Search This Blog

Saturday, January 12, 2013

ஓ பக்கங்கள் - ஸ்டாலின் தி.மு.க.வைக் காப்பாற்றுவாரா? ஞாநி

ஒருவழியாக கலைஞர் கருணாநிதி தாம் ஓய்வெடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதைத் தாமதமாகவேனும் உணர்ந்துள்ளார். அடுத்த தி.மு.க. தலைவர் பதவிக்கு ஸ்டாலினைத்தான் முன்மொழிவேன் என்று பகிரங்கமாக உறுதியாக அவர் சொல்லி விட்டது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. இதை அவர் 1996ல் தி.மு.க தேர்தலில் ஜெயித்த போதே செய்திருக்க வேண்டும். அப்போதே அவருக்கு வயது 72. ஸ்டாலினுக்கு அன்று வயது 43. கருணாநிதி 45 வயதில் முதலமைச்சர் ஆனவர். அந்த வாய்ப்பை அன்றே மகனுக்குக் கொடுத்துவிட்டு தாம் கட்சித் தலைவர் பதவியை மட்டும் வைத்திருந்தால், மூப்பனார் மறுத்ததால், தேவகவுடாவுக்குச் சென்ற பிரதமர் பதவியைக் கூடக் கலைஞர் அடைந்து இருக்கலாம்.

ஸ்டாலினை தி.மு.க.வின் தலைவராக்குவதற்கோ, முதலமைச்சராக்குவதற்கோ தி.மு.க. கட்சிக்குள் இருந்து பெரும் எதிர்ப்பு எப்போதும் வந்தது இல்லை. ஒரே எதிர்ப்பு வைகோவுடையது. அதைக் கையாளத் தெரியாமல் கலைஞர் கையாண்டதில், வைகோவை ஸ்டாலினுக்குச் சமமான தலைவராக்காமல் தமக்குச் சமமான தலைவர் அந்தஸ்துக்கு உயர்த்திவிட்டார். (அந்த வாய்ப்பைக் கையாளத் தெரியாமல் வைகோவும் வீணடித்தது இன்னொரு தனிக்கதை.) அப்படியே ஸ்டாலினுக்குச் சமமான தலைவர்தான் ஜெயலலிதா என்று ஆக்கும் வாய்ப்பையும் நழுவவிட்டு தம்மை ஜெயலலிதாவுக்குச் சமமாக தாமே குறுக்கிக் கொண்டார்.


ஸ்டாலினுக்கு வந்த எதிர்ப்பெல்லாம் கருணாநிதியின் குடும்பத்துக்குள்ளே இருந்து அழகிரி வடிவில் வந்த எதிர்ப்பு மட்டும்தான். ஸ்டாலினைவிட மூத்தவரான அழகிரியோ, இளையவரான தமிழரசோ தொடக்கத்தில் அரசியலில் ஆர்வம் காட்டவில்லை. சொந்தமாகத் தொழில் செய்யும் முயற்சிகளில் இருந்தார்கள். ஸ்டாலின்தான் மாணவராகவே கட்சியில் இறங்கி வேலை செய்தவர். அதனால் தான் 1976ல் நெருக்கடி நிலையின்போது மிசாவில் கைது செய்யும்போது கலைஞர் குடும்பத்தில் அவரை மட்டுமே கைது செய்தது அன்றைய அரசியல் எதிரியான காங்கிரஸ்.

ஸ்டாலின்தான் அடுத்தகட்டத்தில் கலைஞரின் இடத்துக்குக் கட்சியில் வரக்கூடியவர் என்ற நிலை எண்பதுகளிலேயே வந்துவிட்டது. அதை முரசொலி மாறனும் ஆதரித்தார். அவர் தம் மகன்களை கட்சிப் பதவிகளுக்குக் கொண்டு வர முயற்சித்ததே இல்லை. பேராசிரியர் அன்பழகனும் ஸ்டாலினை ஆதரித்தார். கட்சிக்குள் ஸ்டாலின் ஆதரவு நிலைதான் பெரும்பான்மை.

