Search This Blog

Friday, February 15, 2013

ஓ பக்கங்கள் - பாலியல் குற்றத்துக்கு என்ன தண்டனை? ஞாநி


பத்தாண்டுகளுக்கும் மேலாக சென்னைப் புத்தகத் திருவிழாவில் என் புத்தக அரங்கில் வாசகர்களிடம் தினசரி கருத்துக் கணிப்பை விடாமல் நடத்தி வருகிறேன். ஒவ்வோராண்டும் அப்போதைய முக்கிய பொது பிரச்னைகள் பற்றிக் கேள்வி கேட்பது வழக்கம். வோட்டுப் போட பலரும் ஆர்வத்துடன் வருவது இந்த வருடமும் நடந்தது. இந்த முடிவுகள் பெரும்பாலும் படித்த நடுத்தர வகுப்பினர் மனநிலையைப் பிரதிபலிப்பவை என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு முடிவாகப் பார்ப்போம்

கமல்ஹாசன் தம் விஸ்வரூபம் திரைப்படத்தை நேரடியாக வீடுகளில் டி.டிஹெச். மூலம் ஒளிபரப்புச் செய்ய முயற்சித்தது சினிமா துறையின் பல பகுதியினரிடமிருந்து பெரும் எதிர்ப்பைக் கிளப்பியதில் அவர் அதைக் கடைசியில் கைவிட வேண்டி வந்தது. ஆனால் அவர் அதைச் செய்திருந்தால் பெரிய வரவேற்பு இருந்திருக்கும் என்றே நமது தேர்தல் முடிவு காட்டுகிறது. அந்த முயற்சி, சினிமா தொழிலுக்கும் பார்வையாளருக்கும் பயன் தரும் முயற்சி என்று வோட்டளித்தவர்கள் - 65 %. எனவே விஸ்வரூபம்-2ம் பாகத்தை டி.டி.ஹெச்.சில் வெளியிடுவதைப் பற்றி கமல் சிந்திக்கலாம். அவரது டி.டி.ஹெச். முயற்சியால் யாருக்கும் பயனில்லை என்றவர்கள் - 32%. இந்தப் பிரச்னை பற்றி எங்களுக்கு ஒன்றும் தெரியவில்லை என்று ஒப்புக் கொண்டவர்கள் - 3%.


ஒவ்வொரு கட்சியும் தேர்தல் சமயத்தில் மக்களுக்கு விதவிதமான இலவசங்களை (புதுப்பெயர்: விலையில்லாதவை) அளிக்க முன்வருவதை, படித்த மிடில் க்ளாஸ் மக்கள் கடுமையாக விமர்சிப்பதைக் கேட்டிருக்கிறேன். ஆனால் அவர்களில் பலபேர் தாங்களே அவற்றை விடாப்பிடியாக அலைந்து திரிந்து பெற்றுக் கொள்வதையும் பார்த்திருக்கிறேன். எனவே இதைப்பற்றி இந்த முறை வாக்கெடுப்பு நடத்தினோம். அரசு தரும் இலவசங்கள்: டிவி, மிக்சி, கிரைண்டர், வேட்டி, சேலை, ரொக்கம் முதலியவை ஏழைகளுக்குத் தேவை: நான் வாங்கமாட்டேன் என்று வோட்டளித்தவர்கள் - 30 %. யாருக்கும் தேவையில்லை: ஆனால் கொடுப்பதால் நான் வாங்கிக் கொள்வேன் என்றவர்கள் - 8% (இவர்கள்தான் என் கண்ணில் அதிகம் படுபவர்கள் போலிருக்கிறது). இலவசங்களை மொத்தமாக நிறுத்த வேண்டும் என்று தீர்ப்பளித்தவர்கள் - 62%!

