Search This Blog

Saturday, December 24, 2011

பேசுங்கள் ஜெயா...பேசாதீர்கள் மன்மோகன்...! , ஓ பக்கங்கள் - ஞாநி

1. பேசுங்கள் ஜெயா :
 
 
சசிகலா குடும்பத்தினரைக் கூண்டோடு அ.தி. மு.கவிலிருந்து ஜெயலலிதா வெளியேற்றியிருப்பது இதுவரை ஜெயலலிதா செய்த பல்வேறு அதிரடி நடவடிக்கைகளிலேயே உச்சமானதாகக் கருதப்படுகிறது. ஆனால், ஏன் இந்த நடவடிக்கை என்பதுதான் மர்மமாக இருக்கிறது. ஜெயலலிதா-சசிகலா நட்பு தொடர்பான எல்லாமே எப்போதுமே மர்மமாகவே இருந்துவருவதைப் போலவே இப்போதும் மர்மம் தொடர்கிறது.தி.மு.கவில் எப்படி கலைஞர் கருணாநிதியின் குடும்பத்தில் பல்வேறு கிளைகள் கட்சியிலும் ஆட்சியிலும் ஆதிக்கம் செலுத்தினவோ அதற்கு நிகராக அ.தி.மு.க.வில் சசிகலா குடும்பம் இருந்து வந்திருக்கிறது என்பதே உண்மை. ஆனால் இரண்டுக்கும் ஒரு முக்கியமான அடிப்படை வித்தியாசம் இருக்கிறது. தி.மு.க.வில் செல்வாக்குடன் இருந்த கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள் பெரும்பாலோர் கட்சியிலும் ஆட்சியிலும் அதிகார பூர்வமான பொறுப்புகளில் இருந்தார்கள். அதனால் பொதுமக்களுக்குப் பதில் சொல்லியாக வேண்டிய பொறுப்பும் கட்டாயமும் அவர்களுக்கு இருந்தது. ஆனால், சசிகலாவின் குடும்பத்தினர் அப்படி எந்தப் பொறுப்பிலும் இல்லாமலே ஆதிக்கம் செலுத்தினார்கள். பொது மக்களுக்குப் பதில் சொல்லவேண்டிய கட்டாயத்திலிருந்து இதுவரை தப்பித்தே வந்திருக்கிறார்கள். சசிகலா இதுவரை பத்திரிகைகளுடன் பேசியதோ அறிக்கை வெளியிட்டதோ கிடையாது.