Search This Blog

Friday, February 01, 2013

ஓ பக்கங்கள் - ராகுல் காந்தியால் காங்கிரஸைக் காப்பாற்ற முடியுமா? - ஞாநி


மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் சுமார் 18 மாதங்கள் இருக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் ராகுல் காந்தியால் இப்போது பெரும் நெருக்கடியில் இருக்கும் காங்கிரசை வரும் ஒன்றரை ஆண்டுகளுக்குள் வலிமைப்படுத்திக் காப்பாற்ற முடியுமா?

காங்கிரஸ் கட்சியே காப்பாற்றப்பட வேண்டுமா என்ற கேள்வியை சிலர் கேட்கலாம். இந்தியாவில் தேர்தல் நாடாளுமன்ற ஜனநாயக முறையில் எத்தனையோ சிக்கல்கள் இருந்தாலும் அதைவிடச் சிறந்த மாற்றாக எதையும் பார்க்க இயலாத நிலையில் இன்னமும் அதன் மீதே நம்பிக்கை வைத்திருப்பவன் என்ற முறையிலேயே இந்த விஷயத்தை நான் அணுக விரும்புகிறேன். இதில் இயங்கும் கட்சிகளில் இடது சாரி கட்சிகள் பரவலாக பலம் பெறாத சூழலில் இதர கட்சிகளில் எது பரவாயில்லை என்று பார்க்கும் சூழலே இருக்கிறது.

எண்பதுகளிலிருந்து வலிமை பெறத் தொடங்கிய பாரதிய ஜனதா கட்சி அடிப்படையிலேயே ஆபத்தான கட்சி என்பது என் தீர்மானமான கருத்து. பாரதிய ஜனதா கட்சி அரசியலில் நிலைபெறுவதற்கு முன்னால் நம் சமூகத்தில் அன்றாட வாழ்க்கையில் முஸ்லிம், கிறித்துவ மதத்தினருக்கும் இதர வழிபாட்டு முறைகளின் தொகுப்பாகச் சொல்லப்படும் ஹிந்து மதத்தினருக்கும் இடையே கடும் உரசல்கள் இருக்கவில்லை. குறிப்பாக தென்னிந்தியாவில், தமிழ்நாட்டில் அன்றாட வாழ்க்கையில் மிகப்பெரிய இணக்கமே எல்லா மதத்தினரிடையிலும் இருந்து வந்தது. பாரதிய ஜனதாவின் வருகைக்குப் பின், அதன் தீவிர ஆயுதங்களான இந்து முன்னணி, விஸ்வ ஹிந்து பரிஷத் போன்றவை தீவிரமாக இங்கே இயங்கத் தொடங்கிய பின்னர்தான், முஸ்லிம் அடிப்படை வாத அமைப்புகளும் உருவாகத் தொடங்கின. அன்றாட வாழ்க்கையிலேயே குறிப்பிட்ட மதத்தினரை சில பகுதிகளிலேயே குறுக்கி வாழவைக்கும் கெட் டொவைசேஷன் எனப்படும் சேரிப்படுத்தலும், முத்திரை குத்தலும் பலமாகி வருகிறது. எனவே காங்கிரசுக்கு மாற்றாக பாரதிய ஜனதா வளர்வதை விரும்பவே மாட்டேன்.

இன்றைய நிலையில் காங்கிரசின் பொருளாதாரக் கொள்கைகள், ஊழல்கள், ஈழத்தமிழர் பிரச்னையில் தொடர்ந்து எடுக்கும் தவறான நிலைகள் எதுவும் எனக்கு உடன்பாடானவை அல்லதான்.

ஆனால் பாரதிய ஜனதா இதில் காங்கிரசிலிருந்து வேறுபட்டதே அல்ல. ஆட்சிக்கு வந்தால் அதன் அமைச்சர்களும் பெரும் ஊழல் செய்பவர்கள், சுரங்கத் தொழிலதிபர்களின் தயவில் கட்சி நடக்கும் என்பதெல்லாம் அம்பலமாகிவிட்டது. மத்தியில் பி.ஜே.பி. ஆட்சி அமைத்தால் அதன் வெளியுறவுக் கொள்கையும் ராஜபட்சேவை எதற்கும் நிர்ப்பந்தப் படுத்தாத ஒன்றாகத்தான் இருக்கும். தொண்ணூறுகளிலிருந்து தொடர்ந்து செயல்படுத்தப்படும் பொருளாதார தாராளமயக் கொள்கை மோடியின் குஜராத் உட்பட பி.ஜே.பி. ஆட்சிகளில் எங்கேயும் மாற்றியமைக்கப்படவில்லை. அதே கொள்கையைத்தான் பின்பற்றுகிறது.

