Search This Blog

Thursday, February 14, 2013

அருள்வாக்கு - ஸம்ஸ்காரங்களும் ஸத்குணங்களும்


ஆத்ம குணம், ஆத்மாவை ஸம்ஸ்காரங்களால் சுத்தி பண்ணிக் கொள்வது என்றெல்லாம் சொல்கிறபோது ஆத்மா என்பது த்வைதிகள் சொல்கிற, அதாவது பரமாத்மாவுக்கு வேறாக இருக்கிறாற் போலத் தெரிகிற, ஜீவாத்மாவைத்தான். வாஸ்தவத்தில் இருப்பது ஒரே ஆத்மாதான்; ஜீவ ஆத்மா, பரம ஆத்மா என்ற பேதமே இல்லை. இந்த ஆத்மா நித்ய சுத்தமானது. ஆகையால் அதை ஸம்ஸ்காரத்தால் சுத்தி பண்ணுவது என்பதே தப்பு. அது நிர்குணமான வஸ்து. அதனால் ஆத்ம குணம் என்பதும் தப்பு. ஆனாலும் அந்த நிர்குண வஸ்து மாயையோ, கீயையோ எதையோ ஒன்றை வைத்துக் கொண்டு நம் எல்லார் மாதிரியும் ஆகி, நமக்கு ‘அதுவே தான் நாம்’ என்பது துளிக்கூடத் தெரியாமல் தானே நடைமுறையில் பண்ணி இருக்கிறது? இப்படி த்வைதமாக பேத லெவலில் இருக்கிற ஜீவனைத்தான் இங்கே ஆத்மா என்று சொல்லியிருக்கிறது. இது அழுக்குப் பிடித்ததுதான். அதனால் ஸம்ஸ்காரம் பண்ணி இதை சுத்தமாக்க வேண்டும். இது துர்க்குணம் பிடித்தது. அதனால் எட்டு ஆத்ம குணங்களை அப்பியஸித்து இதை நல்ல குணமுள்ளதாக்க வேண்டும். அப்புறம் ஸம்ஸ்காரம் முதலான காரியங்களும் போய்விடும்; குணங்களும் - உயர்ந்த ஸத்வ குணமும் கூட - போய்விடும். ஜீவாத்ம பரமாத்ம பேதமில்லாத அகண்ட ஏக ஆத்ம அனுபவம் அப்போதுதான் ஸித்திக்கும். அதை அடைவதற்காகவே இப்போது காரியமும் (ஸம்ஸ்காரமும்), குணமும் வேண்டும்.

நமக்கு லக்ஷ்யமாக உள்ள புராண புருஷர்களின் உத்தம குணங்களை நேரே அப்படியே எடுத்துக் கொண்டு அனுஸரிக்கலாம் என்றால், அதற்கு முடியாமல் ஆசாபாசங்கள், துவேஷங்கள், பயம், மனஸின் மற்ற கிருத்ரிமங்கள் எல்லாம் இடைஞ்சல் செய்கின்றன. நமக்கு நிறைய கர்மாக்களைக் கொடுத்து, அதோடு, ‘இப்படித்தான் உட்கார வேண்டும், இப்படித்தான் நிற்க வேண்டும், இப்படித்தான் சாப்பிட வேண்டும், இப்படித்தான் டிரெஸ் பண்ணிக் கொள்ள வேண்டும்’ என்றெல்லாம் ஒரு கட்டுப்பாட்டுக்கு அடங்கும்படி பண்ணினால்தான் மனஸ் தடித்தனமாகக் கண்டபடி போகாமல் இருக்கிறது. தடித்தனம், அஹங்காரம் குறைய குறையத்தான் ஆசை, துவேஷம், பயம், துக்கம் முதலானவைகளை அடக்கிக் கொண்டு உத்தம குணங்களிலிருந்து நழுவாமல் இருக்க முடிகிறது. ஸம்ஸ்காரங்களும் ஸத்குணங்களும் ஒன்றோடொன்று சேர்ந்து வருகின்றன.

ஐடியலாக இருக்கிற புராண புருஷர்களின் குணங்களை - கதையாகக் கேட்டு, நாமும் அப்படி இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட குணங்களை - நாம் யதார்த்தத்தில் பெறுவதற்கு ஸம்ஸ்காரங்கள் ஸஹாயம் செய்கின்றன.

ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

No comments:

Post a Comment