சசிகலா குடும்பத்தினர் என்ன செய்தாலும் அத்தனைக்கும் ஜெயலலிதாவே பொறுப்பேற்க வேண்டி வந்திருக்கிறது. ஜெயலலிதாவே பதில் சொல்ல வேண்டி வந்துள்ளது. ஜெயலலிதா ஒவ்வொரு முறை ஆட்சியில் இருக்கும்போதும் சம்பாதித்த கெட்ட பெயருக்கு சரி பாதி காரணம் சசிகலா குடும்பத்தைச் சார்ந்த செயல்கள்தான். வளர்ப்பு மகன் திருமணம் முதல் சிறுதாவூர், கொடநாடு, டான்சி, ப்ளசண்ட் ஸ்டே விவகாரங்கள் வரை சசிகலா குடும்பத்தின் பங்களிப்பு முக்கியமானது. அரசு ஊழியர் நீக்கம், சமச்சீர் கல்வி குளறுபடி, அண்ணா நூலக மாற்றம் போன்ற அராஜகங்களுக்கு சசிகலாவைப் பழிக்க முடியாது. அவற்றுக்கு ஜெயலலிதாவே முழுப் பொறுப்பு.சுமார் இருபதாண்டுகள் ஜெயலலிதாவுடன் ஒரே வீட்டில் குடியிருந்து அவரைப் பராமரிக்கும் பொறுப்பை நிர்வகித்து வந்த சசிகலா இப்போது தூக்கி எறியப்பட்டிருப்பதற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. சசிகலா குடும்பத்தினரின் அத்துமீறல்கள், அராஜகங்கள் அளவு கடந்து போய்விட்டன. (இதற்கெல்லாம் ஏதாவது அளவு உண்டா என்ன?). இனியும் சகிக்க முடியாது என்று உயர் அரசு அதிகாரிகள் நேரடியாகவே ஜெயலலிதாவிடம் புகார் செய்துவிட்டனர். ஜெயலலிதாவுக்கே தெரியாமல் பல பேரங்களை சசிகலா வகையறாக்கள் நடத்தி வந்தனர் என்பது இப்போது ஜெயாவுக்குத் தெரிந்துவிட்டது. சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயா தண்டிக்கப்பட்டால், கட்சி, ஆட்சி முழுவதையும் சசிகலா குடும்பமே கைப்பற்ற பெங்களூருவில் சதித் திட்டம் தீட்டப்பட்டது. இனி ஜெயலலிதாவின் உயிருக்கே கூட ஆபத்து என்ற நிலையில் ஜெயலலிதா தம் பால்ய நண்பர், பத்திரிகையாளர் சோவின் உதவியை நாடினார். சோவும் நரேந்திர மோடியும் சேர்ந்து செய்த ஏற்பாட்டின்படி குஜராத்திலிருந்து நம்பிக்கைக்குரிய பாதுகாவலர்களும் நர்சுகளும் போயஸ் தோட்டத்தில் குடியேற்றப்பட்டு சசிகலா வெளியேற்றப்பட்டார். இப்படிப் பல விஷயங்கள் பத்திரிகைகளில் செய்திகளாக வலம் வருகின்றன. இவற்றில் எது உண்மை, எது பொய் என்பது கண்டறியமுடியாத மர்மம்.
 
