Search This Blog

Saturday, January 26, 2013

'விஸ்வரூபம்’


'இதய பலவீனம் உள்ளவர்கள் இந்தப் படத்தை பார்க்க வேண்டாம்’ படத்தின் டைட்டில் போடுவ​தற்கு முன் திரையில் திகிலாக வந்து விழுகிறது இந்த வாசகம். அந்த வாசகத்தை நிஜம் ஆக்குவதுபோல படம் முழுவதும் கோரமான குண்டு வெடிப்புகளும் கொடூரமான கொலைகளும் நிரம்பி வழிகின்றன.

படத்தின் கதைக் களம் ஆப்கானிஸ்தான். அங்கே இருக்கும் தாலிபான்களின் செயல்பாடுகள்தான் படத்தை மொத்தமாக நகர்த்துகின்றன. இந்தியாவின் உளவு அமைப்பான 'ரா’வின் உளவாளி கமல், முஸ்லிம் கேரக்டரில் நடித்து இருக்கிறார். காஷ்மீரி ஒருவருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் மகனாகப் பிறந்தவர்தான் கமல். காஷ்மீருக்குச் செல்லும் கமலை, அங்கே தேடப்படும் தீவிரவாதியாக அறிவிக்கிறார்கள். அவரைக் கண்டுபிடித்துக் கொடுத்தால், ஐந்து லட்சம் ரூபாய் பரிசு என்று அறிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தானுக்குள் நுழையும் கமல், தாலிபான்கள் கையில் சிக்குகிறார். அவரை அரசிடம் ஒப்படைத்துவிட்டு, ஐந்து லட்சம் ரூபாயை வாங்கலாமா எனக் கணக்கு போடுகிறது தாலிபான். அப்போது தமிழ் பேசும் கமலைப் பார்த்துவிட்டு, தாலிபான் தலைவர் உமர் அவரிடம் தமிழில் பேசுகிறார். ''ஐந்து லட்சத்தைவிட விலை மதிக்க முடியாத தமிழ் ஜிஹாதி. இவரைப் பிடித்துத் தர வேண்டாம். நமது குழுவிலேயே இருக்கட்டும்'' என்கிறார் உமர். நிஜத்தில் சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளியான தாலிபான் இயக்கத்தின் தலைவர் முல்லா ஒமர் கேரக்டர்போலவே இந்த உமர் கேரக்டர் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. உமர் தமிழ் பேசுவதைப் பார்த்து ஆச்சர்யப்படுகிறார் கமல். ''நான் தமிழ்நாட்டில் கோவை மதுரையில் இரண்டு ஆண்டுகள் இருந்திருக்கிறேன்'' என்று அவர் சொல்கிறார்.

மாயவரத்தில் பிறந்த நிருபமா என்ற பெண்தான் கமலின் மனைவி. அவர் வேலை பார்க்கும் சீசியம் மற்றும் அணுக்கதிர் கையாளும் நிறுவனத்துக்கும் தாலிபான்களுக்கும் தொடர்பு இருப்பதாகச் சந் தேகப்படுகிறார் கமல். அதனால், மனைவிக்குத் தெரியாமலேயே அவர் உடையில் கேமராக்கள் வைத்து அந்த நிறுவனத்தை உளவு பார்க்கிறார் கமல். ஸ்கூலில் குண்டு வைக்கும் காட்சி முறியடிப்பு, காட்டிக்கொடுத்த போராளியை பொதுமக்கள் மத்தியில் தூக்கில் போடுவது என இப்படி அடுத்தடுத்து காட்சிகள் நகர்ந்துகொண்டே இருக்கின்றன.

தீவிரவாதச் செயல்கள் செய்யப்படும்போது எல்லாம் தொழுகைக் காட்சிகள் இடம்பெறுகின்றன. குர்-ஆன் வசனங்கள் அரபியில் ஓதப்படுகின்றன. ஒரு காட்சியில் 'ஜிஹாத்துக்கு (புனிதப் போர்) தயாராகுங்​கள். சொர்க்கம் உங்களுக்குச் சொந்தமாகும்’ என்ற வசனமும் அரபியில் ஒலிக்கிறது. தாலிபான்களின் செயல்பாடுகள் அப்படியே திரையில் திகிலாகக் காட்டப்​படுகின்றன. இடையில் ஒரு வசனம். 'இது ஆயிலுக்காக நடக்கும் யுத்தம்’ என எண்ணெய் வளங்களை சுரண்டும் அரசியல் பற்றியும் படம் பேசுகிறது. படத்தில் பின்லேடனும் வருகிறார். அவரை அமெரிக்கா கொன்றபோது அமெரிக்​காவில் கொண்டாட்டம் நடக்கிறது. அப்போது, தமிழ் கேரக்டர்கள் இருவர், 'அசுரனைக் கொன்றது​போல மக்கள் கொண்டாடு​கிறார்கள்’ என வசனம் பேசு​கிறார்கள்.

தாலிபான் படையில் சேரும் கமல், அங்கே நடக்கும் செயல்களை உள்வாங்கி, தகவல்களை தலைமைக்கு அனுப்பி வைக்கிறார். அமெரிக்கா மீது தாக்குல் நடத்தத் திட்டமிடுகிறது தாலிபான். இதற்காக உமர் அமெரிக்கா செல்கிறார். இதை முறியடிக்க கமலும் நடனக்காரர் வேடத்தில் அமெரிக்காவுக்குள் நுழைகிறார். அங்கே அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ-வுடன் சேர்ந்து திட்டத்தை முறியடிக்கிறார். அமெரிக்காவுக்குத் தாலிபானால் வரும் ஆபத்தை இந்தியா முறியடிப்பதாகக் கதை முடிகிறது. இறுதியில் உமர் விமானத்தில் தப்பிச் செல்ல, ''உமர் சாக வேண்டும்; இல்லை, நான் சாக வேண்டும்'' என கமல் வசனம் பேச... இந்தியாவில் தொடரும் என முடிவடைகிறது  படம்.

No comments:

Post a Comment