Search This Blog

Saturday, January 12, 2013

எனது இந்தியா (டாக்கா மஸ்லின்) - எஸ். ராமகிருஷ்ணன்....

ஒரு மோதிர வளையத்துக்குள் டாக்​கா மஸ்லி​னால் ஆன புடவை ஒன்றை நுழைத்துவிடலாம். அந்த அளவு​க்கு அந்தத் துணி மிருதுவாக இருக்​கும் என்கிறார்கள். டாக்கா மஸ்லின் ஒரு காலத்​தில் உலகையே வியக்கவைத்த துணி ரகம். அது இன்று அடையாளமற்ற தொழிலாக, சிறுவணிகமாக சுருங்கிவிட்டது. இந்திய நெசவுத் தொழில்நுட்பத்தின் சாதனை​யாகக் கருதப்பட்ட மஸ்லின் நெசவு, பிரிட்​டிஷ் காலனிய ஆட்சியின் ஒடுக்குமுறைக்கு ஆளாகி நசிந்துபோனது துயரமான வரலாறு. டாக்கா மஸ்லின் ஒடுக்கப்பட்டதற்கு முக்​கியக் காரணம், பிரிட்டிஷின் லங்காஷயர் மற்றும் மான்செஸ்டர் ஆகிய நகரங்களில், இயந்திரங்களைப் பயன்படுத்தித் தயாரித்த துணிகளை இந்தியச் சந்தைக்குக் கொண்டுவந்து தள்ள வேண்டும் என்ற வணிகத் தந்திரம்தான். பிரிட்டனின் மான்செஸ்டர் 'டி73’ ரக பருத்தியை வாழ்விப்பதற்காக டாக்கா மஸ்லின் ரகத்தைப் பூண்டோடு அழித்துவிட்டனர் என்கிறார்கள் வங்காளதேச நெசவாளிகள்.

மஸ்லின் நெசவு ஆந்திராவின் மசூலிப்பட்டி​னத்தில் பராம்பரியமாக நடந்த தொழில். அதனால்தான் அது மஸ்லின் எனப் பெயர் பெற்றது என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. மஸ்லின் நெசவுக்கு டாக்கா நகரம் புகழ் பெற்றிருந்தது. நுட்பமான வேலைப்பாடுகொண்ட இந்த நெசவுத் தொழிலில் இளம்பெண்களே அதிகமாக ஈடுபட்டனர். டாக்கா மஸ்லினுக்கு இணையாக தமிழகத்தில் ஆரணி மஸ்லின் தயாரிக்கப்பட்டது. இதுவும் பராம்​பரியமாகத் தயாரிக்கப்பட்டு வந்த ஒரு நெசவு முறையே. அதுபோல ஒரிசாவின் கேந்திரபாதா, ஜகத்சிங்பூர் ஆகிய இடங்களில் தயாரிக்கப்​பட்ட மஸ்லின் துணிகளும் இங்கிலாந்துக்குப் பெருமளவு ஏற்றுமதி செய்யப்பட்டன.


மஸ்லின் துணி ஏற்றுமதியில் 75 சதவிகிதம் லாபம் கிடைத்தது. மஸ்லின் துணிகளை வாங்குவதற்கு ஐரோப்பா முழுவதும் பலத்த போட்டி நிலவியது. அழகான உடைகள், திரைச்சீலைகள் மற்றும் நாடக அரங்குகளின் சித்திரத் திரைகள் ஆகியவை மஸ்லின் துணியால் தைக்கப்பட்டன. 10-ம் நூற்​றாண்டில் பிரெஞ்சுப் பெண்கள் மஸ்லின் ஆடைகளை அணிவதை பெருமையாகக் கருதினர். மார்கோபோலோ தனது பயணக்குறிப்பில் மஸ்லின் துணி பற்றி குறிப்பிட்டு இருக்கிறார். ஆனால் அவர், இந்தியத் துணி ரகங்கள் ஈராக்கில் உற்பத்தியானவை என்று குறிப்பிட்டு இருப்பதுதான் வரலாற்றுக் குழப்பமாகக் கருதப்படுகிறது. பாபிலோனிய நாட்டுப் பட்டியல்ஒன்றில், மஸ்லின் என்னும் துணி வகையைக் குறிக்கும் 'சிந்து’ என்னும் சொல் எழுதப்பட்டுள்ளது. சிந்து என்னும் சொல் தமிழில் கொடியைக் குறிக்கும். கன்னடத்திலும் துளுவிலும் துணிக்குச் 'சிந்து’ என்று பெயர் வழங்குவது குறிப்பிடத்தக்கது. இந்தத் துணி தமிழகத்தில் இருந்து பாபிலோனியாவுக்குக் கடல் வழியாகத்தான் சென்​றிருக்க வேண்டும் என்கிறார் ஆய்வாளர் டாக்டர் கே.கே.பிள்ளை.


