Search This Blog

Wednesday, December 28, 2011

'ஜோக்பால்’

ண்ணா ஹஜாரே குழுவினர் லோக்பாலுக்கு எதிர்ப்பதமாக, எதுகை மோனைக்காக 'ஜோக்பால்’ என்ற வார்த்தையை உருவாக்கி இருக்கலாம். ஆனால், மன்மோகன் அரசு மக்களவையில் தாக்கல் செய்திருக்கும் மசோதாவைப் பார்த்தால், அதுதான் பொருத்தமான பெயர் என்பது தெரிகிறது!இந்த மசோதாவின்படி, மத்தியில் லோக்பால் அமைப்பையும் மாநிலங்களில் லோக் ஆயுக்தா அமைப்புகளையும் உருவாக்கினால், அவை பெயர் அளவிலான அமைப்புகளாகத்தான் இருக்கும். அரசு ஊழியர்கள் தொடங்கி, 10 லட்சத்துக்கு மேலாக வெளிநாட்டு நன்கொடைகளைப் பெறும் தொண்டு நிறுவனங்கள் வரை மக்கள் பணியில் ஈடுபட்டிருக்கும் பெரும்பாலான பிரிவினர், லோக்பால் விசாரணை வரம்புக்குள் வந்துள்ளனர். ஆனால், அரசியல்வாதிகளும் பெருநிறுவனங்களும் எஸ்கேப். முக்கியமாக லஞ்ச ஊழல் முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்தும் முதன்மை அமைப்பான மத்தியப் புலனாய்வு அமைப்பு (சி.பி.ஐ.) நழுவிவிட்டது.


லோக்பால் வரம்புக்குள் பிரதமர் கொண்டுவரப்பட்டுள்ளார். ஆனால் வெளியுறவு, உள்நாட்டுப் பாதுகாப்பு, அணுசக்தி, விண்வெளி தொடர்பான பிரதமரின் நடவடிக்கைகளை லோக்பால் விசாரிக்க முடியாது. மேலும், பிரதமருக்கு எதிரான எந்த விசாரணையையும், லோக்பாலின் அனைத்து உறுப்பினர்கள் அடங்கிய முழுஅமர்வு மட்டுமே மேற்கொள்ள முடியும். அவர்களில் 75 சதவிகித உறுப்பினர்கள் ஆதரவு அளித்தால் மட்டுமே விசாரணைக்கு உத்தரவிட முடியும்.  இவை எல்லாவற்றுக்கும் மேலாக, லோக்பால் அமைப்பின் அதிகாரம் என்னவென்றால், கிட்டத்தட்ட ஓர் அஞ்சல்காரரின் நிலைதான். லோக்பால் தானாகவே விசாரணை நடத்தவோ, விசாரணை நடத்த ஆணையிடவோ முடியாது. மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் (சி.வி.சி.) அல்லது மத்தியப் புலனாய்வு அமைப்பு (சி.பி.ஐ.) மூலம் விசாரிக்கப் பரிந்துரைக்க மட்டுமே முடியும். இந்த விசாரணைகளையும் மேற்பார்வையிட முடியுமே தவிர, வழிநடத்த முடியாது.அரசியல் கட்சிகள் இடையே லோக்பால் தொடர்பாக ஒருமித்த கருத்து இல்லை என்பதுதான் உண்மை. 'இன்னும் வலுவான அமைப்பாக லோக்பால் உருவாக்கப்பட வேண்டும்’ என்று வெளியில் முழங்கும் கட்சிகள், இந்த மசோதாவைக் கண்டே நடுங்குகின்றன. குறிப்பாக, மாநிலக் கட்சிகள் கடுமையாக எதிர்க்கின்றன. மசோதா நிறைவேறினால், எல்லா மாநிலங்களிலும் லோக்ஆயுக்தா அமைப்பைக் கட்​டாயம் உருவாக்க வேண்டும் என்பதால், மாநிலத்தில் தங்களுடைய ஊழல்களை, 'லோக்ஆயுக்தா’ அம்பலப்படுத்தி விடும் என்று நடுங்குகின்றன.

- சமஸ்

No comments:

Post a Comment