Search This Blog

Tuesday, January 01, 2013

எனது இந்தியா (யானைப் போர்!) - எஸ். ராமகிருஷ்ணன்....

மன்னர்களுக்குப் பரிசாக அளிக்கப்பட்ட அரிய வைரங்கள், முத்து மாலைகள், தங்க நகைகள், பட்டு வஸ்திரங்கள் பற்றிய செய்திகளை வரலாற்றுக் குறிப்புகளில் காண முடிகிறது. ஆனால், பல்வேறு அரசர்களுக்கு பரிசாகப் அளிக்கப்​பட்ட மிருகங்கள், அதன் பின்​புலம் உள்ள சுவாரஸ்​யமான வரலாறு இன்னமும் முழுமையாக அறியப்படவில்லை.

இந்தியாவில் இருந்து வெளிநாட்டு அரசர்களுக்கு யானை, காண்டாமிருகம், மான் ஆகியவை பரிசாக அளிக்கப்பட்டதை வரலாற்றில் காண முடிகிறது. அதுபோலவே, ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு ஒட்டகச்சி​விங்கிகள், கிளிகள், பூனைகளும்கூட பரிசாகத் தரப்பட்டு இருக்கின்றன. 1515-ம் ஆண்டு இந்தியாவில் இருந்து பரிசாக அனுப்பிவைக்கப்பட்ட காண்டாமிருகத்தை, போர்ச்சுக்கல்லில் உள்ள லிஸ்பன் நகரில் வசிக்கும் மக்கள் வியப்புடன் பார்த்திருக்கின்றனர். அதற்கு முன்பு வரை அப்படிப்பட்ட விசித்திர மிருகம் எதையும் அவர்கள் பார்த்ததே இல்லை. அந்த காண்டாமிருகத்தை, போப்புக்குப் பரிசாக அனுப்பிவைக்க முடிவு செய்து, மீண்டும் கப்பலில் அனுப்பிவைத்தார் மேனுவல் அரசன்.

அந்தக் கப்பல் கடற்புயலில் சிக்கி மூழ்கியது. தனக்குப் பரிசாக கொண்டுவரப்பட்ட அந்த அதிசய மிருகம் எப்படி இருந்தது என்பதைஅறிந்து​கொள்ள வேண்டும் என்று போப் விரும்பி​யதால், புகழ் பெற்ற ஓவியர் டூரரை அழைத்து, அந்த மிருகத்தைப் பற்றிய விவரங்களைச் சொன்னதும் நேரில் காணாமலேயே அவர் காண்டாமிருகத்தை அசலாக வரைந்துமுடித்த அதிசயமும் நடந்தது. காண்டாமிருகங்கள் இந்தியாவில் இருந்து பரிசாக அனுப்பிவைக்கப்பட்டது போல​ஸ்பெயின், போர்ச்சுகல், கிரேக்கம், சீன அரசர்களுக்குப் பரிசாக யானைகளும் அனுப்பிவைக்கப்பட்டன. மன்னர் ஒரு யானையைப் பரிசாக அனுப்பும்போது, அதனைப் பராமரிப்பதற்காக 12 பேரையும் கூடவே அனுப்பிவைப்பது வழக்கம். இரண்டு பேர் அதற்கு உணவு தருபவர்கள். இருவர் மாவுத்தர்கள். இரண்டு பேர் யானை வீதியில் உலா வரும்போது முன்னே குதிரையில் சென்று அறிவிப்பவர்கள். இரண்டு பேர் யானையை அலங்காரம் செய்​பவர்கள். ஒருவர், யானை மீது உட்காரும் பூச்சிகளை விரட்டுபவர். ஒருவர், யானை லத்தியைசுத்தப்​படுத்துகிறவர். ஒருவர் யானைக்கு மருத்துவம் பார்ப்​பவர். இன்னொருவர் யானைக் கொட்டிலின் காவலாளி. இந்த 12 பேர் சேர்ந்துதான் யானை​யைப் பராமரிக்க வேண்டும்.  


