Search This Blog

Friday, January 04, 2013

புவனேஷ்வர் குமார்

இருபத்து இரண்டு வயது வேகப்பந்து வீச்சாளர். பிரவீன் குமார் ஊர்க்காரர்(உத்தர பிரதேசம்). ஐ.பி.எல்.லில் புனே வாரியர்ஸ் வீரர். இந்தியக் கிரிக்கெட்டுக்கு அவ்வளவு சுலபமாக பௌலர்கள் கிடைக்க மாட்டார்கள். அணியிலிருந்து நீக்கப்பட்ட வீரர்களே திரும்பத் திரும்ப அணியில் இடம் பெறுவார்களே தவிர, புதிய வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளே நுழைவது சிரமம். ஆரம்ப மேட்சுகளில் முத்திரை கவனம் ஏற்படுத்துவது அதை விடவும் கடினம். கடைசியாக இப்படி நம்பிக்கையூட்டிய வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார். மிகப்பெரிய அலையை ஏற்படுத்தியிருக்கிறார். முதல் டி20, ஒருநாள் ஆட்டம் என இரண்டிலும் அட்டகாசமாகப் பந்து வீசினார். அடுத்த பத்து ஆண்டுகளுக்கு இவரைத் தாராளமாக நம்பலாம்.

எளிமையான தோற்றம் கொண்ட புவனேஷ்வர் குமார் அதிரடியாக சர்வதேசக் கிரிக்கெட்டுக்குள் நுழைந்திருக்கிறார்!

பிரவீன் குமாரின் பயிற்சியாளரான விபின் பட்ஸ் தான், புவனேஷ்வர் குமாருக்கும் வித்தைகளைக் கற்றுத் தந்தவர். பந்தை நேர்த்தியாக ஸ்விங் செய்கிறார், பந்துவீச்சில் பொறுப்பும் கடின ஈடுபாடும் தென்படுகின்றன. ஆரம்ப ஓவர்களில், பேட்ஸ்மேன்களை க்ளீன் போல்டாக்கி, அணிக்கு மிகப்பெரிய திருப்புமுனைகளை ஏற்படுத்தித் தருகிறார். இக்காலத்தில், வேகத்தை மட்டும் நம்பியிருக்காத ஒரு பௌலரைப் பார்ப்பதே எத்தனை அபூர்வமாகி விட்டது! 

2009 ரஞ்சிப் போட்டியில், சச்சினை டக் அவுட் ஆக்கிய பெருமை புவனேஷ்வர் குமாருக்கு உண்டு. சச்சினுடன் டெஸ்ட் போட்டியில் ஆடவேண்டும் என்று விருப்பப்படுகிறார் புவனேஷ்வர் குமார். ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் அவருடைய கனவு, நனவாகும்.சச்சின், டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று, ஒருநாள் போட்டியில் தொடர்வார் என்றுதான் எல்லோரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் சச்சின், டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து ஆட விருப்பம் தெரிவித்து இருக்கிறார். பிப்ரவரி-மார்ச்சில் நடக்க இருக்கிற இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் சச்சினுக்கு மிக முக்கியமானது! காரணம், கடந்த இரண்டு வருடங்களாக ஒரு டெஸ்ட்டில் கூட செஞ்சுரி அடிக்கவில்லை. இங்கிலாந்துடனான டெஸ்ட் தொடரில் 4 டெஸ்டுகளில் 112 ரன்களும், 2012ல், 9 டெஸ்டுகளில் 357 ரன்களே மட்டுமே அடித்திருக்கிறார். இவரை விடவும் அஸ்வின் அதிக ரன்கள் (8 டெஸ்டுகள், 414 ரன்கள்) எடுத்ததுதான் பெரிய விந்தை. மிகப் பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் இறுதிக் கால கட்டத்தில் இப்படித்தான் சரிந்து விழுந்திருக்கிறார்கள். விவியன் ரிச்சர்ட்ஸ், தம்முடைய கடைசி இரண்டு வருடங்களில் ஒரு டெஸ்ட் செஞ்சுரிகூட அடிக்கவில்லை. கடைசி 30 ஒரு நாள் ஆட்டங்களில் அவர் ஒரு அரை சதம் மட்டுமே அடித்தார். ரிக்கி பாண்டிங்கின் கடைசிக் காலகட்டம் மிக வேதனையானது. கடைசி 19 டெஸ்டுகளில் இரண்டு செஞ்சுரிகள் மட்டுமே அடித்தார். சச்சினுக்கு நிகராகப் பேசப்பட்ட இன்ஸமாம் உல் ஹக்கும் ஓய்வு பெறும் காலத்தில் ரன் அடிக்காமல் பாகிஸ்தான் அணியை நிறையவே சோதித்தார். கௌரவம் குறையாமல் இறுதிக் காலகட்டங்களில் பிரமாதமாக ஆடியவர்கள், கவாஸ்கரும் பிரையன் லாராவும்தான். தன்னுடைய கடைசி இரண்டு வருடங்களில் 8 செஞ்சுரிகள் அடித்தார், லாரா. சச்சினிடமிருந்தும் இதைத்தான் எதிர்பார்க்கிறார்கள், ரசிகர்கள்.



No comments:

Post a Comment