இலவசம் போலத்தான் ரேஷன் பொருட்களும்... ரேஷன் கடைகளை மூடிவிட்டு, அதற்குப் பதிலாக பொருட்களை வாங்க மான்யப் பணத்தை நேரடியாக ஏழை மக்களுக்கு ஆதார் அட்டை மூலம் தரும் அரசு முடிவால் போலி ரேஷன் அட்டைகள் ஒழிந்து அசல் ஏழைகள் பயனடைவர் என்று நினைப்பவர்கள் - 7%. பொருட்களை தனியாரிடம் வாங்குவதற்குக் கட்டாயப் படுத்துவதால் விலைகள் உயர்ந்து ஏழைகள் பாதிக்கப்படுவர் என்று 39% கருதுகின்றனர். ரொக்கப் பணம் குடும்பத்தின் உணவுக்குச் செலவாகாமல் வேறு வீண் செலவுகளுக்குப் போய்விடும் என்று நினைப்பவர்கள் 54%. இதில் நானும் ஒருவன். தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு ஏழைகளின் கடும் உழைப்பில் குறிப்பாக ஏழைப் பெண்களின் வியர்வையில் வந்த பணம் வீட்டு ஆண்களின் திமிரால் போய்க் கொண்டிருப்பதை ஏற்கெனவே பார்த்து வருகிறோம்.

என்னைப் பொறுத்தமட்டில் இன்று தமிழகத்தின் தலையாய பிரச்னை மதுதான். தமிழகத்தில் அரசாங்கத்தின் மது வியாபாரம் பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று கேட்டோம். உடனடியாக எல்லா மதுக்கடைகளையும் மூடி பூரண மதுவிலக்கு கொண்டு வரவேண்டும் என்பவர்கள் 30 சதவிகிதம் பேர்! முழுக்க ஒழிக்க முடியாது என்பதால் கடை நேரத்தைக் குறைத்து பார்களை மூடவேண்டும் என்ற சமரசத் தீர்வை ஆதரித்தோர் 60 சதவிகிதம். அந்நியவகை மதுவை ஒழித்துவிட்டு கள்ளுக் கடைகளைத் திறக்கவேண்டும் என்றவர்கள் 10 சதவிகிதம் பேர். சுமார் 90 சதவிகிதம் பேர் ஏதோ ஒருவகையில் மதுவுக்கு எதிர்ப்பாக இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

சில்லறை வணிகத்தில் வால்மார்ட்டுகள் வந்தால் மிடில் க்ளாஸ் மக்களுக்கு நிச்சயம் மகிழ்ச்சி இருக்கும். அதேசமயம் இவர்களுக்கும் தொலைநோக்கில் பாதிப்பு வரும் என்பதே என் கருத்து. இதைப் பற்றி என்ன நினைக்கிறார்கள், பார்ப்போம்.
சில்லறை வணிகத்தில் வெளிநாட்டு கம்பெனிகளை அனுமதிப்பது உள்ளூர் வணிகர்களைப் பாதிக்கும். ஆனால் விவசாயிகளுக்கும் பொருள் வாங்குவோருக்கும் நல்லது என்று சொன்னவர்கள், வெறும் 8%தான். உள்ளூர் வணிகர்களையும் இது பாதிக்காது; எல்லாருக்கும் நல்லது என்று நினைப்பவர்கள் 30%! உள்ளூர் வணிகர்கள், விவசாயிகள், பொருள் வாங்குவோர் எல்லாரையும் தொலைநோக்கில் நிச்சயம் பாதிக்கும் என்று கருதுவோர் 62% !! மிடில் க்ளாஸ் தன்னைப் பற்றி மட்டுமல்லாமல் எல்லோர் நலனையும் சிந்திக்கிறது, தொலைநோக்கிலும் சிந்திக்கிறது என்று இதை எடுத்துக் கொள்வோமா?

மின் பற்றாக்குறைக்கு யார் பொறுப்பு? தமிழகத்தில் மின்சாரப் பற்றாக்குறைக்கு தி.மு.க ஆட்சிதான் பொறுப்பு என்பவர்கள் - 14%. இல்லையில்லை, அ.இ.அ.தி.மு.க. ஆட்சிதான் எனக் கருதுவோர் - 9%. தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. இருவருமே பொறுப்பு என்று நினைப்பவர்களே மிக அதிகம் - 68%. மாநில அரசுகளின் தவறுகளுக்கு அடிப்படைக் காரணம் மத்திய அரசின் கொள்கைகள்தான் என்று சொன்னவர்கள் - 9%.

