Search This Blog

Tuesday, December 06, 2011

அளவுக்கு மீறினால் அமிர்தமும் விஷம்!

இந்த வாக்கியம் உண்மை என்பதை, பலர் தத்தம் வாழ்க்கையில் அனுபவத்தால் உணர்ந்திருப்பர். ஆனால், அளவோடிருந்தால் நஞ்சும் அமிர்தமாகும் என்பதை யாராவது யோசித்திருப்பார்களா?இறைவன் படைப்பில், ‘தேவையில்லை, வேண்டாம், தவிர்க்க வேண்டியவை’ என்று எதுவுமே இல்லை.தேன் ஒரு அருமருந்து. எவ்வளவு தான் ஏற்க முடியும்? அதற்கும் ஒரு அளவு இருக்கிறது இல்லையா?எதுவுமே அளவோடிருந்தால் சந்தோஷம் என்ற சிந்தனையோடு பார்த்ததில் கிடைத்த விடை இதோ உங்கள் கவனத்துக்கு.போட்டி, பொறாமை, கோபம், வெறுப்பு, அவநம்பிக்கை, பொய்யுரைத்தல், இவையெல்லாம் ஒருவனிடம் குடிகொண்டிருந்தால் அவன் கெட்டவன். உண்மைதான்; இதில் கூறப்பட்ட எந்த ஒரு குணமும் இல்லாதவன் கெட்டுப் போவான். அதை உணர்ந்திருப்போமா?
 
எப்படி என்று கேட்கிறீர்களா? மேலே வாசியுங்கள்.
 
போட்டி:
 
வெற்றி இலக்கைத் தொட நம்முடன் யாரும் ஓடத் தயார் இல்லையென்றால், நமக்கு உற்சாகம் உத்வேகம் வருவது எப்படி? போட்டி என்று ஒன்றிருந்தால்தான் நாம் பெற்றது அரியது என்பதை அறிந்து கொள்ள முடியும். போட்டி மனப்பான்மை இல்லாதவன் வெற்றியை அறியாதவன் ஆகிறான்.
 
பொறாமை :

ஒரு வியாதிக்கு பாம்பின் விஷம் மருந்தாகுமாம். அதை அப்படியே கொடுத்தால் விழுங்குவோமா? அதைப் பதப்படுத்தி பக்குவமாக்கி ஒரு துளியிலும் ஆயிரத்தில் ஒரு பங்காக நம் உடம்பில் ஊசி மூலம் ஏற்றும் போது ஏற்றுக் கொள்கிறோம்.அதே போல்தான், வாழ்க்கையில் வெற்றி பெறும் நோக்கம் ஒன்றே குறியாகக் கொண்டு செயல்படும்போது முன்னேற்றப் பாதையில் அடி எடுத்து வைக்க பக்குவமான மனதோடு, ஒரே ஒரு துளி அளவு, வென்றவனைக் கண்டு பொறாமைப்படுங்கள். வெற்றிக்கான ஏணி கண்ணில் தெரியும். அடுத்தவர் வெற்றியைக் கண்டு அவனை வீழ்த்த வேண்டும் என்ற காழ்ப்புணர்ச்சி கலந்த பொறாமைதான் கொடிய விஷம். அது வேண்டாமே!
 
அவநம்பிக்கை :
 
இதுவும் வாழ்க்கையில் நம் நலனுக்குத் தேவையான ஒரு தீயகுணம். யார் மேலும் நம்பிக்கை இல்லாமல் வாழ்வது எவ்வளவு தவறோ அதைவிட அதிக அளவு தவறை, எல்லோர் மேலும், கண் மூடித்தனமான நம்பிக்கை வைப்பதிலும் காணலாம். அடுத்தவர் மீது கொஞ்சம் அவநம்பிக்கையையும் வையுங்கள். எதிராளி உங்களை ஏமாற்ற யோசிப்பான். ஒருவனைத் தவறு செய்யத் தூண்டுவது போலாகிவிடும், நாம் அவர்கள் மேல் வைத்திருக்கும் அபரிமிதமான அர்த்தமற்ற நம்பிக்கை.
 
பொய்யுரைத்தல் :

மெய்தான் பேச வேண்டும் என்று இறைவன் நினைத்திருந்தால் இறைவன் ஏன் பொய்யைப் படைத்தான்? நன்மை விழைந்தால் பொய் சொல்லலாம் தவறில்லை என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அடுத்தவர் வாழ்க்கையைக் கெடுக்கும் வண்ணம் பொய் சொல்லக் கூடாது.அளவுக்கு அதிகமான நம் ஆசையை, பேராசையை நிறைவேற்ற பொய்யுரை கூடாது. அடுத்தவர்களுக்கு பாதகமில்லாமல் நமது நலன் பேண சின்னச் சின்ன பொய்கள் தவறில்லை. முள்ளை முள்ளால் எடுப்பது இதுதான்.இதுபோல் ஒவ்வொரு குணங்களும் சரியான விகிதாசாரத்துடன் உபயோகப்படுத்தி வந்தால் நம் நலமும் பாதுகாக்கப்படும். அனைவரிடமும் நாம் கொண்ட நட்பும் பலப்படும்.
 
கோமதி நடராஜன்
 

3 comments:

  1. அருமையான கட்டுரை.
    எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. என் கருத்துக்களை ஏற்று அதனை பலரும் வாசிக்க வைக்கும் நோக்கத்தோடு உங்கள் வலைப்பூவில் பதிந்தமைக்கு என் நன்றி.

    ReplyDelete