Search This Blog

Saturday, December 24, 2011

ஹேப்பி கிறிஸ்மஸ்!


கிறிஸ்துமஸ் என்றதும் நம் நினைவுக்கு வருபவர் சாண்டா கிளாஸ். 4-ஆம் நூற்றாண்டில் டர்கியில் வாழ்ந்த நிக்கலஸ் என்ற பாதிரியாரின் நினைவாக உருவாக்கப்பட்டவர்தான் சாண்டா கிளாஸ்.இவரை கிறிஸ்துமஸ் பண்டிகையுடன் இணைத்து வைத்தவர்கள் ஹாலண்டுகாரர்கள். ‘டச்‘ மொழியில் சின்டர் கிளாஸ் என்று அழைக்கப்பட்ட அவரை அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்த ஹாலண்டுகாரர்கள் அங்கே அறிமுகப்படுத்திய பின் உலகம் முழுவதும் சாண்டா கிளாஸாகப் பிரபலமானார்.

கிறிஸ்துமஸ் பரிசு:


கிறிஸ்துமஸ் நாட்களில் சிம்னி அருகே முன்தினம் சிவப்பு நிற சாக்ஸ் தொங்கவிடப்படுவதற்குப் பின்னணியில் ஒரு சுவையான நிகழ்ச்சி கூறப்படுகிறது.இளகிய மனம் படைத்த நிக்கலஸ், மகள் திருமணத்தை நடத்த பணமின்றி தவித்த ஏழைத் தகப்பனுக்கு உதவ, சில தங்கக் காசுகளை அவர் வீட்டு சிம்னி வழியாகப் போட, அது அங்கே காயவிடப்பட்டிருந்த சாக்ஸில் விழுந்ததாம். இப்படியே அந்த ஏழையின் அடுத்த பெண் திருமணத்திற்கும் உதவுகிறார் நிக்கலஸ். கடைசிப் பெண் திருமணத்தின் போது அவர் தங்கக் காசுகளைப் போடுவதை அந்த ஏழை பார்த்து விடுகிறார். அதிலிருந்து அப்படியொரு பழக்கம் தோன்றியதாம்.

கிறிஸ்துமஸ் அலங்கரிப்பு:

கிறிஸ்துமஸ் விழாவிற்காக வீடு ஒட்டடை அடிக்கப்பட்டு சிலந்திகள் விரட்டப்பட்டன. ஆனால் இரவு சில சிலந்திக் குட்டிகள் கிறிஸ்துமஸ் மர அலங்கரிப்பைக் காணும் ஆவலுடன் வந்தன. மரத்தில் ஏறி இறங்கி விளையாடி அவை விட்டுச் சென்ற இழைகளால் கிறிஸ்துமஸ் மரத்தின் அழகு குலைந்தது. அங்கே வந்த குழந்தை ஏசுவின் கைபட்டதும் அவை வெள்ளி இழைகளாக மாறி மினுமினுத்தனவாம்.இதை நினைவுகூற ஏற்பட்டதுதான் ‘டின்சல்’ எனப்படும் தங்க ஜரிகை அலங்கரிப்பு. சிலர் சிறு சிலந்தி பொம்மைகளையும் கிறிஸ்துமஸ் மரத்தில் கட்டித் தொங்கி விடுகிறார்கள்.

யூல் லாஃக்:


கிறிஸ்துமஸ் தொடங்கி 12 நாட்கள் வரை யூல் லாஃக் எனப்படும் ஒருவகை மரத்துண்டுகளை எரிக்கும் வழக்கமும் சில நாடுகளில் உண்டு. இது அதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும் என்பது நம்பிக்கை. சிலர் இந்த யூல் லாஃகை போன்ற வடிவமைப்பில் யூல்டைடு லாக் என்ற சிறப்பு வகை கேக்கைத் தயாரிப்பார்கள்.

12 நாள் கொண்டாட்டம்:

பழங்காலத்தில் கிறிஸ்துமஸ் 12 நாட்கள் கொண்டாடப்பட்டது. கிறிஸ்து பிறந்ததை அறிந்து அவரைக் காண மூன்று அரசர்கள் பரிசுகளுடன் வந்தனர். அவர்கள் பன்னிரண்டு நாட்கள் பயணம் செய்து பெத்லஹேம் வந்தடைந்தனர். இன்றும் பலர் 12 நாட்கள் கழித்து ஜனவரி 5 அன்றுதான் கிறிஸ்துமஸ் மர அலங்கரிப்பை நீக்கி அப்புறப்படுத்துவார்கள்.

