Search This Blog

Wednesday, February 13, 2013

எனது இந்தியா (பார்ஸி இன வரலாறு!) - எஸ். ராமகிருஷ்ணன்....

இந்திய மதங்களில் ஜொ​ராஷ்ட்​ரியம் தனித்து​வமிக்கது. இது, ஈரானில் தோன்றிய மதம் என்​றாலும் இந்தியாவில் காலூன்றி நான்கு நூற்றாண்டுகளுக்கும் மேலாக வளர்ந்து நிற்கிறது. இந்த மதம் நூற்றாண்டுகளாக மதச் சண்டைகள் எதிலும் ஈடுபடாமல், துவேஷம் காட்டாமல், சமா​தானமும் வளர்ச்சியும் மட்டுமே குறிக்​​கோளாகக்கொண்டு செயல்​படுகிறது. பார்ஸிகள் இந்த மதத்தைச் சேர்ந்தவர்கள்தான். இந்தியாவில் மத சுதந்திரம் எந்த அளவு போற்றப்படுகிறது என்பதற்கு, ஜொராஷ்ட்ரியத்தின் வளர்ச்சிக்கு அது அளித்திருக்கும் இடமே சாட்சி. பார்ஸி இனம் இந்தியாவின் முன்னேற்றத்துக்கும் வரலாற்றுக்கும் குறிப்பிடத்தக்கப் பங்​களிப்புகளை செய்து இருக் கிறது.

''இந்தியாவில் பார்ஸிகள் குறைந்த எண்ணிக்கையில் இருந்தாலும், அறப் பணி மற்றும் மனித நேயப் பண்புகளில் சிறந்து விளங்குகின்றனர்'' என்று மகாத்மா காந்தி பாராட்டி இருக்கிறார். பார்ஸி இன மக்களின் உழைப்பு, பம்பாய் நகரின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்கது. தாதாபாய் நௌரோஜி மற்றும் பிகாஜி காமா போன்றோர், இந்திய சுதந்திர இயக்கத்தில் இருந்த முக்கியமான பார்ஸியர்கள்.

இயற்பியல் வல்லுனர் ஹோமி பாபா, பாடகர் ஃப்ரெட்டி மெர்குரி, இசை இயக்குநர் ஜுபின் மேத்தா, இந்திய ராணுவத்தின் முதல் ஃபீல்டு மார்ஷல் சாம் மானெக்‌ஷா, தொழில் அதிபர்கள் டாட்டா, கோத்ரெஜ் மற்றும் வாடியா ஆகியோர் பார்ஸிக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்தான். உலகின் பழைமையான இனங்களில் ஒன்று பார்ஸி. இவர்களின் பூர்வீகம் அன்றைய பாரசீகம் எனப்படும் இன்றுள்ள ஈரான், ஈராக் பகுதிகள். ஜொராஷ்ட்ரிய மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களை ஜொராஷ்​டிரர்கள் என்றும் அழைக்​கின்றனர்.


சுமார் 1,300 ஆண்டுகளுக்கு முன், ஈரானில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகளை அடுத்து உலகின் பல்வேறு பகுதிகளுக்கு பார்ஸிகள் புலம் பெயர்ந்தனர்.

ஜொராஸ்ட்ரிய மதம் ஜொராஸ்டார் என்ற ஞானியால் தோற்றுவிக்​கப்பட்டது. ஜொராஸ்டார் இன்றைய வடக்கு ஈரானில் பிறந்தவர் என்கின்றனர். இவரது இளமைப்பருவம் குறித்து எந்தத் தகவலும் இதுவரை கிடைக்கவில்லை. ஆனால், தனது 40-வது வயதில் வட கிழக்கு ஈரானிய மன்னன் விஷ்டாஸ்பா என்​பவரைச் சந்தித்து, தனது மதக்​கோட்பாடுகளை அவருக்கு விளக்கி மன்னரை தனது சமயத்துக்கு மாற்றுவதில் வெற்றி கண்டிருக்கிறார். அதன் காரணமாக, ஜொராஷ்ட்ரிய மதம் நாட்டின் மதமாக வளர்ந்து இருக்கிறது.

