Search This Blog

Sunday, February 17, 2013

கிரெடிட் கார்டு - 3டி பாதுகாப்பு!

கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது, சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம். மும்பையைச் சேர்ந்தவர் பிரதாப் காயன். இவர் பெட்ரோலிய கம்பெனி ஒன்றின் மூத்த அதிகாரி. இவர் மும்பையில் இருக்க, இவரது கிரெடிட் கார்டு மூலம் அமெரிக்காவில் 200 டாலருக்குப் பொருட்கள் வாங்கப்பட்டிருக்கிறது. அந்தத் தகவல் எஸ்.எம்.எஸ். ஆக வந்தது ஓர் அதிகாலை நேரத்தில். எஸ்.எம்.எஸ்.ஸைக் கண்டு அதிர்ந்தார் பிரதாப் காயன். கிரெடிட் கார்டு தன் கையில் இருக்க, வேறு யார் அதை பயன்படுத்த முடியும் என்கிற யோசனை அவருக்கு.

வேகவேகமாக கார்டை பிளாக் செய்ததால் 200 டாலருடன் தப்பித்தார் அவர். ஆனால், உடனடியாக நடவடிக்கை எடுக்காத பலர் லட்சக்கணக்கில் ரூபாயை இழந்திருக்கிறார்கள். ஒருவர், இருவரல்ல, இந்தியா முழுக்க  பலரது கிரெடிட் கார்டுகளிலிருந்து கடந்த இரு மாதங்களாக 30 கோடி ரூபாய்க்கு மேல் இப்படி பணம் பறிபோயிருக்கிறது. 

கிரெடிட் கார்டு விவரங்களை திருடுபவர்கள் எளிதில் அதனைக்கொண்டு ஏதாவது ஒரு பொருளை வாங்கிவிட முடியும். இதை தடுக்க ரகசிய பின் எண்ணை பயன்படுத்துவது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை கிரெடிட் கார்டு கம்பெனிகள் மேற்கொண்டு வருகின்றன. அதேசமயம், இந்த பின் எண் பல அயல்நாடுகளில் கட்டாயமாக்கப்படாததால் நம் கார்டு மோசடி பேர்வழிகளால் அயல்நாடுகளிலேயே அதிகமாக உபயோகப்படுத்தப்படுகிறது.


கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் அதை பாதுகாப்பாகப் பயன்படுத்த என்ன செய்ய வேண்டும் 

''கிரெடிட் கார்டை இரண்டு விதமாகப் பயன்படுத்த முடியும். ஒன்று, ஷாப்பிங் மால், பல்பொருள் அங்காடி, ஓட்டல் போன்ற இடங்களில் கார்டை பயன்படுத்தும்போது. ஓட்டலில் சாப்பிட சென்றால் கார்டை தந்துவிட்டு, நாம் உட்கார்ந்திருப்போம். அந்தச் சமயத்தில் நம் கிரெடிட் கார்டு பற்றிய அடிப்படை தகவல்கள் அனைத்தும் திருடு போக வாய்ப்பு இருக்கிறது.

இன்னொன்று, ஆன்லைனில் டிக்கெட் புக் செய்யும்போதும், பொருட்களை வாங்கும் போதும் நமது கிரெடிட் கார்டு பற்றிய தகவல்கள் திருடு போக வாய்ப்புண்டு. ஆன்லைனில் பொருள் வாங்க நம் கிரெடிட் கார்டு நம்பர், சி.வி.வி. நம்பர் (card verification Value),பின் நம்பர் ஆகியவற்றை தந்தால்போதும். இப்போதுள்ள வேகமான வாழ்க்கைமுறையில் கடைகளுக்குச் சென்று பொருட்களை வாங்க பலருக்கும் நேரம் இல்லை. இதனால்தான் ஆன்லைனில் பொருட்களை அதிகமாக வாங்குகிறார்கள். தவிர, கடைகளைவிட அதிகமான தள்ளுபடி, வீட்டிற்கே டெலிவரி ஆவது என பல கவர்ச்சி கரமான விஷயங்கள் அதில் இருக்கின்றன. விலை மலிவாகக் கிடைப்பதால் அதிகம் தெரியாத இணையதளங்கள் மூலமும் பலர் பொருட்களை வாங்குகிறார்கள். இந்தச் சமயத்தில் நம் கிரெடிட் கார்டு நம்பர் மற்றும் சி.வி.வி. எண் ஆகியவை திருடு போக வாய்ப்பிருக்கிறது''
.
நம்முடைய கிரெடிட் கார்டை பாதுகாப்பான முறையில் பயன்படுத்தினால் மட்டுமே நம் பிரச்னைகள் தீரும். இதற்கு என்ன செய்யலாம்?


