Search This Blog

Thursday, January 24, 2013

புலியின்றி அமையாது உலகு!

நிழல் உலகக் கள்ளச் சந்தை உலகில் முதல் இடம்... போதைப் பொருட்கள் விற்பனை. அடுத்த இடம்... ஆயுத விற்பனை. மூன்றாவது இடத்தில் இருப்பது வன உயிரினப் பொருட்கள் விற்பனைச் சந்தை. அதில் முக்கிய அங்கம் வகிப்பது... புலி வேட்டை.
 
 புலி, சிறுத்தை, யானை, காண்டாமிருகம், மான், தேவாங்கு, ஆந்தை, கீரி, நீர்நாய், மண்ணுளிப் பாம்பு, நட்சத்திர ஆமை, கடல் குதிரை, பவளப் பாறைகள்... இவை எல்லாம் இச்சந்தையின் பகீர் பட்டியல். ஆண்டுக்கு 2,000 கோடி டாலர்கள் புழங்கும் சந்தை இது.

3,500 மட்டுமே!

கடந்த நூற்றாண்டில் உலகில் இருந்த புலிகளின் எண்ணிக்கை சுமார் ஒரு லட்சம். அதில் இந்தியாவில் இருந்தவை சுமார் 40 ஆயிரம். இன்று உலகில் இருக்கும் புலிகளின் எண்ணிக்கையே 3,500 தேறாது. கடந்த 2011-ம் ஆண்டு இந்திய அரசு வெளியிட்ட கணக்கெடுப்பு அறிவிப்பின் படி இந்தியாவில் இருக்கும் புலிகளின் எண்ணிக்கை 1,706 மட்டுமே.

புலி வேட்டை!

 வேட்டையர்கள், கடத்தல்காரர்கள், வியாபாரிகள் என மூன்று பிரிவுகளைக்கொண்டது புலிகள் மாஃபியா. முதலில் வேட்டையர்கள். வட இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் வசிக்கும் பவாரியாஸ் மற்றும் பஹாலிகாஸ் சமூகத்தினரின் ஆதித் தொழில், வேட்டை. அந்தச் சமூகத்தில் 70 சதவிகிதத்தினர் தங்கள் பாரம்பரியத் தொழிலைக் கைவிடாமல் இன்றும் வேட்டையில் ஈடுபடுகிறார்கள். இவர்கள் நாடு முழுவதும் புலிகள் வாழும் வனங்களின் அருகில் உள்ள ஊர்களில் கம்பளிப் போர்வை விற்பனையாளர்கள், நகை பாலீஷ் போடுபவர்கள், வித்தைக்காரர்கள் வேடங்களில் ஊடுருவுகிறார்கள். கோடைக் காலமே இவர்களின் சாய்ஸ். கோடையில் ஓரிரு நீர் நிலைகளில் மட்டுமே நீர் இருக்கும். அங்கு புலிகள் கட்டாயம் வந்தாக வேண்டிய இடங்களைத் தேர்வு செய்கிறார்கள். இரும்புக் கண்ணிகளைப் புலிகளின் வழித்தடத்தில் பொருத்தி, சருகுகளால் மறைத்துவிடுவார்கள். இந்தக் கண்ணிகள் இரும்புச் சங்கிலியால் மரத்தில் கட்டப்பட்டு இருக்கும். புலியின் கால் கண்ணியில் பட்டதும், அது வெகு உறுதியாகத் தொடை வரை கால்களைப் பற்றிக்கொள்ளும். புலியின் முன்னே இவர்கள் செல்வார்கள். அது கோபத்தில் வாயைத் திறந்து உறுமும். உடனே, நீண்ட குத்தீட்டிகளைப் புலியின் வாய்க்குள் குத்தி புலியைக் கொன்றுவிடுவார்கள். புலியின் உடலைக் குத்தினால் தோல் சேதம் அடையும் என்பதால்தான், இந்தக் குரூர டெக்னிக். கொல்லப்பட்ட புலியின் அடிவயிற்றைக் கீறி, குடல் உள்ளிட்ட கழிவுகளை எடுத்து எரித்தோ புதைத்தோவிடுவார்கள். அரை மணி நேரத்தில் புலியின் இறைச்சி, எலும்புகள், பற்கள், தோல் என மொத்தத்தையும் பேக் செய்து கிளம்பிவிடுவார்கள். ஒரு புலிக்கு இவர்கள் பெறும் தொகை, ஒரு லட்சம் முதல் மூன்று லட்சம் வரை.

ஒரு புலி... ஒரு கோடி!

அடுத்து கடத்தல்காரர்கள். இவர்கள்தான் விலையை நிர்ணயிக்கும் புரோக்கர்கள். தரை வழி, கடல் வழி, வான் வழி என எல்லா வழிகளையும் பயன்படுத்தி வன உயிரினப் பொருட்களைக் கடத்துவார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மூட்டை மூட்டையாகக் கைப்பற்றப்பட்ட மான் கொம்புகளும் இவர்களின் கைங்கர்யமே. புலிகள் மட்டும் அல்லாமல் சந்தனக் கட்டை, செம்மரக்கட்டை தொடங்கி பவளப் பாறைகளும் இவர்களின் லிஸ்ட்டில் உண்டு. பெரிய மருந்து நிறுவனங்கள், அழகுப் பொருட்கள் நிறுவனங்கள், ஆடம்பரக் கைவினைப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் வன உயிரினக் கலைப் பொருட்களில் ஆர்வம்கொண்ட கோடீஸ்வரர்கள் இவர்களின் வாடிக்கையாளர்கள். 