காங்கிரசுக்கு மாற்றாக பி.ஜே.பி.க்கு பதில் உண்மையில் உருவாக வேண்டிய மூன்றாவது அணி என்பது பல்வேறு மாநிலக் கட்சிகளின் கூட்டமைப்பான ஓர் அணிதான். இந்தியாவில் இருக்கும் ஒவ்வொரு மொழிவாரி தேசிய இனத்தின் பிரதிநிதியான மாநிலக் கட்சிகளின் கூட்டணிதான் இந்தியாவை நிஜமான கூட்டாட்சி முறையை நோக்கியோ அமெரிக்க பாணி ஃபெடரலிசம் நோக்கியோ அழைத்துச் செல்லவும் முடியும்.
ஆனால் இன்று இருக்கும் முக்கியமான மாநிலக் கட்சிகள் எதுவும் அதற்கான தகுதியுடன் இல்லை. ஒவ்வொரு மாநிலத்திலும் இப்போது இருக்கும் மோசமான மாநிலக் கட்சிக்கு மாற்றாக இன்னொரு சரியான மாநிலக் கட்சி உருவாக வேண்டியிருக்கிறது. அப்படி உருவானால்தான் இந்திய அரசியல் சரியான கூட்டாட்சியை நோக்கிச் செல்வதில் அர்த்தம் இருக்க முடியும்.
இப்படிப்பட்ட அரசியல் சூழலில் பி.ஜே.பி. போன்ற மதவாத சக்திகளைத் தடுக்க காங்கிரஸ் தேவைப்படுகிறது. ஆனால் அது பலவீனமாக இருக்கிறது. அதை வலுப்படுத்த கட்சியின் பொறுப்பேற்க வரும் ராகுல் காந்தி என்ன செய்ய முடியும்? என்ன செய்யக் கூடும்?

ராகுலைப் பற்றிய முக்கியமான விமர்சனம் நேரு குடும்பத்தின் வாரிசு அரசியலின் இன்னொரு பிரதிநிதி அவர் என்பதாகும். இங்கே நாம் ஜவாஹர்லால் நேரு, கருணாநிதியைப் போல வாரிசு அரசியலை ஊக்குவித்தவர் அல்ல என்பதைக் கவனித்தாக வேண்டும். அவருக்குப் பின் லால்பகதூர் சாஸ்திரிதான் பிரதமரானார். இந்திராவை நேரு கொண்டு வரவில்லை. இந்திரா காலத்தில் நெருக்கடி நிலையின் போது அவரால் அரசியலுக்குக் கொண்டு வரப்பட்ட சஞ்ச காந்தி, இந்திரா, நேருவின் மதச்சார்பற்ற அரசியல் மனநிலையில் வந்தவர் அல்ல. சஞ்சயின் குடும்பமே மேனகா, வருண் இருவரும் - இன்று பி.ஜே.பி.யில்தான் இருக்கிறது.

ராஜீவ் காந்தி அரசியலுக்கு வர விருப்பமில்லாமல் நுழைந்தவர்தான். அவர் கொல்லப்பட்ட பிறகு, சோனியாவும் உடனடியாக தீவிர அரசியலுக்கு வரவில்லை. நரசிம்மராவ் ஆட்சிக் காலத்தில்தான் காங்கிரசுக்குப் பெரும் களங்கம் கற்பிக்கக்கூடிய இருபெரும் நிகழ்வுகள் நடந்தன. ஆர்.எஸ்.எஸ்.சும் பி.ஜே.பி.யும் நடத்திய பாபர் மசூதி இடிப்பு நரசிம்மராவின் ஒத்துழைப்பால்தான் சாத்தியமாயிற்று. ஆட்சியைக் காப்பாற்றுவதற்காக சிபு சோரன் உள்ளிட்ட சில எம்.பி.களுக்கு நரசிம்மராவ் சார்பில் லஞ்சம் கொடுக்கப்பட்டது நீதிமன்றத்திலேயே நிரூபிக்கப்பட்டு, சிபு சோரன் தண்டனையையும் அனுபவித்தார்.