ஆனால் சொந்தத் தொழில் முயற்சிகளில் தோற்றுப்போன அழகிரி, அரசியலுக்குள் தாமதமாக நுழைந்தார். குடும்பத்துக்குள் இருந்துவந்த இந்த நெருக்கடியைத்தான் கலைஞரால் சுமார் 15 வருடங்களாகச் சமாளிக்க முடியாமல் இருந்திருக்கிறது. அழகிரி, அரசியலுக்குள் நுழையாமல் இருந்திருந்தால் கனிமொழி கூட நுழையாமல் இருந்திருக்கும் வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லலாம். கலைஞரின் இலக்கிய கலாசாரத்துறை ஆர்வங்களுக்கு குடும்பத்தில் ஒரே வாரிசான கனிமொழி அதே துறையில் தொடர்ந்திருக்கக் கூடும். 

அழகிரிக்கு அரசியல் செல்வாக்கு, கட்சி, ஆட்சி பதவிகள் தரப்படவேண்டும் என்று கலைஞரின் ஒரு குடும்பத்துக்குள் இருந்து நிர்பந்தங்கள் தொடங்கியபிறகு கனிமொழிக்காகவும் இன்னொரு குடும்பத்தின் நிர்பந்தங்களை கலைஞர் சந்திக்க வேண்டியதாயிற்று. தங்கள் பிள்ளைகளுக்காக அன்பால் செய்த நிர்பந்தங்கள் இரு பிள்ளைகளுக்கும் உண்மையில் பயன் தரவில்லை. 


தி.மு.கவின் மத்திய அமைச்சர்களிலேயே கட்சிக்கு மோசமான பெயரை தில்லியில் சம்பாதித்துக் கொடுத்திருப்பது அழகிரிதான். நிர்வாகத் திறமையற்றவர் என்று அவர் பழிக்கப்படுவதுதான் மிச்சம். கனிமொழியோ ஊழல் குற்றச்சாட்டில் சிறைக்குப் போக வேண்டியதாயிற்று.
குடும்ப நிர்பந்தங்களை நம்பியிராமல் சொந்த அரசியல் செயல்பாட்டால் கட்சிக்குல் தன் செல்வாக்கைப் பெருக்கிக் கொண்டு இன்று இருக்கும் இடத்தை அடைந்த கலைஞரின் ஒரே பிள்ளை ஸ்டாலின்தான். ஆனால் கட்சித் தலைவர் கலைஞர் அவரை ஆதரித்தபோதும் குடும்பத் தலைவர் கருணாநிதியின் பலவீனங்களால் தமக்கான இடத்தை அடைய முடியாமல் ஸ்டாலினுக்கு சுமார் 14 வருடங்கள் வீணாகியிருக்கின்றன.

எழுபதுகளிலும் எண்பதுகளிலும் ஸ்டாலினுக்குப் பொது மக்களிடம் பெரிய நற்பெயர் இருந்ததாகச் சொல்ல முடியாது. பணக்கார வீட்டுப் பிள்ளைகளின் ஆடம்பரமும், ஷோக்கும் அதிகார மையத்தில் இருப்பதால் வரும் அகங்காரமும் உடையவராகவே அவர் அன்று கணிக்கப்பட்டார். அப்போது அவர் தம்மை டி.வி. நடிகராக இலக்கிய கலையார்வம் உடையவராகக் காட்ட எடுத்த முயற்சிகளெல்லாம் படு தோல்வி அடைந்தன. 

ஆனால் ஸ்டாலின் அதே பாதையைத் தொடராமல், வெளியே வந்து தப்பித்து விட்டார். தொண்ணூறுகளின் இறுதியில் சென்னை மேயர் பதவிக்கு வந்தபோது புதிய இமேஜ் அவருக்கு உருவாயிற்று. நகரப் பிரச்னைகளில் நேரடி அக்கறை காட்டி நடுத்தர வர்க்கத்தின் கவனத்தைக் கவர்ந்து நல்ல நிர்வாகியாக இவர் இருப்பார் என்ற நம்பிக்கையை அப்போது அவர் ஏற்படுத்த முயற்சித்தார்.

