Search This Blog

Sunday, January 27, 2013

எனது இந்தியா (காட்டின் மௌனம்!) - எஸ். ராமகிருஷ்ணன்.......

தனது கனவின் சிறிய பகுதி மட்டுமே நனவானது என்ற அவரது ஆதங்கமே, மீண்டும் அவர் இந்தியா வருவதற்குக் காரணமானது. 1684-ம் ஆண்டு டச்சு கிழக்கிந்தியக் கம்பெனியில் நடந்த முறைகேடுகளைக் களைந்து நிர்வாகத்தைச் சீரமைக்கும் பொறுப்பை ஹென்ரிக் மீண்டும் ஏற்றுக்கொண்டார். அவரது மகனை இலங்கையின் வணிக அதிகாரியாக நியமித்தது டச்சு வணிக நிறுவனம். அதன் காரணமாக, இலங்கையில் தங்கியிருந்தபடியே மலபாரில் உள்ள தாவரங்களைத் தொகுத்து வகைப்பட்டியல் செய்து மீதம் உள்ள 10 தொகுதிகளையும் வெளியிட்டார் ஹென்ரிக். இந்தப் புத்தகத்தில் 794 சித்திரங்கள் இடம் பெற்றுள்ளன. மதபோதகரான மத்தியாஸ் தனது குழுவினருடன் இணைந்து இந்தச் சித்திரங்களை மிகத் துல்லியமாக வரைந்து இருக்கிறார்.

இந்தியாவின் அரிய தாவர வகைகளைப் பற்றிய இந்தப் புத்தகம் வெளியாகி, உலக அளவில் மிகப்பெரிய கவனம் பெற்றதுடன் ஆம்ஸ்டர்டாமில் ஒரு பெரிய தாவரவியல் பூங்கா அமையவும் வகை செய்தது. 200 ஆண்டுகளுக்கும் மேலாக லத்தீன் அறிந்தவர்களால் மட்டுமே வாசிக்கப்பட்டு வந்த இந்தப் புத்தகத்தை, டாக்டர் மணிபால் மற்றும் கோவிந்தன் குட்டி ஆகிய இருவரும் சேர்ந்து ஆங்கிலத்தில் இப்போது மொழிபெயர்த்து இருக்கின்றனர். 'ஹோர்டஸ் மலபாரிக்கஸ்’ என்ற இந்தப் புத்தகம், வெறும் தாவரவியல் பற்றியது மட்டும் அல்ல. கேரளாவின் வனப் பகுதி 300 ஆண்டுகளுக்கு முன், எத்தனை விதமான அரிய தாவரங்களுடன் இருந்தது? இந்தியாவின் இயற்கைச் சூழல் எப்படி இருந்தது என்பதற்கான அத்தாட்சி அது. இந்த இரண்டையும்விட தீண்டத்தகாத சாதி என்று ஒதுக்கி வைக்கப்பட்ட ஈழவ சமுதாயத்தில் பிறந்த அச்சுதன் வைத்தியரிடம் எவ்வளவு தீர்க்கமான மருத்துவ அறிவு இருந்திருக்கிறது, அதைத் தீண்டாமையின் பெயரால் எப்படி ஒடுக்கி வந்திருக்கிறார்கள் என்ற சமூக உண்மையும் இந்தப் புத்தகத்தின் வழியே அடையாளம் காட்டப்படுகிறது. இந்தப் புத்தகத்தின் மூலப் பிரதி லெயிட்டன் பல்கலைகழகத்தில் இன்றும் இருக்கிறது. அங்கு, இந்தப் புத்தகத்தில் உள்ளதுபோன்ற ஈழவ வைத்திய முறைப்படியே இன்று தாவரங்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டு பிரித்து வைக்கப்பட்டு இருக்கின்றன.