நேரு, இந்திரா, ராஜீவ் காலங்களில் ஒருபோதும் இப்படிப்பட்ட நிகழ்வுகள் நடந்ததில்லை. ராகுல் காந்தியும் அரசியலுக்கு வர விருப்பமில்லாமல் அம்மாவுக்கு உதவுவதற்காக வந்தவர்தான். சோனியாவும் ராகுலும் அரசுப் பதவிகளில் அமர்வதற்கு பெரும் வாய்ப்புகள் இருந்தபோதும் இதுவரை அவற்றைத் தவிர்த்தே வந்திருக்கிறார்கள். எனவே வாரிசு அரசியல் குற்றச்சாட்டு முற்றிலுமாகப் பொருந்தாது.

இரண்டாவதாக ராகுல் மீது சொல்லப்படும் விமர்சனம் இதுவரை அவர் காங்கிரசுக்காகப் பிரசாரம் செய்து பெரும்பலத்தை எங்கேயும் ஏற்படுத்த முடியவில்லை என்பதாகும். இது முற்றிலும் சரியல்ல. உத்தரப்பிரதேசத்தில் 2009 எம்.பி.தேர்தலின் போது 21 எம்பி இடங்களைப் பெற அவர் பிரசாரம் உதவியது. அடுத்து வந்த சட்டமன்றத் தேர்தலில் உதவவில்லை. சட்டமன்றத் தேர்தல்களைப் பொறுத்தமட்டில் மக்கள் ஆதரவைப் பெற கட்சிகளுக்கு உள்ளூரில் ஒரு செல்வாக்கான கவர்ச்சியான தலைவரும் தேவை. காங்கிரசுக்கு அது உ.பி.யிலும் இல்லை. குஜராத்திலும் இல்லை.

இப்போது ராகுல் செய்ய வேண்டியது என்ன?

மன்மோகன் சிங்கின் அமெரிக்க சார்பு பொருளாதாரக் கொள்கைகள் கட்சிக்கும் நாட்டுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டன. காங்கிரஸ் இந்தக் கொள்கைகளில் சிலவற்றையேனும் கைவிட்டு, மீண்டும் தன் சோஷலிசக் கொள்கைகள் சிலவற்றை மீட்டெடுத்துக் கொண்டு வந்தாலொழிய சாதாரண மக்களின் ஆதரவு பெருகும் வாய்ப்பு இல்லை. ஒவ்வொரு மாநிலத்திலும் வலிமையான கட்சிக் கிளையை உருவாக்க ஏற்ற மாநிலத் தலைவர்கள் இல்லை. வலுவான மாநிலத் தலைமைகளை இந்திரா ஒழித்தார். அதுதான் இன்று வரை காங்கிரசின் மிகப்பெரிய பலவீனமாக இருக்கிறது. இதை ராகுல் திருத்த வேண்டும்.

படித்த நகர்ப்புற இளைஞர்களின் எண்ணிக்கையும் படிப்பும் வேலையுமில்லாத கிராமப்புற இளைஞர்களின் எண்ணிக்கையும் இன்று மிகப்பெரியது. இவர்களுக்கான சமூக, அரசியல் திட்டம் எதுவும் எந்தப் பெரிய கட்சியிடமும் இல்லை. ஆனால் ராகுல் போன்ற இளம் அரசியல்வாதிகள் இதைத்தான் கவனிக்க வேண்டும்.

ராகுலால் இதையெல்லாம் செய்யமுடியுமா?