''இந்த உலகில் ஒரே ஒரு கடவுள்தான் இருக்கிறார். அவரது பெயர் அஹூரா மாஜ்டா'' என்கிறார் ஜொராஸ்டார். அதன்பொருள் மெய் அறிவுகொண்ட கடவுள் என்பதாகும். கடவுளைப் போலவே இந்த உலகில் தீமையும் நெடுங்காலமாகவே இருந்து வருகிறது. அதன் வடிவம் அங்ரா மைன்யு. நன்மைக்கும் தீமைக்குமான போராட்டமே நமது வாழ்க்கை. அதற்கான போராட்டக் களம்தான் இந்த பூமி. இதில் நன்மை எது? தீமை எது? என்பதை ஆராய்ந்து அறிய வேண்டியவன் மனிதனே. நன்மைதான் எப்போதும் வெல்லும் என்பதை மனிதன் உணர வேண்டும் என்பதையே ஜொராஷ்ட்ரியம் விளக்குகிறது. இந்த மதத்தின் புனித நூல் அவஸ்தா என்று அழைக்கப்படுகிறது.

ஜொராஷ்ட்ரிய மதம், பாரசீகம் முழுவதும் பரவுவதற்கு மகா சைரஸ் என்ற மன்னன் காரணமாக இருந்தான். அவனே பாரசீகத்தோடு ஈரானை இணைத்துக்கொண்டவன். அதன் காரணமாக, அடுத்த 200 ஆண்டுகளில் பாரசீக மன்னர்கள் ஜொராஷ்ட்ரிய மதத்தைத் தழுவினர். கி.பி.226-ல் சாஸ்சானிட் அரசர்களின் காலத்தில் அரச சமயமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. பாரசீகத்தை, முஸ்லிம்கள் ஆட்சி செய்யத் தொடங்கிய பிறகு, இந்த மதத்துக்குக் கடும் நெருக்கடி ஏற்பட்டது. பலர் வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டனர். இரானில் இருந்து தப்பிய ஜொராஷ்ட்ரியர்கள் ஹார்மொஸ் என்ற தீவில் தஞ்சம் புகுந்தனர். பிறகு, அவர்களின் சந்ததிகள் இந்தியாவின் மேற்குக் கடற்கரையான குஜராத்தை வந்தடைந்தனர்.


அப்போது, குஜராத்தை ஆட்சி செய்த ஜாதவ் ரானா என்ற மன்னர், அவர்களுக்குத் தனது தேசத்தில் புகலிடம் அளிக்க விரும்பவில்லை. இதுகுறித்து, பெர்சியப் பழங்கதை ஒன்று விவரிக்கிறது. ஈரானில் இருந்து அகதிகளாக வெளியேறி குஜராத்தை அடைந்த ஜொராஷ்ட்ரியர்கள், தஞ்சம் கேட்டு மன்னர் ஜாதவ் ரானாவுக்குத் தகவல் அனுப்பினர். அவர் ஒரு குவளையில் பாலைக் கொடுத்து அனுப்பி, இங்கு மக்கள் தொகை அதிகம் என்பதால் இங்கே இடம் இல்லை என்ற தகவலையும் அனுப்பினார். ஜொராஷ்ட்ரிய தலைவர், தனது பையில் இருந்து கொஞ்சம் சர்க்கரையை எடுத்து அதே பாலில் போட்டு மன்னருக்கே அதை அனுப்பிவைத்தார். பாலில் சர்க்கரை சேர்வதற்கு நிச்சயம் இடம் இருக்கத்தானே செய்யும்!

அந்த செய்கையும் புகலிடம் கேட்பதில் அவர்களுக்கு இருந்த புத்திசாலித்தனத்தையும் புரிந்துகொண்ட மன்னர் ரானா, குஜராத்தில் அவர்கள் தங்கிக் கொள்ள அனுமதி வழங்கினார். அன்று முதல் இன்று வரை பார்ஸிகள் இந்தியச் சமூகம் எனும் பாலில் கலந்த சர்க்கரையாக வாழ்ந்துவருகின்றனர் என்கிறார் பார்ஸி இனத் தலைவர் நவ்ரோஜி. பாரசீகத்தில் இருந்து வந்தவர்கள் என்று குறிப்பிடுவதற்காகவே, இவர்களை பார்ஸிகள் என்று அழைக்கின்றனர். புகலிடம் பெற்ற பார்சிகள் விவசாயிகளாகவும், நெசவாளிகளாகவும், தச்சுவேலை செய்பவர்களாகவும் தங்கள் வாழ்க்கையை தொடங்கினர்.

