Search This Blog

Saturday, December 17, 2011

உடல் நலம் ( சர்க்கரை நோய் ) , ஓ பக்கங்கள்,ஞாநி

இந்த வருடம் இந்தியாவில் ஒன்பது லட்சத்து 83 ஆயிரம் பேர் சர்க்கரை நோயால் இறந்திருக்கிறார்கள். அந்த எண்களில் ஒன்றாக மாறாமல் இன்னமும் தப்பிப் பிழைத்திருக்கும் ஆறு கோடி பத்து லட்சம் பேரில் நானும் ஒருத்தன்.வரப் போகும் 2030ல் அப்துல் கலாம்கள் கனவு காணாமலே நிறைவேறப் போகும் ஒரே விஷயம், இந்தியாவின் மொத்த சர்க்கரை நோயாளிகள் எண்ணிக்கை பத்துக் கோடியைத் தொட்டுவிடும் என்பதுதான். இதிலும் சீனாவுடனான நமது போட்டியில் சீனா முன்னணியில் இருக்கிறது. அங்கே 2030ல் 13 கோடியை எட்டி விடுவார்கள். இப்போது 9 கோடி!உலக அளவில் ஏழு செகண்டுக்கு ஒருவர் வீதம் சர்க்கரை நோயாளிகள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த வருடம் மொத்த சாவு நான்கு கோடி 60 லட்சம்.பெரியவர்களில் ஐந்து பேருக்கு ஒருவர். உலக அளவில் சர்க்கரை நோயால் ஆகும் செலவு மட்டும் ஸ்பெக்ட்ரம் ஊழல் நஷ்டத்தைப் போல, சுமார் இருபது மடங்கு - 23 லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாய்கள்!ஒவ்வொரு வருடமும் சுமார் 78 ஆயிரம் குழந்தைகள் சர்க்கரை நோயாளிகளாகி வருகின்றனர். சர்க்கரை நோயாளியாக இருக்கும் பெரியவர்களில் ஐந்து பேரில் நான்கு பேர் 40லிருந்து 50 வயதுக்குட்பட்டவர்கள்.
 
