு என்பார்கள். கனிமொழி இன்னமும் மகாத்மாவும் அல்ல. பாவியும் அல்ல. முரண்பாடுகளும், ஆசைகளும், திறமையும் உடைய இன்னொரு சமூக மனிதர்.ஆறு மாத சிறைவாசம் ஒருவருக்கு, தமக்குள்ளேயே தம்மைத் தேடிப் பார்ப்பதற்கு நிச்சயம் உதவக்கூடியதுதான். அந்தத் தேடலில், தமக்கு பிறப்பால் நேர்ந்த பலங்கள், பலவீனங்கள் இரண்டையும் அசை போட்டு எடை போட அறிந்திருப்பார் என்றால், அந்த அறிவு, வரும் நாட்களில் அவர் செயல்களில் பிரதிபலிக்கும். திஹாரில் கற்றதும் பெற்றதும் என்ன என்று நமக்கும் தெரியவரும்.தம் குடும்பத்தை மீறி, சிந்திக்கத் தெரிந்தவர்கள்தான் சமூகத்தை அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் சென்றவர்கள். ஒரு காமராஜர், ஒரு பெரியார். தம் குடும்பத்தால் தம் அரசியலையே நாசமாக்கிக் கொண்டவர்கள் சமூகத்தையும் பின்னடையவே செய்திருக்கிறார்கள். ஒரு இந்திராகாந்தி. ஒரு கருணாநிதி. கனிமொழியின் தேடல் எந்தத் திசையில் என்று காணும் ஆவலுடன் நானும் அவரை வருக வருக என்று வரவேற்கிறேன்.

இந்த வார சந்தேகம்

ஸ்பெக்ட்ரம் குற்றவாளிகள் பெரும்பாலோர் ஜாமீனுக்காகப் படாத பாடுபட்டு வெளிவரும்போது, ஏன் பிரதான குற்றவாளி ஆ.ராசா மட்டும் அதைக் கோராமலே இருக்கிறார்? வெளியில் வந்தால், தம் உயிருக்கு ஆபத்து என்று அவர் அஞ்சுவதாகச் சொல்லப்படுவது உண்மையா?

இந்த வாரப் பூச்செண்டு

சில்லறை வியாபாரத்தில் வெளிநாட்டு முதலீட்டை மத்திய அரசு தாராளமாக அனுமதித்தாலும் தாங்கள் அனுமதிக்க முடியாது என்று சொல்லியிருக்கும் அத்தனை மாநில அரசுகளுக்கும் இ.வா.பூ.  


No comments:

Post a Comment