இதுவரை அவர் செய்து வந்திருப்பதில் எனக்கு முக்கியமாகப்படுவது ஓரிரு அம்சங்கள்தான். என் குடும்பப் பின்னணியால் நான் அரசியலுக்கு வந்து விட்டேன். இப்படி பின்னணி ஏதும் இல்லாதவர்கள் வருவதற்கு ஒரு சிஸ்டம் வேண்டும், அதை உருவாக்க விரும்புகிறேன்" என்று பகிரங்கமாக அறிவித்தார் ராகுல். அதன்படி இளைஞர் காங்கிரசில் உறுப்பினர்களைச் சேர்த்து முறையான வெளிப்படையான உட்கட்சித் தேர்தல் நடத்தி வருவது நல்ல அம்சம். இதை தாய்க் கட்சிக்கும் ராகுல் விரிவுபடுத்த வேண்டும்.

இளைஞர் காங்கிரசுக்கென்று, அரசியலில் இல்லாத படித்த இளைஞர்களின் திங்க் டேங்க் ஒன்றை ராகுல் வைத்திருக்கிறார். இவர்களின் கள ஆய்வுகளின் உதவியில் தான் விவசாய விளை நிலங்களை வாங்குவது பற்றிய சட்ட வரைவை ராகுலால் தயாரிக்க முடிந்தது. இது இன்னொரு முக்கிய அணுகுமுறை.

தங்கள் கருத்துக்கும் கொள்கைக்கும் முற்றிலும் எதிரானவர்களுடன் உரையாடல் நடத்த முன்வருவது இன்றைய முக்கியமான அரசியல் தேவையாகும். இதை மூத்த அரசியல்வாதிகளிடம் எதிர்பார்க்க முடியாது. ஆனால் இளைஞர்கள் பொதுவாக, திறந்த மனத்துடன் பிரச்னைகளை அணுகுகிறார்கள். அவர்கள் அரசியலில் நுழையும் போது இது சாத்தியப்படும். அவர்களிலும் கூட உணர்ச்சிவசப்பட்டு உணர்ச்சியைத் தூண்டி அரசியல் நடத்துவோருக்கு இது சாத்தியமில்லை. ராகுல் எளிதில் உணர்ச்சிவசப்படுபவராகத் தெரியவில்லை என்பது நல்ல அம்சம்.

எனினும் துணைத் தலைவர் பதவி ஏற்புரையின் போது இந்திராவின் காவலர்களுடன் தனக்கு இருந்த உறவை அவர் சொன்னது நெகிழ்ச்சியானது. தனக்கு பாட்மின்ட்டன் சொல்லிக் கொடுத்து தன்னுடன் விளையாடி வந்தவர்கள் இந்திராவைக் கொலை செய்தது தம்மை மிகக் கடுமையாக பாதித்தது என்றார் ராகுல். பேரனுடன் அன்பாக விளையாடியவர்களை, பாட்டியைக் கொல்பவர்களாக ஆக்கிய அரசியல் என்ன, அந்த அரசியலில் யார் யார் என்னென்ன தப்பு செய்தார்கள் என்றெல்லாம் அடுத்து ராகுல் யோசிக்க முடியுமானால், அவரால் இந்திய அரசியலை ஒரேயடியாக மாற்ற முடியாவிட்டாலும் கொஞ்சம் ஆரோக்கியமான சலனங்களையாவது ஏற்படுத்த முடியும்.

அதிகாரம் என்பது விஷம்," என்று அவருக்கு அம்மா சோனியா சொன்னதாகச் சொல்லும் ராகுலுக்கு நான் சொல்ல விரும்புவது ஒன்றுதான், அந்த விஷத்துக்கான முறிவு அன்புதான். நம் அரசியலில் அன்புக்கு இடமில்லாமல் இருப்பதால்தான் அதிகாரம் என்பது விஷமாக இருக்கிறது. மக்கள் மீது அன்பு இல்லாத அரசியல் மக்களுக்கே விஷம்தான்.

தமிழகத்தைப் பொறுத்தவரையில் தூக்கு மேடையை எதிர்நோக்கியிருக்கும் மூவரின் தண்டனையைக் குறைக்கும்படி ராகுலால் சொல்ல முடிந்தால், அது அன்பு சார்ந்த ஆரோக்கியமான அரசியலுக்கான ஒரு முதல்படியாக இருக்கும்.




No comments:

Post a Comment