மரண தண்டனை பற்றிய விவாதம் அண்மையில் அதிகமாகவும் கூர்மையாகவும் நடக்கிறது. இங்கே நிலை என்ன? பாலியல் குற்றங்களைச் செய்வோருக்கு மரண தண்டனை தரச் சொல்லும் கோரிக்கை சரியானது என்று சரிபாதி பேர் சொல்லியிருக்கிறார்கள் - 50%. இன்னொரு 50%ல், அது தவறானது என்பவர்கள் - 17%; எந்தக் குற்றத்துக்கும் மரண தண்டனை கூடாது என்று சொன்னவர்கள் - 33%. இந்தக் கடைசி பிரிவு கணிசமாக அதிகரித்து வருகிறது என்பது எனக்கு மகிழ்ச்சி. அதுதான் என் நிலை. ஆயுள் சிறையில் வைத்து கௌன்சிலிங் தருவதே சரி.

தில்லி சம்பவத்தை ஒட்டி மீடியாவில் நடந்த விவாதங்களில் அடிபட்ட இன்னொரு விஷயம், பலரும் பாதிப்புக்குள்ளாகும் பெண்கள் மீதே பழி போடுவதாகும். பெண்ணின் உடை, இரவு பத்து மணிக்கு மேல் வெளியே செல்வது இதெல்லாம் பெண்ணின் தப்பு என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். யாரும் ஆண் சரியாக நடந்து கொள்ளாததைப் பற்றி ஆவேசக் குரல் எழுப்புவதில்லை. எனவே இதைப் பற்றிக் கருத்து கேட்டோம். பெண்கள் மீதான பாலியல் சீண்டல், வன்முறைகளுக்குக் காரணம் பெண்ணின் தவறான உடை என்று 26% பேர் கருதுகிறார்கள் என்பது எனக்கு வருத்தமாக இருக்கிறது. வேறு என்ன காரணங்கள் முக்கியமானவை என்று கேட்டிருந்தோம். மீடியாவின் காமத் தூண்டுதல்கள் என்று 46% சொன்னார்கள். இது எனக்கும் உடன்பாடுதான். ஆணைச் சரியாக வளர்க்காத குடும்பம் என்று 28% சொன்னார்கள். உண்மையில் இந்த எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்த்து ஏமாந்தேன். குடும்பத்தின் தவறுகளை ஒப்புக் கொள்ளும் மனநிலை இன்னும் மிடில் க்ளாசுக்கு போதுமான அளவுக்கு வளரவில்லை.

சாதி கடந்த காதல் திருமணங்களுக்கு எதிராக மகாபலிபுரம் விழாவில் காடுவெட்டி குருவின் பேச்சு, அடுத்து தர்மபுரியில் அதே பிரச்னையில் நடந்த தலித் குடியிருப்பு தாக்குதல் ஆகியவை தமிழ்நாடு முழுவதும் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பக்கம் கவனத்தைத் திருப்பின. புத்தகத் திருவிழா வாசகர்கள் என்ன நினைக்கிறார்கள்? காதல் என்ற பெயரில் நாடகமாடி பிற சாதிப் பெண்களைச் சில தலித் இளைஞர்கள் ஏமாற்றிப் பணம் பறிப்பதாக டாக்டர் ராமதாஸ் கூறிவருவது தவறான சாதிவெறிக் கருத்து என்றவர்கள் - 30%. இல்லை, அவர் சொல்வது அசலாக நடக்கும் நிஜம்தான் என்று கருதுவோர் வெறும் 11%. பெண்ணை ஏமாற்றுவதை எல்லா சாதி இளைஞர்களும் செய்கிறார்கள் என்று அடித்துச் சொல்லியிருப்பவர்கள் - 59%. நானும் இந்த கடைசி அணியில்தான் இருக்கிறேன். காதலைப் பற்றிய தப்பான புரிதல் எல்லா சாதி ஆண்களுக்கும் பெண்களுக்கும் இருக்கிறது. ஏமாறுவோரும் ஏமாற்றுவோரும் எல்லா சாதிகளிலும்தான் உள்ளனர்.