இத்தனை அரிய மூலிகைகள், தாவர வகைகள் இந்தியாவில் இருந்தபோதும், இந்திய மரபு வைத்திய முறைகளை நாம் கொஞ்சம் கொஞ்சமாகப் பின்னுக்குத் தள்ளி, ஆங்கில மருத்துவ முறைகளையும் பக்கவிளைவு ஏற்படுத்தும் மருந்துப் பொருட்களையும் ஏற்றுக்கொண்டு மருத்துவத்தைப் பணம் கொட்டும் வணிகமாக உருமாற்றிவிட்டோம். இன்று, 'ஹோர்டஸ் மலபாரிக்கஸ்’ போன்ற புத்தகத்தைக் கையில் தொடும்போது இந்தியா ஏன் தனது இயற்கை வளத்தை இழந்தது என்ற கேள்வி நம் மனசாட்சியை தொடுகிறது. இந்திய இயற்கையியல் ஆய்வின் சிறு பகுதிதான் 'ஹோர்டஸ் மலபாரிக்கஸ்’ என்ற தாவரவியல் புத்தகம். அதுபோல, நூற்றுக்கணக்கான அரிய தாவரவியல் புத்தகங்கள் இந்தியாவில் கடந்த நூற்றாண்டுகளில் தொகுக்கப்பட்டன. அவற்றில், தேக்கு மற்றும் சால மரங்கள் இந்திய வரலாற்றில் என்ன பங்கை வகித்தன என்ற ஆய்வு முக்கியமான பல உண்மைகளை நமக்கு அடையாளம் காட்டுகிறது.

வட இந்தியாவில் பிரதானமாக சால மரங்கள் காணப்​படுகின்றன. அங்கே, தேக்கு கிடையாது. ஆனால், தென்னிந்தியா முழுவதும் தேக்கு மரங்கள் இருக்கின்றன. தேக்கு குறித்து சங்க இலக்கியம் நிறைய செய்திகளை சுட்டிக்காட்டுகிறது. ஆனால், தேக்கு பற்றி சமஸ்கிருத இலக்கியங்களில் அதிக செய்திகள் இல்லை. தேக்கு கொண்டுதான் கப்பல்கள் கட்டப்பட்டன. வட இந்தியாவில் தேக்கின் இடத்தைப் பிடித்து இருந்தது சால மரம்.

இந்த இரண்டு மரங்களின் கதையை ஆராய்ந்தால், இந்தியாவின் நிலப்பரப்பு எவ்வாறு தகவமைப்பு கொண்டது என்பதை எளிதாக அறியலாம். அஸ்ஸாம், வங்காளம், நேபாளம், ஹரியானா காடுகள், வட கிழக்கு மாநிலங்கள், இமயமலையின் அடிவாரம் மற்றும் மத்திய இந்தியா என அனைத்துப் பகுதிகளிலும் சால மரங்கள் செழித்து வளர்ந்து இருக்கின்றன. தென்னிந்தியாவில் தேக்கு மட்டுமே பிரதானம். சால மரம் என்பதை ஆச்சா மரம் என்றே தமிழ் லெக்சிகன் குறிப்பிடுகிறது. இதை, 'யா மரம்’ என்று சங்க இலக்கியம் சுட்டிக் காட்டுகிறது. இந்த மரத்தின் பட்டை நீர்ப்பசை மிக்கது. எனவே, பாலை நிலத்திலும் இந்த மரம் செழித்து வளர்ந்து இருக்கிறது. தேக்கின் முக்கியத்துவத்தை அறிந்த பிரிட்டிஷ் அதை இமயமலை அடிவாரத்தில் நட்டு வளர்த்துப் பார்த்து இருக்கின்றனர். ஆனால், தென்னிந்தியாவைப் போல தேக்கு அங்கே செழுமையாக வளரவில்லை. தேக்கு கிழக்கிந்தியக் கம்பெனியால் இங்கிலாந்துக்குக் கொண்டுசெல்லப்பட்டு நடப்பட்டு இருக்கிறது. ஆனால், தென்னிந்தியாவிலும் பர்மாவிலும் காணப்படும் தேக்கு போல உறுதியாக வேறு எங்கும் தேக்கு மரங்களை உருவாக்க முடியவில்லை. அசோகர் சாலையோரம் மரங்களை நட்டார் என்று காலம் காலமாகப் படிக்கிறோம். எந்த மரங்களை அசோகர் நட்டார், செழுமையான கங்கைச் சமவெளியில் மரங்களை நட வேண்டிய சூழ்நிலை ஏன் உருவானது என்ற கேள்விகள் அந்தச் செய்திக்குள் புதைந்து இருக்கின்றன.