 
இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஜெயலலிதா வாயைத் திறக்க வேண்டும். பேசவேண்டும். ஏனென்றால் ஏன் அவர் இப்போது சசிகலா குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறார் என்பதை மக்களுக்குச் சொல்லியாக வேண்டிய கடமை அவருக்கு இருக்கிறது. இதற்கு முன்னர் சசிகலாவைப் பற்றிய விமர்சனங்கள் பத்திரிகைகளில் வந்தபோது, என் உடன்பிறவா சகோதரி என்றும் தம்மைக் கவனிக்கும் பொறுப்பில் இருப்பவர் என்றும், அவருக்கும் கட்சி, ஆட்சிக்கும் தொடர்பு இல்லை என்றும் அறிக்கை வெளியிட்டவர் ஜெயலலிதா. பின்னர் சசிகலா குடும்பத்தினர் பலருக்கும் கட்சிப் பொறுப்புகளைக் கொடுத்ததும் அவர்தான்.சசிகலா கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி பேரங்கள் முதல்; ஆட்சியில் அரசு நிர்வாக பேரங்கள் வரை அனைத்திலும் பங்கேற்று வந்தார் என்று நேரடியாக இவற்றில் சம்பந்தப்பட்ட பலரும் தனிப் பேச்சில் சொல்கிறார்கள். அப்படி அவரை இதுவரை பங்கேற்க அனுமதித்தவர் ஜெயலலிதாதான். ஜெயலலிதாவின் சம்மதம் இல்லாமல் சசிகலா கோட்டைக்குச் செல்ல முடியாது. அமைச்சரவைக் கூட்டங்களுக்குச் செல்லமுடியாது. அமைச்சர்களுடன் பேசி முடிவுகளை எடுக்க முடியாது. இத்தனை காலம் இதையெல்லாம் அனுமதித்த ஜெயலலிதா ஏன் இதுவரை இதை அனுமதித்தார் என்பதையும் சொல்ல வேண்டும். இனி அனுமதிக்க முடியாது என்ற நிலை அவருக்கு இப்போது ஏன் வந்தது என்பதையும் சொல்ல வேண்டும். கடுமையான தவறுகளை சசிகலா குடும்பத்தினர் செய்திருந்தார்கள் என்றால் அதற்கு, கட்சியிலிருந்து நீக்குவது மட்டும் தண்டனையாகாது. சட்டப் படியான தண்டனைகள் தரப் படவேண்டும்.இவை எதுவும் உட்கட்சி விவகாரம் என்றும் அந்தரங்க விஷயம் என்றும் தப்பிக்க முடியாது. உட்கட்சி விவகாரங்கள் கூட பொதுமக்கள் அக்கறைக்குரியவைதான். ஏனென்றால், கட்சி என்பதே பொது விஷயம்தான். இன்று தனியார் வணிக நிறுவனங்கள் கூட நீதிமன்றம் முன்பு தங்கள் இயக்குனர் குழுவில் என்ன நடந்தது என்பதைப் பகிரங்கப்படுத்த வேண்டிய சட்டக் கட்டாயம் உள்ளது. ஆட்சி நடத்தும் அரசியல் கட்சிக்கு இதில் எந்தச் சலுகையும் தரமுடியாது. சசிகலா குடும்பத்தை வெளியேற்றியது; நிச்சயம் ஜெயலலிதாவுக்கு, கட்சியிலும் ஆட்சியிலும் பொதுமக்கள் செல்வாக்கிலும் கணிசமான லாபங்களை ஏற்படுத்தக் கூடியது என்பதில் சந்தேகமில்லை. அதே சமயம் இதுவரை ஏன் சசிகலாவை அவர் சீராட்டினார், இப்போது ஏன் தூக்கி எறிகிறார் என்ற இரண்டுக்கும் மக்களிடம் காரணம் சொல்ல வேண்டிய தார்மிகக் கடமை அவருக்கு இருக்கிறது. எனவே ஜெயலலிதாவின் மௌனம் தவறானது. பேசினால் சசிகலா தரப்பிலிருந்து ஜெயலலிதாவுக்கு எதிரான விஷயங்கள் அம்பலப்படுத்தப்படும் என்ற அச்சத்தினால் மௌனமாக இருக்கிறார் என்றே இந்த மௌனம் பொருள் கொள்ளப்படும். எனவே ஜெயலலிதா இப்போதேனும் எல்லா உண்மைகளையும் மக்களிடம் பேசியேயாக வேண்டும். 
 