இப்போது ஒருவழியாக அவரைத்தான் தி.மு.க.வின் அடுத்த தலைவராகத் தாமே முன்மொழிவேன் என்று கலைஞர் சொல்லி விட்டதால், அவர்தான் இனி தி.மு.க ஆட்சிக்கு வந்தால் முதல்வராகவும் இருப்பார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. உட் கட்சி ஜனநாயகம் உள்ள இயக்கம், ஸ்டாலினை எதிர்த்து யாரும் போட்டியிடலாம் என்றெல்லாம் கலைஞரும் அன்பழகனும் சொன்னாலும், தி.மு.க.வில் இதுவரை கலைஞரை எதிர்த்து யாரும் வேட்பு மனு கூட தாக்கல் செய்ததில்லை. அதே நிலைதான் தொடரும். 


அழகிரி எதிர்த்துப் போட்டியிட்டால், கட்சி இன்று இருக்கும் நிலையில் அவருக்குத்தான் அது அவமானமாக முடியும். அந்தத் தப்பை அவர் செய்ய மாட்டார் என்று எதிர்பார்க்கலாம். ஸ்டாலினுடன் சமரசம், அல்லது அதிரடியாக அ.தி.மு.க.வுக்குப் போய் ஜெயலலிதாவின் வாரிசாக இடம் பிடிக்க முயற்சிப்பது என்ற இரு வழிகளைத் தவிர அவருக்கு வேறு சாய்ஸ் இனி இல்லை. 

அழகிரி செகண்ட் சாய்ஸை எடுப்பதை, கலைஞருக்குப் பின் தி.மு.க.வைப் பலவீனப்படுத்த விரும்பும் தில்லி காங்கிரஸ் தலைமையும் உளவுத்துறையினரும் நிச்சயம் விரும்புவார்கள். எழுபதுகளில் எம்.ஜி.ஆரைப் பயன்படுத்திய மாதிரி இப்போது அழகிரியைப் பயன்படுத்த முடியுமா என்று முயற்சிக்கலாம். 

ஆனால், அழகிரி, எம்.ஜி.ஆர் அல்ல. எனவே சினிமாவில் முத்துவுக்கு ஏற்பட்ட கதியே அவருக்கும் அரசியலில் ஏற்படும். குடும்பத்துக்குள் சமரசம் என்பதுதான் ஒரே தீர்வு.

கலைஞர் இனி தம் முடிவை வீட்டு நிர்பந்தங்களால் மாற்றிக் கொள்ளும் வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை.

அடுத்த உட்கட்சி தேர்தல் எப்போது? அதில் ஸ்டாலினை முன்மொழிவாரா, யாரேனும் எதிர்த்தால் என்ன செய்வார் என்ற நிருபர்கள் கேள்விகளுக்குப் பதில் சொல்லும்போது, ‘கட்சி தேர்தல் எப்போது நடக்கிறதோ, அப்போது நான் உயிரோடு இருந்தால்’ ஸ்டாலினையே முன் மொழிவேன்’ என்று சோல்லி இருக்கிறார். 

தம் காலம் முடிவதற்கு முன் இந்தப் பிரச்னைக்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்துவிட்டே தாம் விடைபெறவேண்டும் என்ற மன உறுதி அவருக்கு இப்போது வந்திருப்பதையே இதுகாட்டுகிறது. எனவே தி.மு.க.வின் அடுத்த தலைவர் ஸ்டாலின் தான். அடுத்த தேர்தலில் ஆட்சியைப் பிடித்தால் அடுத்த முதல்வரும் அவர்தான். இப்போது முக்கியமான கேள்விக்கு வருவோம். ஸ்டாலினால் தி.மு.க.வைக் கட்டிக் காப்பாற்ற முடியுமா?

‘தி.மு.க. முடிந்து போன கதை’ என்று அண்மையில் ஜெயலலிதா தம் கட்சிப் பொதுக் குழுவில் அலட்சியமாக அறிவித்தார். அது அவரது ஆசை. ஆனால் அவ்வளவு சுலபத்தில் தி.மு.க. முடிந்த கதையா காது. வலுவான கட்சி அமைப்பும் மீடியா பலமும், சுமார் 25 சதவிகித வோட்டு ஆதரவும், சமூகத்தில் காலத்தின் தேவையால் உருவான சரித்திரப் பின்னணியும் உள்ள அமைப்பு அது.

