Search This Blog

Sunday, January 20, 2013

வருமான வரிச் சேமிப்பு : லாபம் தரும் வழிகள்..!

இன்றைய நிலையில் வருமானம் ஈட்டுவது எளிதாக இருக்கிறது. ஆனால், அந்த வருமானத்தை மிச்சப்படுத்த முதலீடு செய்வதுதான் பெரிய வேலையாக இருக்கிறது.
நடப்பு நிதி ஆண்டான 2012-13 முடிய இன்னும் சுமார் 60 நாட்கள்தான் இருக்கிறது. இந்நிலையில் வரிச் சேமிப்பிற்கான முதலீட்டை எந்த அளவுக்கு மேற்கொண்டிருக்கிறோம். இன்னும் எவ்வளவு செய்யவேண்டும் என்று திட்டமிட்டால் லாபகரமாக இருக்கும். இல்லை என்றால், கடைசி நேரத்தில் கண்ட திட்டத்தில் பணத்தைப் போட்டு பரிதவிக்கவேண்டியிருக்கும். என்னென்ன வழிகளில் வருமான வரியைச் சேமித்து, லாபம் அடையலாம் என்பதை இனி பார்ப்போம்.

80சி முதலீடுகள்..! 

வருமான வரியை மிச்சப்படுத்துவதில் 80சி பிரிவு மிகவும் உதவியாக இருக்கிறது. இப்பிரிவின் கீழ் ஒருவரின் ரிஸ்க் எடுக்கும் திறனுக்கு ஏற்ற திட்டங்களைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் வசதியும் உண்டு.


ரிஸ்க் எடுக்கத் தயார் என்பவர்களுக்கு நல்வாய்ப்பாக இ.எல்.எஸ்.எஸ். என்கிற பங்குச் சந்தை சார்ந்த சேமிப்பு திட்டம் இருக்கிறது. இதில் செய்யப்படும் முழுத் தொகைக்கும் வரிச் சலுகை உண்டு. இத்திட்டத்தில் டிவிடெண்டுக்கு வரி இல்லை. மேலும், முதிர்வுக்குப் பின் கிடைக்கும் வருமானத்துக்கு வரி கட்டவேண்டியதில்லை.

பங்குச் சந்தை சார்ந்த ஆயுள் காப்பீட்டுத் திட்டம் மற்றும் முதலீட்டுத் திட்டமான யூலிப் பாலிசிக்குக் கட்டும் பிரீமியத்துக்கும் வரிச் சலுகை இருக்கிறது. ஆனால், குறைந்தது பத்து ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து முதலீடு செய்ய முடியும் என்கிற நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் யூலிப் பாலிசிகளில் முதலீட்டைத் தொடங்கலாம்.

ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்களுக்கு என ஐந்தாண்டு வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் (சுமார் 8-9% வட்டி), ஐந்தாண்டு தேசிய சேமிப்புப் பத்திரம் (வட்டி 8.5%), புதிய பென்ஷன் திட்டம் (வயதுக்கு ஏற்ப பங்கு முதலீடு அளவு இருக்கும்).


செலவுகள்..! 

குறிப்பிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்குச் செய்யப்படும் செலவுகளுக்கு வரிச் சலுகை இருக்கிறது.

* வீட்டுக் கடன் வாங்கி, திருப்பிச் செலுத்தும் அசல் (80சி பிரிவு) மற்றும் வட்டிக்கு (24 பிரிவு - நிதி ஆண்டுக்கு 1.5 லட்ச ரூபாய்) வரிச் சலுகை இருக்கிறது. இது வீட்டில் குடியிருப்பவர்களுக்கான கணக்கு. வீட்டை வாடகைக்கு விட்டு, வாடகையை வருமானமாகக் காட்டினால், அசலுக்கு 80சி பிரிவின் கீழ் வரிச் சலுகை மற்றும் முழு வட்டிக்கும் வரிச் சலுகை கிடைக்கும்.