2. பேசாதீர்கள் மன்மோகன்!
 
 
பிரதமர் மன்மோகன்சிங் பேசாமல் இருக்கிற வரையில் அவரை ஓர் அறிஞராக, சிறந்த அரசியல்வாதியாக நாம் நம்பிவிடுகிற வசதி அவருக்கு இருக்கிறது. அமைதியானவர், கண்ணியமானவரென்ற பிம்பத்தில் அவர் ஒளிந்து கொள்ள முடிகிறது. ஆனால், அவர் பேசத் தொடங்கினால் அசல் மன்மோகன்சிங் யாரென்று தெரிந்துபோய்விடுகிறது.ரஷ்யாவில் அவர் பேசிய பேச்சு அவரை தமிழக மக்களுக்குக் காட்டிக் கொடுத்துவிட்டது. ரஷ்ய உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள கூடங்குளம் அணு உலை இன்னும் இரு வாரங்களில் இயங்க ஆரம்பித்துவிடும் என்று அவர் அங்கே பேசியிருக்கிறார். அப்படியானால் கூடங்குளம் தொடர்பாக அவர் இதுவரை தமிழக மக்களுக்குச் சொன்னதெல்லாம் பொய் என்றாகி விட்டது. மக்களின் அச்சத்தைத் தீர்க்கும் வரை அணு உலையில் எந்த வேலையும் நடக்காது என்றது பொய்தானே? தமிழக அரசு வேண்டுகோளின்படி அமைத்த நிபுணர் குழுவால் அச்சத்தைப் போக்க முடியவில்லை. ஆனாலும் இரு வாரங்களில் அணு உலை இயங்க முடியும் என்றால், அங்கே பராமரிப்பு மட்டுமே நடந்து வருகிறது என்று சொன்னதும் பொய்தானே?எல்லாவற்றுக்கும் மேலாக மன்மோகன் சிங் ரஷ்யாவில் நிருபர்களிடம் பேசும் போது, சுமார் 14 ஆயிரம் கோடி ரூபாய் செலவிட்டு அமைத்த உலையை அப்படி எளிதில் மூடிவிட்டுப் போய்விடமுடியாது என்று பேசியிருக்கிறார். அதாவது அவருக்கு 14 ஆயிரம் கோடி ரூபாய்தான் முக்கியம். மக்களின் நலனோ, அச்சமோ அதை விட சின்ன விஷயம்தான்.இடிந்தகரை கிராமத்திலிருந்து வந்த சாதாரணப் பெண்ணிடம் சென்னை நிருபர் சந்திப்பில் ஒரு நிருபர் கேட்டார்: இத்தனை கோடி ரூபாய் செலவு செய்து கட்டியபிறகு மூடச் சொல்வது நியாயமா? பணம் வீணாகிறதே? அந்தப் பெண் சொன்ன பதில்: உங்க மகளுக்குத் திருமணம் நிச்சயம் செய்து எல்லா செலவும் பண்ணி விடிந்தால் கல்யாணம் நடத்தப்போறீங்க. பையனுக்கு எய்ட்ஸ் இருக்குன்னு முந்தின ராத்திரி தெரிய வந்தா, அடுத்த நாள் காலையில கல்யாணம் செய்வீங்களா? இத்தனை செலவு பண்ணிட்டோம், கல்யாணம் நடக்கட்டும்னு விடுவீங்களா? பாமரப் பெண்ணுக்குப் புரிகிற விஷயம் மெத்தப் படித்த மேதாவி மன்மோகனுக்குப் புரிவதில்லை. அவருக்குப் புரிவதெல்லாம் அவருடைய லட்சிய பூமியான அமெரிக்காவில் சொல்வதும் செய்வதும்தான் என்பதால், அவருக்காக அமெரிக்க அணு உலைகள் வரலாற்றிலிருந்து ஒரு தகவலைச் சொல்ல விரும்புகிறேன்.1979ல் த்ரீமைல் ஐலண்ட் அணு உலையில் விபத்து ஏற்படுவதற்கு முன்பு 1973ல் நியூயார்க் பகுதியில் இருக்கும் லாங் ஐலண்ட் என்ற இடத்தில் கட்ட ஆரம்பித்த ஷோர்ஹேம் ப்ளாண்ட்டை 1984ல் கட்டி முடித்தார்கள். 1983ல் அமெரிக்க மத்திய அரசு இந்த உலையில் விபத்து ஏற்பட்டால் எப்படி மக்களை வெளியேற்றவேண்டும் என்பதற்கான அவசர கால திட்டத்தை உருவாக்கி வெளியிட்டது. இதற்கு உள்ளூர் பஞ்சாயத்தான சஃபோக் பகுதி கவுண்ட்டியின் ஒப்புதல் வேண்டும். ஆனால், அதை ஏற்கமுடியாது என்று உலை இருக்கும் பகுதியான சஃபோக் கவுண்ட்டி (பஞ்சாயத்து) தெரிவித்தது. 
 
