Search This Blog

Saturday, December 24, 2011

தமிழ் சினிமா தடுமாறுவது ஏன்?


திரைப்படங்கள் இன்று 10 நாள் ஓடினாலே பெரிய விஷயமாகக் கருதப்படுகிறது. சிறிய பட்ஜெட் படங்கள் திரையிடப்பட முடியாத நிலை.சிறிய பட்ஜெட் நல்ல படங்கள் வராததற்கு யார் காரணம், படத் தயாரிப்பாளர்களா? திரையரங்கம் பற்றாக் குறையா? சிறிய படங்களை வாங்க மறுக்கும் விநியோகஸ்தர்களா? அல்லது சன் குழுமம் - ரிலையன்ஸ் போன்ற பெரிய முதலைகளின் ஆதிக்கமா?

இயக்குனர் டி.பி. கஜேந்திரன்:


ஆர்வக் கோளாறில் படம் தயாரிக்க வருபவர்களால்தான் இன்று சின்ன பட்ஜெட் படம் திரையிடப்பட முடியாத நிலை உள்ளது. படம் பற்றிய நுணுக்கம் இல்லாமல் படம் எடுப்பது. அவர்களே நடிப்பது, அவர்களே கதை, அவர்களே இயக்குவது. பிறகு எப்படி விநியோகஸ்தர்கள் வாங்குவார்கள். தன்னை பிரகடனப்படுத்த வேண்டும் என்ற ஆசை. தான் புகழ்பட வேண்டும் என்ற வெறி, அப்புறம் நஷ்டம். இதற்குத் தீர்வு காண வேண்டும் என்றால், சினிமா சினிமாவாக வேண்டும். ஆக்கிரமிப்பு அகற்றப்பட வேண்டும். கட்சி பேதமில்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரிய ஹீரோ என்றால் 10 பேர். அவர்கள் படம் வருடம் முழுவதும் ஓடாது. எனவே, சிறிய பட்ஜெட் படங்கள் வளர அரசுதான் கன்ட்ரோல் கொண்டு வரவேண்டும். தியேட்டர் கிடைக்க வழி வகுக்க வேண்டும்.

‘திவ்யா மீது காதல்’ மதன் - தயாரிப்பாளர், நடிகர், இயக்குனர்:


சின்ன பட்ஜெட் படங்களுக்கு தியேட்டர் கிடைக்காதது; தியேட்டர் குறைந்ததுதான் காரணம். எல்லாம் ‘மால்’ ஆகிவிட்டது. அங்கு சின்னப் படங்கள் போடுவதை கௌரவக் குறைச்சலாக நினைக்கிறார்கள். செக்ஸ் படங்களை வாங்கி வெளியிடுகிறார்கள். அதற்கு தியேட்டர் கிடைக்கிறது. ஆனால், நல்ல படங்கள் வாங்க மறுக்கிறார்கள். நல்ல படம் பண்ணினால் திரையரங்கு, விநியோகஸ்தர்கள் ஆதரவு தர வேண்டும். என்னுடைய படம் முடிந்து ஒரு வருடம் ஆகிறது. ஆனால், வெளியிட முடியவில்லை. காரணம், ஒவ்வொரு 2 மாதம் முன்பும் பெரிய படங்கள் ஆக்கிரமித்துக் கொள்கின்றன. இந்த டிசம்பரில் வெளியிட நினைக்கிறேன். இன்னும் பெரிய படங்கள் 10 இருக்கிறது. எப்படித்தான் வெளியிடுவது. இந்த நிலை மாற வேண்டும்."

தேசிய விருது பெற்ற இயக்குனர் சீனு ராமசாமி:


‘தென்மேற்குப் பருவ காற்று’ படத்தை வெளியிட முடியாமல் நான் பட்ட பாடு பிரசவ வலியை விடக் கொடுமையானது. தியேட்டரில் நல்ல வரவேற்போடு மக்கள் பேசுவதற்குள் படத்தை எடுத்துவிட்டார்கள். என்னுடைய படம் 25வது நாள் போஸ்டர் எங்காவது ஒட்டப்படுமா என்று ஏங்கியிருக்கிறேன்.நல்ல படங்களைத் திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்களை எல்லோரும் கொண்டாட வேண்டும். சின்ன பட்ஜெட் படங்கள்தான் சினிமாவுக்குத் தரமான தமிழ்க் கலாசாரப் படமாக உருவாகும். படத்தைப் பார்த்து மக்கள் பேசப்படும்வரை, படம் தியேட்டரில் ஓட்டப்பட வேண்டும்." 

‘தாண்டவக்கோன்’ பட இயக்குனர் சுப்பு சுஜாதா:

சினிமா உலகில் துரோகங்கள் மிகவும் மலிந்து போய்விட்டன. நாம் யாரை பாவம் என்று உள்ளே கொண்டு வருகிறோமோ, அவர்களே நமக்கு ஆப்பு வைக்கிறார்கள். ஒவ்வொரு இயக்குனரையும் அவர்களது கருத்தை, சுதந்திரமாகச் சொல்ல விட்டால்தான் நல்ல படைப்பைத் தர முடியும். சின்ன பட்ஜெட் படங்கள் தர மில்லை. புதுமுக நடிகர்கள் நடிக்கிறார்கள். அதனால், விநியோகஸ்தர்கள் வாங்கி வெளியிட மறுக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை மறுக்கிறேன். அப்படிப் பார்த்தால் பாலா சார், பிரபுசாலமன் சார் எப்படி நிலைத்திருக்க முடியும். திரை அரங்க உரிமையாளர், விநியோகஸ்தர்களை நாம் குறை சொல்வதைவிட ‘யூனிட்’ ஒற்றுமை மிக முக்கியம்’. அப்போதுதான் நல்ல படம் தர முடியும்." 