''கிரெடிட் கார்டு பத்திரமாக இருப்பதற்காக, வங்கிகள் ஜி.பி.எஸ். சிப் கார்டுடன் கூடிய கிரெடிட் கார்டை தற்போது வழங்கி வருகிறது. இதன் மூலம் உங்கள் கார்டு தொலைந்தால் அது எந்த இடத்தில் உள்ளது என்பதை எளிதில் கண்டுபிடித்துவிட முடியும். இந்த கார்டு செயற்கைகோளுடன் இணைக்கப்பட்டிருக்கும்.  போலி கார்டுகளையும் உருவாக்குவது கடினம். ஏனெனில், இந்த சிப் கார்டு நான்கு துண்டுகளாக இருக்கும். நான்கையும் இணைத்தால் மட்டும்தான் கார்டு செயல்படும். ஒவ்வொரு சிப் கார்டும் தனித்தனியாக வடிவமைக்கப்பட்டிருக்கும். ஜி.பி.எஸ். சிப் கார்டுடன் கூடிய கார்டை வாங்க கட்டணங்கள் உண்டு. இது வங்கிக்கு வங்கி வித்தியாசப்படும். குறைந்தபட்ச 500 ரூபாயிலிருந்து கட்டணங்கள் இருக்கும்.

ஆன்லைனில் அதிக பரிவர்த்தனை செய்பவர்களுக்காகவே 3டி முறையில் பாதுகாப்பு வசதியை இப்போது அறிமுகப் படுத்தியுள்ளன. இதில் வங்கி முதலில் ஒரு பாஸ்வேர்டை தரும். இந்த பாஸ்வேர்டை பயன்படுத்திய உடனே செயல் இழந்துவிடும். இதன்பிறகு உங்களின் பாஸ்வேர்டை நீங்களே உருவாக்கிக்கொள்ளவேண்டும். இதில் உங்களின் வழக்கமான கார்டு நம்பர், சி.வி.வி. எண், பின் நம்பர் ஆகிய தகவல்களை கொடுத்தபின் ஆறு கேள்விகளைக் கேட்கும். இது முழுவதும் உங்களின் தனிப்பட்ட தகவல்களாகவும், வித்தியாசமான கேள்வியாகவும் இருக்கும். அதாவது, உங்களின் அப்பாவுடன் பிறந்தவர் கள் எத்தனை பேர், உங்களின் அலுவலகம் எத்தனையாவது மாடியில் உள்ளது என்கிற மாதிரியான கேள்விகளை கேட்கும். இதற்கடுத்து ஆன்லைனில் பரிவர்த்தனை செய்யும் ஒவ்வொரு முறையும் இதில் ஏதாவது இரண்டு கேள்விகள் வரும். அதற்கு பதிலளித்தால்தான் பரிவர்த்தனையைத் தொடர முடியும்.

மேலும், இந்தத் தகவல்களை யாரும் திருட முடியாது. இந்தத் தகவல் கோடிங் முறையில் மற்றவர்கள் படிக்க முடியாத முறையில் பதிவாகும். அது மட்டும் இல்லாமல் ஆன்லைன் பரிவர்த்தனையில் பணத்தைச் செலுத்தவேண்டும் எனில், அதை அந்த கிரெடிட் கார்டு வழங்கிய நிறுவனத்தின் இணையதளத்திற்குச் சென்றுதான் செலுத்த முடியும். தவிர, ஆர்.பி.ஐ.யின் அனுமதி பெற்ற நிறுவனங்களுக்கு மட்டும்தான் இந்தப் பணப் பரிவர்த்தனையும் செய்ய முடியும்.

முறையான வங்கியின் இணையதளங்கள் அனைத்தும் Https என்றுதான் ஆரம்பிக்கும். ஆனால், போலியான இணையதளங்கள் http என ஆரம்பிக்கும். இதைக் கவனித்தாலே போதும் மோசடி நிறுவனங்களை நிமிட நேரத்தில் ஒதுக்கிவிடலாம்.

கிரெடிட் கார்டை வாங்கும்போதே அதை பின் நம்பருடன் வங்கிகளில் கேட்டு வாங்கலாம். இதற்கு கட்டணம் கிடையாது. ஆனால் சிக்கல் என்னவென்றால், பின் நம்பரை தவறாகப் பதிவு செய்தால் கார்டை வங்கி பிளாக் செய்துவிடும். முதல்முறை என்றால் கார்டை ரிலீஸ் செய்வார்கள். அடிக்கடி இப்படி நடந்தால் புது கார்டுதான் வாங்கவேண்டியிருக்கும். இதற்கு தனிக் கட்டணம் தரவேண்டும்''.

இனியாவது கிரெடிட் கார்டை பத்திரமாகப் பயன்படுத்துவீர்கள்தானே?

No comments:

Post a Comment