நகரமயம் ஆவதும், வணிகப் பாதைகள் உருவாவதும் அசோகர் காலத்தில் பிரதான வளர்ச்சியாக இருந்தன. அதன் காரணமாக, பெருமளவு காடுகள் அழிக்கப்​பட்டன. வணிகர்களின் பயணத்துக்கான சாலைகள் அமைப்பதற்காக நிறைய மரங்கள் வெட்டப்பட்டு இருக்கின்றன. அதைவிட, மரங்களை நடுவதை ஓர் அறமாக கருதியது பௌத்தம். பயணிகள் இளைப்பாறவும், இயற்கையைப் பாதுகாக்கவும் என்றுதான் அசோகர் சால மரங்கள் நட உத்தரவு பிறப்பித்து இருக்கிறார். ஏன் சால மரங்களை நட வேண்டும் என்ற கேள்வி எழக்கூடும். சால மரமானது பௌத்த சமயத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது. புத்தர் பிறப்பதற்கு முன், அவரது தாய் மாயா இமயமலை அடிவாரத்தில் உள்ள தனது தாய்வீடான லும்பினிக்குச் சென்றுகொண்டு இருந்தார். வழியிலேயே பிரசவ வலி ஏற்பட்டு, ஒரு சால மரத்தடியில் புத்தர் பிறந்தார்.

புத்தரின் தாய் நின்ற நிலையில் பிரசவித்தாள் என்றும் வலியைத் தாங்கிக்கொள்ள சால மரத்தின் கிளைகள் வளைந்து கொடுத்து புத்தர் பிறக்க உதவி செய்தன என்றும் குறிப்பிடுகிறது புத்த பிறப்புக் கதை. அதுபோலவே, புத்தர் மரணம் அடைந்ததும் குசி நகரில் உள்ள ஒரு சால மரத்துக்கு அடியில்தான். ஆகவே, சால மரம் பௌத்த சமயத்தின் புனிதக் குறியீடுகளில் ஒன்று. லும்பினி இன்று நேபாளத்தில் இருக்கிறது. சாக்கிய வம்சத்தினர் ஆண்ட இந்த நிலப்பரப்பு, அடர்ந்த காடுகள்கொண்டது. மல்லர் வம்சத்தைச் சேர்ந்த அரசனால் உருவாக்கப்பட்ட புத்தரின் பிறப்பைக் குறிக்கும் 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சிற்பத்தில், புத்தரின் தாய் மாயா தனது வலக்கரத்தால் சால மரத்தைப் பற்றியபடி நின்று கொண்டு இருக்கிறாள். மரத்தின் கிளைகள் வளைந்து அவளுக்கு துணையாக நிற்கின்றன. இந்தச் சிற்பத்தை புத்த மதத்தின் புனிதச் சிற்பங்களில் ஒன்றாகக் கொண்டாடுகின்றனர்.

புத்தர் பிறந்த லும்பினி கிராமத்துக்கு முழு வரிவிலக்கு அளித்து இருக்கிறார் அசோகர். அத்துடன், நான்கு ஸ்தூபிகளை அமைத்து ஒரு கல்தூணில் கல்வெட்டும் ஒன்றையும் பதித்து இருக்கிறார். அந்தக் கல்வெட்டில் தனது ஆட்சியின் இருபதாம் ஆண்டில் அசோகர் லும்பினிக்கு வந்து, அதைப் புனித ஸ்தலமாக அறிவித்தார் என்ற குறிப்பு இருக்கிறது. லும்பினியில் புத்தரின் தாய் மாயாதேவிக்கு ஒரு கோயில் கட்டப்பட்டு இருக்கிறது. சௌரிய வனப் பகுதியில் சிதிலமடைந்துகிடந்த இந்தக் கோயிலை, ஜெர்மனியின் அகழ்வாய்வாளர் தனது அகழ்வாய்வுப் பணியின்போது கண்டுபிடித்து இருக்கிறார். சுட்ட செங்கற்களால் கட்டப்பட்ட இந்தக் கோயிலில், புத்தரின் பிறப்பைக் குறிக்கும் சிற்பம் இருக்கிறது. அதிலும், சால மரம் முதன்மையாக அடையாளப்படுத்தப்பட்டு இருக்கிறது.