அண்ணா 1949ல் தி.மு.க.வை ஆரம்பித்த போது அவருக்கு வயது நாற்பதுதான். கட்சியின் அடுத்த நிலைத் தலைவர்கள் பெரும்பாலோரின் வயது 30 லிருந்து 40க்குள் இருந்தது. அத்தனை இளமையான இயக்கமாக அது தொடங்கியது. ஆனால் 88 வயது வரை பதவியை விட்டு இறங்க மறுத்த பிடிவாதத்தால், கலைஞர் இன்று அந்தக் கட்சியை முதியோர் இல்லமாக மாற்றிவிட்டார். கட்சியின் இரண்டாம் நிலைத் தலைவர்கள் வயது 75. அடுத்த நிலையினருக்கு வயது 60க்கு மேல். ஸ்டாலின் தலைவராகும்போது அவருக்கும் வயது 60ஐக் கடந்து விட்டிருக்கும். இன்றைய 20லிருந்து 35 வயது வரையிலான இளைஞர்களைக் கட்சிக்குள்ளும் அதற்கு ஆதரவாகவும் ஈர்க்க ஸ்டாலினால் இயலுமா என்பதே கேள்வி. இன்றைய தமிழ் இளைஞர்களில் பெரும்பாலோர் ஈழத் தமிழர் பிரச்னையில் தி.மு.க. பெரும் துரோகம் செய்த கட்சி என்ற கருத்திலேயே இருக்கிறார்கள். நடுவயதினர் ஊழலை விஞ்ஞானப்பூர்வமாகச் செய்ய எல்லா கட்சிகளுக்கும் வழிகாட்டிய கட்சி என்றே கருதுகிறார்கள்.

இந்தச் சூழலில் கடுமையான மாற்றங்களைச் செய்யவும் தம்மையும் கட்சியையும் சுயவிமர்சனம் செய்து கொள்ளவும் ஸ்டாலின் முன்வந்தால்தான் தி.மு.க.வைப் பழையபடி இளைஞர் கட்சியாக, கோட்பாடுகள், லட்சியங்களுக்கான இயக்கமாகப் புதுப்பிக்கமுடியும். அதற்கான ஆற்றல் அவரிடம் இருக்கிறதா?

கலைஞரிடம் இருக்கும் பல ஆற்றல்கள் பேச்சுத் திறமை, எழுத்துத் திறமை, அரசியல் வியூகம் கட்டுவது போன்றவை ஸ்டாலினிடம் இல்லை. அதே போல கலைஞரின் பல பலவீனங்களும் ஸ்டாலினுக்கு இல்லை. வாராவாரம் பாராட்டு விழாக்கள், சினிமா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது, பத்திரிகை நிருபர்களிடம் எரிந்து விழுவது, இதழாசிரியர்களுக்கு போன் செய்து கடிந்து கொள்வது, நேரடி பதில் சொல்லாமல் மழுப்புவது, வார்த்தை விளையாட்டு எல்லாம் இல்லை. கலைஞர் அளவு புகழாரம், ஆடம்பர கட்அவுட் கலாசாரம் ஆகியவற்றில் ஸ்டாலின் அதிக ஈடுபாடு காட்டவில்லை. அதிலிருந்து முற்றாக வெளியே வந்தால் கூட நல்லது. 

எம்.ஜி.ஆர் காலத்திலேயே தொடங்கி ஜெயலலிதா காலத்தில் உச்சத்துக்குச் சென்ற கலைஞரின் விரோத பாவம், நேரில் சந்திப்பதைத் தவிர்ப்பது போன்றவை ஸ்டாலினிடம் இல்லை. நேரில் ஜெயலலிதாவைச் சந்திக்க அவர் தயங்கியதில்லை.

தி.மு.க. என்ற பழைய ஜமீன் வீடு ஸ்டாலின் கைக்கு வந்துவிட்டது. அதை ஒட்டடை அடித்து, சுத்தப்படுத்தி விரிசல்களுக்கு ஒட்டுப் போட்டு கூரை ஓட்டைகளை அடைத்து வைத்துப் பயன்படுத்தப் போகிறாரா, அல்லது இது உதவாது, இது இருக்கும் திராவிட இயக்க சுயமரியாதை மனை மட்டும்தான் தேறும், முற்றாக இடித்துவிட்டு புது வீடாகக் கட்டுவோம் என்று கட்டப் போகிறாரா என்பது ஸ்டாலின் கையில்தான் இருக்கிறது.

No comments:

Post a Comment