பார்ஸிகள் நெருப்பை வணங்கக் கூடியவர்கள். நெருப்பே ஆதி தெய்வம் என்ற நம்பிக்கை​கொண்டவர்கள். அவர்கள் எங்கே சென்றாலும் நெருப்பை தங்களுடன் எடுத்துச் செல்வார்கள். ஈரானில் இருந்து கொண்டுவரப்பட்ட நெருப்புக்காக அவர்கள் குஜராத்தில் ஒரு கோயில் கட்டினர். அந்தக் கோயிலில் உள்ள நெருப்பு இன்றும் அணையாமல் இருக்கிறது. இன்று, உலகின் எந்த நாடுகளில் பார்ஸிகள் வசித்தாலும் ஈரானில் இருந்து கொண்டுவரப்பட்ட நெருப்பின் ஒரு சுடரை தங்களுடன் எடுத்துச் சென்று அதையே வழிபடுகின்றனர். சென்னையிலும்கூட அக்னி கோயில் எனப்படும் பார்ஸிகளின் நெருப்புக் கோயில் ராயபுரத்தில் இருக்கிறது. இந்த அக்னி கோயிலின் நூற்றாண்டு விழா, கடந்த மாதம் நடந்தது. 1795-ம் ஆண்டில் பார்ஸி இனத்தவர் சென்னையில் காலடி வைத்தனர். சென்னையில் இன்று 300 பார்ஸி குடும்பங்கள் மட்டுமே இருக்கின்றன.

சென்னையில் நெருப்புக் கோயில் உருவாக்கப்​பட்டதற்கு பின்னால் ஒரு கதை இருக்கிறது. அதாவது, சென்னையில் வாழ்ந்த பார்ஸியான பிரோஜ் கிளப்வாலா என்பவர் தனது மகன் இறந்தபோது சடங்கு செய்வதற்காக அக்னி கோயில் இல்லையே என வருந்தினர். தனது சொந்தப் பணத்தில் ஓர் இடத்தை வாங்கி அதில் நெருப்புக் கோயில் கட்டி, அதை பார்ஸி இன மக்களுக்கு அர்ப்பணம் செய்து இருக்கிறார். இந்த அக்னி கோயிலில் 100 ஆண்டுகளாக நெருப்பு அணையாமல் தொடர்ந்து எரிந்துகொண்டே இருக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள ஒரே நெருப்புக் கோயில் இதுமட்டும்தான்!

பார்ஸிகள் தொழில் செய்வதில் கெட்டிக்காரர்கள். ருஸ்தம் மெனேக் என்ற பார்ஸிக்காரர், கிழக்கிந்தியக் கம்பெனியின் முதல் புரோக்கராகப் பணியாற்றியவர். இவரைப்போலவே, போர்த்துக்கீசியர்களுக்கும் இந்தியர்களுக்கும் இடையில் வணிகப் பரிமாற்றம் ஏற்படுவதற்கு பார்ஸிகள் உதவி செய்து இருக்கின்றனர்.

1661-களில் பம்பாய் நகரை வணிகத் தலைநகரமாக மாற்ற நினைத்த பிரிட்டிஷ் அங்கே வந்து குடியேறுபவர்களுக்கு நிறைய சலுகைகளை அறிவித்தது. அதைப் பயன்படுத்திக்கொண்டு ஏராளமான பார்ஸிகள் பம்பாயில் குடியேறினர். அதன் காரணமாகவே இன்றும் பம்பாயின் பங்கு வர்த்தகம் பார்ஸிகளின் கையில் இருக்கிறது.

பம்பாயில் உள்ள தாஜ் ஹோட்டல் கட்டப்பட்டதைப் பற்றிக் குறிப்பிடும் எழுத்தாளர் நாஞ்சில் நாடன், ஓர் அரிய தகவலைக் கூறி இருக்கிறார். ஆங்கிலேயர் கொலாபா கடற்கரையில் நில மீட்பு செய்துகொண்டு இருந்தபோது, 1898-ல் நவம்பர் 1-ம் தேதி இரண்டரை ஏக்கர் நிலத்தை 99 ஆண்டு காலக் குத்தகைக்கு வாங்கினார் பம்பாயின் பார்ஸி இனத்துப் புகழ்பெற்ற ஜாம்செட்ஜி நுசர்வான்ஜி டாடா எனும் தொழிலதிபர். அங்கு, அன்று அப்பலோ ஹோட்டல் என ஒன்று இருந்ததாகவும், ஜரோப்பியர் அல்லாத அவரை ஹோட்டல் நிர்வாகம் அவமதித்து வெளியேற்றிய காரணத்தால், இந்த தாஜ் ஹோட்டலைக் கட்டினார் என்றும் கூறுகிறார்கள். அப்பலோ ஹோட்டல் வரலாற்றில் மாய்ந்து போய்விட்டது. இன்றும், ஜாம்செட்ஜி நுசர்வான்ஜி டாடாவுக்கு மும்பை ஃபோர்ட் பகுதியில் அற்புதமான சிலை ஒன்று உண்டு. கேட்வே ஆஃப் இந்தியாவுக்கும் மூத்தது தாஜ் ஹோட்டல். 1903-ல் நவம்பர் 16-ம் தேதி இது திறக்கப்பட்டது. சரியாக 105 ஆண்டுகள் ஆகின்றன. முதல் உலகப் போரின்போது, இந்த ஹோட்டல் 600 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக மாற்றப்பட்டு, சேவை செய்து இருக்கிறது.