கேரளாவில் இருந்து கப்பலில் கொண்டு வரப்பட்ட யானைகள், லிஸ்பனில் இருந்த மிருகக்காட்சி சாலையில் மக்கள் பார்வைக்காக வைக்கப்​பட்டன. 1551-ம் ஆண்டு ஒரு யானையை மலபார் பகுதியில் பிடித்து, அதைக் கப்பலில் ஏற்றி ஸ்பெயின் மன்னருக்குப் பரிசாக அனுப்பி வைத்தனர். அதன்பெயர் சுலைமான். அந்த யானையுடன் இன்னொரு கப்பலில் சிங்கமுகக் குரங்குகள், மயில்கள், புனுகுப்பூனை ஆகியவையும், யானையைப் பராமரிக்கும் ஊழியர்களும் அனுப்பி வைக்கப் பட்டனர். யானை கொண்டுவரப்பட்ட கப்பலை, பிரெஞ்சுக் கடற்கொள்ளையர் தாக்கினர். அவர்கள், அதற்கு முன் யானையைப் பார்த்ததே இல்லை. ஆகவே அதை, நரகத்தில் இருந்து தப்பிவந்த கொடிய விலங்கு என்று நினைத்து பயந்து, தலைதெறிக்க ஓடினர். அப்படிக் கொண்டு செல்லப்பட்ட யானை, ஸ்பெயின் தேசம் எங்கும் கால்நடையாக நடத்திச் செல்லபட்டு மன்னர் வசம் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஒரு நாளைக்கு 30 கிலோ மீட்டர் தூரம் வீதம் அந்த யானை ஓர் ஆண்டு காலம் நடந்து, வியன்னா நகரை அடைந்தது. தாங்க முடியாத குளிர், யானைக்கு என்ன உணவு கொடுப்பது என்று தெரியாத குழப்பம், யானை கத்தும்போதெல்லாம் அதற்குக் கொடுக்கப்பட்ட அடி என அத்தனையும் ஒன்றுசேர்ந்து அந்த யானையைக் கொன்று விட்டன. 1553-ம் ஆண்டு டிசம்பர் 18-ம் தேதி அந்த யானை இறந்தது. அந்த யானையின் நினைவாக நோபல் பரிசு பெற்ற போர்ச்சுக்கீசிய நாவலாசிரியர் ஜோஸ் சரமாகோ, 'யானையின் பயணம்’ என்ற நாவல் எழுதி இருக்கிறார். இந்திய யானையுடன் சென்ற இரண்டு மாவுத்தர்களில் ஒருவர் கேரளாவைச் சேர்ந்தவர். மற்றவர்கள் வங்காளத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களின் உருவச்சித்திரம் ஸ்பெயினில் இன்றும் ஓவியமாகக் காணப்படுகின்றன.

1398-ம் ஆண்டு சாமர்கண்ட்டில் இருந்து மங்கோலிய வம்சத்தைச் சேர்ந்த தைமூர் ஒரு பெரும் படையுடன் கிளம்பினார். செப்டம்பர் 22-ம் தேதி தைமூரின் படை, சிந்து நதிக்கரையை அடைந்தது. ஒரு லட்சம் பேர் கொண்ட படையுடன் டெல்லி நகர எல்லையில் முகாமிட்டார் தைமூர். ஆனா லும், தைமூர் பயந்தது இந்தியாவில் இருந்த யானைப் படையை பார்த்துத்தான்! டெல்லி சுல்தான் முகமது ஷாவின் யானைப் படையை எதிர்கொள்ள, தைமூர் பயந்துகொண்டு இருந்தான். கரிய உருவங்கள் கம்பீரமாகத் திரண்டு நிற்பதைப் போர் முனையில் கண்டபோது, அவன் மனம் இதுபோன்ற வலிமையான மிருகம் தன்னிடம் இல் லையே என்று ஆதங்கப்பட்டது. தைமூரின் வீரர் கள், ஷா-வின் படை வீரர்களை வெறிகொண்டு தாக் கினர். யானைப் படையைச் சமாளிக்க வைக்கோல் மூட்டை ஏற்றிய எருமைகளைக் களத்தில் ஓடவிட்டு வைக்கோலுக்குத் தீ வைத்தார் தைமூர்.