மத்திய அரசின் 'புராஜெக்ட் டைகர்’ சொல்லும் கணக்கின்படி கடந்த 99-ம் ஆண்டில் சீனா - வியட்நாம் எல்லையில் 10 கிராம் புலி எலும்பின் விலை 2425 டாலர்கள். அதாவது, இந்திய மதிப்பில் ஒரு கிலோ எலும்பின் விலை ஒரு லட்சத்துக்கும் மேல். இன்று இதன் விலை கிட்டத்தட்ட 10 மடங்கு அதிகரித்துவிட்டது. இன்று ஒரு கிலோ இந்தியப் புலியின் எலும்புக்கு 10 லட்சம் மதிப்பு. ஒரு புலியின் மொத்த மதிப்பு... சுமார் 1 கோடி.

அடுத்து வியாபாரிகள். 90 சதவிகிதப் புலி வியாபாரம் சீனாவில்தான் நடக்கிறது. ஜப்பானில் இந்தத் தொழில் 2000-ம் ஆண்டு தடை செய்யப்பட்டுவிட்டது. சீனாவின் பாரம்பரிய மருத்துவத் தின் அடிப்படைப் பொருள் விலங்குகளின் எலும்புகள். குறிப்பாக, புலியின் எலும்பு. மருத்துவப் பொருட்கள் மட்டுமின்றி அவர்களின் அழகு சாதனப் பொருட்களையும் புலிகளின் எலும்புகளை வைத்துதான் செய்கிறார்கள். புலி களின் எலும்புகளை மருத்துவத்தில் சேர்த்துக்கொள்வது ஆன்மிகம், வீரம் மற்றும் கௌரவம் சார்ந்த விஷயமாகவும் சீனர்கள் நம்புகிறார் கள்.

இதற்காகவே சீன அரசு புலிப் பண்ணைகளை உருவாக்கி, 6,000 பலி புலிகளை வளர்க்கிறது. ஆனால், காட்டு வாழ் புலிக்குத்தான் வீரியம் அதிகம் என்று நம்பும் மருந்து நிறுவனங்கள், கள்ளச் சந்தையில் வரும் காட்டுப் புலிகளின் மூலம் கிடைக்கும் பொருட்களின் மீது ஆர்வம் காட்டுகின்றன. சீனா வின் வியாபாரரீதியிலான புலி வளர்ப்புக்கு உலகம் முழுவதும் எதிர்ப்புகள் குவிந்துவருகின்றன. கடந்த 73-ம் ஆண்டு வாஷிங்டனில் 80 நாடுகள் ஒருங்கிணைந்து உருவாக்கிய 'சைட்டிஸ்’ (CITES Convention on international trade in endangered species)  ஒப்பந்தக் குழுவினர் கடந்த 2007-ல் சீனாவில் பண்ணையில் வளர்த்து, புலிகள் கொல்லப்படுவதை எதிர்த்துத் தீர்மானம் நிறைவேற்றினார்கள். ஆனாலும், அசராமல் புலிகளை வளர்த்துப் பலி கொடுக்கிறது சீனா.

இந்தியா மற்றும் தமிழகத்தில் புலிகள்!

இந்தியாவின் வட மாநிலங்களில் புலி வேட்டையைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறுகின்றன அரசுகள். ஏனெனில், இதில் கிடைக்கும் அபரிமிதமான பணம். கடந்த 2000 முதல் 2009-ம் ஆண்டு வரை நாடு முழுவதும் 882 பேர் புலி வேட்டை தொடர்பாகக் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். ஆனால், இவர் களில் தண்டனை பெற்றது 18 பேர் மட்டுமே. சரியான ஆதாரங்கள் இல்லாதது மற்றும் புலி மாஃபியாக்களின் செல்வாக்கும் இதற்குக் காரணம்.

தமிழகத்தில் கடந்த இரு ஆண்டுகளில் மட்டும் கோவை, சத்தியமங்கலம், நீலகிரி வனக் கோட்டத்துக்கு உட்பட்ட இடங்களில் 10-க்கும்
மேற்பட்ட புலித் தோல்கள் பிடிபட்டன. ஆறு மாதங்களுக்கு முன்பு தமிழக எல்லையை ஒட்டி கர்நாடகாவில் இருக்கும் சாம்ராஜ் நகரில் புலியின் தோல், இறைச்சி, எலும்புகளை வைத்திருந்த நான்கு பேரை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள்.
ஆபத்துகளுக்கு இடையிலும் மற்ற மாநிலங்களைவிட புலிகள் பாதுகாப்பில் தமிழ கம் முதன்மையான மாநிலம் என்பதைச் சமீபத்தியக் கணக்கெடுப்புகள் நிரூபிக்கின்றன. தமிழகத்தில் களக்காடு - முண்டந்துறை, ஆனைமலை, முதுமலைப் புலிகள் காப்பகம் மற்றும் சத்தியமங்கலம் வனப் பகுதி ஆகியவற்றில் தற்போது 150 புலிகள் இருப்பதாக வனத் துறை அறிவித்துள்ளது. ஆனால், சமீபத்தில் நடந்த கணக்கெடுப்புகளின்படியும் காடுகளில் பொருத்தப்பட்டு இருக்கும் கேமரா பதிவுகளின்படியும் புலிகளின் எண்ணிக்கை உத்தேசமாக 300 ஆக உயர்ந்திருக்கும் என்கிறார்கள்.

No comments:

Post a Comment