டாக்கா மஸ்லின், மொகலாயர்கள் காலத்திலேயே புகழ்​பெற்றிருந்தது. மொகலாயர்கள் தலையில் அணியும் டர்பன் மற்றும் பெண்களின் அலங்கார உடைகள் அத்தனையும் மஸ்லின் துணியால்தான் தயாரிக்கப்பட்டன. இந்த மஸ்லின் துணிகள் ரோம், எகிப்து ஆகிய நாடுகளுக்கும்கூட ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஏற்றுமதி செய்யப்பட்டு இருக்கின்றன. எகிப்தில், இறந்த உடலைப் பதப்​படுத்திய பிறகு சுற்றுவதற்குக்கூட மஸ்லின் துணிதான் பயன்படுத்தப்பட்டது.

'சர்கார் ஈஅலா’ எனும் மஸ்லின் துணிரகம், மொகலாய மன்னர்களின் தலைப்பாகை செய்வதற்கு என்றே உருவாக்கப்பட்டது. அதுபோலவே கஷிதா, குதான்ஈரூமி, நன்பதி, யகுதி, அலிஜோலா, சமந்த் ஈலகர், ரவை சல்லா மல்மல் ராஜா போன்றவை புகழ்பெற்ற மஸ்லின் துணி ரகங்கள். இந்தத் துணிகளில் மிகவும் புகழ்பெற்று விளங்கியது ஷப்னம் எனப்படும் மஸ்லின் ரகம். இது, நூறு ஆண்டுகளுக்கு முன் ஒரு அடி 40 ரூபாய் விலைக்கு விற்கப்பட்டு இருக்கிறது. மஸ்லின் நூல் மிகவும் மெல்லியது. ஒரு நூல்கண்டின் நீளம் 119 மைல் என்கிறார்கள். அப்படி என்றால், அது எவ்வளவு மெலிதாக இருக்கும் என்பதை நீங்களே கற்பனைசெய்து பார்த்துக்கொள்ளுங்கள். அர்த்த சாஸ்திரம், மஸ்லின் துணிகளின் அழகைக் குறிப்பிடுகிறது. அதுபோலவே, பெரிபிலஸ் எழுதிய குறிப்புகளிலும் மஸ்லின் துணியின் நேர்த்தி குறிப்பிடப்பட்டு இருக்கிறது. நேரு தனது 'கண்டுணர்ந்த இந்தியா’ என்ற புத்தகத்தில், மஸ்லின் துணி ஏற்றுமதி பற்றி விரிவாகக் குறிப்பிட்டு இருக்கிறார். மொகலாயர்கள் ஆட்சிக் காலத்தில் அரச குடும்பத்தினர் மட்டுமே பயன்படுத்தும் அரிய துணிரகமாக மஸ்லின் விளங்கியது. நூர்ஜகான், மஸ்லின் துணிகளை விரும்பி அணிந்து இருக்கிறார். அத்துடன், நான்கு குடும்பங்களைத் தன் விருப்பத்துக்கு ஏற்ப நெசவு நெய்வதற்கு என்று நியமித்து இருக்கிறார். அதுபோலவே, அக்பர் காலத்திலும் மஸ்லின் விரும்பி அணியப்பட்டதைப் பற்றி, 'அயினி அக்பரி’ குறிப்பிடுகிறது. எளிய பருத்தி ஆடைகளை அணிவதில் ஆர்வம்கொண்ட ஒளரங்கசீப், மஸ்லின் துணியால் ஆன தலைப்பாகையை அணிய ஆர்வம் காட்டியிருக்கிறார். ஒருமுறை, அவரது மகள் ஜெபுன்னிஸா எட்டு சுற்று மஸ்லின் ஆடையை அணிந்து வந்தபோதும் அது உடலைக் கவர்ச்சியாகக் காட்டுவதாகச் சொல்லி அந்த உடையை மாற்றிவிட ஒளரங்கசீப் உத்தரவிட்டார் என்கிறார்கள். அந்த அளவுக்கு இந்த வெண்ணிற உடை மெலிதானது. ஒவ்வோர் ஆண்டும் டாக்கா நெசவாளிகள் தாங்கள் நெய்த சிறப்பான மஸ்லின் துணிகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று மன்னர்களுக்கு பரிசாகத் தருவது வழக்கம். அந்தப் பரிசை ஏற்றுக்கொண்டு அதற்குப் பதில் மரியாதையாக நிலமும் பரிசுப் பொருட்களும் மன்னர்கள் வழங்கி இருக்கின்றனர்.