ஒளிப்பதிவாளர் கிச்சா:

இன்றைய சினிமா டிஜிட்டல் உலகமாக மாறிவிட்டது. செலவும் குறைகிறது. ஆனால், ஃபிலிமில் படம் செய்ய பட்ஜெட் எகிறுகிறது. ஒரு படத்துக்கு 30 லட்சம் ஃபிலிம் வாங்க முன் பணம் கட்ட வேண்டும். அப்புறம் தினமும் ஷூட்டிங் செலவு. இது பெரிய தயாரிப்பாளர்களால்தான் முடியும்.சின்னத் தயாரிப்பாளர்கள் டிஜிட்டல் முறையில் 30 முதல் 50 லட்சத்துக்குள் படம் முடித்து விடுகிறார்கள். ஆனால், சென்சார், வீடியோ சென்சார் என்று அறிக்கை தருகிறார்கள். வீடியோ சென்சாரை விநியோகஸ்தர்கள் வாங்க மறுக்கிறார்கள். ரசிகர்களுக்குத் தேவை நல்ல படமா? நல்ல கதையா என்றுதான் கேட்கிறார். இது ஃபிலிமா, டிஜிட்டலா என்று பார்ப்பதில்லை. எனவே டிஜிட்டல் படங்களையும் விநியோகஸ்தர்கள் வாங்க வேண்டும். அப்போதுதான் இந்த நிலை மாறும்."

‘முன்னவர்’ பட இயக்குனர் ஆர்.கே. வேல்ராஜ்:

ஆசிரியரைப் பெருமைப்படுத்தும் விதமான படம் எடுக்க வேண்டும் என்று நல்ல தரமான படம் எடுத்து வருடங்கள் ஆகிவிட்டன. இன்னமும் ‘படம் வெளியிட முடியவில்லை. படம் பார்ப்பவர்கள் ‘ஏன் கவர்ச்சி இல்லை, வன்முறை இல்லை’ என்று கேட்கிறார்கள். அப்படியிருந்தால் தான் படம் வாங்க முடியும் என்று சொல்வதைப்போல் உள்ளது. நல்ல தரமான படம் எடுத்தால் இவ்வளவு சோதனையா என நொந்து போய் உள்ளேன். அப்புறம் புதுமுகங்கள் வைத்துப் படம் எடுத்துள்ளீர்கள். ஆர்ட்டிஸ்ட் வேல்யூ இல்லை என்கிறார்கள். கொஞ்சம் பிரபலமான நடிகர் ஒரு கோடி என்கிறார்கள். எங்கே போவது? என்னுடைய படமே 60 லட்சம் பட்ஜெட்தான். நல்ல கதை, கவர்ச்சி இல்லை. தரமான படம் தமிழுக்குப் பெருமை சேர்க்கும் படம்தான் என்ன பண்றது? இனிமேல் சின்ன பட்ஜெட்டில் படம் எடுப்பவர்கள் 6 லட்ச ரூபாய், பட்ஜெட் என்றால் படத்தைச் சொந்தமாக வெளியிட, மேலும் 60 லட்சம் வைத்துக் கொண்டால் மட்டுமே சின்ன பட்ஜெட் படம் வெளியிட முடியும்."

ராஜா பக்கிரிசாமி - மேனேஜர் - தங்கர்பச்சான் அஸிஸ்டெண்ட் (மெரீனா - படத் தயாரிப்பு நிர்வாகி):

நார்த் இண்டியர்கள் ஆதிக்கம் தமிழகத்தில் பரவிவிட்டது. மெகா மார்ட் போல் தியேட்டர்கள் முழுதும் சன் டி.வி. குழுமத்திடம், ரிலையன்ஸ் குழுமத்திடம் உள்ளது. 1450 தியேட்டரில் குறைந்தது 900 தியேட்டர்கள் அவர்கள் வசம் உள்ளது. இதை மீட்டு எடுத்தால் ஒழிய சின்னப் படங்கள் தலை நிமிர வாய்ப்பே இல்லை. இன்று தமிழகம் முழுதும் அசாம், சிக்கிம், மணிப்பூர், அருணாசலப் பிரதேசம், மேகாலயா மக்கள் நிரம்பி வழிகிறார்கள். அவர்களுக்காக இனி ஹிந்திப்படங்கள் ஸ்பெஷலாகப் போட வேண்டி இருக்கும். புதுமுகம் என்ற பெயரில் ரசனை இல்லாதவர்களை நடிக்க வைக்கும் தயாரிப்பாளர்கள் மாற வேண்டும். தியேட்டர்கள் முன்போல, சுதந்திரமாகச் செயல்பட வேண்டும். அரசுதான் முடிவு செய்ய வேண்டும்."

- விஜய்கோபால்      

 

1 comment: