‘பம்பாய்’ படத்துக்குப் பின் மறுபடியும் மணிரத்னம், ராஜீவ்மேனன்,
ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி, எழுத ‘அறம்’ புகழ் எழுத்தாளர் ஜெயமோகன், நடிக்க
கார்த்திக்கின் மகன்,
ராதாவின் மகள், மறுபடியும் அரவிந்த்சாமி, முதல் முறையாக மணிரத்னம்
படத்தில் அர்ஜுன் என்று ரசிகர்களின் எதிர்பார்ப்பைத் தூண்டும் பல விளம்பர
அம்சங்களுடன்
வரவிருக்கும் ‘கடல்’ படத்தின் முதல் டிரெய்லர் பார்த்தேன்.
பார்க்கச் சொன்னவர் திரையுலகில் பணிபுரியும் ஒரு நண்பர்தான். படத்தில்
நடிக்கும் ராதாவின் மகள் துளசிக்கு 15 வயதுதான் ஆகிறது. அந்தச் சிறுமியை
இப்படி முத்தமிடும்
காட்சியில் பயன்படுத்தியிருப்பது சரிதானா என்ற கேள்வியை அவர் ஃபேஸ்புக்,
சமூக இணையதளத்தில் எழுப்பியதாகவும் யாருமே அதைக் கண்டுகொள்ளவில்லை என்றும்
அந்த
நண்பர் சொன்னார். அதனால் நானும் பார்த்துவிட்டு ஃபேஸ்புக்கில் இவ்வாறு
எழுதினேன்.
நாம் எல்லாரும் சிந்திக்க சில கேள்விகள் : 15 வயது சிறுமியை லிப் கிஸ்
அடிக்கும் காட்சியில் நடிக்க வைத்து படம் தயாரித்து வெளியிடுவது
மணிரத்னத்துக்கு நல்ல
வியாபாரமாக இருக்கலாம். ஆனால் அது ‘அறமா’குமா? படத்துக்கான கடல் படக்
குழுவின் நிருபர் சந்திப்பைத் தொகுத்து வழங்கிய சுஹாசினி லட்சக்கணக்கில்
பணம் திரட்டி
மகளிர் நல அமைப்பு நடத்தி வருகிறாரே, அவரும் அந்த அமைப்பும் பெண்கள்
பாதிக்கப்பட்ட பிறகு தான் உதவி செய்வது, மெழுகுவர்த்தி கொளுத்துவதெல்லாம்
செய்வார்களா?
பாதிப்பை ஏற்படுத்தும் அம்சங்களைப் பற்றிக் கவலைப்பட மாட்டார்களா? இன்றைய
சினிமாக்களில் சிறுமியை வைத்து உருவாக்கிக் காட்டும் இத்தகைய காட்சிகள்
விடலை
மனங்களில் எப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன என்பது பற்றி
யாருக்கும் கவலையில்லையா? தில்லி, ஸ்ரீவைகுண்ட நிகழ்வுகளுக்கெல்லாம் பொங்கி
எழுந்த ஃபேஸ்புக்
வீரர்களில் சிலர் சினிமா துறை என்று வரும்போது மட்டும் பம்மிப் பதுங்கிக்
காணாமற் போவது ஏன்?"
இந்தக் கருத்தை உடனடியாக 120 பேர் எடுத்து தத்தம் ஃபேஸ்புக் சுவர்களில்
பதிந்து பரப்பியிருக்கிறார்கள். இதற்கு முன் என் வேறு பதிவு எதுவும்
இவ்வளவு பகிரப்பட்டதில்லை.
என் இழையில் வந்து விவாதித்த பலரும் தெரிவித்த கருத்துகளில்
முக்கியமானவற்றை மட்டும் பார்க்கலாம்.
இது காலம் காலமாக நம் சினிமாவில் நடப்பதுதானே என்பது ஒரு கருத்து.
பதினைந்து வயதில் இதழ் முத்தம் இடக் கூடாதா என்பது இன்னொரு கருத்து.
ஒவ்வொன்றாகப்
பார்ப்போம்.
உண்மைதான். கதாநாயகியாக நடிக்க 14 வயது சிறுமிகளை அழைத்து வருவது பல
வருடங்களாக நடக்கிறது. மஞ்சுளா, ரேவதி, குஷ்பு போன்றோர் கதாநாயகிகளாக
அறிமுகமாகும்போது வயது 16லிருந்து 18 தான். சட்டப்படி மேஜர் வயது எனப்படும்
18க்கும் முன்பாகவே இந்த மைனர்கள் நடிக்க வைக்கப்படுவது அவர்கள்
சம்மதத்தின்
அடிப்படையிலேயே அல்ல. பெற்றோரின் விருப்பமும் சம்மதமும் அதிகாரமும்தான்
செயல்படுகின்றன. 15 வயது துளசியை முகத்தில் காதலையும் காமத்தையும் விரக
உணர்ச்சியையும் காட்டி நடிக்க வைப்பதில் முதல் பொறுப்பு அவருடைய அம்மா
ராதாவுடையதுதான்.
இப்படி வளர் இளம்பருவத்தில் இருக்கும் சிறுமிகளை சினிமாவில் எப்போதுமே
காதல், காமக் காட்சிகளில்தான் நடிக்க வைத்து இயக்குனர்களும்
தயாரிப்பாளர்களும் காசு பண்ணி
வந்திருக்கிறார்கள். எனவே இது ஒன்றும் மணிரத்னம் கண்டுபிடித்த புது விஷயம்
அல்ல. அவரது முன்னோடிகள் செய்ததை அவர் இன்னும் சிறந்த தொழில்நுட்ப
நேர்த்தியுடன் செய்யக்
கற்றிருக்கலாம். ஆனால் தமிழ் சினிமாவில் வேறு எந்தப் படைப்பாளியை விடவும்
அதிகமாகக் கொண்டாடப்படுபவர் அவர். அனைத்திந்திய அளவில் ஆராதிக்கப்படுபவர்.
அப்படிப்பட்டவர்கள்தான் மற்றவர்களுக்கு ரோல் மாடலாக இருக்க வேண்டிய
பொறுப்புள்ளவர்கள். எப்படிப்பட்ட ரோல் மாடல் என்பது எனவே விமர்சிக்கப்பட
வேண்டும்.
அது மட்டுமல்ல, தில்லியில் நடந்த பாலியல் வன்முறைக் கொடூரத்துக்குப்
பிறகு நாடெங்கும் நாம் நம் பெண்களை எப்படி நடத்துகிறோம் என்ற கேள்வி பரவலாக
தீவிரமாக இன்று
விவாதிக்கப்படுகிறது. பெண்களைப் பற்றிய நம் பார்வையை உருவாக்கும் எல்லா
சக்திகள் பற்றியும் பேசியாக வேண்டியிருக்கிறது. மதம், சாதி, குடும்பம்,
கல்வி, மீடியா,
வணிகம் ஆகியவை எப்படி ஆணைப் பற்றியும் பெண்ணைப் பற்றியும் நம் கருத்துகளை
உருவாக்கி வருகின்றன என்பதை முன்னெப்போதையும் விட தில்லி நிகழ்வுக்குப்
பிறகு அதிக
கவனம் செலுத்தும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
அதில் சினிமா நம் சமூகத்தின் விடலைச் சிறுவர்கள் மனங்களில் ஏற்படுத்தும்
பாதிப்புகள் முக்கியமானவை. கடந்த பத்தாண்டுகளில் தமிழ் சினிமாவில்
பொறுக்கிப் பாத்திரங்களே
ஹீரோவாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த வாரம் வெளியான அலெக்ஸ் பாண்டியன்
படத்தின் பெரும் பகுதி ஆபாச வசனங்களும் காட்சிகளுமாக இருக்கும் நிலையில்
என் நண்பர்
நடிகர் சிவகுமாருக்கு ஒரு மெசேஜ் அனுப்பும்படி ஆயிற்று. தன் மகன்களை
ஆடம்பரமில்லாமல் ஒழுக்கமாக வளர்த்த தந்தை என்ற புகழுடையவர் அவர்.
ஒழுக்கமாக வளர்த்த
பிள்ளையை ஆபாசப் படத்தில் நடிக்க விட்டுவிட்டீர்களே என்று உங்களைப் பலரும்
திட்டுகிறார்கள்" என்று செய்தி அனுப்பினேன்.எனக்கும் செய்தி வந்தது. இனி
இந்தத் தவறு
நிகழாமல் பார்த்துக் கொள் என்று சொல்லியுள்ளேன்" என்று உடனே பதில்
அனுப்பியிருக்கிறார்.
சினிமா, சமூகத்தில் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது; குற்றம் செய்யவும்,
தவறு செய்யவும் தூண்டுகிறது என்ற கருத்தை ஒருபோதும் சினிமாக்காரர்கள்
ஏற்றுக் கொள்ளவே
மாட்டார்கள். ஆனால் அதன் பாதிப்பு சமூகத்தில் கடுமையாக இருக்கிறது என்பதை
சமூகவியலாளர் களும் ஆசிரியர்களும் நடைமுறையில் நன்றாகவே அறிவார்கள்.
பெண்ணைப்
பற்றி சமூகத்தில் ஏற்கெனவே இருந்து வரும் மோசமான பார்வைகளை சினிமா,
பத்திரிகை, தொலைக்காட்சி போன்ற மீடியாக்கள் கலைப்பதற்குப் பதிலாக
பலப்படுத்துகின்றன.
தொடர்ந்து தன்னைச் சுற்றிலும் பெண் பிம்பங்கள் உணர்ச்சியைத் தூண்டும்
விதத்தில் மீடியாவால் தன் மீது வீசப்பட்டுக் கொண்டே இருக்கும் சூழலில் ஒரு
பெண்ணைத் தொட்டுப்
பார்ப்பதற்கான வாய்ப்புக்காக ஏங்கும் மனமாக வளர் இளம்பருவச் சிறுவனின் மனம்
தவிக்கிறது. ஐம்பதுகளில், அறுபதுகளில், எழுபதுகளில், எண்பதுகளில்
இருந்ததைவிட பல
மடங்கு அதிகமான மீடியாவின் பெண் மோகத் தூண்டுதல் சூழல் இன்றைய சிறுவருக்கு
இருக்கிறது. வழிகாட்டுவோர் இல்லை. எதிர்பாலினத்துடன் ஆரோக்கியமாக உறவாடி
ஒருவரையொருவர் புரிந்துகொள்ள உதவும் சூழல் குடும்பத்திலும் இல்லை, கல்விக்
கூடத்திலும் இல்லை. எங்கும் இல்லை. இந்த நிலையில் இருக்கும் விடலைப்
பருவத்தினரில்
இன்னும் அதிகம் பேர் இன்னும் அதிக பாலியல் குற்றங்களை நோக்கித்
தள்ளப்படாமல் இருப்பதே ஆச்சர்யமானதுதான்.
இந்தப் பின்னணியில்தான் 15 வயது சிறுமியை இதழ் முத்தக் காட்சியில் மணிரத்னம் பயன்படுத்துவதன் தவறை, ஆபத்தைப் பார்க்க வேண்டும்.
அதை அலசுவதற்கு முன்பு, பதினைந்து வயதில் ஒருவர் முத்தமிடக் கூடாதா என்ற
கருத்தைப் பார்ப்போம். எந்த வயதிலும் முத்தமிடலாம், யாரும் முத்தமிடலாம்.
ஆனால்
அந்த ஒவ்வொரு முத்தமும் வெவ்வேறானவை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
எது வெறும் உடல் கவர்ச்சி, எது தற்காலிக ஆசை, எது காதல், எது பரஸ்பர அன்பு,
எது
பரஸ்பர மதிப்பு என்பதையெல்லாம் தன் உடலை இன்னொரு உடலுடன் பகிரும்போதெல்லாம்
தெரிந்தே பகிரக் கற்காமல் பகிர்ந்தால் மனநல பாதிப்புதான் ஏற்படும்.
என்னுடன் மிகுந்த வாஞ்சையுடன் பழகிய பல இளைஞர்களின் திருமணங்களுக்குச்
செல்லும் போது நான் மணமகனுக்கும் மணமகளுக்கும் நெற்றியில் முத்தமிட்டு
வாழ்த்துகிறேன்.
எல்லா முத்தமும் ஒன்றென்று வாதிட்டு, நான் அவர்களை இதழில் முத்தமிட்டு
வாழ்த்த முடியாது.
குழந்தையைக் கையில் எடுத்துக் கொஞ்சும்போது, அதன் கன்னத்தில்
முத்தமிடுவதுதான் சரி. உதட்டில் முத்தமிடுவது அல்ல. உதட்டு முத்தம்
காமத்தின் வெளிப்பாடு.
குழந்தைகளை ஒருவருக்கொருவர் முத்தமிடச் சொல்லி பழக்குவது சில பெற்றோரின்
அசட்டுத்தனம். பாலியல் தொடுதல்களில், குட் டச், பேட் டச் என்பவை எப்படி
முக்கியமோ
அதே போலத்தான் முத்தங்களும்.
எனவே சினிமாவில் 15 வயது சிறுமி இதழ் முத்தத்தில் ஈடுபடுவதைப்
பார்க்கும் 15 வயது சிறுவர்கள் மனத்தில் அது எப்படிப்பட்ட கிளர்ச்சிகளை
ஏற்படுத்தும் என்பது பற்றிப்
படைப்பாளிகளுக்குப் பொறுப்புணர்ச்சி வேண்டும். நம் சமூகத்தில்
திரைப்படங்கள், யு, ஏ, யுஏ என்றெல்லாம் வகைப்படுத்தப்பட்டாலும் தணிக்கை
முறை சீராகவோ நேர்மையாகவோ
இல்லை. எல்லா படங்களும் தொலைக்காட்சியில் யாரும் பார்க்கும்விதம்
கிடைக்கும் சூழலே இருக்கிறது. மேலைநாடுகளில் இருக்கும் வரையறுக்கப்பட்ட
சூழல் இதில் இங்கே
நம்மிடம் இல்லை.
பாலியல் வன்முறைகள், சீண்டல்கள் பற்றி நம் சமூகத்தில் முன்பு எப்போதும்
இருந்ததை விட கூடுதல் அக்கறை இப்போது ஏற்பட்டுள்ள நிலையில், சினிமா
துறையினரும்
பத்திரிகைத் துறையினரும் தம்மை கடும் சுயவிமர்சனத்துக்கு உட்படுத்திக்
கொள்ள வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். அற உபதேசங்கள் எல்லாம்
அரசியல்வாதிக்கும்
அதிகாரிகளுக்கும் வாசகர்களுக்கும் மட்டுமென்று தனக்குத் தானே விலக்குக்
கொடுத்துக் கொண்டு எழுத்தாளனும் இயக்குனரும் இனியும் இருக்க முடியாது.
அக்கறை என்பது
வெறுமே மெழுகுவர்த்தி ஏற்றுவது அல்ல. மீடியாவும் சினிமாவும் வெறுமே
‘டைம்பாஸ்’தான் என்று சொல்லி இனியும் தப்பிக்க முடியாது.
காதல் என்றால் என்ன என்று நம் சிறுவர்களுக்குச் சொல்லித் தருவதில்
பெரும் பங்கு வகிப்பது நம் சினிமாதான். அது காட்டும் காதல்
ரவுடித்தனத்தையும்
விடலைத்தனத்தையும் பெண் சீண்டலையும் ஊக்குவிப்பதாகவே இருக்கிறது. இது
மாறியாக வேண்டும். மாற வேண்டுமானால் நாம் அனைத்தையும் விமர்சித்து
விவாதித்தாக
வேண்டும். அதை மணிரத்னத்தின் விடலை முத்தத்திலிருந்தே தொடங்கலாம்.
No comments:
Post a Comment