இதனால், வெற்றி அவர் வசமானது. தனது தேசத்துக்கான வெற்றிப் பரிசாக 120 யானைகளை டெல்லியில் இருந்து கொண்டுசென்றான் தைமூர். அந்த யானைகளை சாமர்கண்ட் மக்கள் உற்சாகமாக வரவேற்றனர். யானையின் கறுப்பு நிறம் அவனுக்குப் பிடிக்கவில்லை. எனவே, யானைகளுக்கு பச்சை, வெள்ளை, மஞ்சள் என்று வண்ணம் தீட்டப்பட்டது. இரவில் கேட்கும் யானையின் அலறல் அவனைப் பயமுறுத்தியது. ஒரு வாரத்திலேயே, அவனுக்கு யானைகளைப் பிடிக்காமல் போய்விட்டது. அவற்றைப் பட்டினி போட்டு வதைத்ததோடு கடுமையான விவசாயப் பணிகளையும் செய்வதற்கு அனுப்பிவைத்தான். இதனால், 16 யானைகள் மெலிந்து நோயுற்று இறந்துபோயின. மெலிந்துபோன யானைகளைப் பார்க்கப் பிடிக்காமல், அவற்றைத் தன் கண்ணில் படாதவாறு பார்த்துக்கொள்ள உத்தரவு பிறப்பித்தான். இப்படி, பரிசாகச் சென்ற யானைகள் பரிதாபமாக இறந்த சம்பவமே எல்லா காலத்திலும் நடந்து இருக்கின்றன.
ஐரோப்பாவுக்கு ஒட்டகச்சிவிங்கியை அறிமுகம் செய்தவர் ஜுலியட் சீஸர். கிமு 46-ம் ஆண்டு அலெக்​சாண்டிரியாவுக்கு அவரே ஓர் ஒட்டகச் சிவிங்கியை வெற்றிப் பரிசாகக் கொண்டுவந்தார்.

அதன் பிறகு, துருக்கி சுல்தான் 1487-ம் ஆண்டு ஒரு பெண் ஒட்டகச்சிவிங்கியை, இத்தாலிய அரசனுக்குப் பரிசாக அளித்து இருக்கிறார். ஆப்பிரிக்காவில் இருந்து ஒட்டகச்சிவிங்கி இந்தியாவுக்குக் கொண்டு​வரப்பட்டதற்கு ஒரு நேரடிச் சான்று இருக்கிறது. அது, ஒரிசாவின் கொனார்க் கோயிலில் உள்ள சிற்பம். கொனார்க்கில் உள்ள சூரியக் கோயிலை முழுவதும் சுற்றிப்பார்க்க ஒருவர் குறைந்தபட்சம் ஒரு மாதம் செலவழிக்க வேண்டும். போகிறபோக்கில் பார்த்துக் கடந்து போகிறவர்கள், அதன் புறத்தோற்றத்தைத் தாண்டி உள்ளார்ந்த அழகியலை, பேரழகான சிற்பங்களை அறிந்துகொள்ள முடியாது. அங்குள்ள ஒட்டகச்சிவிங்கியின் சிற்பம் மிக முக்கியமான வரலாற்று சாட்சி. கொனார்க்குக்கு இரண்டு சிறப்புகள் இருக்கின்றன. ஒன்று, அது சூரியனின் கோயில். இன்னொன்று, பாலுறவுச் சிற்பங்களின் கூட்டுக் கலைக்கூடம். காலம் குறித்து அதிகம் யோசித்தவர்கள் இந்தியர்கள். காலத்தை அறிவது என்பது கலை, விஞ்ஞானம் இரண்டிலும் முக்கியச் செயல்பாடாக இருந்திருக்கிறது. காலம் குறித்த இந்தியர்களின் பார்வை நுட்பமானது. காலத்தைத் துல்லியமாக வரையறுத்து அறிவியல்பூர்வமாக அணுகுவது ஒரு புறம் என்றால், அதுகுறித்த தொன்மங்களும் பழங்கதைகளும், சிற்பங்களும், கோயில்களுமாகக் கற்பனை வளம் மறு பக்கம் இருக்கிறது. நம் காலம் இரண்டுக்குமான ஊசலாட்டத்தில் இருக்கிறது.

No comments:

Post a Comment