ஜம்தானி என்ற மஸ்லின் துணி மிகவும் உயர்தர​மானது. இதில் உருவாக்கப்பட்ட சேலைகளைத்தான் மகாராணிகள் அணிந்தனர். பத்து முழச் சேலையை ஒரு தீப்பெட்டிக்குள் அடைத்துவிடலாம் என்பார்கள். அந்த அளவுக்கு அது மிருதுவானது. இந்த ஜம்தானி நெசவு நெய்வது கடினமான பணி. இதில் தேர்ந்த குடும்பங்கள் டாக்காவைச் சுற்றிலும் ஏராளமாக இருந்தன. இன்றும் ஜம்தானி ரகம் தயாரிக்கப்படுகின்றன என்றாலும் மொகலாயர் கால வேலைப்பாடுகள் இன்று சாத்தியமாகவில்லை.

மஸ்லின் நெசவாளிகளைப் பற்றி குறிப்பிடும் டாக்டர் ஜெயபாரதி, இரண்டு முக்கியத் தகவல்களைத் தருகிறார். மஸ்லின் நெசவாளர்கள், பஞ்சு நூலை  நூற்பதற்கு ஒரு நுட்பத்தைப் பயன்படுத்தினார்களாம். அவர்களுடைய வலதுகை கட்டை விரலின் நகத்தை நீளமாக வளர்த்துவைத்திருப்பார்களாம். அந்த நகத்தின் நடுவில் சிறிய துளையைச் செய்து நூற்பதற்கு முன் பஞ்சைச் சற்று திரித்துக்கொண்டு அந்த துளைக்குள் நுழைத்துவிடுவார்களாம். பிறகு, அந்த நுனியை தக்கிலியில் இணைத்துவிட்டு நூற்பார்களாம். அவ்வாறு நூற்கப்படும் நூலை அடிக்கடி நகத்தால் மேலும் கீழுமாக வருடி நீவிவிடுவார்களாம்.

அந்த நூல் ஒரே சீரானதாகவும், பிசிறு இல்லாததாகவும் பாலிஷ் உடையதாகவும் மிகவும் மெல்லியதாகவும் வலுவானதாகவும் விளங்குமாம். இந்த நூலை வைத்துத்தான் டாக்கா மஸ்லினை நெய்வார்களாம். அந்தக் காலத்தில் டாக்கா மஸ்லினுக்கு உலகெங்கும் கிராக்கி இருந்தது. பிரிட்டிஷ்காரர்கள் தங்களின் லாங்காஷர், லிவர்பூல் பருத்தித் துணிகளை இந்தியர்களின் மீது திணிக்கும்போது, டாக்கா மஸ்லினையும் வங்கத்து நெசவாளர்களையும் முதல் மிரட்டலாகக் கருதினர். ஆகவே, அந்த மஸ்லின் நெசவாளர்களைப் பிடித்து அவர்களுடைய நகங்களை வெட்டிவிட்டனர். எந்த நெசவாளரும் நகம் வளர்க்கக் கூடாது என்ற தடையும் விதித்து இருக்கின்றனர். சில இடங்களில் நெசவாளர்களின் கட்டை விரல்களை வெட்டி இருக்கின்றனர் என்றும் கூறப்படுகிறது. ஆனால், அப்படி நடைபெற்றதற்கான நேரடிச் சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை.

No comments:

Post a Comment