தமிழ்நாட்டில் மிக முக்கியமான அரசியல் கட்சி தி.மு.க. அதில் நடப்பவை ஏதோ ஒரு விதத்தில் எல்லோருடைய அக்கறைக்கும் உரியவை. எனவே ஸ்டாலினை அடுத்த தலைவராக கருணாநிதி முன்மொழிவேன் என்று அறிவித்தது ஒரு முக்கிய நிகழ்வு. அதைப் பற்றிக் கேட்டோம். கலைஞர் அறிவித்திருப்பது தாமதமான, ஆனால் சரியான முடிவு என்று 34% பேர் சொன்னார்கள். இல்லை அது தவறான முடிவு என்றவர்கள் வெறும் 4%தான். இதை அழகிரி அவசியம் கவனிக்க வேண்டும். கலைஞருக்குப் பின் யார் வந்தாலும் தி.மு.க.வை இனி காப்பாற்ற முடியாது என்று சொன்னவர்கள் தான் மிக அதிகம் -62%! இதை ஸ்டாலின் கவனத்தில் எடுக்க வேண்டும். குஷ்பு மீதான தாக்குதல் போன்றவை 62 சதவிகிதத்தினர் கருத்தை வலுப்படுத்தக் கூடியவை. தி.மு.க.வுடன் எனக்கு கடும் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அது அரசியல் கட்சியாக தன்னைத் திருத்திக் கொண்டு ஆரம்ப கால லட்சியவாதத்துக்குத் திரும்பி நேர்மையோடும் வலிமையோடும் இருந்தால் தமிழக அரசியலுக்கு நல்லது என்பது என் கருத்து. அது சாத்தியம்தானா என்பதைக் காலம்தான் சொல்லும்.

காலத்தின் தீர்ப்பை எதிர்பார்த்து நிற்கும் இன்னொரு பெரும் பிரச்னை கூடங்குளம் அணு உலை. தமிழகத்தில் பலரும் அதை ஏதோ அந்தப் பகுதி மக்களின் பிரச்னை என்று குறுக்கிப் பார்க்கிறார்கள். உண்மையில் அது அனைவரின் பிரச்னையுமாகும். ஆனால் அந்தப் புரிதல் இருக்கிறதா என்று பார்க்க, கருத்துக் கணிப்பு செய்தோம். 500 நாட்களாக நடந்து வரும் கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டம் நியாயமானது என்று சொன்னவர்கள் - 72%! இது எனக்கு பெருமகிழ்வைத் தருகிறது. இல்லை அது தவறானது என்போர் வெறும் - 16%. சரியா தவறா என்று தெரியவில்லை என்பவர்கள் கணிசமாக இருக்கிறார்கள் - 12%. இவர்கள் மனத்தை மாற்றுவது முக்கியமான தேவை.

அடுத்த மக்களவைத் தேர்தலில் யாரை ஆதரிப்பீர்கள் என்பதுதான் கடைசி நாள் கேட்ட கேள்வி...

1. காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி 2. பி.ஜே.பி. அணி 3. தனித்துப் போட்டியிடும் அ.இ.அ.தி.மு.க அணி 4. மூவரும் அல்லாத வேறு அணி; இதில் எது? இதுதான் ரிசல்ட்: 1 - 23% 2 - 20% 3 - 28% 4 - 29%!. புத்தகத் திருவிழாவுக்கு எல்லா கட்சிக் காரர்களும் ஏறத்தாழ சம பலத்தில் வருகிறார்கள் என்று தெரிகிறது!!

No comments:

Post a Comment