பார்ஸிகள் கிழக்கிந்தியக் கம்பெனியுடன் போட்டியிட்டு பருத்தி வணிகம் செய்தனர். 1854-ல் இந்தியாவின் முதல் காட்டன் மில்லான பாம்பே ஸ்பின்னிங் மில்லை ஆரம்பித்தவர் காஸ்வாஜி நானாபாய் தாவர் என்ற பார்ஸிக்காரர். இங்கிலாந்துக்குப் போட்டியாக இந்தியாவில் நூற்பு ஆலைகளை ஏற்படுத்தி, பெரிய தொழில் நிறுவனங்களை உருவாக்கிக் காட்டியவர்கள் பார்ஸிகளே. இதன் காரணமாக, பம்பாய் நகரில் பாதி பார்ஸிகளின் சொத்துக்களாக மாறின. பிரிட்டிஷ் கம்பெனிக்குக் கடன் கொடுக்கவும், பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு வாடகைக்கு வீடுகளைக் கொடுக்கும் அளவுக்கும் பார்ஸிகள் பொருளாதார நிலையில் உயர்ந்தனர். 'பாம்பே சமாச்சார்’ என்ற பத்திரிகையை தொடங்கி வெற்றிகரமாக நடத்தியதும் பார்ஸிகள்தான். 1736-ம் ஆண்டு சூரத் நகரில் உள்ள கப்பல் கட்டும் துறையில் நுசர்வான்ஜி வாடியா என்பவர் சிறந்து விளங்கினார். இவரது திறமையை மெச்சிய பிரிட்டிஷ் அவரை பம்பாய்க்கு வரவழைத்து, தங்களுக்குத் தேவையான கப்பல் கட்டுமானப் பணிகளை அவர் பொறுப்பில் ஒப்படைத்தது. 40 ரூபாய் சம்பளத்துக்கு சேர்ந்த அவர், 50 ஆண்டுகள் கிழக்கிந்தியக் கம்பெனிக்காக கப்பல் கட்டும் பணியைச் செய்து இருக்கிறார்.

அவரோடு, மும்பை வந்த தொழிலாளர் குடும்பங்கள் துறைமுகப் பகுதியை ஒட்டியே குடியிருந்தனர். வாடியாவின் நன்மதிப்பு காரணமாக கப்பல் கட்டும் தொழில் மற்றும் துறைமுக வேலைகளில் பார்ஸிகள் ஈடுபடத் தொடங்கினர். அவர்களில் பலர் இன்று மிகப் பெரிய கோடீஸ்வரர்கள். அவரைப் போலவே, ஜாம்ஷெட்ஜி ஜீஜீபாய் என்பவர் குஜராத்தில் ஒரு வறுமையான குடும்பத்தில் பிறந்து, பதின்வயதிலே கூலியாக வேலைக்குச் சென்றவர். பிறகு, காலி பாட்டில்களை வாங்கி விற்கும் தொழில் செய்தார். ஓர் ஆங்கிலேய வணிகரின் நட்பு கிடைத்த காரணத்தால், கப்பலில் சீனாவுக்குச் சென்று வணிகம் செய்யத் தொடங்கினார்.

2 comments:

  1. ஆச்சர்யமான தகவல்களுடன் அருமையான பகிர்வு! நன்றி!

    ReplyDelete
  2. பார்ஸிக்காரர்கள்..........குறித்து உங்கள் பதிவு மூலம் அறிய முடிந்ததில் மகிழ்ச்சிங்க ,நன்றி!

    ReplyDelete