* வீடு வாங்க கட்டும் பதிவு மற்றும் முத்திரைக் கட்டணத்துக்கு வரிச் சலுகை இருக்கிறது. (80சி பிரிவு)

* ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசிக்கு கட்டும் பிரீமியத்தில் ஆண்டுக்கு ரூ.15,000 (மூத்த குடிமக்களுக்கு ரூ.20,000) வரை வரிச் சலுகை இருக்கிறது. பெற்றோருக்கு கட்டும் பிரீமியத்துக்கும் மகன் அல்லது மகள் வரிச் சலுகை பெற முடியும். இந்த வகையில் அதிகபட்சம் ரூ.40,000-க்கு வரிச் சலுகை பெற முடியும். (80டி பிரிவு)

*  80 சி பிரிவின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் பிள்ளைகளுக்கு கல்விக் கட்டணத்துக்கும் வரிச் சலுகை இருக்கிறது. இந்தச் சலுகை இரண்டு பிள்ளைகளுக்குத்தான் உண்டு. கணவன் - மனைவி, இருவரும் வேலை பார்க்கும் பட்சத்தில் ஒருவர் ஒரு பிள்ளைக்கும், இன்னொருவர் இன்னொரு பிள்ளைக்கும் வரிச் சலுகை கோரும்பட்சத்தில் கூடுதல் வரிச் சலுகை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

இதர வரிச் சலுகைகள்..! 

* குடியிருக்கும் வீட்டுக்குக் கொடுக்கும் வாடகைக்கு வரி விலக்கு கிடைக்கும். மொத்தச் சம்பளத்தில் 10 சதவிகிதத்திற்கு மேல் வாடகையாகக் கொடுத்திருக்கவேண்டும். மேலும், நகரம், கம்பெனி அளிக்கும் வீட்டு வாடகைபடி போன்றவற்றை பொறுத்து வரிச் சலுகை அளவு இருக்கிறது. வீட்டு உரிமையாளரிடமிருந்து ரசீது பெற்று கொடுக்கவேண்டும். (பிரிவு 10 (13ஏ))

* வரி கட்டுபவர் ஊனமுற்றவராக இருந்தால், ரூ.50,000 (தீவிரமான உடல் ஊனம் ரூ.1,00,000 ரூபாய்) வரிச் சலுகை இருக்கிறது. (பிரிவு 80யூ)

*  வருமான வரிச் செலுத்துபவரை சார்ந்திருக்கும் செயல்பட முடியாத அளவுக்கு ஊனமுற்றவர்களுக்கு மேற்கொள்ளும் மருத்துவமனை செலவில் ரூ.50,000 (தீவிர பாதிப்புக்கு ரூ.1,00,000) வரை வருமான வரிச் சலுகை பெறலாம். மருத்துவ அதிகாரியின் சான்றிதழ் கட்டாயம் தேவை. (பிரிவு 80டிடி)

*  புற்றுநோய், எய்ட்ஸ், நரம்பு மண்டல பிரச்னை உள்ளிட்ட தீவிர நோய்களுக்குச் செய்யப்படும் மருத்துவச் செலவில் அதிகபட்சம் ரூ.40,000 (மூத்த குடிமக்களுக்கு ரூ.60,000) வரி விலக்கு உள்ளது. மருத்துவ அதிகாரியின் சான்றிதழ் தேவை. (பிரிவு 80டிடிபி)

* தன்னுடைய அல்லது பிள்ளைகளின்      உயர்கல்விக்காக வாங்கும் கடனுக்கான வட்டிக்கு வரிச் சலுகை இருக்கிறது. எட்டு ஆண்டுகளுக்கு மட்டுமே இந்த வரிச் சலுகை. அசலுக்கு வரிச் சலுகை இல்லை. (பிரிவு 80இ)


பங்குகளில் முதலீடு செய்து, ரிஸ்க் எடுத்து வருமானம் பார்க்க விரும்புகிறவர்களுக்கு என  புதிதாக ராஜீவ் காந்தி ஈக்விட்டி சேமிப்பு திட்டத்தைக் கொண்டு வரப்பட்டுள்ளது. இது 80சிசிஜி-ன் கீழ் வருகிறது. இதில் செய்யப்படும் 50,000 ரூபாயில் 25,000 ரூபாய்க்கு வரிச் சலுகை தரப்படும். இந்தத் திட்டத்தில் இதுவரைக்கும் பங்குகளில் முதலீடு செய்யாதவர்கள்தான் முதலீடு செய்யமுடியும். மேலும், ஆண்டு மொத்த வருமானம் 10 லட்சம் ரூபாய்க்குள் இருக்கவேண்டும். மொத்த லாக்கின் பீரியட்

3 ஆண்டுகள்..! 

80சி பிரிவின் கீழ் மேலே கண்ட அனைத்து முதலீடு மற்றும் செலவு எல்லாம் சேர்த்து ஒரு நிதி ஆண்டில் அதிகபட்சம் ஒரு லட்சம் ரூபாய்க்கு மட்டுமே வரிச் சலுகை உண்டு.

No comments:

Post a Comment