Search This Blog

Tuesday, January 01, 2013

சச்சின்

சச்சின் எனும் சகாப்தம் ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றுக்கொண்டது. 23 வருடங்கள், 463 போட்டிகள், 18,426 ரன்கள். இதில் 49 சதங்கள், 96 அரை சதங்கள் என எல்லாமே உலக சாதனைகள்.

சச்சினை நம்மில் பலருக்கு சிறந்த மட்டைப்பந்து ஆட்டக்காரராக மட்டுமே தெரியும். ஆனால், ஒரே மைதானத்தில் இரண்டு முறை ஐந்து விக்கெட் வீழ்த்திய வீரர் என்கிற பெருமையும் சச்சின் வசமே இருக்கிறது. சச்சினின் வெற்றிகள் சுலபமானதாக இருக்கவில்லை. பல ஆட்டங்களில் ரசிகர்களின் எதிர்பார்ப்பினை நிறைவேற்ற தனி ஆளாக அணியைத் தோளில் தாங்கி ஆடி அசத்தியவர்.

உலகக் கோப்பையில், இந்திய அணி பாகிஸ்தானிடம் ஒரு முறைகூட தோற்றது இல்லை. அந்த வரலாறுக்கு சச்சினே முக்கியக் காரணம். 2003 உலகக் கோப்பையில் 75 பந்துகளில் 98 ரன்கள். 2011 உலகக் கோப்பையில், அணியில் மற்றவர்கள் சொதப்பியபோது, 85 ரன்கள் அடித்தார். ஆனால், இந்தச் சாதனைகள் மட்டுமே அவரது புகழுக்குக் காரணம் இல்லை. அதையும் தாண்டி அவரது குணம் இத்தனை ரசிகர்களைக் கொடுத்து இருக்கிறது.


முதன்முதலில் தேசியக் கொடியைத் தன் ஹெல்மெட்டில் இடம்பெறச் செய்து, தேசபக்தியைப் பிள்ளைகள் மத்தியில் விதைத்தவர். 1999-ம் ஆண்டு உலகக் கோப்பையின்போது அவரது தந்தை மரணம் அடைந்தார். தந்தைக்கான கடமையைச் செய்துவிட்டு களத்துக்குத் திரும்பிய சச்சின், கென்யாவுக்கு எதிராக 140 ரன்கள் அடித்தார். பந்து வீச்சாளர்கள் மைதானத்தில் எவ்வளவு சீண்டினாலும் சச்சினின் எதிர்வினை ஒரு சிரிப்புதான். கிரிக்கெட் ஒரு ஜென்டில்மேன் கேம் என்பதை நிஜமாக்கியவர் சச்சின்.

ஆஸ்திரேலியாவுடன் மிக அதிக ரன்களை அடித்த வீரர் என்பதே சச்சினின் இணையற்ற ஆட்டத்தின் சிறப்பைச் சொல்லும். கிரிக்கெட்டின் கடவுள் எனப் பலரால் அன்போடு அழைக்கப்பட்டவர். ''எதுவரை கிரிக்கெட் ஆடுவேன் எனப் பலரும் கேட்கிறார்கள். நான் முதல்முறை மட்டையைத் தொட்டபோது என்ன பரவசம் உண்டானதோ, அதே சிலிர்ப்பு இன்னமும் உண்டாகிறது. அந்தக் காதல் குறையாத வரை கிரிக்கெட் ஆடுவேன்'' என்று முன்பு ஒருமுறை சொல்லி இருந்தார். அவருக்குக் கண்ணீருடன் ஒரு நாள் போட்டிகள் விடைகொடுக்கின்றன. காதலுடன் டெஸ்ட் போட்டிகள் காத்திருக்கின்றன.


சச்சினின் சக்ஸஸ் ஃபார்முலா 10 

ஆர்வம்கொள்: இளம் வயது சச்சினின் கிரிக்கெட் குருநாதர் ரமாகாந்த் அச்ரேகர். அவரிடம் பயிற்சி எடுத்தபோது, மைதானத்துக்கு முதல் ஆளாக வரும் சச்சின், வீடு திரும்புவதில் கடைசி ஆளாக இருப்பார்.

பயிற்சி தவறேல்: போட்டிகள் இருக்கிறதோ இல்லையோ, அன்றாடம் பேட் பிடித்து பயிற்சி செய்யத் தவறியதே இல்லை. 'நாமதான் கில்லியாச்சே’ என்று ஒரு நாளும் நினைத்தது இல்லை.

வியூகம் வகுத்திடு: புதுவிதமானத் தடைகள் வந்தால், அதற்கு ஏற்றபடி வியூகம் வகுத்து ஜெயிப்பார். எந்த பௌலர் தன்னை அடிக்கடி அவுட் ஆக்குகிறாரோ, அவரது பந்துகளை எதிர்கொள்ள சிறப்புப் பயிற்சி எடுப்பார்.
ஒழுக்கம் போற்று: இளம் வயதில் உலகப் புகழும், கோடிக் கணக்கான பணம் கிடைத்தபோதும் சுயக் கட்டுப்பாட்டுடன் கடமையில் மட்டுமே கவனம் செலுத்தினார்.

உடலுறுதி பேணு: முதுகுத்தண்டு மற்றும் முழங்கைக் விரல்களில் அடிக்கடி ஏற்படும் காயம் எனப் பல்வேறு பிரச்னைகள் ஏற்படும்போதும் சோர்ந்துவிடாமல் உடல் உறுதியைப் பேணுவதே அடிப்படை என்பதை உணர்ந்தார்.

செயலில் பதிலளி: 'அவுட் ஆஃப் ஃபார்ம்’ காரணமாக பல முறை விமர்சிக்கப்படும்போது எல்லாம் வாய் வார்த்தைகளால் பதில் அளிக்கும் பழக்கம் இல்லை. தன் ஆட்டத்தின் மூலமே தொடர்ந்து பதிலடி தந்தார்.

குழுவாகச் செயல்படு: எந்த ஒரு வெற்றிக்குப் பின்னாலும் குழு ஒற்றுமை மிக முக்கியம் என்பது சச்சினுக்குத் தெரியும். தனது சக வீரர்களுடன் இணைந்து அணியின் வெற்றியை மட்டுமே நோக்கமாகக்கொண்டு செயல்பட்டார்.

உன்னை நீ நம்பு: ஓர் ஆண்டு காலமாக 100-வது சதத்தை அடிக்க முடியாமல் திணறியபோதும் தன்னம்பிக்கையை இழக்கவில்லை. இடைவிடாமல் முயன்று அந்தச் சாதனையையும் வசப்படுத்தினார்.

சமூகநலன் கருது: சுயநலனுக்காக பொதுநலனைத் தவிர்க்கக் கூடாது. பல கோடி ரூபாய் கொடுக்க முன்வந்தபோதும் 'மதுபானத் தயாரிப்புகளை நான் விளம்பரப்படுத்துவது இல்லை’ என மறுத்தார் சச்சின்.

கனவைக் கைவிடேல்: உலகக் கோப்பையை வெல்லும் இந்திய அணியில் இருக்க வேண்டும் என்பதுதான் சச்சினின் முதல் கனவு. கிட்டத்தட்ட 20 வருடங்களுக்குப் பிறகு, 2011-ம் ஆண்டு உலகக் கோப்பையில் அது நிறைவேறியது. கனவைக் கைவிடாமல் பயணித்தால், அதை அடைவது உறுதி என்பதை நாமும் உணரலாம்.

No comments:

Post a Comment