பாக்ஸர் டே:

கிறிஸ்துமஸ் மறு தினம் பாக்ஸர் டேவாக கொண்டாடப்படுகிறது. சில நாடுகளில் அன்று அரசாங்க விடுமுறை கூடக் கொடுக்கப்படுகிறது. இந்தத் தினத்திற்கு ‘பாக்ஸர் டே’ என்ற பெயர் வர பல காரணங்கள் கூறப்படுகின்றன.

* பழங்காலத்தில் கிறிஸ்துமஸுக்கு மறு தினம்தான் தேவாலயத்தின் உண்டியல்கள் திறக்கப்பட்டதாம்.

* கிறிஸ்துமஸ் விடுமுறை முடிந்து மறு தினம் வேலைக்குத் திரும்பும் வேலைக்காரர்கள் ஒரு பெட்டி கொண்டு வருவர். அதில் முதலாளி பரிசுப்பணத்தை போடுவாராம். 

* கிறிஸ்துமஸ் அன்றும் வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளவர்கள் இன்றுதான் பரிசுப் பெட்டியைத் திறந்து பார்ப்பார்கள்.

கிறிஸ்துமஸ் கேரல்:

கேரல் என்றால் ஆனந்தப் பாட்டு என்று பொருள். கிறிஸ்து பிறந்த போது தேவதைகள் ஆனந்த கீதம் பாடித் தொடங்கி வைத்ததுதான் இந்த கிறிஸ்துமஸ் கேரல் பாடும் வழக்கத்திற்கு வித்திட்டது எனலாம். கிறிஸ்துமஸ் விழாவிற்கு சில தினங்களுக்கு முன்பிருந்தே பக்திப் பாடல்களை பாடியபடி கையில் மெழுகுவத்தி ஏந்தி சிறுவர் முதல் பெரியவர் வரை வீதிகளில் உலா வருவார்கள். இந்தப் பழக்கம் சுமார் 17ஆம் நூற்றாண்டிலிருந்துதான் தொடங்கியது.

ஊர்ப் பெயர்கள்:

அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில் சாண்டா கிளாஸ் என்ற பெயரிலும் கிறிஸ்துமஸ் என்ற பெயரிலும் ஊர்கள் உள்ளன. இண்டியானா மாநிலத்திலும் சாண்டா கிளாஸ் என்ற பெயரிலும், ஃபிளோரிடாவில் கிறிஸ்துமஸ் என்ற பெயரிலும் ஊர்கள் உள்ளன.

சாண்டாவுக்குப் பரிசு:

பொதுவாக சாண்டாதான் குழந்தைகளுக்குப் பரிசு கொடுப்பார். ஆனால் சில மேலைநாட்டுக் குழந்தைகள் சாண்டாவுக்குச் சாப்பிட ஏதேனும் வைக்கிறார்கள்.நியூஸ்லாண்டில் குளிர்பானங்களும், (அங்கே கோடைக்காலம் என்பதால்), அயர்லாண்டில் ‘பை’ எனப்படும் ஒருவகை தின்பண்டத்தையும் கிறிஸ்துமஸ் மரத்தின் அடியில் சாண்டாவுக்காக வைக்கின்றனர். ஜெர்மனியில் தங்களுக்குத் தேவையான பரிசைப் படமாக வரைந்து அதன் மீது சர்க்கரை வைத்து ஜன்னல் அருகிலும், நார்வே குழந்தைகள் போரிட்ஜ் எனப்படும் பாயசம் போன்ற இனிப்பைத் திறந்த வெளியிலும், ஸ்வீடனில் ஃப்ரௌனீஸ் என்ற தின்பண்டமும் சாண்டாவுக்காக இரவில் விட்டு வைக்கிறார்கள்.வீட்டு முகப்பில் நாம் மாவிலை கட்டுவது போல ஹோலி என்ற பசும் இலைகளை வைப்பர். ஏசு கிறிஸ்து நடந்த பாதையில் முளைத்ததாகக் கருதப்படும் இந்த ஹோலி செடி, கடுமையான பனியிலும் பசுமையாக இருக்கும். தீயசக்திகள் வீட்டுக்குள் நுழையாத வண்ணம் காக்கும் தன்மை இந்த ஹோலி செடிக்கு உள்ளது என்பதும் நம்பிக்கை.

- விஜயலட்சுமி   
     

2 comments: