Search This Blog

Wednesday, January 09, 2013

எனது இந்தியா (மங்கம்மாள் சாலை! ) - எஸ். ராமகிருஷ்ணன்....

18-ம் நூற்றாண்டு வரை தொடர்ந்த இந்தச் சுங்க முறை, வணிகர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்கி இருக்கிறது. பனாரஸ் நகரை நிர்வாகம் செய்த டங்கன் என்ற ஆங்கிலேய அதிகாரி, இந்தச் சுங்க வரியை முழுமையாக ரத்துசெய்து, பனாரஸுக்கு வருபவர்கள் இலவசமாக சாலையைப் பயன்படுத்தலாம் என்று அறிவித்தார். பஞ்சாபுக்கும் வடமேற்கு எல்லைப் பகுதிகளுக்கும் செல்வதற்கான பிரதான சாலையாக கிராண்ட் டிரங்க் சாலையை பிரிட்டிஷ் நிர்வாகம் பயன்படுத்தியது. குறிப்பாக, ராணுவத்தினருக்கான கன்டோன்மென்ட்கள், குடியிருப்புகள், படைப் பிரிவின் காப்பகங்கள் இந்தச் சாலையோர நகரங்களில் அமைக்கப்பட்டன. கிராண்ட் டிரங்க் சாலையை ஒட்டிய நகரங்களில் குடியிருந்த சீக்கியர்கள், பிரிட்டிஷ் அதிகாரிகளுடன் ஏற்பட்ட நல்லுறவால் இங்கிலாந்துக்குக் கூட்டம் கூட்டமாகச் சென்றனர். குறிப்பாக, இரண்டாம் உலகப் போரின்போது பிரிட்டனில் தொழிலாளர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டது. அந்தச் சூழலை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட சீக்கியர்கள், அதிக அளவில் இங்கிலாந்தில் குடியேறினர்.

ஷெர் ஷா சூரி எனப்படும் ஷேர் கான் ஐந்து ஆண்டுகளே டெல்லியை ஆட்சிசெய்து இருக்கிறார். பாபரின் படையில் தளபதியாக இருந்த ஷேர் கான், பீகாரின் கவர்னராகப் பணியாற்றிய பிறகு அரியணையைக் கைப்பற்றினார். ஷேர் கான் காலத்தில்தான் ரூபாய் புழக்கத்தில் விடப்பட்டது. அன்று, ரூபாய் எனப்பட்டது காகிதப் பணம் அல்ல. அது, வெள்ளி நாணயம். 178 கிராம் எடைகொண்ட அந்த நாணயமே, ரூபாய் என்று அழைக்கப்பட்டது. உங்கள் வாழ்நாளில் ஒரு முறை இந்த நீண்ட சாலையில் பயணம் செய்யதால், அது வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும். ருடியாட் கிப்ளின் தனது 'கிம்’ நாவலில் இந்த கிராண்ட் டிரங்க் சாலையின் பெருமைகளை மிகவும் சுவாரஸ்யமாக விவரித்து இருக்கிறார். இந்தியா, பாகிஸ்தான், ஆப்கன் ஆகிய மூன்று தேசங்களின் ஊடாகச் செல்லும் கிராண்ட் டிரங்க் ரோடு, வெறும் பயணச் சாலை அல்ல. அது, வரலாற்றின் அழியாத சாட்சி. அந்த சாட்சியத்தின் அடையாளமாகவே இன்றும் நாம் சிதைந்துபோன பழங்காலச் சத்திரங்கள், ஓய்விடங்களைக் காண முடிகிறது. அந்த இடிபாடுகள் காலத்தின் பசுமை​யான நினைவுகளுடன் தனிமையாக, தனக்குத்தானே கடந்த காலத்தின் பாடல்களை முணு​முணுத்துக்​கொண்டே இருக்கின்றன.


கிராண்ட் டிரங்க் சாலையைப் போல மிக நீண்ட தூரம் கொண்டதாக இல்லாதபோதும், மங்கம்மாள் சாலை வரலாற்றுச் சிறப்புமிக்கது. காரணம், அதுதான் தென் தமிழ்நாட்டின் பிரதான சாலை. இந்தச் சாலையை உருவாக்கியவர் மதுரையை ஆண்ட ராணி மங்கம்மாள். அவர் தனது ஆட்சிக் காலத்தில் பல அரிய அறச்​செயல்களைச் செய்து இருக்கிறார். குறிப்பாக, மதுரையில் பெரிய அன்னச்சத்திரம் ஒன்றை அமைத்தார். அது, 'மங்​கம்மாள் சத்திரம்’ என இன்றும் அழைக்கப்படுகிறது. அதுபோலவே, புதிய சாலைகள் பலவற்றை அமைத்து இருக்கிறார். கன்னியாகுமரிக்கும் மதுரைக்கும் இடையே அமைந்த நெடுஞ்சாலை, 'மங்கம்மாள் சாலை’ என்றே அழைக்கப்படுகிறது. பயண வழியில் தாகம் தீர்த்துக்கொள்ளத் தண்ணீர்த் தொட்டிகளும் கிணறுகளும் குளங்களும் உருவாக்கப்பட்டன. பொதி ஏற்றுச் சென்று விற்பனைசெய்து வருவதற்கு வசதியாக இந்தச் சாலை அமைக்கப்பட்டது.

மதுரை - கன்னியாகுமரி சாலையில் 108 சத்திரங்களைக் கட்டி, பயணிகளுக்கு சௌகரியம் செய்து தந்திருக்கிறார் ராணி மங்கம்மாள். அப்படி உருவாக்கப்பட்ட சத்திரங்களில் பல இன்றும் இடிந்துபோன நிலையில் சாலையோரம் இருப்பதைக் காணலாம். மங்கம்மாள் சாலை முக்கியமான வணிகப் பாதையாக விளங்கியது. இதன் காரணமாக, சாலையைப் பிரதானப்படுத்தி சிறிய நகரங்கள் உருவாகின. மாட்டு வண்டிகளை நிறுத்த வண்டிப் பேட்டைகள் அமைக்கப்பட்டன. அரசியல்ரீதியான நெருக்கடியான காலத்தில் மங்கம்மாள் மதுரையை ஆட்சிசெய்தார். திருமலை நாயக்கர் இறந்தவுடன் அவரது மகன் இரண்டாம் முத்துவீரப்ப நாயக்கர் கி.பி.1659-ல் ஆட்சிக்கு வந்தார். இவர், சுமார் நான்கு மாதங்களே ஆட்சி புரிந்து உயிர் துறந்தார். அவருக்குப் பின், அவருடைய மகன் சொக்கநாத நாயக்கர் ஆட்சிக்கு வந்தார். அவர் ஆட்சியை ஏற்றபோது இளைஞராக இருந்தார். இதனால், அங்குத் தளவாயாகப் பணிபுரிந்த லிங்கம நாயக்கரும் பிரதானிகளும் சேர்ந்து சதிசெய்து, அவரைப் பொம்மை அரசனாக்கி அதிகாரத்தைக் கைப்பற்றினர்.


அந்தக் காலகட்டத்தில், செஞ்சி நகரம் பீஜப்பூர் சுல்தானின் ஆட்சியில் இருந்தது. மன்னர் சொக்கநாதரின் இசைவைப் பெறாமல் லிங்கம நாயக்கரும் அவரது கூட்டாளிகளும் செஞ்சி மீது போர் தொடுப்பதாக அறிவித்து, போர்ச் செலவுக்காக மக்களிடம் அநியாயமாக வரி வசூல் செய்தனர். இதை உணர்ந்த சொக்கநாத நாயக்கர், தன்னைச் சுற்றிய சதி வலையை முறியடித்து தனது அதிகாரத்தைக் கைப்பற்றி முழு உரிமையோடு நாடாளத் தொடங்கினார்.

சொக்கநாதர் காலத்தில் ஏற்பட்ட பஞ்சம் மறக்க முடியாதது. பஞ்ச நிவாரணத்துக்கு சொக்கநாதர் நிறைய அரும்பணிகளைச் செய்தார். கஞ்சித் தொட்டிகள் திறக்கப்பட்டன. ஆடு, மாடுகளுக்கான தீவனங்கள் வழங்கப்பட்டன. பஞ்ச நிவாரணப் பணிகளை திறமையாக மேற்கொண்டார் சொக்கநாதர். ஆனால், போதுமான பொருளாதார உதவிகள் கிடைக்காத காரணத்தால், பஞ்சத்தில் பல ஆயிரம் பேர் இறந்தனர்.

இன்னொரு பக்கம், பஞ்சத்தால் உணவின்றி வாடிய மக்களுக்கு டச்சு வணிகர்கள் உணவு, உடை கொடுத்து மதமாற்றம்செய்ய முயற்சித்தனர். சொக்கநாத நாயக்கரின் மறைவுக்குப் பிறகு, முத்து வீரப்ப நாயக்கர் பட்டத்துக்கு வந்து ஏழு ஆண்டுகள் ஆட்சி புரிந்தார். அவரது மறைவுக்குப் பிறகு, உடன்கட்டை ஏறாமல் குழந்தை விசயரங்க சொக்கநாதனுக்குப் பட்டம் சூட்டி, மங்கம்மாள் ஆட்சிப் பொறுப்பை ஏற்று நடத்தினார். கி.பி. 1689-ல் இருந்து 1706 வரை மங்கம்மாளின் ஆட்சி நடைபெற்றது.

சாலைகள் அமைக்கவும் சந்தைகள் உருவாக்கவும் மங்கம்மாள் பெரும் செலவு செய்தார். தென் தமிழகத்தில் உள்ள முக்கியமான சாலைகள் ராணி மங்கம்மாள் அமைத்தவை. அவற்றை ஒட்டி உருவான புதிய நகரங்களே, இன்றைய முக்கிய நகரங்களாக விளங்கும் விருதுநகர், சாத்தூர், சிவகாசி, கோவில்பட்டி, கயத்தாறு போன்றவை. இன்றும், கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையை மங்கம்மாள் சாலை என்றே மக்கள் குறிப்பிடுகின்றனர். மங்கம்மாள் இந்தச் சாலையை அமைத்ததைப் பற்றி வாய்மொழிக் கதை ஒன்று இருக்கிறது. விரத நாட்களில் மங்கம்மாள் வெற்றிலை போடுவது கிடையாது. அதை மறந்து ஒரு நாள் அவள் இடது கையால் வெற்றிலை போட்ட காரணத்தால், அதற்குப் பரிகாரமாக மக்களுக்குப் பயன்படும் சாலையை அமைத்துக் கொடுத்தாள் என்று கூறுகிறது ஒரு நாட்டுப்புறக் கதை. ஆனால், வளர்ந்துவரும் சந்தை வணிக முயற்சிகளை மேம்படுத்தவும், படைகள் சென்று வருவதற்கும் உதவியாகவே மங்கம்மாள் சாலைகள் அமைத்தார் என்கிறது வரலாற்றுச் செய்திகள்.

நீண்ட தூரம் சாலைகள் அமைப்பது எளிதான பணி அல்ல. பல்வேறு ஊர்களில் சாலை போடுவதற்கான நிலம் கைவசப்படுத்துவதிலும், சாலை எந்த வழியாகச் செல்ல வேண்டும் என்பதிலும் பிரச்னைகள் ஏற்பட்டன. இதைச் சமாளிக்க உள்ளூர் இனக்குழுத் தலைவர்களை இந்தப் பணியில் ஈடுபடுத்தினார் மங்கம்மாள். ஒவ்வொரு நாளும் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருக்கும் ஆண்டாள் கோயிலில், 'ஆண்டாளுக்கு நைவேத்யம் ஆகிவிட்டது...’ என்று தெரிந்த பிறகுதான் மங்கம்மாள் சாப்பிடுவார் என்ற நம்பிக்கை மக்களிடம் இருந்தது. தென் தமிழகத்தில் இன்னும் பல ஊர்களின் பெயர் சத்திரம் என்ற பெயரில் ஆரம்பிப்பது மங்கம்மாள் உருவாக்கிய சத்திரங்களின் நினைவில்தான். கோடை காலத்தில் மங்கம்மாள் தங்குவதற்காக கட்டிய அரண்மனையே இன்று காந்தி மியூசியமாக உள்ள மங்கம்மாள் அரண்மனை. தமுக்கம் என்றால் யானைகளைப் போருக்கு அனுப்பும் இடம் அல்லது வசந்த மாளிகை என்று பொருள். யானைச் சண்டை முதலான பொழுதுபோக்கு விளையாட்டுக்களும் அரச விழாக்களும் நடைபெற்ற தமுக்கம் மைதானம், இந்த அரண்மனையைச் சேர்ந்ததாகும்.

1670-ல் கட்டப்பட்ட இந்த அரண்மனை, ராணி மங்கம்மாளின் கோடை கால மாளிகையாகப் பயன்படுத்தப்பட்டது. பின்னர், கர்நாடக நவாப் வசமானது. அதன் பிறகு, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்த அரண்மனை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகமாகப் பயன்படுத்தப்பட்டது. 1959-ம் ஆண்டில் காந்தி அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது. காந்தியடிகளின் நினைவாக, முதன்முதலில் மதுரையில்தான் மியூசியம் ஆரம்பிக்கப்​பட்டது. அதன் பிறகே புதுதில்லி, மும்பை, கொல்கத்தா ஆகிய இடங்களில் காந்தி மியூசியங்கள் தொடங்கப்பட்டன. 

தங்க நாற்கரச் சாலைகளின் வருகை இன்று போக்குவரத்தை எளிமையாக்கிவிட்டன. அதே நேரம், சாலைப் பயணத்தில் கண்ணில் படும் மனிதர்கள், மயில்கள், குரங்குகள், பறவைகள், மர நிழலின் அருமை, அருகில் உள்ள கிராமங்களின் வாழ்க்கை, சிறுவணிகம் அத்தனையும் அகற்றப்பட்டு​விட்டன. இன்று, பாலை நிலத்தில் பயணம் செய்வதுபோல நெடுஞ்சாலைப் பயணத்தில் மனித நடமாட்டமே கண்ணில்படுவது இல்லை. கிராண்ட் டிரங்க் சாலையும் மங்கம்மாள் சாலையும் இன்று தங்க நாற்கரச் சாலையின் மறுஉருவாக்கத்தில் அடையாளம் இழந்துவிட்டன. ஆனாலும், மக்கள் நினைவில் இந்தச் சாலைகள் வரலாற்றின் அழியாத சாட்சியாகவே இருக்கும்.

1 comment:

  1. அருமையான பதிவு.
    மங்கம்மாள் சாலை பற்றி நிறைய விபரங்கள் தெரிந்து கொண்டேன்.
    நன்றி.

    ReplyDelete