வட இந்தியத் திருமணங்களில், பெண் சாலமரத்தின் கிளை ஒன்றைக் கையில் பிடித்துக்கொண்டுதான் மணமேடையில் உட்கார்ந்து இருப்பாள். அது, திருமணச் சடங்கின் ஒரு பகுதி. இந்து மதத்தைச் சேர்ந்தவர்களும் இதைக் கடைப்பிடிக்கின்றனர். சால மர விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயை மக்கள் பிரதானமாகப் பயன்படுத்தினர். சால மர இலைகளைத் தைத்து உணவு சாப்பிடப் பயன் படுத்தினர். ஆதிவாசிகள், இந்த மரத்தில் இருந்து வாசனைத் திரவியம் தயாரித்தனர். காய்ந்த  சால மர இலைகள் விவசாயத்துக்கான உரமாகவும் பயன் பட்டது. சால மரம் பூக்கும் காலத்தை, பழங்குடி மக்கள் விழாவாகக் கொண்டாடினர். சால மரம், புத்தரின் மறு வடிவமாக கருதப்படுவதே இதற்கான காரணம்.

போதி மரத்தடியில் அமர்ந்து புத்தர் ஞானம் பெற்றார் என்பதால், மரங்கள் ஞானத்தை அடைவதற்கான மனஒருமையை உருவாக்கக்கூடியவை என்று பௌத்தத் துறவிகள் நம்பினர். இதன் காரணமாகவே, அசோகர் மரங்களை நட்டார். சால மரம் மருத்துவக் குணம் கொண்டது. குறிப்பாக, இந்த மரத்தின் இலைகள் வயிற்றுப்போக்கு மற்றும் செரிமானப் பிரச்னைகளைத் தீர்க்கும். பல் வலியைக் குணப்படுத்தும் தன்மை கொண்டது சால மரம். இதனால், பயணிகள் உடல் உபாதைகளைப் போக்கிக்கொள்ள சால மரங்கள் பெரிதும் உதவக்கூடும் என்பதால், இந்த மரங்களை வழிநெடுகிலும் வளர்த்து இருக்கின்றனர்.

மர இனங்களின் அரசன் எனப்படும் தேக்கு மரம், கப்பல் கட்டும் தொழிலில் பிரதானமாகப் பயன்பட்டது. தேக்கு மரத்தின் தாவர அறிவியல் பெயர் 'டெக்டோனா கிரான்டிஸ்’ ஆகும். கிரேக்க மொழியில் 'டெக்டன்’ என்றால் தச்சருக்கு சம்பந்தப்பட்டது என்பது பொருள். 'கிராண்டிஸ்’ என்றால், பிரமாதமானது என்று பொருள். அதாவது, தச்சர்களுக்கு ஏற்ற பிரமாதமான மரம் என்று கூறுகிறார்கள். இந்த மரம் கடல் மட்டத்தில் இருந்து 1,200 மீ உயரம் வரையிலுள்ள நிலப் பகுதியில் நன்றாக வளரக்கூடியது. மண் ஆழம் குறைவாக உள்ள கடுங்களி நிலம் மற்றும் நீர்வடியா நிலங்களும் இந்த மரம் வளர ஏற்றதல்ல. தேக்கு மரம் 'ஒளி விரும்பி’ வகையைச் சேர்ந்தது. ஆகவே, பிரகாசமான சூரிய ஒளி கிடைத்தால் மட்டுமே தேக்கு நன்றாகச் செழித்து வளரும். 'கடுவளி எடுத்த கால்வழி தேக்கு இலை’ என்றும், 'தேக்கு அமல் சோலைக் கடறேங்கு அருஞ்சுரத்து’ எனவும் அகநானூற்றுப் பாடல்கள் குறிப்பிடுகின்றன. தேக்கு மரம், இந்தியா மற்றும் ஜாவாவின் வட கிழக்குப் பகுதிகளைத் தாயகமாகக்கொண்டது. தேக்கு மரங்களைப் பார்த்து பிரமித்த ஆங்கிலேயர், கதவு, கட்டில் செய்தல் மற்றும் கப்பல் கட்டுமானம் ஆகியவற்றுக்காக தேக்கு மரங்களை இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்தனர். அத்துடன், இந்தியா முழுவதும் தேக்கு விளைவதற்காக செயற்கையாக தேக்கு மரங்களை நட்டுவைத்து வளர்க்க முயன்றனர்.