எனக்கு சர்க்கரை நோய் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டது மிகவும் தற்செயலாகத்தான். அப்போது எனக்கு 42வயது. தினமணியில் இதழாசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். என் சீனியரும் நண்பருமான இராம.சம்பந்தம் ஆசிரியராக இருந்தார். அவர் மிகப்பெரிய போதை அடிமை. அவருடைய ஒரே போதை வேலைதான். தினமும் காலை 10 மணிக்கு என்னை வீட்டுக்கு வந்து காரில் அலுவலகத்துக்கு அழைத்துச் செல்வார். இரவு 12 மணிக்கு, திரும்ப வீட்டுக்குக் கொண்டு வந்து விடுவார். ஞாயிறு விடுமுறையெல்லாம் கிடையாது. ஏழு நாட்களும் இப்படித்தான். இப்படியே சுமார் ஒரு வருடம் ஆன சமயத்தில், ஒரு நாள் தலைச்சுற்றல் ஏற்பட்டு கண்கள் இருட்டாகி மயங்கி விழுந்தேன். என் தனி மருத்துவரிடம் சென்றபோது, சோதனைகளுக்குப் பின் நான் சர்க்கரை நோயாளியாகி விட்டதை பிரகடனம் செய்தார்.  சம்பந்தத்துக்கு சர்க்கரை நோய் ஏற்படவில்லை. அவர் தினமணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர், 24 மணி நேரத்தை எப்படிச் செலவழிப்பது என்று தெரியாமல், இறந்துபோனார். தொடர்ந்து காலை 10 முதல் இரவு 11 வரை அவர் ஏதாவது வேலை பார்த்திருந்தால் நிச்சயம் நூறாண்டுகள் வாழ்ந்திருப்பார். அவரை சர்க்கரை நோய் கடுமையாகத் தாக்காததற்கு முக்கியக் காரணம் அவருடைய உணவு ஒழுக்கமும் எதற்கும் அலட்டிக் கொள்ளாத மனமும்தான். எனக்கு இரண்டும் இருக்கவில்லை.என் மருத்துவர் என் அன்றாட வேலை விவரங்களைக் கேட்டு விட்டு, எனக்கு ப்ரிஸ்கிரிப்ஷன் சீட்டில் மருந்து எழுதினார் - ‘ரெசிக்னேஷன்’ !ஏன் என்று கேட்டேன். வேலைப் பளு, ஓய்வின்மை, கடுமையான மன உளைச்சல் எல்லாம் நிச்சயம் சர்க்கரை நோயையும் ஏற்கெனவே ஆறு வருடங்களாக இருந்து வரும் உயர் ரத்த அழுத்தத்தையும் தீவிரமாக்கிவிடும் என்று எச்சரித்தார். அடுத்த நாளே ராஜினாமா கொடுத்துவிட்டேன். அதன் பின்னர் கடந்த 15 வருடங்களாக முடிந்தவரை முழு நேர வேலைகள் எதையும் எடுத்துக் கொள்வதில்லை. ஓரிரு முறை அப்படிப்பட்ட பொறுப்புகளை ஏற்றுக் கொண்டபோது கூட, சம்பந்தம் போல 18 மணி நேர வேலை செய்யக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன். மனதுக்குப் பிடித்தமான வேலைகளை மட்டுமே செய்வது என்பதே, தொடர்ந்து என் குறிக்கோள்.சர்க்கரை நோய் பரம்பரை நோயாகச் சொல்லப்பட்டாலும், இன்று புதிதாகப் பலருக்கும் அது வந்துகொண்டிருக்கிறது. குறிப்பாக சகோதர நோய்களான சர்க்கரை நோயும் உயர் ரத்த அழுத்தமும் முப்பது வயதின் தொடக்கத்திலேயே வருவது அதிகரித்து வருகிறது. முக்கியக் காரணம் நமது வாழ்க்கை முறையும் உணவுப் பழக்கங்களும்தான். அரிசிக்கு பதில் கோதுமை, கண்டிப்பாக ஸ்வீட் சாப்பிடாமல் இருப்பது, பாகற்காய் போன்ற கசப்பான காய்களை அதிகம் சாப்பிடுவது இவையெல்லாம் சர்க்கரை நோயைத் தணிக்கவும் தடுக்கவும் உதவும் என்று சில நம்பிக்கைகள் இருக்கின்றன. இவற்றில் பல மூட நம்பிக்கைகள்தான். நேரடியாக சர்க்கரைப் பொருட்களைச் சாப்பிடாமல் இருப்பது ஒன்றுதான் அவசியமானது. ஆனால் அது மட்டும் போதாது.
 