ஆறு பில்லியன் டாலரில் (சுமார்) கட்டி முடிக்கப்பட்ட இந்த அணு உலை வேண்டாம் என்று அங்கே மக்கள் வாக்களித்தார்கள். அதை அரசு ஏற்றுக் கொண்டது. உலை சொந்தக்காரரான லில்கோ கம்பெனிக்கு அந்தப் பணத்தை அரசு செலுத்தியது. உலை மூடும் செலவான இன்னொரு 186 மில்லியன் டாலரையும் அரசு ஏற்றது. இத்தனையும், கட்டி முடித்து இயங்கவே ஆரம்பிக்காத அணு உலைக்கு! இப்படி உலையை மூடும் செலவுக்காக பொது மக்கள் அடுத்த 30 வருடத்துக்கு மின் கட்டணத்தில் மூன்று சதவிகிதம் சர்சார்ஜ் செலுத்தும்படி அரசு கோரியதை சஃபோக் கவுண்ட்டி ஏற்றுக்கொண்டது. அங்கே யாரும் அய்யோ மின்சாரம் தேவை என்று கூப்பாடு போடவில்லை. இத்தனைக்கும் வருடந்தோறும் அப்போது சபோக் மின் தேவை 1 சதவிகிதம் அதிகரித்துக் கொண்டிருந்தது. மூடப்பட்ட அணு உலை சிறு மாற்றங்களுடன் 2002ல் இயற்கை எரி வாயுவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் ஆலையாக மாற்றப்பட்டது. ஷோர்ஹேம் உலை மூடப்பட்டபிறகு அமெரிக்காவில் புதிய அணு உலை எதுவும் ஆரம்பிக்கப்படவே இல்லை.அமெரிக்க தாசரான மன்மோகன் இந்த வரலாற்று நிகழ்விலிருந்து சில பாடங்களைக் கற்க வேண்டும். பல கோடி ரூபாய் செலவழித்துவிட்டதற்காக ஆபத்தான உலையை ஆரம்பித்துவிடக் கூடாது. உண்மையான ஜனநாயகம் என்பது மத்திய அரசு தன் விருப்பத்தை பஞ்சாயத்துகளின் மீது திணிப்பது அல்ல. உலை இருக்கும் பகுதியின் பஞ்சாயத்து எடுக்கும் முடிவுக்குதான் மத்திய அரசு கட்டுப்பட வேண்டும். மத்திய அரசின் முடிவுக்குத் தலையாட்டுவது பஞ்சாயத்தின் வேலையல்ல. கூடங்குளம் பகுதியில் சென்ற வருடமே எல்லா பஞ்சாயத்துகளும் கூடி அணு உலை இங்கே வேண்டாம் என்று தீர்மானம் நிறைவேற்றியிருக்கின்றன. கட்டிய உலையை வேறு எரிபொருள் கொண்டு இயக்கமுடியுமா என்று ஆராய்வதுதான் விஞ்ஞானிகளின் வேலை. மன்மோகன் வாயைத் திறந்தாலே அவர் அரசின் உண்மையான உள்நோக்கம் என்னவென்பது தெரிந்துபோய்விடுகிறது. பேசாமல் இருப்பதுதான் அவருக்கு நல்லது. அதை விட நல்லது மற்றவர்கள் பேசுவதைக் கேட்பது. குறிப்பாக கூடங்குளத்திலிருந்து சாதாரண மக்களும் அவர்கள் சார்பாக, சூழல் அறிஞர்களும் பேசுவதைக் கேட்பது.
 
இந்த வார கேள்வி
 
 
விளம்பரப் படங்களில் நடித்துக் கிடைத்த வருமானத்துக்கு வரி கட்டாமல் தவிர்ப்பதற்காக, தம் தொழில் நடிப்பு என்று கூசாமல் பொய் சொன்ன கிரிக்கெட் ஆட்டக்காரர் சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது தருவது எப்படி நியாயமாகும்? பாரத ரத்னா விருதுக்கான தகுதி என்பது திறமை மட்டும்தானா? மதிப்பீடுகள், ஒழுக்க நெறிகள் எதுவும் கிடையாதா?  

2 comments:

  1. பாரத ரத்னா விருதுக்கான தகுதி என்பது திறமை மட்டும்தானா? மதிப்பீடுகள், ஒழுக்க நெறிகள் எதுவும் கிடையாதா?
    நியாயமான கேள்வி..

    ReplyDelete
  2. நல்ல பதிவு.
    நன்றி.

    ReplyDelete