தேர்கள், தேக்கு மரத்தில் செய்யப்படுவது நமது மரபு. சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் ஆண்ட பகுதிகளுக்கு ஏற்ப தேர்கள் செய்யப்பட்டு இருக்கின்றன. எந்தத் தேரும், ஆறு அடுக்குகளுக்கு மேல் இருக்காது. பூதப்பார், விக்கிரகப்பார், சித்துருதளம், பெரிய அங்கனம், தேவாசனம், சிம்மாசனம் என்பதுதான் அந்த ஆறு அடுக்குகள். இந்த ஆறு அடுக்குகளின் உள்கட்டமைப்பாக 15 அடுக்குகள் இடம் பெறுகின்றன. சிம்மாசனத்தில் திருவுருவம் வைக்கப்படும். இந்தச் சிம் மாசனத்தைச் சுற்றி யாளிக்கட்டை, சிங்கக் கட்டை, அஸ்தியாளி ஆகியவைகளைக்கொண்டு மறைக்கப்பட்டு இருக்கும். அதேபோல், எந்தத் தேராக இருந்தாலும் அதன் முகப்பில் இரண்டு அல்லது நான்கு குதிரைகள் மட்டுமே இருக்கும். தேரின் சக்கரங்கள் இலுப்பை மரத் தால் செய்வதுதான் நமது மரபு.

இப்படி, பண்பாட்டின் அடிப்படையான கலை உருவாக்கத்திலும், வாசனைத் திரவியங்கள், கட்டுமானப் பணிக்கான பொருட்களின் உருவாக்கத்திலும் இந்தியாவின் முக்கியத் தாவரச் செல்வமாக தேக்கு அடையாளம் காணப்பட்டது. மலபார் பகுதியில் கிடைத்த தேக்கு மரங்கள், இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. இந்த வன வளத்தைப் பாதுகாக்க தனியாக ஒரு கமிஷனரை 1800-ம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு நியமித்தது. அதுபோலவே, கேப்டன் வாட்சன் என்ற அதிகாரி சென்னை ராஜதானியில் இருந்த தேக்கு மரங்களைப் பராமரித்து ஏற்றுமதி செய்யும் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டு இருந்தார். தேக்கை, பச்சைத் தங்கம் என்றே ஆங்கிலேயர்கள் அழைத்தனர். தேக்கு அதிகம் விளையும் ரங்கூனில், 1786-ம் ஆண்டு முதல் 1824-ம் ஆண்டு வரை 112 பெரிய கப்பல்கள் ஆங்கிலேயர்களுக்காகக் கட்டப்பட்டன. இதற்காக, 35,000 டன் தேக்கு மரங்கள் வெட்டப்பட்டன.

1846-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட தேக்கு 8,712 டன். இதுவே, 1860-ம் ஆண்டு 25,112 டன்கள். 1883-ம் ஆண்டில் 45,539 டன்களாகவும் 1900-ம் ஆண்டில் 63,598 டன்களாகவும் உயர்ந்தது. இந்த ஏற்றுமதியில் பெரும் பகுதி பர்மாவில் விளைந்த தேக்குகள்தான். இந்தியாவில் இருந்து கடந்த 300 ஆண்டுகளில் மிக அதிகமாக இயற்கை வளங்கள் கொள்ளை அடிக்கப்பட்டன. பிரிட்டிஷ், டச்சு மற்றும் போர்த்துக்கீசிய வணிகக் கம்பெனிகளுக்கு கொள்ளை லாபம் தரும் விற்பனைப் பொருளாக நமது இயற்கை வளங்கள் திகழ்ந்தன. இந்த சுயலாப வணிகமே இன்று பல்கிப் பெருகி இயற்கையை அழித்தொழிக்கும் வன்முறையாக உருமாறி இருக்கிறது. அடிமைப்படுத்தப்பட்ட தேசத்தில் மரங்களும் சுதந்திரமாக இருப்பது இல்லை என்பதை உணர்த்துவதுபோலவே காடு மௌனமாக நம்மை உற்றுப் பார்த்துக்கொண்டே இருக்கிறது.

No comments:

Post a Comment