என்ன சாப்பிடுகிறோம் என்பதை விட, எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதும் எப்போது சாப்பிடுகிறோம் என்பதுமே முக்கியமானவை. ஏனென்றால் பாகற்காய் உட்பட எதைச் சாப்பிட்டாலும், நம் உடல் அதை குளூகோஸாக மாற்றித்தான் ரத்தத்துக்கு அனுப்புகிறது. அரிசி சோறுக்குப் பதில் சப்பாத்தி என்றாலும் எத்தனை சப்பாத்தி என்பதே முக்கியம். சர்க்கரை நோயாளிகளை மூன்று வேளை சாப்பிடுவதற்குப் பதில் ஐந்து அல்லது ஆறு வேளை சாப்பிடச் சொல்லுகிறார்கள். ஒவ்வொரு முறையும் குறைவாக. சாப்பிட்டதில் கிடைக்கும் சக்தியை, செலவு செய்தபின் அடுத்து சாப்பிட வேண்டும்.  நாக்கைக் கட்டுப்படுத்தாத சர்க்கரை நோயாளிகள் நிச்சயம் கடும் சிக்கல்களைச் சந்திப்பார்கள். கொஞ்சம் அதிகமாக சாப்பிட்டுவிட்டாலோ, நாக்கு ருசிக்காக ஸ்வீட் சாப்பிட்டாலோ, அடுத்த வேளை எக்ஸ்ட்ரா மாத்திரை சாப்பிட்டால் சரியாகிவிடும் என்ற மூடத்தனத்தை, பல பேரிடம் பார்த்திருக்கிறேன். அப்படியெல்லாம் சரி செய்ய முடியாது. என் 15 வருட அனுபவத்தில் சர்க்கரை நோய் நிச்சயம் கொடியது. சர்க்கரை நோய் உடலின் எல்லா பாகங்களையும் பாதிக்கக்கூடியது. வேறு எந்த நோய்க்கும் இந்தத் தன்மை இல்லை. சர்க்கரை அதிகமானாலோ, மிகவும் குறைந்தாலோ மனநிலையிலும் உடல்நிலையிலும் ஏற்படும் மாற்றங்களைப் பற்றி தனிக் கட்டுரையே எழுதலாம்.உடலில் எங்கெல்லாம் ரத்தம் ஓடுகிறதோ அங்கெல்லாம் சிக்கலை ஏற்படுத்தும் சக்தியுடைய நோய் சர்க்கரை நோய். எனக்குத் திடீரென்று பல் விழுந்தது. டாக்டரிடம் கேட்டால் சர்க்கரை நோய் இருப்பதால் அவை பலவீனமாகிவிட்டன என்றார். தோலில் நமைச்சல் ஏற்பட்டால், சர்க்கரை நோய்தான் காரணம் என்கிறார்கள். கண் பார்வை மங்கினால் அதற்கும் சர்க்கரை நோய்தான் பொறுப்பு. உடலின் மிக முக்கியமான உறுப்புகளான, மூளை, இதயம், சிறுநீரகம், கண்கள், தோல், நரம்புகள் அத்தனையையும் சர்க்கரை நோய் பாதிக்க முடியும்.சர்க்கரை நோய் பற்றிய தவறான கருத்துகளில் ஒன்று இன்சுலின் ஊசி போடுவது பற்றியதாகும். எனக்கும் ஆரம்பக் காலத்தில் நண்பர்கள் சொன்ன யோசனை என்பது எத்தனை நாட்களுக்கு மாத்திரைகள் மூலம் மட்டுமே கட்டுப்படுத்துகிறாயோ நல்லது. அறுபது வயதுக்கு மேல் இன்சுலின் போட ஆரம்பிக்கிற மாதிரி பார்த்துக்கொள் என்றார்கள். நானும் பயபக்தியுடன் ஏராளமான மாத்திரைகளையே தயங்காமல் விழுங்கி வந்தேன். 57 வயதிலேயே இன்சுலினுக்கு வந்துவிட்டேன். காரணம் சர்க்கரையை சரி செய்யும் மாத்திரைகளின் பக்கவிளைவுகள் சிறுநீரகத்தைப் பாதிக்கின்றன. சிறுநீரகக் கற்கள் உருவாகின்றன. சிறுநீரகத்தின் வேலை அதிகமாவதால், அது தளர்ந்து, யூரியா அளவு கூடுகிறது. இன்சுலின் ஊசியில் இந்தச் சிக்கல் இல்லை. நேரடியாக ரத்தத்தில் செலுத்தப்பட்டு விடுவதால், சிறுநீரகத்துக்கு வேலை இல்லை. எனவே இப்போதெல்லாம் தொடக்கத்திலேயே இன்சுலின் போடுவதைப் பல மருத்துவர்கள் ஊக்குவிக்கிறார்கள்.
 
மாற்று மருத்துவ முறைகளில் பொதுவாக இந்தப் பக்கவிளைவுச் சிக்கல்கள் இல்லையென்றாலும், சித்த வைத்தியம் ஆயுர்வேதம் போன்றவற்றின் வழிமுறைகளை அவை சார்ந்த உணவு முறைகளைப் பின்பற்றுவது என் போன்றோரின் அன்றாட நகர வாழ்க்கைத் தன்மைக்குக் கடினமாக இருக்கிறது. நெல்லிக்காய் வடி நீர், மூலிகைப் பொடிகள் போன்றவற்றை அன்றாடம் பயன்படுத்த உகந்த வாழ்க்கை முறையும் வீட்டுச் சூழலும் இல்லையென்றால் கடினம்.  சர்க்கரை நோயாளிகளைப் பொறுத்தமட்டில் ஒவ்வொருவருக்கும் எது உகந்ததோ அதையே பின்பற்ற வேண்டும். அவரவர் மருத்துவரிடம் விரிவாகவும் ஆழமாகவும் விவாதித்து, சிகிச்சை முறையை முடிவு செய்யவேண்டும். இன்னும் சில ஆண்டுகளில் நம் நாட்டில் ஐந்தில் ஒருவர் சர்க்கரை நோயாளி என்ற நிலை வரப் போவதால், இதையே நம் தேசிய நோயாக அறிவிக்க வேண்டும். நேற்று ஒரு சார்பதிவாளர் அலுவலகத்தில் நான்கு மணி நேரம் இருந்தேன். அங்கே வேலை பார்க்கும் அலுவலர்கள் முதல்; அங்கே வரும் மக்கள் முதல்; எல்லாரும் உயர் ரத்த அழுத்த சர்க்கரை நோயாளிகளாகி விடுவார்களோ என்று பயப்படும் சூழலே அங்கே இருந்தது. இன்றைய நகர்ப்புறக் குழந்தைகள், இளைஞர்களின் பழக்க வழக்கங்களைப் பார்க்கும்போது, ஐந்தில் நால்வர் சர்க்கரை நோயாளிகளாகிவிடும் ஆபத்து இருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது.சரியான உணவுப் பழக்கமும், மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை முறையும் மட்டுமே சர்க்கரை நோயிலிருந்தும் அதன் ஜோடி நோய்களிலிருந்தும் நம்மைக் காப்பாற்ற முடியும். இதில் முதலாவதை ஓரளவு பின்பற்றும் என்னால் இரண்டாவதைச் செய்ய முடிவதில்லை. கருணாநிதி, ஜெயலலிதா, மன்மோகன்சிங், அத்வானி போன்றவர்களே நமக்கு ஆட்சியாளர்களாக வாய்க்கும் நிலையில் எப்படி மன அழுத்தமும் மன உளைச்சலும் இல்லாமல் இந்தத் தேசத்தில் இருக்க முடியும்? அடுத்தமுறை கடும் உடல் நலிவு ஏற்பட்டு மருத்துவரைச் சந்தித்தால் பிரிஸ்கிரிப்ஷன் சீட்டில் ‘ஓ பக்கம் எழுதுவதை நிறுத்தவும்’ என்று எழுதிவிடுவாரோ என்று கவலையாக இருக்கிறது.
 
இந்த வார சர்ச்சை

எல்லா நீதிக்கும் தலைவணங்க முடியுமா?


தமிழக அரசின் சார்பில் முதலமைச்சர் ஜெயலலிதா முல்லைப் பெரியாறு சர்ச்சை பற்றி, பத்திரிகை விளம்பரமாக வெளியிட்ட அறிக்கைக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருக்கிறது. நீதிமன்றத் தீர்ப்புகள், நீதிபதிகளின் மேற்கோள்களை வெளியிட்டு அரசியல் செய்யக் கூடாது என்று சொல்லியிருக்கிறது. முல்லைப் பெரியாறு சர்ச்சையில் தமிழக அரசு இந்தமுறை எந்தச் சர்ச்சையையும் தொடங்கவில்லை. மக்கள் பயப்படவேண்டாம் என்று அதற்கான காரணங்களைச் சொல்வதும் இதற்கு முன்னர் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை, கேரள அரசு நிறைவேற்றவில்லை என்ற தகவல்களைத் தெரிவிப்பதும் எப்படித் தவறாகமுடியும்? மக்களின் அச்சத்தைப் போக்க தகவல்களைத் தெரிவிப்பதும், பொய்யான அச்சத்தை ஏற்படுத்துபவர்கள் நீதிமன்றங்களை மதிக்காதவர்கள் என்பதற்கான சான்றுகளைத் தெரிவிப்பதும் எப்படித் தவறான அரசியலாகும்? எது சரியோ அதன் பக்கம் நிற்பது மட்டுமே நீதிமன்றத்தின் வேலை

ஒரு விஷயத்தில் எல்லாத் தரப்பும் சரியாகவோ எல்லாத் தரப்பும் தவறாகவோ இருக்க முடியாது. ஒரு தரப்பு சொல்வது தவறென்றால் அதைக் கண்டிக்கலாம். அப்படிக் கண்டிக்கப்படுபவரைக் கொஞ்சம் சாந்தப்படுத்துவதற்காகத் தேவையில்லாமல் இன்னொரு தரப்பையும் கண்டிப்பது தவறான உத்தி. முல்லைப் பெரியாறு விஷயத்தில் இந்த முறை பதற்றத்தை ஏற்படுத்தியது கேரள தரப்பு. அதைத் தணிக்க தமிழக அரசு செய்த முயற்சியை நீதிமன்றம் கண்டித்தது நிச்சயம் ஏற்கத்தக்கதல்ல.


1 comment:

  1. நல்ல அலசல்!
    பகிர்விற்கு நன்றி நண்பரே!
    என் வலையில்:
    "நீங்க மரமாக போறீங்க..."

    ReplyDelete